பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 10–9–17

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2017

பார்த்தது!

முதலில் அந்த விபரீத நிகழ்வு திருப்பூரில் நடந்தது. அப்போதுதான் போலீஸுக்கு இந்த விளையாட்டின் பயங்கரம் தெரிந்தது. அவர்களுக்கு தெரிந்தது கூட ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாகத்தான்.

 முதலில் 104 என்ற எண்ணுக்கு ஓர் அழைப்பு வந்தது. பேசியவன் ஒரு 14,- 15 வயது இளைஞன். `அவர்கள் என்னையும், என் குடும்பத்தாரையும் கொல்லப் போகிறார்கள்.’ போனை எடுத்த மனநல ஆலோசகர், `யார் அந்த அவர்கள்?’ மறுமுனையிலிருந்து பதிலில்லை. வெகு நேரம் அவனிடம் பேசிய பிறகுதான் அவன் தன் கைபேசியிலுள்ள ஒரு பயங்கரமான மரண புதைகுழியில் விழுந்திருப்பது தெரியவந்தது.

ஆம்! அந்த முதிர்ந்த சிறுவன் ஆங்கிலத்தில் புளூ வேல் என்று சொல்லப்படும் நீலத் திமிங்கிலம் என்ற விளையாட்டில் சிக்கிக் கொண்டுவிட்டான் என்பது புரிந்தது.

அது என்ன நீல திமிங்கிலம் ?

முதலில்  இணையதளத்தின் நிர்வாகி கைபேசி மூலமாக உங்களை ஓர் ஐம்பது நாள் சவாலுக்கு அழைப்பார். ஏற்றுக்கொண்டபின், ஒவ்வொரு நாளும் அதை விளையாடுபவருக்கு, ஒரு சவாலான விளையாட்டு கொடுக்கப்படும். அவர் அதை சாதித்துவிட்டார் என்பதற்கு அடையாளமாக அவர் அதை கைபேசியில் செல்பியாக புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். ஆரம்ப கட்டத்தில் எல்லா சோதனைகளுமே, எளிமையான தாகவும், அதை விளையாடுபவருக்கே பெருமையாகவும் இருக்கும்.

 பிறகு ஒரு கட்டத்தில் சவால்கள் கடுமையாகும் போது, அவர் வெளியேற நினைப்பார். அப்போது அவர் அச்சுறுத்தப்படுவார்.

காரணம், இந்த ஆரம்ப நாள் விளையாட்டு காலங்களிலேயே அவரை மிரட்டி, அவரது சொந்த தகவல்கள், பெற்றோர் யார், அவர்களது பின்னணி, சகோதர, சகோதரிகளின் ஜாதகமே அவர்களின் கையில் போய்விடும். வேறு வழியில்லாமல் தொடர்ந்தால், இறுதி கட்டம் என்பது உங்களை அது தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும். 'நீ தற்கொலை செய்து கொள்ளாவிட்டால், உங்கள் வீட்டில் உள்ள அனைவருமே கொல்லப்படுவார்கள்’ என்கிற அச்சுறுத்தல் வரும்.

இதற்கு பயந்தே பல இளைஞர்கள், அந்த விளையாட்டை விட்டு வெளியே வர அஞ்சுகிறார்கள். இப்போது நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், பல இளைஞர்கள், பள்ளிப்பிள்ளைகளின் துரித தற்கொலைகள் இந்த ஆன் – லைன் விளையாட்டுக்கே இட்டுச் செல்கின்றன.

 இந்த விளையாட்டின் காரணமாக சென்னையில் ஒரு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். மதுரையில் வீட்டுக் கஷ்டம் தெரிந்த பொறுப்புள்ள  இளைஞராக வாழ்ந்து கொண்டிருந்த  விக்னேஷ் என்ற 19 வயது கல்லூரி மாணவர், இந்த ` நீல திமிங்கில’ விளையாட்டின் வலையில் சிக்கி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். `நீல திமிங்கிலம்’ விளையாட்டினால் தன் உயிரை இழந்ததை அவரே தன் கையில் `புளூ வேல்’ என்று எழுதி, `நீல திமிங்கிலம்’  படத்தையும் வரைந்து உலகுக்கு காட்டிவிட்டார். அவர் வீட்டில் உள்ள ஒரு நோட்டில் `நீல திமிங்கிலம்’  ஒரு விளையாட்டல்ல. விபரீதம். ஒரு முறை உள்ளே போனால் வெளியே வரமுடியாது' என்று எழுதி மற்ற இளைஞர்களுக்கு எல்லாம் ஓர் எச்சரிக்கை விடுத்துவிட்டு, தன் உயிரை  முடித்துக் கொண்டார்.

