ஓல்டு இஸ் கோல்டு : யார் யார் சிவம் அன்பே சிவம்!

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2017தமிழ் சினிமாவில் கமல் அவ்வப்போது சில வித்தியாசமான முயற்சிகளை செய்வார். அதற்கு பெரும்பாலும் வணிகரீதியாக வரவேற்பு இல்லை என்றாலும், உணர்வு ரீதியாக பல பாராட்டுக்களையும் விருது களையும் பெற்றுள்ளது.அந்த வகையில் அவரது ஒரு முயற்சிதான் ‘அன்பே சிவம்’. இப்படத்தில்  கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர், சந்தானபாரதி, சீமா, யூகிசேது, உமா ரியாஸ்கான், சுஜாதா நாராயணன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இசை: வித்யாசாகர்ஒளிப்பதிவு:  ஆர்தர் ஏ.வில்சன்எடிட்டிங்:பி. சாய்சுரேஷ்தயாரிப்பு:  லஷ்மி மூவி மேக்கர்ஸ். கதை, திரைக்கதை:   கமல்ஹாசன் வசனம் : மதன். இணை தயாரிப்பு, இயக்கம் :   சுந்தர் சி.

புவனேஸ்வரில் இருக்கும் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் சென்னை விமானத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் அன்பரசுவுக்கும் (மாதவன்) நல்லசிவத்துக்கும் (கமல்ஹாசன்) இடையே உரையாடல் தொடங்குகிறது. விளம்பரப்பட இயக்குனரான அன்பரசு தன்னை ’ஏ. அரஸ்’ என்று அழைக்கச் சொல்லும்  உயர்குடி  கனவான். மாற்றுத்திறனாளியான  நல்லசிவம்  பாட்டாளிகளுக்காக உழைக்கும் சமூக சேவகன். கனமழை காரணமாக விமானப்பயணம் தடைப்பட சிவத்தின்  நடவடிக்கைகளால் சந்தேகமடையும் அரஸ் விமான நிலைய காவலர்களிடம் புகார் அளிக்கிறார். பின்பு சிவம் விபத்தினால் பாதிக்கப்பட்டதால் ஊனமுற்றிருக்கிறார் என்று தெரிந்து கொள்கிறார். அவரது தோற்றத்தை வைத்து சந்தேகப்பட்டதற்காக அரஸ் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். ஆனால், அவரது ஆலோசனைகளால் எரிச்சலடைகிறார்.

மொத்த நகரமும் வெள்ளத்தால் சூழப்பட வேறு வழியில்லாமல் அரஸ், சிவத்துடன் ஒரே அறையை பகிர்ந்து கொள்கிறார். வழக்கில் ஜெயித்த நஷ்ட ஈட்டுத்தொகையான லட்சக்கணக்கான பணத்திற்குரிய காசோலையை உரிய நபர்களிடம் சேர்ப்பதற்காக சிவம் சென்னைக்கு செல்ல, தனது திருமணத்திற்காக இரண்டே நாட்களில் சென்னை செல்ல வேண்டிய அவசரம் அரஸுக்கு. இருவரும் விமான சேவை கிடைக்காத நிலையில் பேருந்து வழியாக சென்னைக்கு புறப்படுகிறார்கள்.  சிவம் தனது கடந்தகால வாழ்வை அரஸிடம் சொல்கிறார். சில வருடங்களுக்கு முன்பாக ஆரோக்கியமான இளைஞராக, தொழிலாளர்களுக்காக போராடும் ஒரு போராளியாக இருக்கும் நல்லசிவம், தனது குழுவோடு சேர்ந்து வீதிகளில் புரட்சி நாடகங்களை நடத்துகிறார். பெருமுதலாளியாக இருக்கும் கந்தசாமி படையாச்சி (நாசர்) தனது தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு ஊதிய உயர்வு வழங்க மறுக்கிறார். தனது அதிகாரத்தால் அனைவரையும் அடிபணியவைக்கும் கந்தசாமிக்கு, தன்னை நாடகங்கள் மூலமாக எதிர்த்து வரும் சிவத்தின் மேல் பெரும்பகை ஏற்படுகிறது. இதற்கிடையே பொதுவான கலை ரசனையால் நண்பர்களாகும் சிவமும், கந்தசாமி மகள் பாலசரஸ்வதியும் (கிரண்) காதலிக்கிறார்கள்.

