ஒரு பேனாவின் பயணம் – 124 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017

இன்னொரு ஹிட்லர் உருவானார்!

``1965ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில், பாகிஸ்தான் படு தோல்வி அடைந்ததற்கு அயூப்கானே காரணம். தாஷ்கண்ட் ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமானது. அதில் அயூப்கான் கையெழுத்திட்டதன் மூலம், பாகிஸ்தானுக்கு துரோகம் செய்துவிட்டார்" என்று பூட்டோ போர்க்கொடி உயர்த்தினார்.

அயூப்கானும் அவரது குடும்பத்தினரும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டின.  அயூப்கானுக்கு ஆதரவாக இருந்த ராணுவ தளபதிகளும் அவரைக் கைவிட்டனர்.

இப்படி பலமுனை தாக்குதல் வந்ததால், அயூப்கானால் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியவில்லை.  1969 மார்ச் 26ம்தேதி பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய அதிபராக யாகியா கான் பதவி ஏற்றார்.

அயூப்கான் பதவியை விட்டு விலகினாலும், பாகிஸ்தானில் நீண்ட காலம் அதாவது 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர்  அவர்தான்.

 இந்தியாவோடு சுதந்திரமடைந்த பாகிஸ்தான் எப்போதுமே ஜனநாயக முறைப்படியான தேர்தலில் நம்பிக்கை வைக்கவில்லை. பெரும்பாலும், ராணுவ தளபதிகளே நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்கள்.

அதனால்  அவர்கள்  மக்களின்  பிரச்னைகளைப்  பற்றி கவலைப்படவேயில்லை. காரணம், அவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல!

பாகிஸ்தானில் நீண்ட இடைவெளிக்குப் பின் 1970ல் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 313 இடங்களில் 167 இடங்களை கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த முஜிபுர் ரஹ்மானின் `அவாமி லீக்’  கட்சி கைப்பற்றியது. மேற்கு பாகிஸ்தானை சேர்ந்தவரான பூட்டோவின் `மக்கள் கட்சி’க்கு  88 இடங்களே கிடைத்தன.

 மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெற்ற அவாமி லீக் கட்சியின் தலைவரான முஜிபுர் ரஹ்மான்தான், பிரதமர் ஆகவேண்டும்.  ஆனால் அவர் கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்தவர். அதனால், அவரைப் பிரதமர் ஆக்க பூட்டோவும், மேற்கு பாகிஸ்தானின் இதர தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்

மேற்கு பாகிஸ்தானும், கிழக்கு பாகிஸ்தானும் மதத்தால் ஒன்று பட்டிருந்தாலும் மொழியால் வேறுபட்டிருந்தன. கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வங்காளி மொழி பேசுகிறவர்கள்.

இங்கேதான் நாம் இந்தியாவின் பெருமையை உணரவேண்டும். இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற போது பல ஆங்கில அறிவுஜீவிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள்,  வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற அரசியல் தலைவர்கள், இந்தியாவுக்கு சுதந்திரமா என கேலியாக பேசினார்கள்.

"இந்தியா எப்படி ஒரு நாடாக முடியும்? அங்கே எத்தனை மொழிகள், மதங்கள், ஜாதிகள், பிராந்தியங்கள்? அதை எப்படி ஒரு நாடாக கருத முடியும்?" என்றார்கள்.

ஆனால் இந்தியாவில் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும், பல மொழிகள், இனங்கள், மதங்களை கொண்ட இந்த தேசம், ஒரே நாடாக இன்று வளர்ந்து உலகத்திற்கே ஜனநாயகத்தின் பெருமையை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் பாகிஸ்தானிலோ, கிழக்கு, மேற்கு, உருது, வங்காளி என்ற பேதங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அவர்களால் அந்த தேசத்தை ஒன்று படுத்தி வைக்க முடியவில்லை.

தேர்தல் முடிந்து, மக்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியோ, அதன் தலைவரோ ஆட்சி அமைப்பதை மேற்கு பாகிஸ்தானியர்கள் விரும்பவில்லை.

 அப்போது பாகிஸ்தான் அதிபராக (இவரும் ராணுவ சர்வாதிகாரிதான்) இருந்த யாகியா கான்  ` பூட்டோவும், நீங்களும் சேர்ந்து மந்திரிசபை அமையுங்கள்’ என்று அவர் முஜிபுர் ரஹ்மானுக்கு யோசனை சொன்னார். ஆனால் அதை  ரஹ்மான் ஒப்புக்கொள்ளவில்லை.

