நாம் என்ன விளையாட்டு பொம்மையா?

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

பார­தி­யார் ஏன் கணக்கு பிணக்கு ஆம­ணக்கு என்று சொன்­னார் என்று ஆராய்ச்சி செய்து கண்­டு­பி­டித்­து­விட்­டேன். அதற்கு ஞாநி மாமா கொடுத்த க்ளூ (Clue) தான் உத­விற்று. 'பாலு­வின் கணக்கு வாத்­யா­ரைக் கேட்­டால் தெரி­யும்' என்­றார்.

பாலு­வும் ஆரம்ப வகுப்­பு­கள் படிக்­கும்­போது வாலு­தான். கணக்கு வகுப்பு தொடங்­கி­ய­துமே பாலு எழுந்து கணக்கு வாத்­யா­ரி­டம் “சார். டூ பாத்­ரூம் போக­ணும்” என்­பான். அந்­தப் பள்­ளி­யில் ஒழுங்­கான டாய்­லெட்டே கிடை­யாது. பாலு வீடு பக்­கத்­தில்­தான். ஆசி­ரி­ய­ரும் வீட்­டுக்­குப் போ என்று அனுப்பி விடு­வார். அந்த வகுப்பு முடிந்­த­தும் பாலு­வும் பள்­ளிக்­குத் திரும்பி வந்­து­வி­டு­வா­னாம்!

அதா­வது கணக்கு என்­றாலே பாலு­வுக்கு பேதி வந்­து­வி­டும். இதைத்­தான் பார­தி­யார், கணக்கு ஆம­ணக்கு என்­கி­றார். ஏனென்­றால் ஆம­ணக்கு ஒரு பேதி மருந்து. அதி­லி­ருந்து எடுக்­கும் விளக்­கெண்­ணெயை சாப்­பிட்­டால் பேதி ஏற்­ப­டும். “சின்ன வய­தில் எங்­க­ளுக்­கெல்­லாம் மாதம் ஒரு முறை­யா­வது வீட்­டில் கட்­டா­ய­மாக விளக்­கெண்­ணெயை பாலிலோ காப்­பி­யிலோ கலந்து கொடுப்­பார்­கள். அது கலக்­கா­மல் மிதந்­து­கொண்டே இருக்­கும். நினைத்­தாலே குமட்­டு­கி­றது. வயி­றை­யும் குட­லை­யும் சுத்­தம் செய்ய அது­தான் வழி என்று அப்­போது நினைத்­தார்­கள்'' என்­றார் மாமா.

“பெரிய தண்­ட­னை­யாக இருக்­கி­றதே” என்­றான் பாலு.

“தண்­ட­னை­தான். இப்­படி பேதிக்கு விளக்­கெண்­னெய் கொடுப்­பதை ஒரு சித்­ர­வ­தைத் தண்­ட­னை­யாக ஒரு நாட்­டில் அர­சாங்­கமே செய்­தி­ருக்­கி­றது தெரி­யுமா?” என்­றார் மாமா. இத்­தாலி நாட்­டில் முசோ­லினி சர்­வா­தி­கார ஆட்சி நடத்­தி­ய­போது, ஆட்­சியை எதிர்த்­த­வர்­க­ளைக் கைது செய்து சிறை­யில் வைத்து அவர்­க­ளுக்­குக் கட்­டா­ய­மாக விளக்­கெண்­ணெய் கொடுப்­பார்­க­ளாம். நம் நாட்­டி­லும் பிரிட்­டிஷ் ஆட்­சிக் காலத்­தில், இங்­கி­ருந்த ஆங்­கி­லேய அதி­கா­ரி­கள் வீட்­டுப் பணி­யாட்­களை தண்­டிக்க அவர்­க­ளுக்கு விளக்­கெண்­ணெய் கொடுக்­கும் பழக்­கம் இருந்­தி­ருக்­கி­றது.

“இந்த மாதிரி ஒரு தண்­ட­னை­யான விஷ­யத்தை எப்­படி குழந்­தை­க­ளுக்கு மருந்து என்று கொடுத்­தார்­கள்?” என்று பாலு கேட்­டான். “குழந்­தை­க­ளுக்கு எது நல்­லது எது கெட்­டது என்று பெரி­ய­வர்­க­ளுக்­குத்­தான் தெரி­யும் என்று எப்­போ­துமே பெரி­ய­வர்­கள் நினைக்­கி­றார்­கள். அத­னால்­தான் இப்­படி” என்­றது வாலு.

“அது உண்­மை­தானே. அவர்­க­ளுக்­குத்­தானே அனு­ப­வம் இருக்­கி­றது. நமக்கு அறிவு மட்­டும்­தானே இருக்­கி­றது” என்­றேன். “அனு­ப­வ­மும் அறி­வும் தனித் தனியே இருந்­தால் பய­னில்லை. சேர­வேண்­டும்” என்­றார் மாமா.