அதே போல் புதுச்சேரியில்  மத்திய பல்கலைக்கழக முதுகலை பட்டப்படிப்பு மாணவரான  அசாம் மாநிலத்தைச் சேர்ந்த  போரா என்ற மாணவர் `நீல திமிங்கிலம்’ விளையாட்டு வலையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.  நெல்லை மாவட்டம், பத்தமடையைச் சேர்ந்த  ஒரு பாலிடெக்னிக் மாணவர் 'நீல திமிங்கில' விளையாட்டால் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.

ரஷியாவில் உள்ள  22 வயது பிலிப் பூடிக் என்ற மாணவர்தான் இந்த `நீல திமிங்கில’ விளையாட்டை உருவாக்கியவர்.  இதில் சேர்ந்துவிட்டால்,  '50 நாள், 50 சவால்', என்ற அடிப்படையில் தினமும் ஒரு  சவாலை அனுப்புவார்கள்.

இப்போது நாடு முழுவதும் இந்த விளையாட்டு பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. நாடெங்கிலும்  பள்ளிகளும், மனோதத்துவ நிபுணர்களும், இந்த விளையாட்டு குறித்து ஓர் எச்சரிக்கையை மாணவர்களுக்கு அனுப்ப தயாராகிவிட்டார்கள்.

சமீபகாலங்களில் ஒரு  சிறு குழந்தையோ, இளமை பருவத்தில்  உள்ள ஆணோ, பெண்ணோ, கையில் செல்போனை வைத்துக் கொண்டு அதிலேயே மூழ்கி இருந்தால்  நெஞ்சம் துடிக்கிறது.  எங்கே `புளூ வேல்’ எனப்படும்   `நீல திமிங்கில' விளையாட்டை விளையாடுகிறார்களோ என்ற அச்சம் பெற்றோருக்கும் மட்டுமல்ல,  ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இருக்கிறது.  தன் கொடிய கரங்களை ஒவ்வொரு மாநிலமாக  நீட்டிக் கொண்டு இளைஞர்களின்   உயிரை  பறித்துக்கொண்டிருக்கிறது இந்த விளையாட்டு.

இப்போது குழந்தைகளுக்கும், ஏன் இளைஞர்களுக்கும், அவர்கள் விரும்பும்படியான கைபேசியை பெற்றோர் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும்  லாப் – டாப், அல்லது கணினி போதும்– இந்த விளையாட்டு ராட்சசன் அவர்களை இழுத்துக்கொள்ள.

பல பெற்றோருக்கு, பிள்ளைகள் கணினியோடு கட்டுண்டு கிடந்தால் நிம்மதியாகவே இருக்கிறது. அங்கே இங்கே திரியாமல், ஓடியாடி விஷமம் செய்யாமல் பிள்ளை ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு சத்தம் போடாமல் விளையாடுகிறானே என்கிற நிம்மதி பல பெற்றோருக்கும் இருக்கிறது. இந்த சிந்தனை ஆபத்தின் ஆரம்பம்.

 அந்தந்த வயதில் எதைச் செய்ய வேண்டுமோ, அதை பிள்ளைகள் செய்ய வேண்டும். பிள்ளைகள் இருக்கும் வீடு மயான அமைதியோடு இருந்தால், அதற்குப் பெயர் குடும்பம் அல்ல.  அது வெறும் மலட்டு மண்டபம்தான். குழந்தைகள் அந்த வயதில் ஓடி ஆடி விளையாட வேண்டும். நாலு பேரோடு பழக வேண்டும். அதிகம் பேச வேண்டும். இப்படி கணினியோடு முடங்கிக் கிடந்தால் அந்த பிள்ளைகளின் மனமும் முடங்கித்தான் போகும்.

மேலும், இப்போது உலகம் முழுவதும், கணினி விளையாட்டு மென்பொருள் தயாரிப்பவர்களுக்குத்தான் முதல் முன்னுரிமை. அதிகம் விற்பனையாவது இந்த மென்பொருட்கள்தான்.

