வேணாமே வீம்பு! – சிறுகதை

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2017

''சரவணா... உன் மகளை பாரு, மூணு நாளா எதுவுமே சாப்பிடேல.''

''நானா சாப்பிட வேணாம்னு சொன்னேன்? அவளுக்கு திமிரு. அந்த திமிருக்கு நான் அடங்கி போவேன்னு நினைக்கிறா. அது ஒரு நாளும் நடக்காது. அவ பிடிவாதத்தாலே எதையும் சாதிச்சிடலாம்னு நினைக்கிறா. அவ தலைகீழா நின்னாலும் அது நடக்க போறதில்லே. அவனை சந்திக்க கூடாதுன்னு சொல்லியிருக்கேன். எவ்வளவு கொழுப்பு இருந்தா அவன் கூட இவ பைக்கிலே போயிருப்பா? அப்போ நான் சொல்றதுக்கு என்ன மதிப்பு? நீ சொல்றதை சொல்லு, நான் நடக்கிறபடிதான் நடப்பேன்னு இல்லே இவ சாதிக்கிறா? எவ்வளவு துணிச்சல் இருந்தா அவ நினைத்ததை சாதிப்பா? இத இப்படியேவிட்டா சரிவராதுன்னுதான் இன்னும் இரண்டு நாளையிலே மதுரைக்காரங்களை பெண் பார்க்க வர சொல்லிட்டேன். அவங்க பெண்ணை பார்த்து புடிச்சிருக்குதுன்னு சொன்னா அடுத்த மாசமே கல்யாணம் தான். இனிமேல் அவ காலேஜுக்கும் போக வேண்டாம். அங்கே போனாதானே அவனை சந்திப்பா?''

''சரவணா... அவளுக்கு வயசு இருபதுதானே ஆச்சு? இன்னும் ரெண்டு வருஷம் காலேஜுக்கு போகட்டுமே. அப்புறம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்.''

''அப்பா... நானும் அப்படி நினைச்சுத்தானே காலேஜுக்கு அனுப்பினேன்? ஆனா அவ எனக்கு ஆகாதவங்க யாருன்னு தெரிஞ்சிருந்தும், அவன் மகன் கூட பைக்கில் போறா... வாரா. இதை என் பிரண்ட் சொல்லித்தான் எனக்கே தெரிஞ்சிச்சு. இப்போ அந்த சந்தோஷைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தை கால்ல நிக்கிறா. நான் சொல்றத கேட்காம கேவலத்தைத்தான் தேடி தருவேன்னு அவ சொன்னா... நானும் அதை கேட்டுட்டு பேசாமல் இருக்கணுமா?''

''நாம அவங்க மனசிலே, சின்ன வயசிலே போட்ட விதைதானே, இப்போ பெரிய மரமா வளர்ந்து நிக்குது? சரண்யாவுக்கும், சந்தோஷுக்கும்தான் கல்யாணம்னு சின்ன வயசிலேயே நாம சொல்லிச்சொல்லி வளர்த்தோம். மாமா மகள்தானேன்னு அவனும் இவகிட்ட பழகினான். இவளும் அத்தை மகன் நம்மை கட்டிக்க போறவர்தானேன்னு உரிமையோட பழகினாள். அப்போவெல்லாம் நாம தடுக்கலே. அவங்க பழக்கத்தை, அன்பை ஆதரிச்சோம். ஆனா அதுக்கப்புறம் நீங்க பெரியவங்க அத்தானும், மச்சினனும் சண்டை போட்டுட்டு பிரிஞ்சிட்டீங்க. அந்த பிள்ளைகள் எப்படி பிரியும்? அதுவுமில்லாம சந்தோஷ் புரொபசரா வேலை பார்க்கிற காலேஜுன்னு தெரியாம அதே காலேஜிலே அவளை படிக்க சேர்த்து விட்டுட்டே. இப்போ பழைய அன்பு தொடருது. இதிலே தப்பு யாரோடதுன்னு யோசிச்சு பாரு.''

''அப்பா... இதிலே யோசிக்க ஏதுமில்லே. அவன் அந்த காலேஜிலேதான் புரொபசரா வேலை பார்க்கிறான்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா அவளை அங்கே சேர்த்திருக்க மாட்டேன். இப்போ எனக்கு அந்த குடும்பத்தை பிடிக்கலே. அவளை அங்கே கட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லே. இது ஒரு நாளும் நடக்காது.''