“குழந்­தை­க­ளுக்கு நல்­லது செய்­கி­றோம் என்று நினைத்­துக் கொண்டு கெட்­டது செய்த ஒரு கதை படித்­தேன். கதை அல்ல நிஜம். சொல்­லட்­டுமா?' என்­றது வாலு.

வாலு சொன்­னது டயோன் குவின்­டப்­லெட்ஸ் (Dionne Quintuplets) கதை. 'டிரிப்­லெட்ஸ்' (Triplets) என்­றால் மூன்று ஜோடி. 'குவா­டி­ரப்­லெட்ஸ்' (Quadruplets) என்­றால் நான்கு. 'குவின்­டப்­லெட்ஸ்' (Quintuplets) என்­றால் ஐந்து! கனடா நாட்­டில் ஒண்­டா­ரியோ மாநி­லத்­தில் ஒரு கிரா­மத்­தில் 1934-ஆம் வரு­டம் மே 28-ஆம் தேதி ஓர் அதி­ச­யம் நடந்­தது. டயோன் என்ற ஏழை விவ­சா­யக் குடும்­பப் பெண்­ணுக்கு ஒரே பிர­ச­வத்­தில் ஐந்து பெண் குழந்­தை­கள் பிறந்­தன! அது­வும் எட்டே மாதத்­தில். ஒவ்­வொரு குழந்­தை­யும் உள்­ளங்­கை­யில் வைக்­கிற சைஸ்­தான். எது­வும் பிழைக்­காது என்றே பிர­ச­வம் பார்த்த மருத்­து­வர் டெபோ நினைத்­தார். ஆனால் ஐந்­தும் பிழைத்­துக் கொண்­டன. அடுப்­புக்­குப் பக்­கத்­தில் கூடை­யில் குழந்­தை­களை வைத்து, சூடேற்றி அவற்­றைக் காப்­பாற்­றி­னார்­கள்.

இப்­படி நடந்­தது அன்­றைக்கு அபூர்­வ­மான விஷ­யம். எனவே ஐந்து பேரை­யும் ஒரு பொருட்­காட்­சி­யில் வைத்து பொது மக்­க­ளுக்கு வேடிக்கை காட்­டிச் சம்­பா­திக்க அவர்­க­ளின் அப்பா திட்­ட­மிட்­டார். இந்­தத் தக­வல் ஒண்­டா­ரியோ மாநில அர­சுக்­குத் தெரி­ய­வந்­த­தும், ஏற்­க­னவே இரு குழந்­தை­கள் உள்ள அந்­தப் பெற்­றோ­ருக்கு மேலும் ஐந்து குழந்­தை­களை வளர்க்­கும் தகுதி இல்லை என்று அர­சாங்­கம் அறி­வித்து தானே குழந்­தை­க­ளைப் பொறுப்­பில் எடுத்­துக் கொண்­டது. “அப்­ப­டி­யெல்­லாம் ஒரு அர­சாங்­கம் சொல்ல முடி­யுமா?” என்று கேட்­டான் பாலு. “ஐரோப்­பா­வி­லும் அமெ­ரிக்­கா­வி­லும், கன­டா­வி­லும் அப்­படி சொல்­லும் உரிமை அர­சாங்­கத்­துக்கு சட்­டப்­படி இருக்­கி­றது.” என்­றார் மாமா.

டயான் சகோ­த­ரி­க­ளுக்­கென்று ஒரு தனி நர்­சரி, மருத்­துவ நிலை­யம், பூந்­தோட்­டம் எல்­லாம் கட்டி ஐந்து பேரை­யும் அங்கே போலீஸ் காவ­லு­டன் அரசு வைத்­து­விட்­டது. குறிப்­பிட்ட நேரத்­தில் சாப்­பாடு, குறிப்­பிட்ட நேரத்­தில் படிப்பு, விளை­யாட்டு, ஒரே மாதிரி உடை என்று டயான் சகோ­த­ரி­கள் கடும் கட்­டுப்­பாட்­டில் இந்த விடு­தி­யில் 9 வயது வரை வளர்க்­கப்­பட்­ட­னர். வெளி­யி­லி­ருந்து பொது­மக்­கள் வந்து இந்­தக் குழந்­தை­களை தின­சரி மூன்று வேளை மிரு­கக்­காட்சி சாலை­யில் விலங்­கு­க­ளைப் பார்ப்­பது போல வேலிக்கு மறு­பக்­கம் நின்று பார்த்­து­விட்­டுப் போவார்­கள். அதற்கு வசூ­லித்த கட்­ட­ணம் மட்­டும் ஒரே வரு­டத்­தில் பத்து லட்­சம் டாலர்­கள்! ஒரு கட்­டத்­தில் கனடா பகு­தி­யில் இருக்­கும் நயா­கரா அரு­விக்கு வந்த சுற்­று­லாப் பய­ணி­களை விட அதி­கம் பேர் டயான் சகோ­த­ரி­க­ளைப் பார்க்க வந்­தி­ருக்­கி­றார்­கள்.

