சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ – 112

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

சந்தைகள் நாம் எதிர்பார்ப்புக்கு எதிராக குறைந்தாலும், மிட்கேப் பங்குகளில் பல இந்த வாரம் மேலேயே இருந்தன என்பது குறிப்பிடதக்கது. சந்தையில் இந்த வாரம் லாபம் பார்ப்பது இருந்தது. மேலும், புதிய வெளியீடுகளுக்கும் அதிகம் பணம் சென்றதும் ஒரு காரணம்.

வெள்ளியன்று இறுதியாக

வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 25        புள்ளிகள் கூடி 31687 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 5  புள்ளிகள் கூடி   9934 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சென்ற வாரத்தை விட மும்பை பங்குச் சந்தை சுமார் 210 புள்ளிகள் குறைந்துள்ளது. ஆனால் மிட்கேப் பங்குகளில் பல நல்ல நிலைக்கு சென்றுள்ளன.

புதிய வெளியீடுகள்

பாரத் ரோடு நெட்வொர்க் என்ற கம்பெனி தனது புதிய வெளியீட்டை செப்டம்பர் 6 தேதி தொடங்கி, 8ம் தேதி முடித்தது. மொத்தமாக 1.75 தடவைகள் செலுத்தப்பட்டது. இதில் சிறிய முதலீட்டாளர்கள் பகுதி 5.15 தடவைகள் செலுத்தப்பட்டிருந்தது.

டிக்ஷன் டெக்னாலஜி இந்தியா லிமிடெட் 6ம் தேதி தொடங்கி, 8ம் தேதி முடிவடைந்தது. ஆச்சரியமான வகையில் செலுத்தப்பட்டு முடிவடைந்த வெளியீடு இது. காரணம் நல்ல வெளியீடு ஏதும் சந்தையில் இல்லை. இருக்கும் வெளியீடுகளில் இது நல்ல வெளியீடு என பலரும் கருதியிருந்தனர். கடைசி நிமிடத்தில் பல மடங்கு செலுத்தப்பட்டு முடிவடைந்தது.  மொத்தமாக 117 தடவைகள் செலுத்தப்பட்டது. இதில் சிறிய முதலீட்டாளர்கள் பகுதி 9.45 தடவைகள் செலுத்தப்பட்டிருந்தது. இந்த கம்பெனியின் பங்குகள் ஏன் இப்படி அதிகமாக செலுத்தப்பட்டு முடிவடைந்தது என்ற காரணத்தை கீழே குறையும் மின்சார விலை என்ற பகுதியில் காண்போம். மேட்ரிமொனி.காம் லிமிடெட் கம்பெனியின் புதிய வெளியீடு 11ம் தெதி செப்டம்பர் தொடங்கி 13ம் தேதி செப்டம்பர் முடிவடைகிறது. சிறிது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம்.

ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி தனது புதிய வெளியீட்டை செப்டம்பர் 15 முதல் 19 வரை கொண்டு வரவுள்ளது. விலை 651 ரூபாய் முதல் 661 ரூபாய் வரை வைக்கப்பட்டுள்ளது. பெரிய வெளியீடு, கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. பெரிய லாபங்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. நீண்டகால அடிப்படையில் வைத்திருக்க நல்ல வெளியீடு.

குறையும் மின்சார விலை, பேட்டரி கார்கள்

சூழ்நிலைகளை முன் கூட்டியே யோசிப்பதில் தான் பங்குச்சந்தையில் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். மின்சார உற்பத்தி காற்று, நீர், சோலார், நிலக்கரி என்று பரந்து விரிந்துள்ளது. தற்போது கடுமையான போட்டி உள்ளது. ஒரு பக்கத்தில் மின்சக்தி உற்பத்தி அதிகரிப்பு. இன்னொரு பக்கம் அரசு மின்சக்தி குறைந்து உபயோகிக்கும் எல்.ஈ.டி. பல்புகளை குறைந்த விலையில் விநியோகிக்கிறது. இதனால் என்ன ஆகும்? அதிக உற்பத்தி, குறைந்த உபயோகம். எங்கு அதிகம் மின்சாரத்தை உபயோகிக்கலாம்? பேட்டரி கார்கள். இதனால் கார்கள் எல்லாம் மின்சக்தி உபயோகித்து பேட்டரி மூலம் ஓடும் வகையில் இருக்க அரசாங்கம் ஊக்குவிக்கும். இதனால் பெட்ரோல் செலவினம் குறையும், நாட்டுக்கு அந்நிய செலாவணி மிச்சமாகும். மின்சார உற்பத்தி கம்பெனியின் பங்குகளை வைத்திருப்பவர்கள் சிறிது கவனமாக இருங்கள். வருங்காலங்களில் பெரிய லாபங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. அதே சமயம் எல்.ஈ.டி. பல்புகள், திரைகள் தயாரிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் உள்ளது தான் டிக்ஷன் டெக்னாலஜி, சமீபத்தில் புதிய வெளியீடு கொண்டு வந்த கம்பெனி. இதனால் தான் இது பல மடங்கு அதிகம் செலுத்தப்பட்டு முடிவடைந்தது.

2030ம் வருடம் பெரும்பாலானா கார்களும் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் இருக்கும். பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் இதை கண்டு தற்போதே பயப்பட ஆரம்பித்துள்ளன. மகிந்திரா, டாடா, அசோக் லேலேண்ட் போன்ற நிறுவனங்கள் பேட்டரி கார்களை உருவாக்க,  செயல்படுத்த ஆரம்பித்துள்ளன. என்.டி.பி.சி, பவர் கிரிட் போன்ற நிறுவனங்கள் பேட்டரி ரிசார்ஜ் நிலையங்களை அமைக்க முடிவு எடுத்துள்ளது. தற்போது பெட்ரோல் நிலையங்களுக்கு போட்டியாக கியாஸ் நிலையங்கள் இருக்கின்றன. இனி போட்டியாக இந்த ரீசார்ஜ் நிலையங்களையும் காணலாம். வாகனங்களுக்கு பேட்டரி செய்யும் நிறுவனங்கள், எலெக்ட்ரிக் கார் உபகரணங்கள் செய்யும் நிறுவனங்கள் வருங்காலத்தில் லாபமடையும் வாய்ப்புகள் அதிகம். கச்சா எண்ணெய் விலை குறைந்தால், விமான கட்டணங்களும் குறையும். அந்த பங்குகளும் விலை கூடும் வாய்ப்புகள் அதிகம்.

என்ன பங்குகள் வாங்கலாம்?

இமாமி, ஸ்கிப்பர், சீரா சானிடரி வேர், அபெக்ஸ் ப்ரோஷன், இண்டாகோ ரெமிடீஸ், மிண்டா இண்டஸ்டீரீஸ் ஆகிய பங்குகள் உங்கள் போர்ட்போலியோவில் நீண்டகால அடிப்படையில் இருக்கலாம்.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்?

அடுத்த வாரம் சந்தைக்கு சிறிது சாதகமாகத்தான் இருக்கும். அதே சமயம் சந்தையில் புதிய வெளியீடுகள் அதிக அளவில் பணத்தை உறிஞ்சியிருக்கிறது. இதனால் சிறிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்.

* * *