திண்ணை 10–9–17

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2017

பலவீனத்தைப் புரிந்து கொண்டால் பலசாலி!

முள்ளை முள்ளால் எடுப்பது தான் புத்திசாலித்தனம். காலில் குத்திய முள்ளை எடுக்க நாம் ஊசிமுனையைத்தானே பயன்படுத்துகிறோம். நம்மை விட பலசாலியாக இருந்தால் அவனது வீக்ன° எது என்று தெரிந்துகொண்டால், பலவீனத்தின் மூலம் பலசாலியை எதிர்கொண்டு வெற்றி பெறலாம். இது ஒரு வகைப் போர்தந்திரம், யுக்தின்னு சொல்லுவார்கள்.

இதில் நாம் கவனமாக இருக்க வேண்டியது, நமது பலவீனம் அடுத்தவருக்கு தெரியக்கூடாது. அப்போது தான் இந்த யுக்தி வெற்றிக்கு வழி வகுக்கும்.

பஞ்சபாண்டவர்களுக்கு விஸ்வகர்மா இந்திர பிரஸ்தத்தை புதுப்பித்து புதிய சபா மண்டபம் கட்டிக்கொடுத்து, நகரை சிங்காரப்படுத்தினான். தர்மர் அரியணை ஏறினார். ராஜசூய யாகம் நடத்த விரும்பினார். கிருஷ்ணரோ அது முடியாது, கம்சனின் மாமனார் ஜராசந்தன் நரமேத யாகம் செய்ய 84 மன்னர்களை சிறை பிடித்து வைத்துள்ளான். அவனை வென்றுதான் ராஜசூய யாகம் நடத்த முடியும். ஜராசந்தன் வரம்பல பெற்ற பலசாலி. 100 மன்னர்களை பிடித்தால் யாகம் நடத்தி பலசாலியாவான். எனவே நாம் முதலில் ஜராசந்தனை எதிர்த்து, அவனை தோற்கடித்து 84 மன்னர்களை விடுவிப்பதன் மூலம் அவனது சுய நலமான யாக முயற்சியையும் தடுத்து அடுத்தப்படியாக தருமரின் ராஜசூய யாகத்திற்கு அந்த மன்னர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று கிருஷ்ணர் சொன்னார். கிருஷ்ணர் பீமன், அர்ச்சுனன், மூவரும் அந்தணர் வேடத்தில் சென்று ஜராசந்தனிடம் அவனது நரமேத யாகத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மனித குலத்திற்கு இழுக்கை தேடித்தரும் மனித தர்மத்துக்கு எதிரானது இந்த யாகம் என்று சொல்ல, ஜராசந்தன் கோபமுற்று யார் நீங்கள்? என்று விசாரிக்கிறான். கிருஷ்ணர், "நான் யாதவ குல மன்னன் கிருஷ்ணன், இவர்கள் சந்திர குல மன்னர் தருமரின் தம்பிகள் பீமன், அர்ச்சுனன் என்று சொல்லி எங்களில் யாருடன் நீ போரிட விரும்புகிறாய்" என்று கேட்டார்.

ஜராசந்தன் பீமனுடன் மல்யுத்தம் புரிய தயாரானான். பீமன் பலமுறை ஜராசந்தனை அடித்து உடம்பை இரண்டாக பிளந்து போட்டாலும் ஜராசந்தன் உடல் மீண்டும் ஒட்டிக் கொண்டு அவன் உயிர் பெற்று எழுத்து போரிட்டான். கிருஷ்ணருக்கு அவனது பலவீனம் தெரியும்.

எனவே பீமனுக்கு ஜாடையாக ஒரு கோரைப் புல்லை இரண்டாகக்கிழித்து இடம் வலமாக மாற்றி வீசிக்காட்டினார். உடனே பீமன் அதே போல் ஜராசந்தனை அடித்து காலைப்பிடித்து இரண்டாக பிளந்து அந்த உடல் பகுதிகளை இடவலமாக மாற்றிப்போட்டான்.

அந்த உடலால் மீண்டும் இணைய முடியவில்லை. ஜராசந்தன் உயிர் பிரிந்தது 84 மன்னர்களையும் சிறையிலிருந்து விடுவித்து வெற்றிகரமாக தர்மர் தன் அஸ்வமேத யாகத்தை நடத்தினார்.

இது தான் பலசாலியாக இருந்தாலும் பல வீனத்தை தெரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

* * *

மூன்று காய்களில் ஆயிரம் காய் கொடுத்த அருந்ததி!

