ஆன்மிக கோயில்கள்: கோடி லிங்கேஸ்வரர்!

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2017

ஒரு அங்குல உயரத்திலிருந்து 108 அடி உயரம் வரை இங்கே லிங்கப் பிரதிஷ்டை நிகழ்த்தப்பட்டிருப்பதுடன், தினமும் அனைத்து லிங்கங்களுக்கும் பூஜை நடத்தப்படுவதுதான் இங்கே ஹைலைட்! 35 ஏக்கர் பரப்பளவில் காணும் இடமெல்லாம் சிவ லிங்கங்கள்...

108 அடி உயரத்தில் உலகிலேயே பெரிய சிவலிங்கம் இங்குதான் உள்ளது. இதன் பிரம்மாண்டம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல் நகருக்கு 6 கி.மீ. தொலைவில் கம்ம சமுத்திரம் என்ற சிற்றூரில்தான் ஸ்ரீகோடிலிங்கேஸ்வர ஆலயம் அமைந்திருக்கிறது. இன்னும் 5 ஏக்கர் நிலம் தயாராக இருக்கிறது. இன்னும் 10 லட்சம் லிங்கங்கள் நிறுவப்படும்போது கோடிலிங்கேஸ்வரர் என்ற பெயருக்கு முழு அர்த்தம் கிட்டிவிடும்.

1980-ல் சாம்பசிவ மூர்த்தி என்ற பெரியவர் ஒரேயொரு சிவலிங்கத்தை இங்கு ஸ்தாபித்தார். இங்கு கோடி லிங்கங்களை நிறுவும் தன் கனவுக் கோயிலுக்கு கோடிலிங்கேஸ்வரர் ஆலயம் என்று பெயருமிட்டார். அந்தக் கனவு நிறைவேறும் நாள் நெருங்கி வருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தரும் தலமாக இது இருக்கிறது. ஆனால், சிவராத்திரி அன்று இரண்டு லட்சம் பேர் இங்கு கூடி, சிவபெருமானையும் இதர தெய்வங்களையும் தரிசித்து அருளைப் பெறுகிறார்கள்.

திரேதா யுகத்தில் நடந்த ராம, ராவண யுத்தத்தில் உயிர் விட்டவர்கள் நற்கதி அடையும் நோக்கில் தனுஷ்கோடியிலிருந்து ராமேஸ்வரம் வந்த அவர் அங்கு ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து போரில் பலியானவர்களுக்காகப் பிரார்த்தித்தார்.

இதையே மனதில் நிறுத்தி கலியுகத்தில் மக்களிடையே மன அமைதி, மகிழ்ச்சி, பக்தி ஆகியவை பெருக வேண்டி 1980 அக்டோபர் 10ம் தேதி ஒரேயொரு லிங்கம் மஞ்சுநாதர் என்ற பெயரில் நிறுவப்பட்டது.

தொடர்ந்து பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் சந்நிதிகள், வெங்கட்ரமண சுவாமி, அன்னபூர்ணேஸ்வரி, பாண்டுரங்க சுவாமி, பஞ்சமுக விநாயகர், இராம லட்சுமண சீதா, பஞ்சமுக ஆஞ்சநேயர், கன்னிகா பரமேஸ்வரி என அடுத்தடுத்து தெய்வ சன்னிதிகள். அனைத்து மூர்த்தங்களும் அழகுற அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனைகள், பூஜைகள் நிகழ்த்தப்படுகின்றன.

ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றித் திறக்கப்பட்டிருக்கிறது. பல மாநிலங்களிலிருந்து தாமதமாக - மாலையில் அல்லது இரவில் வரும் பக்தர்கள் இரவு தங்குவதற்கு கோயிலின் அருகில் உள்ள மண்டப அறைகள் இலவசமாக வழங்கப் படுகின்றன. ரூ. மூன்று ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரம் வரை (சிவலிங்கத்தின் அளவைப் பொறுத்து) கட்டணம் செலுத்தி இங்கு லிங்கப் பிரதிஷ்டை செய்யலாம். கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் லிங்கம் மைசூர் மாவட்டம், எக்கட தேவன கோட்டை என்ற ஊரில் செய்யப்பட்டு, மாதம் ஒரு முறை லாரிகளில் கொண்டுவரப்படுகின்றன.

ஆலயத்தின் சார்பில் வருடத்துக்கு 360 திருமணங்கள் இலவசமாக செய்து வைக்கப்படுகின்றன. இதற்கு மேற்படும் ஒவ்வொரு திருமணத்துக்கும் ரூ.200 கட்டணம். மேள வாத்தியம், புரோகிதர் மந்திரம் மற்றும் திருமணப் பொருட்கள் செலவு எல்லாமே ரூ.200க்குள் அடக்கம். தினமும் 10க்குக் குறையாத திருமணங்கள் இங்கு  நடைபெறுகின்றன.

வரும் பக்தர்கள் அனைவருக்கும் மதியம் ஒரு வேளை உணவு இங்கு வழங்கப்படுகிறது.

* * *