கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 92

பதிவு செய்த நாள் : 04 செப்டம்பர் 2017
எம்.ஜி.ஆர்., எழுதிய பதில் கடிதமும் நடிகனின் வாழ்க்கையைக் குறித்து எழுப்பிய கேள்விகளும்!

ஒரு மனிதன் தன்னுடைய நினைவு பொக்கிஷங்களாக  விட்டுச்செல்பவற்றில், கடிதங்கள் மிக முக்கியமானவை என்பது ஜெர்மன் அறிஞர் ‘கதே’ யின் கருத்து. அந்த வகையில் பார்த்தால், எம்.ஜி.ஆர்., ஒரு நண்பருக்கு 1948ல் எழுதிய கடிதம், அவருடைய எண்ணங்களையும், அந்தக் காலகட்டத்தில் அவர் சந்தித்த சவால்களையும் அற்புதமாக வெளிக்காட்டுகிறது.

அப்போது எம்.ஜி.ஆர்., கோவையில் இருந்தார். ‘ராஜகுமாரி’  வெளிவந்து வெற்றியும் பெற்றிருந்தாலும், தன்னை 'கதாநாயக' நடிகனாக நிலைநிறுத்திக்கொள்வது எம்.ஜி.ஆருக்கு எளிதாக இல்லை.

அப்போது, தான் சினிமாவில் நடிக்க விரும்புவதாகவும் அதற்கு எம்.ஜி.ஆர். வழிகாட்டவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, எம்.ஜி.ஆருக்கு ஒருவர் கடிதம் எழுதினார்.

எம்.ஜி.ஆர்., 19.2.1948ம் நாள் எழுதிய பதில் கடிதத்திலிருந்து உதவி கேட்டு எழுதியவரின் பெயரைச் சுட்டும் இனிஷியல்கள், ‘பி.ஜி.எம்.எஸ்’ என்று தெரிகிறது.  ‘‘இதற்கு முன் உங்களை நான் சந்தித்ததுண்டா என்று நினைவில் இல்லை. ஆனால் கடிதத்தில் உள்ள உங்கள் முகம் அறிமுகம் ஆனதாகத்தான் தெரிகிறது,’’ என்று தனது பதிலில் எம்.ஜி.ஆர். எழுதினார். ‘கடிதத்தில் உள்ள உங்கள் முகம்’  என்றால் என்ன அர்த்தம்? கடிதம் அனுப்பியவர் தன்னுடைய புகைப்படத்தைக் கடிதத்துடன் அனுப்பினாரா என்று தெரியவில்லை. நடிக்க ‘சான்ஸ்’ கேட்டவர் என்பதால் அப்படி செய்திருக்கக்கூடும்.

தனக்குக் கடிதம் எழுதிய நண்பரைப் பற்றி அவர் எழுதிய கடிதத்திலிருந்து எம்.ஜி.ஆர்., அனுமானம் செய்கிறார். ‘‘சகோதரா! தங்களுடைய கடிதத்திலிருந்து தங்களுடைய வாழ்க்கை, கவுரவத்துடன், மனிதனாக வாழத்தகுதியுள்ள சவுகரியங்களுடன் இருக்கும்’’ என்று தெரிகிறது என்று எம்.ஜி.ஆர். எண்ணுகிறார்.  கடிதத்திலிருந்து இப்படி ஒரு முடிவுக்கு வரமுடியுமா?

நேரடியாகவே ஒருவரைப் பார்த்து பழகிய பின்னும் அவரைப் பற்றித் தவறாக எம்.ஜி.ஆர்., எடைபோட்ட சம்பவங்கள் உண்டு! எழுத்தாளர் மகேந்திரன் மாணவனாக இருந்தபோது அவரை காரைக்குடியில் எம்.ஜி.ஆர்., சந்தித்திருந்தார்.   பிறகு அவரைப் பத்திரிகையாளராக சென்னையில் பார்த்தார். லாயிட்ஸ் சாலையிலிருந்த தனது அலுவலகத்திற்கு வரச்சொல்லி, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’  நாவலுக்குத் திரைக்கதை எழுதச் சொன்னார்.

