குர்மீத் ராம்ரஹீம் சிங் ஓர் அரசியல் அலசல்!

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2017

கடவுள்கள் மீதோ, மனிதக்கடவுள்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருப்பவர்கள் மீதோ வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை, மற்றவர்கள் மீதான வெறுப்பை நோக்கித்தான் இட்டுச் செல்லும் என்பது மாற்றுக்கருத்து இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. வரலாறு முழுக்க இதற்கான உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஈராக்கும், சிரியாவும், ஆப்கானும் இதனால்தான் சுடுகாடு ஆக்கப்பட்டன. வல்லரசு நாடுகளின் ஆதார அரசியலுக்கும் இதில் பங்கு இருக்கிறது.

இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பும், கோத்ரா ரெயில் எரிப்பும், குஜராத் கலவரமும், மும்பை குண்டுவெடிப்புகளும் இந்த வெறுப்பால் சக மனிதர்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு உதாரணங்கள். இதன் சமகால உதாரணம், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார புகாரில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹரியானா, பஞ்சாப்பில் நிகழ்ந்த கலவரங்களும், அதன் விளைவான 38 உயிர்பலிகளும்.

சாமியார் குர்மீத் இப்போது சிறையில் இருக்கிறார். அவருக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

ஒருவர் மீதான அன்பு, மற்றவரை வெறுப்பதற்கான ஆயுதமாக எப்போது மாறுகிறது? தாங்கள் குருவாக வகுத்துக் கொண்ட ஒருவர் எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவராக, களங்கமற்றவராக இருக்க வேண்டும் என ஏன் மக்கள் விரும்புகிறார்கள்? அது பொய்யானால் ஏன் கொந்தளிக்கிறார்கள்? நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரை நியாயப்படுத்தும் மனப்போக்கு எங்கிருந்து வருகிறது? இதற்கெல்லாம் பதில் மனித இயல்பில் இருக்கிறது.

மனிதர்கள் பொதுவாக கூட்டாக வாழ்வதற்கு பழகிக் கொண்டவர்கள். தனியாக வாழ்தல் அவர்களால் இயலாத காரியம். அதுபோல மனிதர்களுக்கு தாங்கள் பற்றிக் கொள்ளவோ துதிபாடவோ யாரேனும் வேண்டும். தங்கள் துயரங்களுக்கு அவர்கள் இளைப்பாறுதல் தருகிறார்கள் என்ற நம்பிக்கை வேண்டும். ஏதோ ஒருவகையில் அவர்கள் தங்களை மீட்டெடுக்கிறார்கள் என்ற எண்ணம் வேண்டும். அது கடவுளோ, சாமியாரோ யாராக வேண்டுமானலும் இருக்கலாம். இந்த மனநிலைதான் இங்கு பல சாமியார்களை உருவாக்கி வைத்திருத்திருக்கிறது. அப்படியே, அவர்களின் தவறுகளைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் காட்டுமிராண்டி கூட்டத்தை தோற்றுவிக்கிறது.

அந்த வகையில் உருவான ஒருவர்தான் இந்த குர்மீத்தும். ஆனால் இவர் தன்னை சாமியாராக மட்டும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. நடிகர், பாடகர், இயக்குனர், தத்துவஞானி எனப் பல்வேறு வடிவங்களில் இவர் தன்னை மக்கள் முன் நிறுத்தினார். இதில் கட்டுண்ட மக்கள் இவரை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டு வழிபடும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். 6 கோடி பேர் இந்த இயக்கத்தின் ஆதரவாக இருக்கிறார்களாம்.

குர்மீத்களின் வளர்ச்சிக்கு அரசியல்ரீதியான காரணங்களும் இருக்கின்றன. நம் நாட்டில் அரசியலும் ஆன்மிகமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. பிரிக்க முடியாதவை. இதன் பின்னுள்ள அரசியல் கணக்குகள் பல. வாக்குவங்கி அரசியல் நடத்தும் அரசியல் தலைவர்கள் நிறைந்த நாட்டில் ஆன்மிகத் தலைவர்களின் ஆதரவு என்பது மறுக்க முடியாதது.

குர்மீத் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர். 2014ம் ஆண்டு நடந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தன் ஆதரவாளர்களை வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டவர் குர்மீத்.

மேலும் அவருடைய இயக்கத்துக்கு பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆதரவு அதிகமாக உள்ளது. ஆன்மிக அமைப்பை விடவும் வலுவானது சாதி அமைப்பு. தேன் கூட்டில் கைவைப்பது போன்றது இது. ஆக, இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் அமைதியாக இருந்துதான் ஆக வேண்டும். அதனால்தான் கலவரம் ஏற்படும் எனத் தெரிந்தும் கைகட்டி அமைதியாக வேடிக்கை பார்த்தார் ஹரியானா முதல்வர் கட்டார்.


சாலை வழி சென்றால் நீதிபதியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில், ஹெலிகாப்டரில் பறந்து,  சிறை வளாகத்திலேயே குர்மீத்துக்கு நீதிபதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் நிலை வந்தது இந்திய வரலாற்றில் ஒரு கரும் புள்ளி தான். எனினும், இந்தத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை இன்னும் கூட்டியிருக்கிறது.

அதேசமயம், இது போன்ற அமைப்புகள் வலுவாக தோற்றம் கொள்ளும்போது அரசியல்ரீதியாக அவற்றை வளர்த்து விடாமல், அவற்றின் நடவடிக்கைகள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். ஆதரவாளர்களின் செயல்பாடுகள், தொடர்புகள் ஆராயப்பட வேண்டும். இவற்றை அரசுகள் முறையாக செய்ய வேண்டும்.

‘தேரா சச்சா சவுதா’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்று பொருளாம். இந்த அமைப்பின் முக்கியப் போதனைகளில் இரண்டு; புலால் உண்ணாமை மற்றும் மது, போதைப்பொருள்களைப் பயன்படுத்தாமை.

காந்தி கடைசி வரை கடைப்பிடித்த இரண்டு நெறிகள் இவை. வாழ்நாள் முழுக்க அகிம்சையை வலியுறுத்திய ஒருவரின் வாழ்தல் முறையை  பின்பற்றும் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களாலே வன்முறை விதைக்கப்படுகிறது; கலவரம் தூண்டப்பட்டு 38 பேரின் உயிர் பறிபோகிறது என்பது எவ்வளவு பெரிய முரண் இல்லையா?

ஆன்மிகமும், மதநம்பிக்கைகளும் அன்பிற்கானவை. அனைத்து மதங்களும் அன்பு என்ற கடலில் கலக்கிறது என்றார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

ஆனால், அடிப்படைவாதம் அழிவை நோக்கியே அழைத்துச் செல்லும்.

அன்பும், பரஸ்பர புரிதல்களும் இருந்ததால் தான், இத்தனை யுத்தங்களையும், இயற்கை பேரழிவுகளையும் கடந்த பிறகும் மனிதகுலம் இன்னும் எஞ்சியிருக்கிறது.

இந்தியாவில் இதுபோன்ற உயிர் பலிகள் நிகழ்வது இதுவே இறுதியாக இருக்கட்டும்!


கட்டுரையாளர்: பிரதீப்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation