கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி – 16’ 07-–9–17

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2017யார் அங்கே...! Who is there...! ஆங்கில வாக்கியங்களின் எளிமையைப் பார் இங்கே....!

அந்தக்கால ராஜா ராணிப் படங்களில், ராஜா அல்லது தளபதி போன்றவர்கள், வேலையாட்களை அழைக்கும் போது, 'யார் அங்கே' என்பார்கள்.

'யார்'என்றால் ஆங்கிலத்தில் 'ஹூ' (who) என்று பொருள்.

'அங்கே' என்றால் 'தேர்' (there) என்று பொருள்.

அப்போ 'யார் அங்கே' என்றால்   'ஹூ தேர்' (who there )  என்று பொருளா ?

அப்படிப் பேசினால், 'பட்லர்' இங்கிலீஷ் மாதிரி இருக்கும். அதாவது,

'இஸ்' என்ற சொல்லையும் சேர்த்தால் தான் அது ஆங்கில இலக்கணத்திற்குப் பொருத்தமாக அமையும்.

ஆகவே, 'ஹூ இஸ் தேர்' (Who is there?) என்று கூறுவதே சரியாகும்.

'நான் மாணவன்' என்று கூறினால் தமிழில் சரியான வாக்கியம். ஆனால் 'ஐ ஸ்டூடென்ட்' என்று கூறினால் ஆங்கிலத்தில் சரியல்ல. 'ஐ ஆம் அ ஸ்டூடென்ட்' என்று கூற வேண்டும். தமிழ் வாக்கியங்களில் உள்ள இரண்டு சொற்களுக்கான நேர் ஆங்கில வார்த்தைகளைப் போட்டாலும் ஏன் ஆங்கிலத்திற்குப் போதமாட்டேன் என்கிறது? ஏன், 'ஆம்' மற்றும் 'அ' என்று சேர்க்கவேண்டிவருகிறது?  அதுதான் அதன் மாறுபட்ட கிராமர் (grammar), இலக்கணம். ஆங்கிலம் தமிழிலிருந்து மாறுபடுகிற இடங்களைக் கவனித்து, மாற்றங்களைப் பழகினால் சரியான ஆங்கிலம் நமக்கும் வந்துவிட்டுப்போகிறது! சித்திரமும் கைப்பழக்கம் சிறந்த ஆங்கிலமும் நாப்பழக்கம்!

ஆகவே 'there' என்றால் 'அங்கே' என்று பொருள் என்று பார்த்திருக்கிறோம். அதாவது 'here' என்ற சொல்லின் எதிர்ப்பதம் (opposite). இதுபோன்ற எதிர்ப்பதங்களை ஆண்டனிம் (Antonym) என்றும் கூறுவார்கள். இதை 'ஆண்டனி' என்ற பெயர்ச்சொல்லின் உச்சரிப்பிற்கு ஏற்ப ஆண்டனிம் என்று உச்சரிக்க வேண்டும். ஒரே பொருள் தரக்கூடிய சொற்களை ஸினனிம் (synonym) என்பார்கள்.

(Anti என்றால் 'எதிர்', 'நிம்' என்பது 'name' என்ற பொருளில் வந்து சொல்லைக்குறிக்கும். 'Syn' என்பது 'ஒரே' அல்லது 'சேர்ந்து' என்ற பொருளில் வந்து, 'synonym' என்பது ஒரே பொருள் கொண்ட சொல்லைக் குறிக்கும்)

ஆண்டனிம் (Antonym) – உதாரணங்கள் --  குட் (good) X பாட் (bad) (நல்ல X கெட்ட) ; ஹை (high) X லோ low (உயர்ந்த X தாழ்ந்த)

ஸினனிம் (synonym) உதாரணங்கள் -- ஹாப்பினெஸ் (happiness) = ஜாய் (joy), என்ற சொற்கள் மகிழ்ச்சி என்ற பொருளில் வருகின்றன.

பிக் (big) = லார்ஜ் (large) ஆகிய சொற்கள் 'பெரிய' என்ற பொருளில் பயன்படுகின்றன.

'அங்கே' என்ற பொருளில் வரும் 'there', பற்பல வாக்கியங்களில் வரக்கூடியது.

ஸிட் தேர். Sit there. அங்கே உட்கார்.

லுக் தேர்.  Look there. அங்கே பார்.

ஸ்டே தேர். Stay there. அங்கே இரு.

ஸ்டாப் தேர். Stop there. அங்கே நில்

கோ தேர். Go there. அங்கே செல்

ஸ்டான்ட் தேர். Stand there. அங்கே நில்.

ஸ்டடி தேர். Study there. அங்கே படி.

இந்த வாக்கியங்களின் தொடக்கத்தில் 'நீ' (You) தொக்கி நிற்கிறது.