மகேந்திரனும் எழுதிக்கொண்டிருந்தார். மகேந்திரன் ஏதோ பணக்காரக் குடும்பத்துப் பிள்ளை, சென்னையில் சவுகரியமாக இருந்துகொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவருடைய சாப்பாடு இத்யாதிகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டார். உண்மை வெளிவந்ததும், 'நான் பாவி' என்று தலையில் அடித்துக்கொண்டாராம். அதன் பிறகு தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டார். நேரில் பார்த்தவர் விஷயத்திலேயே இப்படி என்றால் ஒரு முறை கடிதம் எழுதியவர் விஷயத்தில் எப்படியெல்லாம் இருக்கக்கூடுமோ!

எப்படியும், கடிதம் எழுதிய பி.ஜி.எம்.எஸ்ஸுக்கு திரை உலகைப்பற்றித் தன்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மைகளைத் தெள்ளத்தெளிவாகக் தெரிவிக்க எம்.ஜி.ஆர்., நினைத்தார்.  

‘‘சகோதரா, நீ என்னமோ சினிமா உலகத்தில உள்ள நடிக, நடிகையரைக் கனவான்களாகவும் கண்ணியம் உள்ளவர்களாகவும் எண்ணிக்கொண்டிருப்பாய் போலிருக்கிறது. அப்படியெல்லாம் எந்த நிமிடத்திலும் எண்ணிவிடாதே. இங்கே உள்ள நடிகர்கள், நடிகைகள் எல்லாம் உயர்வானவர்கள், நல்ல உள்ளம் கொண்டவர்கள், அன்பும் கருணையும் உள்ளவர்கள், நன்றாக சம்பாதிப்பவர்கள் என்றெல்லாம் தவறியும் நினைத்துவிடாதே,’’  என்று தெளிவுபடுத்த எம்.ஜி.ஆர். விரும்பினார்!பதினெட்டு வயதில் சினிமா உலகத்திற்குள் வந்த எம்.ஜி.ஆர்., நிறையவே பார்த்திருந்தார். பின்னாளில் ‘சங்கே முழங்கு’ என்ற படத்தில்,  அவர் குடிப்பது போல் நடித்து, ஒரு பாட்டுக்கு அபிநயிப்பார். ‘சிலர் குடிப்பது போலே நடிப்பார், சிலர் நடிப்பது போலே குடிப்பார்’  என்பது அந்த பாடலின் பல்லவி.  இதன் பொருளுக்கு ஏற்ப, சில நடிகர்கள் தங்கள் தொழிலான நடிப்பை மேற்கொள்ளும் போதும் ஏகமாகக் குடித்துவிட்டு வருவதை எம்.ஜி.ஆர்., பார்த்திருந்தார்.

குறிப்பிட்ட கடிதத்தை எழுதுவதற்கு சில மாதங்களுக்கு முன், அவர் நடித்த ஒரு படத்தின் உருவாக்கத்தின் போது நடந்த சம்பவம் அவருடைய நினைவில் பசுமையாக இருந்தது.

படத்தை எடுத்த முதலாளிகள் நல்ல பணக்காரர்கள். திடீரென்று படப்பிடிப்புகளைத் தொடங்குவார்கள். ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு மூட்டையைக் கட்டிவிடுவார்கள். பணத்தட்டுப்பாடு அல்ல அவர்களின் பிரச்னை. அவர்களுடைய நாட்டம் படம் எடுப்பதில் இல்லாததுதான் காரணம். அதனால் ஏற்படும் விரயத்தை அவர்கள் பெரிதாகக்கருதவில்லை. அந்தப் படத்தின் நாயகர் எம்.ஜி.ஆரைவிட ஒரு வயது மூத்தவர். நல்ல திறமைசாலி. ஆனால் குடிப்பதில் நாட்டம் உள்ளவர். குடித்துவிட்டுத்தான் செட்டுக்கு வருவார். அவருடன் படத்தில் ஜோடியாக நடித்த பெண்மணி, தெலுங்கில் பிரபலம். ஆனால் தமிழில் அவருக்கு அது முதல் படம். நாயக நடிகர் அருகில் வந்ததும், சாராய வாடை நடிகையின் நாசியைத் தாக்கியது.  தலைவலி என்று பாசாங்கு செய்து விட்டு,  வீட்டுக்கு நடையை கட்டி விட்டார். நடிகைக்கு நடிக்கவா கற்றுக் கொடுக்க வேண்டும்!  நாடக மேடையில் தன்னுடைய சங்கீதத்தால் கொடிகட்டிப்பறந்த இன்னொரு ராஜபார்ட் நடிகர், எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். குடிப்பழக்கத்தால் அவரும் தன்னை அழித்துக்கொள்ளும் காட்சி, இளம் வயது எம்.ஜி.ஆரின் நினைவில் ஆழமாகப்பதிந்தது. கலைஞர்கள் தங்கள் கெட்டப்பழக்கங்களால் சமூகத்தில் இழிவாகப்பார்க்கப்படுவதை எம்.ஜி.ஆர்., வெறுத்தார்.