டயான் சகோ­தரி பொம்­மை­கள், கீசெ­யின், போட்டோ, பிராக், கப் என்று வித­வி­த­மான கிப்ட் அயிட்­டம்­கள் விற்­கப்­பட்­டன. ஆலிவ் ஆயில், சோப், பால், பற்­பசை, ஓட்ஸ் என்று நிறைய பொருட்­க­ளுக்­கான விளம்­ப­ரங்­க­ளில் டயான் சகோ­த­ரி­கள் பங்­கேற்­றார்­கள். அவர்­கள் கதையை வைத்து எடுக்­கப்­பட்ட மூன்று ஹாலி­வுட் திரைப்­ப­டங்­க­ளி­லும் நடித்­தார்­கள்.

பத்­தாம் வய­தில் சட்­டப்­படி பெற்­றோ­ரி­டம் திருப்­பித்­த­ரப்­பட்­ட­னர். ஆனால் காட்­சிப் பொரு­ளாக இருப்­பது மாற­வில்லை. அடுத்த பத்து வரு­ட­மும் இதே போல அவர்­க­ளு­டைய பெற்­றோர் அவர்­களை மக்­க­ளுக்­குக் காட்டி பணம் சம்­பா­தித்­தார்­கள்.

பதி­னெட்டு வய­தா­ன­தும்­தான் அவர்­க­ளுக்கு அரசு, பெற்­றோர் இரு­வ­ரி­ட­மி­ருந்­தும் விடு­தலை கிடைத்­தது. திரு­ம­ணம் செய்­து­கொண்டு வெவ்­வேறு வேலை­க­ளுக்­குச் சென்­றார்­கள். ஐந்து பேரில் ஒரு­வ­ரான எமிலி மட்­டும் பெண் துற­வி­யாகி அடுத்த இரண்டே வரு­டத்­தில் இறந்­து­விட்­டார். மேரி 36 வய­தில் இறந்­தார். யுவான் 2001ல் 77 வய­தில் இறந்­தார். ஆனி, சிசிலி இரு­வ­ரும் இப்­போ­தும் கன­டா­வில் வாழ்­கி­றார்­கள். (வயது 82).

“இந்த மாதிரி அதுக்­கப்­பு­றம் ஐந்து குழந்­தை­கள் ஒண்ணா பிறந்­தி­ருக்­காங்­களா?”

“ஏழு குழந்­தை­கள் ஒண்ணா 1997ல அமெ­ரிக்கா அயோ­வால பிறந்­தாங்க.அப்ப ஆனி, சிசிலி, யுவான் மூணு பேரும் அந்­தப் பெற்­றோ­ருக்கு ஒரு கடி­தம் எழு­தி­னாங்க. 'எங்க குழந்­தைப் பரு­வம் முழுக்க எங்­களை வேடிக்­கைப் பொரு­ளாக்கி எங்க வாழ்க்­கை­யையே நாச­மாக்­கிட்­டாங்க. அந்த மாதிரி இந்­தக் குழந்­தை­க­ளுக்­கும் செய்­து­டா­தீங்க'னு கேட்­டு­கிட்­டாங்க”

அது மட்­டும் இல்லை. அப்­படி தங்­கள் குழந்­தைப் பரு­வத்தை பாழாக்­கின ஒண்­டா­ரியோ மாநில அர­சுக்கு எதி­ராக டயான் சகோ­த­ரி­கள் வழக்கு போட்­டி­ருக்­கி­றார்­கள். கடை­சி­யில் 1997ல் நஷ்ட ஈடாக அவர்­க­ளுக்கு 28 லட்­சம் டாலர்­களை அரசு கொடுத்­தது!

“என்­கிட்ட டயான் பொம்மை இருக்கு. ஆனா அதுக்­குப் பின்­னால இப்­பிடி ஒரு கதை இருக்­குன்னு தெரி­யாது” என்­றேன். “எல்லா பொம்­மைக்­கும் பின்­னால் ஒரு கதை நிச்­ச­யம் இருக்­கும். பார்பி டாலுக்­கும் ஒரு கதை இருக்கு” என்­றார் மாமா.

எனக்கு பார்பி பிடிக்­காது.

வாலு­பீ­டியா 1: இந்­தி­யா­வில் இரட்­டைக் குழந்­தை­கள் பிறப்­பது குறைவு. ஆயி­ரம் பிர­ச­வங்­க­ளுக்கு 9 என்ற விகி­தத்­தில்­தான் 'ட்வின்ஸ்' (Twins) பிறக்­கின்­றன.

வாலு­பீ­டியா 2: பழைய டயான் சகோ­த­ரி­கள் பொம்மை செட் இப்­போது 2500 டாலர் (சுமார் ஒன்­றரை லட்­சம் ரூபாய்) வரை விலை வைக்­கப்­ப­டு­கி­றது.