கர... கர... கரப்பான்!

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

உருவில் சிறியதாக இருந்தாலும் பல பேரை மிரண்டு ஓட வைப்பார்கள் இந்த மீசைக்காரக் கரப்பான் பூச்சிகள்! மனித இனம் தோன்றும் முன்பே தோன்றிவிட்டன. உலகில் துருவப் பகுதிகள் தவிர மற்ற எல்லாப் பகுதிகளிலும் இவை வாழும்.

மனிதனை விட, பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சைத் தாங்கும் ஆற்றல் படைத்தவை. அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகும் இவை உயிருடன் இருக்கும். உலகில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கரப்பான் இனங்கள் வாழ்கின்றன.

தலை, நெஞ்சு, வயிறு என மூன்று பகுதிகளாக கரப்பான் பூச்சியின் உடல் பிரிக்கப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சிக்கு ஆறு கால்கள், இரண்டு உணர்கொம்புகள் உண்டு. இதற்கு முதுகெலும்பு இல்லை. கரப்பான் பூச்சியின் இறக்கைகள் மெல்லிய சவ்வினால் ஆனவை.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் இதன் ரத்தம் வெள்ளை நிறத்தில் இருக்கும். தலை துண்டிக்கப்பட்டாலும் கரப்பான் பூச்சிகளால் சுவாசிக்க முடியும்!

இவை இரவில் இரையைத் தேடி உண்ணும். உணவுகளை வெட்டியும், அரைத்தும் உண்பது இவற்றின் வழக்கம். மூன்று மாதங்கள் வரை சாப்பிடாமல் தாக்குப்பிடிக்கவும் இவற்றால் முடியும்!

'ஜயன்ட் பர்ரோயிங் காக்ரோச்' (Giant burrowing cockroach) என்பது உலகின் பெரிய கரப்பான் பூச்சி இனம். முப்பது கிராமுக்கும் அதிகமான எடை கொண்ட இது, நிலத்துக்குள் 1 மீட்டர் ஆழம் வரை தோண்டி வசிக்கும்.

'கரப்பான் பூச்சியைப் பார்த்து சிலர் மிரள்வார்கள்' என்று முதல் வரியில் சொன்னோம் அல்லவா… இப்படி பயப்படுவதற்கு 'கட்சரிடாபோபியா' (Katsaridaphobia) என்று பெயர்.