மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 68

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017

வாளை மீன்கள் அவற்றின் மீது எழும்பிப் பாயும். தென்னைகளோ, அம்மீன்கள் குளத்திற்குள் புதைந்து போகும்படி அவற்றின் மீது நெற்றுகளைச் சொரியும். அருகில் உள்ள பனைமரங்களில் முதிர்ந்த பழங்கள் வெடித்து தேன் வெள்ளத்தைப் பொழியும். அந்தப் பொழிவிலும் வாளை மீன்கள் எவ்விப் பாயும்!

இத்தகைய வளமிக்க ஆதனூரில் வயல் பக்கங்களில் சிறு குடிசைகள் நிறைந்த புலைப்பாடி ஒன்று இருந்தது. அங்கு உழவுத் தொழிலை உரிமையாகக் கொண்ட மக்கள் பலர் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள்.  புல்லால் வேயப்பெற்ற  அவர்களுடைய சின்னஞ்சிறிய வீடுகளின்மீது பழைய கூரைகள் தென்படும். அக்கூரைகளின் மீது பசிய கரைக் கொடிகள் படர்ந்திருக்கும். அந்த புலைச்சேரியில் பெட்டைக் கோழிகளும் அவற்றின் குஞ்சுகளும் சுற்றிக் கொண்டிருக்கும். முற்றத்தில் நாய்க்குட்டிகள் படுத்திருக்கும். கைகளில் இரும்புக் காப்பணிந்த சிறுவர்கள் அந்நாய்க்குட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். அப்போது நாய்க்குட்டிகள் குலைக்கும். சிறுவர்களின் இடையிலுள்ள இரும்புமணிச் சதங்கை ஒலிகள் கிளம்பி, அந்த மெல்லிய குலைப்பை அடக்கும். ஆங்காங்கேயுள்ள மருத மரங்களின் நிழலில் பள்ளப் பெண்கள் தங்கள் குழந்தைகளை வலிய சிறிய தோளின் மீது படுக்கவைத்துத் தூங்கச் செய்வார்கள். வஞ்சி மரத்தின் அடியில் கோழிகள் முட்டையிட்டு அடைகாக்கும் பானைகளை புதைத்து வைத்திருப்பார்கள். மாமரங்களின் கிளைகளில் பறைகள் தொங்கும். தென்னை மரங்களின் அடிப் பொந்துகளில் குட்டி போட்ட நாய்கள் படுத்திருக்கும். காஞ்சி மரத்தின் வாசனைக் கிளைகளில் உழவர்களை விடியற்காலையில் எழுப்பும் சேவல்கள் குடியிருக்கும். அம்மர நிழல்களில் புலைமகளிர் நெல் குற்றும் பாட்டுகளின் ஒலி எங்கும் பரவிக் கேட்டுக் கொண்டிருக்கும்.  குவளை மலர்களையும் நெற்கதிர்களையும் கூந்தலில் அணிந்த புலைச்சியர்கள் கள்ளுண்டு, கூந்த கட்டவிழ  நடை தள்ளாடி நிற்பார்கள். அவர்கள் களித்துக் கூத்தாட பறைகள் கொட்டும். அப்பறைக்கொட்டின் தாளத்திற்கு ஏற்ப அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்.

இத்தகைய புலையர் சேரியில், ஆதிதிராவிடர் மரபில் நந்தர் என்னும் பெயருடைய ஒருவர் தோன்றி வாழ்ந்து வந்தார். அவருக்கும் இறையுணர்வால் சிவபெருமானிடம் மெய்யன்பு மிகுந்திருந்தது. அவ்வூரில் அவர் புலைமைத் தொழில் புரிந்து வந்தார்.  ஊரிலே பறையடிக்கும் தொழிலுக்கென விடப்பட்டுள்ள தோட்டம் முதலான மானிய நிலங்கள் நந்தனாருக்கு இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயும் உணவும் அவருடைய வாழ்வுக்குப் பயன்பட்டன. அவர் பிறந்து உண்ண தொடங்கியவுடனேயே பிறை சூடிய பெருமானிடம் பேரன்பு கொண்டுவிட்டார். சிந்தையின் சிவத்தையன்றி வேறு எதையும் நினைக்கமாட்டார். அவர் புலையராகப் பிறந்திருந்ததால், அக்குலத்தொழிலின் வழியே சிவபெருமானுக்கு திருத்தொண்டு புரிய வேண்டுமென்று கருதி, அந்நெறியிலே நின்றார். அவர் மற்றவரைப் போலவே புலைத் தொழில் புரிந்து வந்தாலும் சிவத்தொண்டில் தலைசிறந்தே விளங்கினார். சிவபெருமான் எழுந்தருளியுள்ள  திருக்கோயில்கள்தோறும் பேரிகை, மத்தளம் முதலான கருவிகளுக்குப் போர்வைத் தோலும், இறுகக் கட்டும் வார்களும் நந்தனார் செய்து கொடுப்பார். வீணைக்கும், யாழுக்கும் நரம்பும் சிவார்ச்சனைக்கு கோரோசனையும் வழங்குவார். சிவன் கோயில்களின் வாயிற் புறத்திலே நின்று ஆண்டவனைத் தொழுது, உள்ளூரப் பொங்கியெழுந்து, பக்தியின் மிகுதியால் ஆனந்தக்கூத்தாடியும் பாடியும் மகிழ்வார்.

