தண்ணீரில் பயணம்!

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

நீர் ஊர்தி: ஓர் இடத்தில் இருந்து மக்களையோ, பொருட்களையோ இன்னோர் இடத்திற்கு நீர் வழியாகச் எடுத்துச் செல்லப் பயன்படும்

வாகனம். சின்ன ஓடைகளிலும் பெரும் ஆறுகளிலும் கடலிலும் செல்வதற்குப் பல நீர் ஊர்திகள் உள்ளன. இயற்கையின் சூழலில், தண்ணீரின் சலசலப்பில் பயணம் செய்வது அலாதியான சுகம். நம் முன்னோர்கள் பயணம் செய்யவும், வாணிபம் செய்யவும் படகு, கப்பல் போன்ற கலங்களை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் கலங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

பரிசல்: அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும் வட்ட வடிவ - படகு போன்ற கலம். மூங்கிலால் செய்யப்பட்டு, எருமைத் தோலால் போர்த்தப்பட்டு இருக்கும். நீண்ட கம்பை வைத்து பரிசல்காரர், உந்தி நகர்த்தினால் முன்னேறிச் செல்லும். ஆறுகளிலும் அமைதியாய் உள்ள நீர்நிலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

படகு: சிறிய அளவில் ஆனது. மனிதனால் இயக்கப்படுவது, எந்திரங்கள் கொண்டு இயக்கப்படுவது என இரண்டு வகைகள். மனித சக்தியால் இயக்குவதற்கு 'துடுப்பு' தேவை. சுற்றுலாத் தலங்களிலுள்ள படகுகள் கால்களால் மிதித்து செயல்படும் அமைப்பில் உள்ளன.

வள்ளம்: நீரில் பயணிக்கவும் மீன் பிடிக்கவும் பயன்படுகிறது. பாய்மரப் படகு, கப்பல் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது சிறியது. இப்படகுகள் மூங்கில்கள் கொண்டு வேயப்பட்டு இருக்கும். படகின் வெளிப்புறம் பாதிக்கப்படாமல் இருக்க முந்திரிக்கொட்டையின் எண்ணெய் கொண்டு பூசப்படுகிறது

வங்கம்: பாய்மரக் கப்பலை உணர்த்தும் சொல். இந்தக் கலம் கடல்நீரைப் பிளந்துகொண்டு வேகமாகச் செல்லும். வெள்ளைத் துணியாலான பாய் அதில் கட்டப்பட்டிருக்கும். வாணிபம் செய்யும்போது அரிய பொருள்களை வங்கத்தில் வைத்து, கொண்டு வருவார்களாம். இதை இயக்குபவர்களை 'மீகாமன்' என்பார்கள்.

கப்பல்: கடலில் செல்லும் பெரிய ஊர்தி. பல அடுக்குகளுடன் வீடு போன்ற அமைப்பில் இருக்கும். கப்பல்களில், அவசர காலத் தேவைகளுக்காக, உயிர் காக்கும் படகுகள், திருப்புப் படகுகள், இழுவைப் படகுகள் போன்றவை இருக்கும். கடல்வழிப் பயணங்களால்தான் திசைகாட்டி, வெடிமருந்து போன்ற கண்டுபிடிப்புகள் உலகம் எங்கும் பரவின.