நம் அருகில் இருக்கும் ஒருவரிடம் கூறுவதாக அமையக்கூடிய இந்த உதாரண வாக்கியங்களில், 'நீ' அங்கே உட்காரு, 'நீ' அங்கே பாரு என்று நீ என்ற சொல்லை பயன்படுத்தத் தேவையில்லை. அதே போல், 'You' sit there, 'You' look there என்று 'You'வை சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அவசியம் இருந்தால் அதையும் சேர்த்துச்சொல்லலாம். விருந்தாளி ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கும் போது வீட்டைக் கூட்ட பணியாள் வருகிறார். இருக்கையிலிருந்து அமர்ந்திருப்பவர் நகரப் பார்க்கிறார். அவரை வீட்டுக்காரர், 'நீங்க அங்க உக்காருங்க' (You sit there), நகரவேண்டாம் என்று கூறலாம்.

ஒருவரை நாம் வேறொரு இடத்தில் சந்திக்க நினைக்கிறோம். அந்த இடத்தை கூறி, 'என்னை அங்கே சந்தி', மீட் மீ தேர்.. 'Meet me there' என்று கூறலாம்.

வேறோருவரை குறிப்பிட்ட இடத்தில் நீ சந்திக்கலாம் என்று கூறவந்தால், மீட் ஹிம் தேர்…'Meet him there'. சந்திக்கப்பட வேண்டியவர்கள் பலராக இருந்தால், மீட் தெம் தேர்… 'Meet them there' அவர்களை அங்கே சந்தி.

ஹீ லிவ்ஸ் தேர் வித் ஹிஸ் பேமிலி. 'He lives there with his family'. அவன் (ஹீ) தன்குடும்பத்தோடு (வித் ஹிஸ் பேமிலி) அங்கே (தேர்) வசிக்கிறான் (லிவ்ஸ்).

வீ கோ தேர் ஆபென்.  'We go there often'. நாங்கள் (வீ) அங்கே (தேர்) அடிக்கடிப் (ஆஃபென்) போகிறோம் (கோ).

அவன் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறான். 'He is sitting there'.

ஐ வில் கோ தேர் ஆன் மன்டே. 'I will go there on Monday'. நான் அங்கே திங்கட் கிழமை போவேன்.

(வினைச்சொல் 'கோ'விற்கு (go)  முன் 'வில்' (will) வருவது, எதிர்காலத்தைக் காட்டுகிறது).

இப்படி 'அங்கே' என்ற பொருள் கொண்ட தேர் (there) என்ற சொல், அந்தப் பொருள் இல்லாது, ஒருவித வாக்கிய அமைப்பில் 'டம்மி'யாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தேர் இஸ் நோ பிளேஸ் லைக் ஹோம். 'There is no place like home'.

(நாம் வசிக்கும்) 'இல்லம்போல் வேறெந்த இடமும் இல்லை' என்பது வாக்கியத்தின் பொருள். இந்த வாக்கியத்தில் 'தேர்' (there) என்பதற்கு 'அங்கே' என்ற பொருள் இல்லை. நாம் இருக்கும் வீடுபோல் வெறெந்த இடமும் சுகமானதாக, நிம்மதியானதாக இல்லை என்கிற பொருளை வாக்கியம் தருகிறது.

ஒரு வழக்கு நடக்கிறது. குற்றத்தை ஊர்ஜிதம் செய்ய சாட்சியங்கள் இல்லை என்றால், 'தேர் இஸ் நோ எவிடென்ஸ்' 'There is no evidence' என்று கூறலாம். இந்த வாக்கியத்திலும் 'தேர்' (there) என்பதற்கு அங்கே என்ற பொருள் இல்லை.

தேர் இஸ் ஹோப். There is hope. நம்பிக்கை இன்னும் இருக்கிறது. ஒரு விஷயத்தில் தீர்வு கிடைக்கிற நம்பிக்கை இருந்தால், தேர் இஸ் ஹோப். There is hope என்று கூறலாம். இந்த வாக்கியத்திலும் 'There' என்பதற்கு அங்கே என்று பொருளல்ல. இருப்பைத் தான் அது குறிக்கிறது.

அந்த பிளாட்டில் பாத்ரூம்இல்லை. தேர் இஸ் நோ பாத்ரூம் இன் த பிளாட். There is no bathroom in the flat.

தேர் இஸ் அ பெட் இன் த  ரூம். There is a bed in the room. அந்த அறையில் ஒரு கட்டில் உள்ளது.

குறிக்கப்படுகின்ற பொருள் ஒருமையில் இருந்தால், 'இஸ்' வரும். 'தேர் இஸ் நோ பாத்ரூம். ஒரே ஒரு பாத்ரூம் என்பதால் 'இஸ்' (is) வருகிறது. அது பலவாக இருந்தால்,  'ஆர்' (are) பயன்படுகிறது.

தேர் ஆர் மெனி ஆப்பர்சுனிடீஸ் தேர். There are many opportunities. (ஆப்பர்சுனிடீஸ் = வாய்ப்புகள்). பல வாய்ப்புகள் உள்ளன என்பது பொருள்.

தேர் ஆர் மெனி ஸ்டார்ஸ் இன் த ஸ்கை. There are many stars in the sky. வானத்தில் பல நட்சத்திரங்கள் உள்ளன.

தேர் ஆர் புக்ஸ் இன் த ஷெல்ப். There are books in the shelf.

தேர் ஆர் டிரூத்ஸ் வி மஸ்ட் லர்ன்.  There are truths we must learn. நாம் அறிய வேண்டிய உண்மைகள் உள்ளன.

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in