ஒரு சமயம் நந்தனார் திருப்புன்கூரில் கோயில் கொண்டிருக்கும் சிவலோக நாதருக்குத் திருப்பணி செய்ய விரும்பினார். அந்த விருப்பத்திலே அவர் மனம் ஒன்றியவராய் சிவலோகநாதனை எப்போது காண்போம் என்று ஏங்கும் பெரும் காதல் கண்டு ஆதனூரை விட்டுக் கிளம்பி திருப்புன்கூருக்கு வந்து சேர்ந்தார். அங்கு சிவன் கோயில் திருவாசல் முன் நந்தனார் இசைபாடிய வண்ணம் அருள் புரியும் சிவபெருமானை நேராகவே கண்டு கும்பிட வேண்டும் என்று பெருங்காதல் கொண்டார். அவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவபிரான், தம் முன்பு சன்னிதியை  மறைத்துக் கொண்டிருந்த இடபதேவரான நந்தியைச் சற்று விலகியிருக்க செய்து நந்தனாருக்குக் காட்சி தந்தருளினார். அதைக் கண்ட நந்தனார் ஆனந்தமுற்றார். ஆண்டவனின் திருவாயில்முன் நின்றபடியே அவர் தம் தோற்கருவியைக் கீழே வைத்துவிட்டு கீழே விழுந்து கும்பிட்டு எழுந்தார்.

பிறகு அங்கிருந்து அவர் திரும்பிச் செல்லும்போது திருக்கோயிலின் ஒருபுறத்தில் ஒரு நிலம் பள்ளமாக இருப்பதைக் கண்டு அந்தப் பள்ளத்தை ஒரு பெரிய திருக்குளமாக வெட்டி வைத்தார். பிறகு கோயில்புறத்தை வலம் வந்து கீழே விழுந்து கும்பிட்டு  எழுந்து ஆனந்தக் கூத்தாடிவிட்டு மீண்டும் திருப்புன்கூர் சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக்கொண்டு தம்முடைய சொந்த ஊரான ஆதனூருக்கு வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு நந்தனார் அருகாமையிலுள்ள பல சிவத்தலங்களுக்குச் சென்று வணங்கித் தமது திருப்பணிகளை மன ஒருமையோடு செய்து வந்தார். ஒரு நாள் அவர் தில்லைப் பொன்னம்பல நாதரைத் தரிசிக்க பெருவிருப்பம் கொண்டார். அதற்காக சிதம்பர நகருக்குப் போக வேண்டும் என்று பெரும் ஏக்கவுணர்ச்சி. அவரை ஓயாமல் பற்றிக் கொண்டிருந்தது. அன்றிரவு முழுவதும் தில்லைக்குப் போகவேண்டும் என்று நினைவால் கண்ணுறங்காமல் விழித்திருந்தார்.

பொழுது புலர்ந்தது. சிதம்பரப் பித்து நந்தனாரைவிட்டு அகலவில்லை. தில்லையை நினைத்து நினைத்து நினைத்து நந்தனார் ஓயாமல் மனமுருகி, ‘அந்தோ! நான் தில்லைக்குச்  சென்றாலும் திருக்கோயிலுக்குள்ளே சென்று சிதம்பரநாதரின் ஆனந்த கூத்தைக் காணும்பேறு என் குலத்துக்கு இல்லையே?’ என நினைத்து அங்கு செல்லும் முயற்சியை கைவிட்டார். ஆனால் தில்லை நகருக்குச் சென்று சிதம்பர நாதரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும்……..