சினிமாவில் நடிக்க விரும்பிய பி.ஜி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயத்தைக் குறித்து எம்.ஜி.ஆர்., வலியுறுத்தினார். ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம், ஆனால் இந்த ஒழுக்கம் சினிமா உலகில் நடிக, நடிகையர் மத்தியில் காணப்படவில்லை. அது மட்டும் இல்லை. ஒழுக்கத்தைப் பற்றிப்பேசினால்கூட கேலிக்கூத்தாக நினைப்பவர்கள், ஏளனமாகப் சிரிப்பவர்கள்தான்  அதிகம்  என்று கடிதத்தில்

எம்.ஜி.ஆர்., ஆதங்கப்பட்டார். ‘‘இந்த நிலை எனக்குத் தலைகுனிவைத் தருகிறது. இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்’’  என்று நடிக்கவிரும்பிய கடித நண்பருக்கு எழுதிய எம்.ஜி.ஆர்., ஒரு விஷயத்தை  அழுத்தமாகக் குறிப்பிட்டார். ‘‘ஆர்வமுள்ள, நேர்மையுள்ள தங்களைப்போன்ற வாலிபர்கள் நடிக்கத்தீர்மானித்தால், தற்காலத்தில் உள்ள இந்த இழிநிலையை மாற்றி நிச்சயம் வெற்றி காணமுடியும்’’ என்று எம்.ஜி.ஆர்., அடித்துக்கூறினார். அதற்கு என்ன செய்யவேண்டுமாம்?  ‘‘தாங்கள் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ஒழுக்கத்தைப் பற்றி நன்கு உணர்ந்து, தாங்கள் எங்கிருந்தாலும், எந்த வேலையில் இருந்தாலும் ஒழுக்கத்தை வாழ்க்கையின் அங்கமாக நினைத்து கடைப்பிடிக்க சிறிதும் தவறக்கூடாது.’’ வாத்தியாரா கொக்கா?

நான் தனிப்பாடல்கள் எழுத ஆரம்பித்தபோது, பிரபல பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜனிடம் காண்பித்தேன். தாங்கள், ‘தனனா தனனா தனனா தனனா’ என்று வாய்ப்பாடுபோல் எழுதிப்பழகுங்கள் என்று டி.எம்.எஸ். கூறினார்! ஆனால் என் பாடல்களைப் பதிவு செய்ய ஒரு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டதால், பணத்துடன் அணுகியதும் பாடிவிட்டுப்போனார்! வாய்ப்பு வசதிகள்தான் வாழ்க்கையின் மிகப்பெரிய ‘தனனா தனனா’  போலும். ஆனால் வாழ்க்கைக்கு ஒழுக்கம் தேவை, எந்தக் கலைக்கும் பழக்கமும் பயிற்சியும் தேவை என்ற ஆதார சூத்திரத்தை எப்படி ஒதுக்கித்தள்ள முடியும்?

நடிக்க வாய்ப்புத் தேடி தன்னுடைய உதவியை நாடிய இளைஞருக்கு, எம்.ஜி.ஆர்., கடைசியாகக் சொன்ன யோசனை அந்நாளில் திரைப்படங்களுள் நுழைய விரும்பிய புதிய கலைஞர்கள் எதிர்கொண்ட இரும்புத் திரையை நம் கண்முன் நிறுத்துகிறது. ‘‘நீங்கள் நடிக்க விரும்பினால், உங்களை வைத்துப் படம் எடுக்கக்கூடிய பணவசதி உள்ளவர்களுடன் வாருங்கள்’’  என்ற எம்.ஜி.ஆரின் கூற்றில் என்ன பொருள் பொதிந்துள்ளது? ‘உன் மூஞ்சி சினிமாவில் வரவேண்டும் என்றால் பணத்துடன் வா’  என்பதை நாசூக்காகக் கூறுவதற்கு ஒப்பாகும் அது.