''சரவணா... இருபத்தி ஏழு வருஷத்துக்கு முன்னே போய் உன் மனசை கொஞ்சம் ஓட விட்டு பாரு. உனக்கும் என் தங்கச்சி மக கற்பகத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு நான் பிடிவாதமா நின்னேன். அதே போல உன் தங்கச்சிக்கும், கற்பகத்தோட அண்ணன் ஆனந்தனுக்கும் கல்யாணம் பண்ண நான் சம்மதிக்கலே. உறவுக்குள்ளே சம்பந்தம் வேண்டாம்னு சொன்னேன். ஆனா, நீங்க என்ன பண்ணினீங்க? ஒரு நாள் காலையிலே நீ கற்பகத்தை துாக்கிட்டு வந்து தாலி கட்டினே. மறுநாள் கற்பகத்தோட அண்ணன் ஆனந்தன், உன் தங்கச்சி மாலதியை துாக்கிட்டு போய் தாலி கட்டிட்டான். ரெண்டு குடும்பமும் உங்க செய்கையாலே கொதிச்சு போனோம். ஊரார் சமாதானப்படுத்த அப்புறம் குடும்ப பகையை மறந்தோம். இப்போ நீ சந்திக்கிறது அதே போல ஒரு காலகட்டத்தைதான். மாலதியோட மகன் சந்தோஷை உன் மக சரண்யா விரும்புறான்னு தெரிஞ்சும் நீ வீம்புக்கு கட்டி கொடுக்க மாட்டேன்ங்கிறே?''

''அப்போ நடந்ததை சொல்லி காட்டுறீங்களா அப்பா?''

''நீ தான் எல்லாத்தையும் மறந்துட்டியே? அதனால ஞாபகப்படுத்துறேன். சரண்யா வயசுக்கு வந்தப்ப கூட அவங்க முறைப்படி சீர்களை செஞ்சாங்க. நீதான் அவங்களை மதிக்கலே. வந்தவங்களை வான்னு கூட கேட்கலே. அதெல்லாம் மனசிலே நினைக்காம போன வாரம் மாலதியும், அவ புருஷனும் வந்து பெண் கேட்டாங்களே, அதையாவது மனசிலே வச்சு அவளை அவனுக்கு கட்டி கொடுப்பா.''

''அப்பா.... நீங்க இந்த விஷயத்திலே தலையிடாதீங்க?''

''சரவணா.... நீ உன் பிடிவாதத்தை விட்டு சின்னஞ்சிறுசுகளை வாழவிடுப்பா. அவ ஏதாவது செய்துக்கிட்டா நஷ்டம் நமக்குத்தானே?''

''அப்பா.. இப்போ அவ செய்துக்கிட்டு இருக்கிற காரியத்துக்கு அவ இல்லே, நான்தான் அவமானம் தாங்காம என் வாழ்க்கையை முடிச்சுக்கணும். ஆனா நான் அவ்வளவு கோழை இல்லை. பார்ப்போம். நானா... அவளான்னு.... யாரு இந்த விஷயத்திலே ஜெயிக்கிறோம்னு.''

உள்ளே இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சரண்யா வெளியே வந்தாள். ''தாத்தா.... உங்க மகன்கிட்டே சொல்லுங்க. நானும் கோழை மாதிரி தற்கொலை பண்ணி என் வாழ்க்கையை முடிச்சுக்க மாட்டேன். என்னால முடிஞ்ச வரை போராடுவேன். நானும் மேஜராயாச்சு. என் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க எனக்கும் உரிமை இருக்குன்னு அவங்ககிட்டே சொல்லுங்க தாத்தா.''

''அப்பா.... அதையும் பார்த்துடறேன். அந்த சந்தோஷுக்கு ஒரு நாளும் கட்டிக் கொடுக்க மாட்டேன். இதை அவகிட்டே சொல்லுங்கப்பா.''

''ஏன் சரவணா.... நீங்க ஒருத்தருக்கொருத்தர் தாக்கி பேசிக்கிறீங்க? இடையிலே நான் எதுக்குப்பா? என்னை ஏன் இழுக்குறீங்க?''

சரண்யா கோபத்தோடு உள்ளே போனாள்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கு கற்பகம் எழுந்த போது சரண்யாவை காணவில்லை. கூடவே செல்லசாமியையும் காணவில்லை. கொஞ்ச நேரம் தேடின கற்பகம் தன் கணவரை எழுப்பி சொன்னாள்.

''என்னங்க.... சரண்யாவை காணோம். கூடவே உங்கப்பாவையும் காணோம்.''

''ம்... வேற எங்கே போயிருப்பாங்க? திருநெல்வேலிக்கு உங்க அண்ணன் வீட்டுக்குத்தான்.''