செய்தியை அறிந்து கோபம் கொள்ளும் கந்தசாமி, சிவத்தை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் அதற்குள்ளாகவே சிவம் தனது குழுவோடு செல்லும் பேருந்து விபத்துக்குள்ளாகிறது. விபத்தில் படுகாயமடையும் சிவம் இறந்துவிடுவார் என்று எண்ணி மகிழ்ச்சியடையும் அவர், தனது மகளிடம் சிவம் இறந்து விட்டதாக கூறுகிறார். முகம் முழுதும் தையல் தழும்புகளோடு, கால் செயல் இழந்து, உடல் முழுதும் பாதிப்புகளோடு உயிர்பிழைக்கும் சிவம் தனது நிலையை எண்ணி கலங்குகிறார்.

சென்னை வந்து சேரும் அரஸ், சிவத்தோடு சென்று தொழிலாளர்களின் காசோலையை அவர்களிடம் ஒப்படைக்கிறார். அதோடு சிவத்தை தனது சகோதரராக ஏற்றுக்கொண்டு அவரை தனது திருமணத்திற்கு வருமாறு அழைக்கிறார். அரஸை வாழ்த்த வரும் சிவத்திற்கு மணமகளாக பாலாவை கண்டதும் கந்தசாமியின் சூழ்ச்சி புரியவருகிறது. இதற்கிடையே சிவத்தைக்கண்டு அதிர்ச்சியடையும் கந்தசாமி தனது மகளின் வாழ்விலிருந்து விலகி விடுமாறு கூறுகிறார். சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சிவம் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தருமாறு நிபந்தனை விதிக்கிறார். திருமணத்திற்காக நிபந்தனையை ஒப்புக்கொள்ளும் அவர், தொழிலாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து ஒப்பந்தம் செய்து தருகிறார். தனது அன்பு தம்பியான அரஸுக்கும் அவரது மனைவியாகும் பாலாவுக்கும் வாழ்த்து கடிதம் ஒன்றை வைத்துவிட்டு அங்கிருந்து திருப்தியுடன் புறப்படுகிறார் சிவம். தனது வலதுகரமான அடியாளை சிவத்தை கொல்வதற்காக அனுப்புகிறார் கந்தசாமி. சிவத்தை சந்திக்கும் அந்த அடியாள், கந்தசாமியால் தான் செய்த பாவங்களால் தனது மகளை இழந்துவிட்டதாக கூறி வருந்துகிறார். இந்த ஊரை விட்டே சென்றுவிடுமாறு கூறும் அந்த அடியாளிடம் உண்மையான தெய்வம் உன் மனதிலுள்ள கருணைதான் என்று கூறும் சிவம் தனது பயணத்தை தொடர்கிறார்.

முதலில் இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷனுடன் இணைந்து எடுப்பதாக இருந்த கமல்ஹாசன், அவரது விலகலுக்கு பின் இயக்குனர் சுந்தர்.சி யுடன் இணைந்தார். இயக்குனராக மட்டுமல்லாமல் இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த சுந்தர்.சி இந்த படம் தனது வாழ்வை தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் மாற்றியிருப்பதாக கூறினார். இந்தப் படத்தின் தலைப்பு திருமூலரின் ’திருமந்திரம்’ என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு படமாக விளங்கிய இந்தத் திரைப்படம் உலக திரைப்பட விழாவில் இந்தியா சார்பாக 2003-ம் ஆண்டு திரையிடப்பட்டது. 51வது பிலிம்பேர் விருது விழாவில் நடுவர்களின் சிறப்பு விருதைப் பெற்றது. 2003-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை மாதவன் இந்தப்படத்துக்காக பெற்றார். வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோடு ஒன்றியமைந்ததோடு இனிமையாகவும் இருந்தன. வைரமுத்து எழுதியிருந்த “யார் யார் சிவம் அன்பே சிவம்”…மனதை உருக்கும் பாடலாக அமைந்தது. இப்பாடலை கமல்ஹாசனுடன் இணைந்து பாடகர் கார்த்திக் பாடியிருந்தார்.அதே போல் விஜய் பிரகாஷ் , ஸ்ரீராம் பார்த்தசாரதி, சாதனா சர்கம் இணைந்து பாடியிருந்த “பூவாசம் புறப்படும்”…பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

--– எஸ். கணேஷ்