ஆனால், ஆற்றில் போட்டாலும் அளந்துபோடவேண்டும் அல்லவா? அந்த விஷயத்தில் என்னால் உதவ முடியும் என்று  எம்.ஜி.ஆர்., தெரிவித்தார்.  ‘‘உங்களுக்கான பொருத்தமான கதைத் தேர்விலும் உங்களை நடிக்க வைப்பதிலும் என்னால் உதவ முடியும்’’   என்றார். பத்து வருடங்களுக்கு மேல் சினிமாத்துறையில் அவர் பெற்ற அனுபவம், படத்தயாரிப்பு, இயக்கம் போன்ற துறைகளிலும் அவருக்கு ஒருவிதமான பிடிமானத்தை கொடுத்திருந்தது. இப்படி எழுதிய பத்து வருடங்களுக்குள்,  இரட்டை வேடத்தில் நடித்து, 'நாடோடி மன்னன்' படத்தை எம்.ஜி.ஆர்., தானே இயக்கித் தயாரிப்பார்!

'நாடோடி மன்னன்' தயாரிப்பின் போது, படம் வெற்றி அடைந்தால் நான் மன்னன், இல்லையென்றால் நான் நாடோடி என்று கூறினார் எம்.ஜி.ஆர். இவ்வளவு பெரிய ‘ரிஸ்க்கை’ 1958ல் எடுத்த எம்.ஜி.ஆர்., அதற்குப் பத்து வருடங்களுக்கு முன் எவ்வளவு நம்பிக்கை வறட்சியுடன் இருந்தார் என்பதை அவர் எழுதிய கடிதம் காட்டுகிறது. அதுவரை அவர் திரை உலகில் பெற்றிருந்த அனுபவங்கள் அப்படி!

நீங்கள் சினிமா நடிகராக ஆக விரும்புவதற்கு என்ன காரணம் என்று கடித நண்பரிடம் கேள்வியை எழுப்பிய எம்.ஜி.ஆர்., பணமா, புகழா,  கலையா என்று அடுக்கினார். பணம்தான் உங்கள் குறி என்றால், அந்த இலக்குடன் திரை உலகில் நுழையக்கூடாது என்பதற்கு நானே சாட்சி என்று தன்னுடைய சில்லறையற்ற நிலையை எம்.ஜி.ஆர்., முன் வைத்தார்! தற்கால சினிமா உலகத்தில் மிகச்சிலரைத்

தவிர, மற்ற எல்லோரும் பரிதாபப்படுகிற நிலையில்தான்

பணத்தைப் பெறுகிறார்கள்.

இதை என் அனுபவத்திலிருந்து

கூறுகிறேன் என்று பின்னாளின் வசூல்ராஜா 1948ல் கூறினார்!

"புகழ்தான் உங்கள் குறிக்கோள் என்றால், பன்னிரண்டு வருடங்களாக திரைக்கடலில்

எதிர் நீச்சல் போடும் என்னுடைய அனுபவத்திலிருந்து அது நடிகனுக்கு  சீக்கிரம் வந்துவிடுவதில்லை என்று அறியலாம்", என்றார் எம்.ஜி.ஆர்!

கலைதான் குறிக்கோள் என்றால், கலைக்காக எந்தப் படம் ஓடியது என்று எம்.ஜி.ஆர்., கேட்டார்! கலை எதில் உள்ளது என்று நிர்ணயம் ஆகாத நிலையில் சில படங்கள் பாட்டுக்காகவும், சில படங்கள் சண்டைக் காட்சிகளுக்காகவும், சில படங்கள் தந்திரக் காட்சிகளுக்காகவும் ஓடுகின்றன. கலையைத் தேடுவதற்கு சினிமாவில் இடம் இல்லை என்றார்.

எம்.ஜி.ஆர்., இப்படித் தர்க்கரீதியாக அடுக்கிய பின், எம்.ஜி.ஆரின் கடித கணைக்கு  இலக்கான நண்பர் பி.ஜி.எம்.எஸ். என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் எம்.ஜி.ஆரின் கடிதத்தைப் பத்திரப்படுத்தும் நல்ல வேலையைச் செய்திருக்கிறார். அதுவரையில் சேமம்!

(தொட­ரும்)