தன் செல்லை எடுத்து செல்லசாமியிடம் பேச முயற்சி செய்தபோது அவருடைய செல்லை சுவிட்ச் ஆப் பண்ணி வைத்திருந்தார். 'ம்... சின்னதுக்குத்தான் அறிவில்லே. இந்த பெரிசுக்கு புத்தி எங்கே போச்சு?' சரவணன் கோபத்தோடு முணுமுணுத்தார்.

சரண்யாவும் அவள் தாத்தாவும் காணாமல் போய் விட்டார்கள் என்ற செய்தி வேலைக்காரர்கள் வழியாக வெளியே பரவியது. சிறிது நேரத்தில் தாத்தாவும், பேத்தியும் சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போய் விட்டார்கள் என்று ஆனது. மாமலை நேரம் ஆன போது ஆற்றங்கரையிலிருந்து காற்று வழி பரவின செய்தி.... ''வயசான ஒருவர் ஒரு பொண்ணோடு ஓடி போய் விட்டார் என்று கண், காது, மூக்கு வைத்து பரவியது. மாலை நேரம் சேதி, நம்ம ஊர்ல எழுபது வயசு கிழவன் ஒருவன், இருவது வயசு பொண்ணை இழுத்துட்டு ஓடிப்போயிட்டானாமில்லே. சே... கலிகாலம்... வயசு பையனும், வயசு பொண்ணும் ஓடிப் போவாங்க, இது என்னன்னா கிழவன இழுத்துட்டு யாரோ ஒரு பெண் ஓடிப் போனாளாம். ஊரே பேசிக்கிது.'' கேட்ட கற்பகமும், சரவணனும் நொந்து போயினர்.

காரை கிளப்ப டிரைவரிடம் சொன்ன சரவணன், கற்பகத்திடம் கூட சொல்லாமல் நெல்லைக்கு விரைந்தார். இரவு ஏழு மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தார். வாசலில் அவர் நிற்பதை கண்டுவிட்ட மாலதி விரைந்து வந்தாள்.

''வாங்கண்ணா'' என்றாள்.

''உன் வீட்ல உறவு கொண்டாட நான் வரலே. அப்பாவை என்னோடு அனுப்பி வை. அவரை அழைச்சுக்கிட்டு போகத்தான் வந்தேன்.''

சத்தம் கேட்டு செல்லசாமி வெளியே வந்தார்.

''அப்பா.... நான் உங்களை தேடித்தான் வந்தேன். வீட்டுக்கு வாங்கப்பா.''

''பதினைஞ்சு வருஷத்துக்கு அப்புறம் என் மக வீட்டுக்கு வந்திருக்கேன். எப்போ அங்கே வரணும்னு எனக்கு தோணுதோ அப்போ வர்றேன். நீ போ.''

''அப்பா... காலையிலே இன்சுலின் போடலே, மருந்து மாத்திரை எதுவும் சாப்பிடலே. மதிய மருந்து எடுத்துக்கலே. இப்படியே போனா இன்னும் ரெண்டு நாளைக்கு வேணும்னா உங்களால சரியா இருந்துக்க முடியும். மூணாவது நாளு உங்களை ஆஸ்பத்திரியிலே கொண்டு போய்தான் ஏறின சுகர், பிரஷரை கட்டுப்படுத்த முடியும். இதையெல்லாம் மனசுல நினைக்காமத்தானே இங்கே வந்து இருக்கீங்க.''

''எல்லா மாத்திரைகளோட பெயரும் எனக்கு தெரியும். நாளைக்கே வாங்கி சாப்பிடறேன். நீ போ.''

''அண்ணா.... வாசல் வரை வந்து..... நின்னுட்டு பேசுறீங்களே.... உள்ளே வாங்க அண்ணா.''

''ஏன் உள்ளே வந்து.... என்னை மதிக்காம இங்கே வந்து உட்கார்ந்து இருக்காளே... அவ முகத்திலே முழிக்கவா?''

''அண்ணா.... யாரை சொல்றீங்க? சரண்யாவையா...?''

''வேற யாரை சொல்லுவேன்? இனிமே இந்த ஜென்மத்திலே அவளை நான் பார்க்க விரும்பலே.''