திடீரென்று, மார்ச் 26ம்தேதி நள்ளிரவு ரஹ்மானும், அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிழக்கு பாகிஸ்தானில் ராணுவத்தினர் அட்டூழியங்களில் ஈடுபட்டனர். ரஹ்மானின் ஆதரவாளர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார்கள்.

கிழக்கு பாகிஸ்தான் ஆன வங்காள  தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு லட்சக்கணக்கான  மக்கள் அகதிகளாக ஓடிவந்தனர். ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக தாண்டிவிட்டது. இந்த அகதிகள் அஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

அகதிகள் பிரச்னை காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமான உறவு மேலும் சீர்கேடடைந்தது.

 இந்த சூழ்நிலையில்தான், 1971 டிசம்பர் 3ம்தேதி மாலை இந்தியா மீது பாகிஸ்தான் திடீரென்று தாக்குதல் நடத்தியது.  அமிர்தசரஸ், பதன்கோட், ஸ்ரீநகர், ஜோத்பூர், ஜாம்நகர், அம்பாலா, ஆக்ரா ஆகிய நகரங்களில் உள்ள விமானத் தளங்கள் மீது பாகிஸ்தானின் விமானங்கள் குண்டு வீசின.

 இதற்கு பிறகுதான் இந்தியா – பாகிஸ்தான் போர் தொடங்கியது.

மேற்கு பாகிஸ்தானின் சர்கோதா, மூரித், மியான்லால், ஹார் முதலிய இடங்களில் உள்ள விமானத்தளங்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசின. லாகூர் அருகில் உள்ள விமானத்தளங்களின் மீதும் விமானத் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலால், பாகிஸ்தானின் ஏராளமான போர் விமானங்கள் தரையிலேயே அழிக்கப்பட்டன.

இந்தியாவின் கவனம் முழுவதும் மேற்கு எல்லையிலும், காஷ்மீர் பகுதியிலும்தான் இருக்கும், கிழக்கு பாகிஸ்தானில் அது தாக்குதல் நடத்தாது என்று பாகிஸ்தான் சர்வாதிகாரி யாகியா கான் நினைத்திருந்தார். ஆனால், அது தப்புக் கணக்காகியது.

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள டாக்கா விமானத்தளத்தில் 20 போர் விமானங்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்திருந்தது. இந்திய  விமானங்கள் குண்டு வீசி இந்த 20 விமானங்களையும் அழித்தன.

விக்ரந்த் என்ற பெயருடைய இந்திய போர்க்கப்பலை தகர்ப்பதற்காக கராச்சியில் இருந்து புறபட்டு வந்த காஜி என்ற பெயருடைய பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலை ( இது 2,500 டன் எடையுள்ளது)  இந்திய கப்பல் கண்டுபிடித்து அழித்தது. பாகிஸ்தான்  கப்பல்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு வரமுடியாதபடி  முற்றுகையிடப்பட்டன.

இதே சமயத்தில்  பாகிஸ்தான் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கிளர்ச்சியில்  ஈடுபட்டனர். முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் `முக்தி வாகினி’  என்ற படையை அமைத்து பாகிஸ்தான் ராணுவத்திடம் போரிட்டனர்.

கிழக்கு பாகிஸ்தான் மக்களின்  சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதென்று  இந்தியா முடிவு செய்தது.  இந்திய ராணுவ வீரர்கள்  விமானங்களில் சென்று கிழக்கு பாகிஸ்தான் தலைநகரான  டாக்காவைச் சுற்றிலும் பாரசூட் மூலம் குதித்தனர்.

இந்திய ராணுவத்தினரும், முக்தி வாகினி படையினரும் டாக்காவைச் சுற்றி முற்றுகையிட்டனர்.

தளபதி நியாஜி தலைமையில் டாக்காவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் இருந்தனர்.  இந்திய வீரர்களுடன் போரிட்டால் பாகிஸ்தான் படைகள் அழிவது நிச்சயம் என்பதை நியாஜி புரிந்து கொண்டார். டிசம்பர் 16ம்தேதி மாலை 4.31 மணிக்கு இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தார்.

 அதே சமயம், மேற்கு முனையிலும், பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடி மேல் அடி கிடைத்தது. இன்னும் சில மணி நேரத்தில் லாகூரை இந்திய ராணுவம் கைப்பற்றிவிடும் நிலைமை ஏற்பட்டது. அதனால் போர் நிறுத்தத்துக்கு யாகியா கான் சம்மதித்தார்.

டிசம்பர் 17ம்தேதி மேற்கு முனையிலும் போர் ஓய்ந்தது.

 கிழக்கு பாகிஸ்தான் `வங்காளதேசம்’ என்ற பெயரில் தனி சுதந்திர நாடாகியது.

 சிறையில் இருந்த முஜிபுர் ரஹ்மான் விடுதலையாகி வங்காள தேசத்தின் அதிபரானார். பாகிஸ்தானின் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றார்.

1972ல் பாகிஸ்தானின் பிரதமரான பூட்டோ, 1979ம் வருடம் எப்படி தூக்கிலிடப்பட்டார் ?

அந்த விஷயத்திற்கு போகுமுன் 1979ம் ஆண்டு   இங்கே சென்னையில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் பார்ப்போம்.

 1980ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு பொன்விழா ஆண்டு. ஆனால், அதன்  ஆரம்பம் 1979ம் ஆண்டே துவங்கி விட்டது.  16.9.1979 தேதியிட்ட இதழில்  `பொன்விழா இதழ் – 1’ எனத் தொடங்கி ஒவ்வொரு இதழ் அட்டையிலும் வரிசையாக எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. `விகடனுக்கு வயது 50’  என்னும் தலைப்பில் விகடன் துவங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டு புத்தகங்களையும் ஒவ்வொரு பிரபல எழுத்தாளர் அல்லது இலக்கியவாதி மதிப்பீடு செய்து, தொகுத்து வழங்கினார்கள்.  தவிர எழுத்தாளர்கள், வாசகர்கள், மாணவர்களுக்கென  2,50,000 ரூபாய்க்கு பிரம்மாண்டமான பரிசுத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

சுஜாதாவின் `கனவுத் தொழிற்சாலை’ தொடர்கதை 21.10.79 தேதியிட்ட இதழில் தொடங்கியது.

இந்த தொடர் துவங்குவதற்கு முன் அந்தத் தொடரின் முதல் சில அத்தியாயங்களை வைத்துக் கொண்டு, எழுத்தாளர் சுஜாதா, நடிகை லட்சுமி, இயக்குநர் மகேந்திரன் மூவரும் தாஜ் கோரமண்டல் ஓட்டல் அறையில் விவாதம் நடத்தினார்கள். அதை அப்படியே ஆனந்த விகடன் அட்டைப்படமாக வெளியிட்டது.

இதே ஆண்டில் உகாண்டாவில் இன்னொரு சம்பவம் நடந்தது.உகாண்டாவில் கொடுங்கோலன் இடி அமீன் ஆட்சி  ஒரு முடிவுக்கு வந்தது.

 இதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு  ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் ஒரு புரட்சியை தோற்றுவித்து, ஆட்சியை கவிழ்த்து, நாட்டின் தலைவரான இடி அமீன் ஒரு குட்டி ஹிட்லராகவே திகழ்ந்தார்.

அவரது பேச்சுக்களும்,  செயல்களும், கோமாளித்தனமாக இருந்தாலும், அவர் கொடூரமான ஒரு சர்வாதிகாரியாகவே இருந்தார்.  அவரது ஆட்சியில், கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும், சித்ரவதை களுக்கும் அளவேயில்லை. இதுவரை அவர் சுமார் 3 லட்சம் பேரைக் கொன்று குவித்திருப்பதாகக் கணக்கிடப்பட்டிருந்தது.

அவருடைய மனைவிமார்களின் எண்ணிக்கையும், குத்துச்சண்டை வீரர் முகம்மது அலிக்கு  அவர் விடுத்த சவாலும், ராணுவத்தின் பீல்ட் மார்ஷல் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொண்ட வேடிக்கையும், `பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை வெற்றி கொண்டு வாகை சூடிய வீரர்’ என்று தமக்கு பட்டம்  சூட்டிக் கொண்டும் வினோதமாக நடந்து கொண்டார். தன் இஷ்டத்திற்கு ராணுவ உடை முழுவதும் குத்திக்கொண்ட ராணுவ கவுரவ மெடல்களும் உலக அரங்கில் அவரை ஒரு 'சிரிப்பு நடிக'ராகவே அறிமுகப்படுத்தின.

 அவரால் பழிவாங்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட உகாண்டா தலைவர்கள் ஒன்று கூடி தேசிய விடுதலை  இயக்க முன்னணி ஒன்றை அமைத்துக் கொண்டு, இடி அமீனை விரட்டியடிக்க நேரம் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 டான்ஸானியா, ஜாம்பியா  நாட்டுத் தலைவர்களின் ஆதரவும் உதவியும் அவர்களுக்குக்  கிடைத்தன. ஒரு நாள் டான்ஸானியா படைகள் உகாண்டாவின் தலைநகரான காம்ப்பாலாவை கைப்பற்றின. இடி அமீன் எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டார்.