புத்திசாலித்தனம் இருந்தால் எதிரியையும் வசப்படுத்திவிடலாம். முடியாத காரியமாக இருந்தாலும் சிந்தித்து செயல்படும் பொழுது முடியாது என்ற நெகடிவ் சிந்தனை முடியும் என்ற பாசிடிவ் சிந்தனையாகும். உலகில் கற்புடைய பெண்களுக்கு உவமையாக அருந்ததியை குறிப்பிடுவது மரபு. 'வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை' என்று புறநானுாறும்,

'வடமீன் போற்றொழுதேத்த வயங்கிய கற்பினாள்' என்று கலித்தொகையும் 'அருந்ததிக் கற்பினாள்' என்று திரிகடுகமும் அருந்ததியின் திறத்தை தெரியப்படுத்துகின்றேன். சப்த கன்னியரில் ஒருத்தியாக வைத்து எண்ணப்படும் அருந்ததி மதங்க முனிவரின் மகள், சப்த ரிஷிகளில் ஒருவரான வசிட்டரின் தர்ம பத்தினி.

அதனால்தான் திருமணம் செய்து கொள்ளும் போது கற்பிற்கு இலக்கணமான அருந்ததியை தங்கள் மனைவியருக்கு காட்டுவதற்குத்தான் அம்மி மிதித்து அருந்ததியை காட்டும் சடங்கு செய்கிறார்கள்.

பிரம்ம குமாரரான வசிஷ்டரும் விசுவாமித்திரரும் எப்பொழுதும் எதிர்ப்புடன் செயல்படுபவர்கள், இருவருக்கும் ஏழாம் பொருத்தம், இருந்தாலும் வசிஷ்டரின் எதிர்ப்பினாலேயே தம்தவ வலிமையை கூட்டிக்கொண்டு, வசிஷ்ட்டர் வாயாலேயே பிரம்மரிஷி பட்டம் பெற்றார் வசுவாமித்திரர். ஒரு சமயம் வசிஷ்டர் தம் தந்தையார் பொருட்டுச் சிரார்த்த காரியம் நடத்த விசுவாமித்திரரை அழைத்தார். பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் நியமன காரியத்திற்கு விசுவமித்திரர் முன்னிருந்து நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் வசிஷ்டர். விசுமாமித்திரரும் சிரார்த்தத்தில் கலந்து கொண்டு சிரார்த்த போஜனம் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

ஆனால், ஒரு நிபந்தனை விதித்தார். "சிரார்த்த போஜனத்தில் 1008 காய்கறிகள் இருந்தால் மட்டுமே உண்ணுவேன்" என்று சொல்லி விட்டார். இதைக்கேட்டு வசிஷ்டர் நிலை குலைந்து விட்டார். இருவரும் பேசுவதைப் பார்த்துக் கொண்டு அருகில் நின்ற வசிஷ்டரின் தர்மபத்தினி அருந்ததி கணவரிடம் அவரது நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். 1008 காய்கறிகளுக்கு என்ன செய்வது என்று திகைத்த வசிஷ்டர், மனைவி அருந்ததி கொடுத்த தைரியத்தில் விசுவாமித்திரரின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். குறிப்பிட்டபடி சிரார்த்தம் முடிந்து உணவு உண்ண இலைக்கு முன்பாக விசுவாமித்திரர், அமர்கிறார். இலையில் உள்ள கூட்டு, பொரியல்களில் உள்ள காய்கறிகளை எண்ணிப்பார்க்கிறார்.

பதினோரு வகை காய்கள் மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது. விசுவாமித்திரர் கோபமாக அருந்ததியிடம் காய்களை சுட்டிக்காட்டி "என்ன இது?" என்று கேட்க, "சுவாமி, தங்கள் ஆணைப்படியே 1008 காய்கறிகள் படைத்துள்ளேன்" என்று சொல்ல, "பதினோரு வகையை படைத்துவிட்டு, 1008 என்று சொன்னால், எப்படி?" "சுவாமி.. அனைத்து சாத்திரங்களையும் அறிந்தவர் தாங்கள். இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இலையில் இருப்பது பதினோரு வகை தான். இதில் எட்டு வகை காhய்கறி போக மீதமுள்ள மூன்று வகையில் பாகல் 100 காய் வகைகளுக்கு சமம் பிரண்டை 300 காய் வகைக்கு சமம். பலாக்காய் 600 காய் வகைகளுக்கு சமம்.

ஆக 600, 300, 100 மொத்தம் ஆயிரம் மற்ற எட்டு வகையை சேர்த்தால் தங்கள் கணக்குப்படி 1008 வகை சரிதானே. இந்த கருத்தை சாத்திரம் கூறும் உண்மை என்பது உங்களுக்கு தெரியும் தானே?" என்று பவ்யமாக கேட்க, விசுவாமித்திரரால் அதை மறுக்க முடியவில்லை. அதை ஒப்புக்கொண்டு சிரார்த்த உணவை உண்டு, அருந்ததியை வாழ்த்திச்சென்றார்.

இந்த புத்திசாலித்தனமும் ஒரு வகையில் வெற்றிக்கான வழிமுறை தான்.!

– ஹெச். வசந்தகுமார்