''அண்ணா... சரண்யா இங்கே இல்லே. இப்போ அவ நாகர்கோவில்லே உங்க வீட்லதான் இருக்கா. அவ இங்கே வந்தவுடனேயே திருப்பி அனுப்ப முடிவு செஞ்சோம். ஆனா அவ போகமாட்டேன்னு பிடிவாதமா இருந்தா. 'நீ இப்படி வந்தது உங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தலைகுனிவு. உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் நடக்கணும்னு விதி இருந்தா அது எப்படியும் நடக்கும். அது குடும்பத்தை கேவலப்படுத்தி நடக்கக்கூடாது. உங்க வீட்லயே ஓடிப்போயிட்டான்னு சொல்லுவாங்க.  அதனால நீ உங்க வீட்டுக்கும் போ, நிச்சயமா உங்க அப்பா மனசு மாறி உங்களை சேர்த்து வைப்பார்' அப்படீன்னு அவளுக்கு புத்திமதி சொல்லி உங்க அத்தான் அவளை வீட்ல விட்டுட்டு வர போயிருக்கார். கூடவே சந்தோஷும் போயிருக்கான். இப்போ வர்ற நேரம்தான். அவளுக்குத்தான் சின்ன பொண்ணு அறிவில்லே. நம்ம அப்பாவுக்கு அறிவு எங்கே போச்சு? வயசானதாலே மழுங்கியா போச்சு?''

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்க, ஆனந்தன் இறங்கி வர, அடுத்து டிரைவர் சீட்டிலிருந்து கம்பீரமாக சந்தோஷ் இறங்கி வந்தான். அவனை பார்த்ததும் வியப்படைந்தார். சந்தோஷா இது! அடேயப்பா! என்னமா வளர்ந்துட்டான்! பதினைந்து வயசு பையனாக பார்த்தது. பத்து வருஷத்துக்கு பிறகு இப்போதுதானே பார்க்கிறார். என்ன ஒரு அழகு! ஆணழகன் என்றே சொல்லலாம். அவன் பார்க்கிற புரொபசர் உத்தியோகம் வேறு அவனுக்கு கம்பீரத்தை ஊட்டியிருந்தது. சரண்யா பிடிவாதம் பிடிப்பதிலும் அர்த்தம் இருக்கிறது. இவ்வளவு அழகான அத்தை மகனை எப்படி வேண்டாம்னு சொல்லுவா? மனதில் நினைத்தவாறே முற்றத்தில் நின்றிருந்தார்.

''அத்தான்..... வாங்க.... உள்ளே வாங்க. வந்து உட்காருங்க.''

''வாங்க மாமா... என்னம்மா, வந்தவங்களை வெளியவே நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க? மாமா வாங்க...''

அவர் கையை பற்றி சந்தோஷ் அழைக்க, ஒரு இயந்திர மனிதனை போல் உள்ளே சென்றார்.

''சின்ன பொண்ணு. ஏதோ தெரியாம செஞ்சிட்டா. நீங்கதான் பெரிய மனசு பண்ணி ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்.'' தயக்கத்தோடவே சந்தோஷின் அப்பா ஆனந்தன் சொன்னார்.

''நீங்க நாளைக்கு காலையிலே நிச்சயம் பண்ண வாங்க.'' சரவணன் சொன்ன போது அத்தனை பேர் முகத்திலும் மகிழ்ச்சி.

''இவ்வளவும் நடந்த பிறகு நான் பிடிவாதம் பிடிப்பதில் அர்த்தமில்லே. அவங்க மனசு போலே இந்த கல்யாணத்தை நல்லபடியா நடத்துவோம். அப்பா... இப்போ சந்தோஷம்தானே? இனிமே என் கூட வரலாம் இல்லையா?''

''சந்தோஷம்தான்ப்பா... மாலதி, மாப்பிள்ளை, சந்தோஷ் நான் சரவணன் கூட வீட்டுக்கு போறேன்.''

''அண்ணா... அப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்கே வந்திருக்காரு. நாங்க நாளைக்கு வரும் போது அப்பாவையும் அழைச்சுக்கிட்டு வர்றோமே. தன் பேரனுக்கு பெண் கேட்க.... நிச்சயப்படுத்த மாப்பிள்ளையின் தாத்தாவாக அவரும் வரட்டுமே'' என்றாள் மாலதி.

''சரி மாலதி. உன் விருப்பம் போலவே செய்.''

மாலதி சந்தோஷத்துடன் காபி, பலகாரம் எடுத்து வர சரவணனும் சந்தோஷத்தோடு அங்கே அமர்ந்து சாப்பிட்டு, பேசி இரண்டு மணி நேரத்துக்கு அப்புறம் இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு கிளம்பினார்.

– விஜயா கிருஷ்ணன், மார்த்தாண்டம்.