கணினி வந்த புதிதில்  அறிவுபூர்மான விளையாட்டுக்களான செஸ், வார்த்தை விளையாட்டு போன்றவை அதிகம் இருந்தன. இப்போது கணினி விளையாட்டு மென்பொருட்களில் பெரும்பாலும் வன்முறை வெறியைத் தூண்டும் விளையாடுக்களே அதிகம். இதனால் பிள்ளைகளின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை   உணர்வதில்லை.

 இது போன்ற விளையாட்டுக்கள் பரவுகிற காலத்திலேயாவது, முதலில் பெற்றோருக்கு வகுப்பு நடந்த வேண்டும். பிள்ளைகள் கம்ப்யூட்டர் முன்பே கதி என்று கிடந்தால் முதலில் போய் அதை ஆப் செய்து கொஞ்ச நேரம் வெளியே போய்விட்டு வா என்று சொல்ல வேண்டும். கைபேசியில் வெகுநேரம் விளையாடிக்கொண்டிருந்தால் அவர்கள் பிள்ளைகளை கவனித்து, அதிலிருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும். இதுதான் இந்த நேரத்தில் பெற்றோர் படிக்க வேண்டிய பாடம்.

ரசித்தது!

 'கிரீஸ் வாழ்ந்த வரலாறு' என்பது வெ. சாமிநாத சர்மா எழுதிய அருமையான நூல்!

 இது இரண்டு பாகங்கள்.   பொது அறிவுப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

  உலக வரலாற்றில் பாரதமும், கிரேக்கமும் கலை, இலக்கிய பண்பாட்டு ஞானச் செல்வங்களை உலகு உய்ய வழங்கியுள்ளன. இவ்விரு நாடுகள் வரலாற்றின் ஒப்பாய்வுகள் குறிப்பிடத்தக்கன. இத்தகைய ஒப்பாய்வொன்றை சுவாமி விவேகானந்தர் எழுதியுள்ளார்.

 கிரீஸ் தனித்தனி ராஜ்ஜியங்கள் பல அடங்கிய ஒரு தேசம். அறிஞர்கள் பலரைக் கொண்ட ஒரு கலைக்கோயில். ஒவ்வொரு ராஜ்ஜியத்திற்கும் தனித்தனி சரித்திரம் உண்டு. ஒவ்வொரு அறிஞரைப் பற்றியும் தனித்தனியாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். என்றாலும் ராஜ்ஜியங்களுக்குள் ஒரு சில மட்டுமே முக்கியத்துவம் பெற்று, கிரேக்க இதிகாச மண்டலத்தின் பெரும் பகுதியை கவிந்து கொண்டிருக்கின்றன. அப்படியே அறிஞருள் ஒரு சிலரே, உலகனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய எஞ்ஞான்றும் நின்று நிலைக்கக்கூடிய உண்மைகளை அருளியிருக்கின்றனர். ஸ்பார்ட்டாவையும், ஆத்தென்ஸையும் விட்டுவிட்டு, சரித்திரத்தை  எழுத முற்படுவது கண்களில்லாமல் முகத்தை மட்டும் வரைவது போலாகும். அப்படியே சாக்ரட்டிஸோ, பிளாட்டோவோ, அரிஸ்டாட்டிலோ இல்லையென்றால், கிரேக்க கலைக்கோயில், கொடி கம்பமில்லாத கோயில்தான். எனவே, கிரேக்க சரித்திரத்தைப் பூர்த்தியடவைதாகச் செய்ய வேண்டும். அதன் கலைக்கோயில் கொடிக்கம்பமுடைய கோயிலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

இப்படி சொன்னதனால், கிரீஸின் மற்ற ராஜ்ஜியங்களோ, பிற அறிஞர்களோ, மறந்துவிடப்பட்டதாக  நினைத்து விடக்கூடாது.  தீப்ஸ் என்ன, கொரிந்த்தியா என்ன,  ஸைரக்கியூஸ் என்ன, இவை போன்ற ராஜ்ஜியங்களை எளிதில் புறக்கணித்துவிட முடியாது. இன்னும் ஹோமர் என்ன? லைக்கர்ஸ் என்ன? பித்தாகோரஸ் என்ன? இப்படிப்பட்ட பல துறை  அறிஞர்களை சுலபமாக மறந்து விட முடியுமா என்ன?

* * *