யூசர் லூலே என்னும் முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்  உடனே உகாண்டாவின் அதிபராக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையில் இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு  எங்கிருந்தோ ஏதோ ஒரு மூலையில் வானொலியில் இடி அமீனின் குரல் ஒலித்தது! "உகாண்டாவின் ஜனாதிபதியும், ராணுவப் படையின் தளபதியுமான இடி அமீன் பேசுகிறேன். இன்னும் நான்தான் உகாண்டாவின்  தலைவனாக இருக்கிறேன்.  தலைநகரிலும், வடக்கு, மத்திய, கிழக்குப்புற நகரங்களிலும் நம் படைகள் பலமுடன் இருக்கின்றன…’’ என்று பேசினார்.

இதைக் கேட்டு உலகமே சிரித்தது!

இந்த வருடம் தமிழ் சினிமாவிலும் ஒரு பரபரப்பு நடந்தது.

இந்த வருடத்தில் மட்டும் தமிழில் மொத்தம் 99 படங்கள் வெளியாகின.

இந்த ஆண்டுதான் கமல்ஹாசனின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த `கல்யாணராமன்’ படம் சென்னை அலங்கார் திரையரங்கில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது.

 இந்த படத்தை பஞ்சு அருணாசலம் கதை, வசனம் எழுதி தயாரித்திருந்தார். எஸ்.பி. முத்துராமனின் உதவியாளர் ஜி.என். ரங்கராஜன் படத்தை இயக்கியிருந்தார்.

 இந்த படத்தின் கதை ஒரு ஆங்கிலப் படத்தை தழுவியது. அப்போது சென்னையில் சர்வதேச திரைப்படங்களுக்கான விழா நடந்தது.

 அப்போது காட்டப்பட்ட படம்தான் `DONAFLORA AND HER TWO HUSBANDS' படம். அதை அழகாக தமிழாக்கம் செய்திருந்தார்  பஞ்சு அருணாசலம். இதே ஆண்டுதான் பஞ்சு அருணாசலம் கதை, வசனம் எழுதி தயாரித்து ரஜினிக்கும் திருப்புமுனையாக அமைந்த `ஆறிலிருந்து ஆறுபது வரை’ படம் மிட்லண்ட் திரையரங்கில் வெளியானது.

இந்த புதிய இளைஞர்களுக்கு போட்டி போடும் விதமாக வெளியானதுதான் நடிகர் திலகம் சிவாஜி – கே. ஆர். விஜயா நடித்து சென்னை சாந்தி தியேட்டரில் வெளியான `திரிசூலம்.’  இந்த வருடம் வந்த எல்லா தமிழ்படங்களையும் வசூலில் முறியடித்து வெள்ளிவிழா தாண்டி ஒடிய படம் இது. இந்த படத்திற்காக  மதுரையில் சிவாஜி ரசிகர்கள் பிரம்மாண்ட விழா எடுத்தார்கள்.

இந்த ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த படம் `அழகே உன்னை ஆராதிக்கிறேன்.’  சென்னை பைலட் தியேட்டரில் இந்த படம் வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களுமே மிக அருமை.

இந்த வருடம் மட்டும் இளையராஜா 29 படங்களுக்கு இசையமைத்திருந்தார். எல்லாப் படங்களின் பாடல்களுமே ஹிட் ஆகின. உதாரணமாக கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து படுதோல்வி அடைந்த திரைப்படம் `மாரியம்மன் திருவிழா.' ஆனால் இந்த படத்தில் கூட ராஜாவின் இசையில் டி.எம்.எஸ். பாடி வெளியான `சிரித்தாள் சிரிப்பேன் அவள் ஒரு ராஜகுமாரி’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் பரவியது. ஒரு புறம் சினிமாவில் பல படங்களின் வருகையும், ராஜாவின் இசைப்  பிரவேசமும் சூடு பிடித்துக்கொண்டிருந்த அதே வேளையில். அதே சினிமா தொடர்பாக ஒரு சோகம் தமிழகத்தை கவ்விக் கொண்டது. தமிழக மக்கள்  சோகத்தில் துவண்டு போனார்கள்.  அந்த சம்பவம் தமிழகத்தின் தெற்கே தூத்துக்குடியில் நடந்தது….

அது என்ன?

(தொடரும்)