ஒரு பேனாவின் பயணம் – 123 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 04 செப்டம்பர் 2017

காந்தி விரும்பவில்லை ஜின்னா இரும்பு பிடியாக இருந்தார்!

இந்த சம்பவங்களையெல்லாம் நான் கன்னிமாரா நூலகத்துப் போய் படித்து முடித்து, மனதில் அசை போட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் கல்லூரியில் முதல் ஆறு மாதங்கள் முடிந்து, அடுத்த ஆறு மாதங்கள் தொடங்கின. அதே சமயம் 1979ம் ஆண்டும் துவங்கியது.

அந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே இந்திய அரசியல் பரபரப்பாக இருந்தது.  இந்தியாவில் ஸ்திரமான ஆட்சி இல்லை. ஆட்சியிலிருந்த ஜனதா தலைவர்களின் தகராறு சந்தி சிரித்தது.

இந்த சமயத்தில்தான் அண்டை நாடான  பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த பூட்டோவுக்கான தூக்குத்தண்டனை காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

இளம் வயதில் பாகிஸ்தான் அரசியல் வானில் அதிசய நட்சத்திரமாகத் தோன்றி, நாவன்மையால் நாட்டு மக்களைக் கவர்ந்து, உயர் பதவிகளெல்லாம் வகித்து, உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, ஒரு நாள் திடீரென்று பதவியிலிருந்து விலக்கப்பட்டு, கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் பூட்டோவின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்ததை இந்திய மக்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

உலக நாடுகளே பதட்டத்தில்  இருந்தன. அங்கே அப்போது ராணுவ அதிபராக இருந்த ஜியா – வுல் – ஹக் கடைசி நேரத்தில் பூட்டோவுக்கு மன்னிப்பு வழங்கிவிடுவார் என்கிற நம்பிக்கையோடு உலகம் காத்திருந்தது.

முதலில் பூட்டோ விவகாரத்திற்கு போவதற்கு முன் கொஞ்சம் பாகிஸ்தானை பற்றி தெரிந்து கொள்வோம். ஏறத்தாழ 200 ஆண்டு காலம் வெள்ளையர் ஆட்சியின்கீழ் இருந்த  இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரமடைந்தது. அப்போது இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து சென்றது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளுடன் சேர்ந்து போராடியவர் ஜின்னா. 1920ம் ஆண்டு காந்தியோடு ஏற்பட்ட கொள்கை முரண்பாட்டால் காங்கிரசை விட்டு விலகினார்.

1940ம் ஆண்டில் `முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான்  என்ற தனி  சுதந்திர நாடு வேண்டும்' என்ற கோரிக்கையை எழுப்பினார். பிரிவினையைத் தவிர்க்க, மகாத்மா காந்தி எவ்வளவோ முயன்றும், ஜின்னா சமரசத்துக்கு இணங்கவில்லை.

1945ல் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கிலாந்து நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது. போர்க்காலத்தில் பிரதமராக இருந்து,  நேச நாடுகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சர்ச்சிலின் ஆட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி)  இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.  தொழிற்கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவர் ஆட்லி பிரதமர் ஆனார்.

ஆட்லி இந்தியர்கள் மீது அன்பு கொண்டவர். `நான் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கு  சுதந்திரம் கொடுப்பேன்’ என்று தேர்தலின் போது வாக்கு உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, சுதந்திரம் அளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார்.

பாகிஸ்தான் பிரிவினையைத் தவிர  வேறு வழி இல்லை  என்ற நிலை ஏற்பட்டதால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய  புதிய `வைஸ்ராய்’ ஆக மவுன்ட்பேட்டன் பிரபுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

அவர் மகாத்மா காந்தியையும்,  மற்ற தலைவர்களையும் சந்தித்தார்.  "இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்க இங்கிலாந்து முடிவு செய்துவிட்டது. இந்திய தலைவர்களுக்கும், ஜின்னாவுக்குமிடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் இந்தியா இன்று எப்படி இருக்கிறதோ அப்படியே விட்டு விட்டு வெள்ளையர்கள் லண்டனுக்கு திரும்பி விடுவார்கள்" என்று தெரிவித்தார்.

இந்த சமயத்தில் இந்தியா முழுவதும் 565 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. நவாபுகள், ராஜாக்கள், சிற்றரசர்கள், இவற்றை ஆண்டனர். ஆகஸ்ட் 15ம்தேதி இந்தியாவை விட்டு வெள்ளையர் வெளியேறிவிட்டால், தங்கள் சமஸ்தானங்களைச் சுதந்திர நாடுகளாகப் பிரகடனம்  செய்துவிட அவர்கள் தயாரானார்கள்.

 இப்படி இந்தியா சிறு சிறு நாடுகளாக சிதறிவிடக்கூடிய ஆபத்தை உணர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்தனர்.  காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பிரிவினைக்கு ஆதரவாக நேரு, படேல், கோவிந்த் வல்லப பந்த உட்பட  157 பேரும், எதிர்த்து 29 பேரும் ஓட்டளித்தனர். 32 பேர் நடுநிலை வகித்தனர். இதன் காரணமாக, பிரிவினைக்கு காந்தி சம்மதிக்க வேண்டியதாயிற்று.

1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம்தேதி (அதாவது 14ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு) அதாவது இந்திய ஜோதிடர்கள் குறித்து கொடுத்த `முகூர்த்த நேரம்’  இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது முடிவானது.

 இதற்கு ஒரு நாள் முன்னதாக  14ம்தேதி காலை 9 மணிக்கு பாகிஸ்தான் தொடக்க விழா கராச்சி நகரில் நடந்தது. இந்த விழாவில் மவுன்ட்பேட்டன் கலந்து கொண்டார்.

``பாகிஸ்தானுக்கும்,  மவுன்ட்பேட்டன்தான் கவர்னர் ஜெனரலாக இருப்பார்" என்று ஜின்னா அறிவித்திருந்தார். ஆனால், பின்னால் தன் முடிவை மாற்றிக்கொண்டு, பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக ஜின்னாவே பதவி ஏற்றார்.  அதிகாரங்களை ஜின்னாவிடம்  ஒப்படைத்துவிட்டு,  மவுன்ட்பேட்டன் டில்லி திரும்பினார். டில்லியில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார். பாகிஸ்தான் நாட்டு அமைப்பு விசித்திரமானதாக இருந்தது.

பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய `மேற்கு பாகிஸ்தான்’ வங்காளத்தை உள்ளடக்கிய 'கிழக்கு பாகிஸ்தான்' என்று இரண்டு துண்டுகளாக பாகிஸ்தான் இருந்தது. இரண்டுக்கும் இடைவெளி 1,000 மைல்களுக்கு மேல். `மேற்கு பாகிஸ்தானையும், கிழக்கு பாகிஸ்தானையும் இணைக்க ரோடு போட வேண்டும்' என்ற கோரிக்கையை பாகிஸ்தான் வலியுறுத்தியது. அந்த யோசனையை இந்தியா நிராகரித்தது.

பாகிஸ்தான் அமைவதற்கு காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை பல திருப்பங்கள் நிறைந்தவை.  அவர் 1876ம் ஆண்டு டிசம்பர் மாதம் கராச்சியில் பிறந்தார். தந்தை பெயர் பூஞ்சா. தாயார் மிதிபாய்.  தந்தை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில்  பெரும் பணக்காரராக விளங்கினார்.

கராச்சியிலும் மும்பையிலும் கல்வி பயின்ற ஜின்னா, லண்டனுக்குச் சென்று சட்டம் பயில நினைத்தார்.  மகனை லண்டனுக்கு  அனுப்ப தாயார் பயந்தார்.  அக்காலத்தில் லண்டன் செல்லும் இளைஞர்கள், வெள்ளைக்காரப் பெண்களை மணந்து கொண்டு ஊர் திரும்புவது வழக்கமாக இருந்தது.  அதற்கு முன் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தாயார் விரும்பினார். முதலில் இதற்கு ஜின்னா சம்மதிக்கவில்லை.  என்றாலும் பின்னர் இணங்கினார்.

லண்டன் புறப்படுவதற்கு முன் ஜின்னாவின் திருமணம் நடந்தது.  மனைவியின் முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை.  அக்கால சம்பிரதாயப்படி மணமகள் சார்பாக உறவினர் ஒருவர் திருமணச் சடங்குகளில் பங்கு கொண்டார்.

லண்டனுக்குச் சென்ற ஜின்னா, சட்டம் பயின்று, `பார்-அட்-லா’  பட்டம் பெற்றார்.  அவர் லண்டனில் இருக்கும்போது தாயாரும், மனைவியும் உடல்நலமின்றி மரணம் அடைந்தார்கள்.

1896. இந்தியா திரும்பிய ஜின்னா  மும்பையில் வக்கீல் தொழிலை துவங்கினார்.  சிறந்த வக்கீல் என்று பிரபலமானார்.  நல்ல வருமானம் வந்தது. 1906ல் ஜின்னா காங்கிரசில் சேர்ந்தார். காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலேதான் ஜின்னாவுக்கும் அரசியல் குரு. இந்திய சுதந்திரத்திற்கும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் ஜின்னா பாடுபட்டார்.

தென் ஆப்ரிக்காவிலிருந்து  1915ல் இந்தியா  திரும்பிய காந்தி, காங்கிரஸ் இயக்கத்தின் மாபெரும் தலைவரானார்.  ஆரம்பத்தில் காந்தியும், ஜின்னாவும் தோழமையுடன் பழகினாலும். நாளடைவில், காந்தியின் கொள்கைகள்  ஜின்னாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் 1920ம் ஆண்டு அவர் காங்கிரசை விட்டு விலகினார்.

1921 ,முதல் 1935 வரை ஜின்னாவின் அரசியல்  வாழ்க்கையில் தேக்க நிலை ஏற்பட்டது. 1930 முதல் ஐந்தாண்டுகள் லண்டனில் தங்கியிருந்து விட்டு 1935ல் இந்தியா திரும்பினார்.  முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பதவி அவரைத் தேடி வந்தது. வெகுவிரைவில் முஸ்லிம் லீக்கின் இணையற்ற தலைவரானார். 1940ம் ஆண்டில் முஸ்லிம் லீக் மாநாடு லாகூரில் நடந்தது.  அந்த மாநாட்டில்தான் முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

பிரிவினையைத் தவிர்க்க காந்தி எவ்வளவோ முயன்றும், ஜின்னாவின் பிடிவாதத்தால் அது இயலாமல் போயிற்று. இதற்கிடையே ஜின்னாவுக்கு 41 வயதாகும்போது,  டார்ஜீலிங் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ரூட்டி என்ற 16 வயது அழகியை சந்தித்தார்.  ஜின்னாவின் நண்பரும், கோடீஸ்வரருமான தீன்ஷா என்ற வியாபாரியின் மகள்தான் ரூட்டி. இவர் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்.

வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும்,  இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.  இது தீன்ஷாவுக்குத் தெரிந்தது. மிக ஆத்திரம் அடைந்த அவர், ஜின்னாவும். ரூட்டியும் சந்திக்கக்கூடாது என்று கோர்ட்டில் தடை வாங்கினார்.

ரூட்டி பொறுமையோடு இரண்டு வருடங்கள் காத்திருந்தார். 18 வயதானதும் தன் கோடீஸ்வர தந்தைக்கு 'குட்பை' சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி ஜின்னாவை மணந்து கொண்டார்.

ஜின்னாவும், ரூட்டியும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினார்கள்.  இவர்களுக்கு 1919 ஆகஸ்டு 14ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. (இதற்கு சரியாக  28 ஆண்டுகளுக்குப்பிறகு இதே நாளில் பாகிஸ்தான் பிறந்தது என்பது கவனிக்கத்தக்கது). இந்த குழந்தைக்கு தினா என்று பெயரிட்டனர். 10 ஆண்டுகளுக்குப்பின், ஜின்னாவுக்கும், அவர் மனைவிக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டன. ஜின்னாவை விட்டு ரூட்டி பிரிந்து சென்றார்.

ஒரு வருடத்திற்குபின் மும்பை ஓட்டலில் தங்கியிருந்த போது ரூட்டி திடீரென்று மரணம் அடைந்தார். அன்று அவருக்கு 29வது பிறந்த தினம்.

ரூட்டி மரணத்தின்போது ஜின்னா டில்லியில் இருந்தார். அவர் உடனே மும்பைக்கு விரைந்தார்.

ரூட்டியின் உடல் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டபோது ஜின்னா சிறு குழந்தை போல கதறி அழுதார்.  அதுவரை எந்த ஒரு சமயத்திலும் ஜின்னா தன் உணர்ச்சிகளை வெளியில் காட்டியதே இல்லை.  வாழ்க்கையில் முதல் தடவையாகவும், கடைசி தடவையாகவும் அன்று அழுதார்.

ஜின்னா மிகவும் ஒல்லியானவர். 6 அடி உயரமுள்ள  அவர் 55 கிலோ எடையே இருந்தார். ஆயினும் எப்போதும் விலை உயர்ந்த சூட்டும், கோட்டும் அணிந்து கம்பீரமாகத் தோன்றுவார்.

1947 தொடக்கத்தில் அவரது உடல்நிலையை குடும்ப டாக்டர் பரிசோதித்தார். ஜின்னாவுக்கு சயரோக நோய் வந்திருப்பதும்,  அவருடைய ஈரல்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும் எக்ஸ்ரே  படத்திலிருந்து தெரிந்தன.

இதை ஜின்னாவிடம் தெரிவித்த டாக்டர்கள் `மதுப்பழக்கத்தையும், சிகரெட் பிடிப்பதையும் நிறுத்தி விடுங்கள். அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுங்கள். இல்லாவிட்டால்,  இரண்டு அல்லது மூன்று

ஆண்டுகளில் உங்கள் ஆயுள் முடிந்துவிடும்’ என்றனர்.

 இதைக் கேட்டு ஜின்னா சிறிதும் கவலைப்படவில்லை.  `ஒரு சயரோக ஆஸ்பத்திரியில் நோயாளியாக கிடந்து சாவதைவிட பாகிஸ்தான் கோரிக்கைக்காக  போராடிச் சாவதையே விரும்புகிறேன்’ என்றார்.

சொன்னது போலவே, பாகிஸ்தான் பிரிவினைக்காக போராடி, வெற்றியும் பெற்றார்.  ஆனால் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து ஒரு வருடத்திற்குள் ஜின்னா மரணமடைந்தார்.

`ஜின்னாவுக்கு இந்த நோய் இருப்பது தெரிந்திருந்தால், நான் இந்திய சுதந்திரத்தை ஓராண்டு தள்ளி வைத்திருப்பேன். இந்தியா பிளவு படாமலாவது இருந்திருக்கும்' என்றார் மவுன்ட்பேட்டன்.

ஜின்னா இறந்த பிறகு பாகிஸ்தானில் குழப்பம் நிலவியது.  மக்களிடம் ஓரளவு செல்வாக்கு பெற்றிருந்த லியாகத் அலிகான்  பிரதமராகப் பதவி ஏற்றார்.  அவரது ஆட்சி அதிக காலம் நீடிக்கவில்லை.  பாகிஸ்தானில் முழுமையான  ஜனநாயகத்தைக் கொண்டுவர விரும்பிய அவர், சுட்டுக்கொல்லப் பட்டார். பிறகு ஒருவர் பின் ஒருவராக பலர் பிரதமராக வந்தார்கள். எவராலும் அதிக காலம் ஆட்சியில் நீடிக்க முடியவில்லை.

 இதற்கிடையே 1956ம் ஆண்டு பாகிஸ்தான் `குடியரசு’ நாடாக பிரகடனம் செய்யப்பட்டது.

1958ம் ஆண்டு அக்டோபர் 7ம்தேதி  ராணுவ தளபதியான  அயூப்கான் புரட்சி நடத்தி, ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.

`முகமது அலி போக்ரா, சவுத்ரி முகமது அலி ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது  ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு என்னிடம் கூறினார்கள்.  அப்போது நான் அதற்கு சம்மதிக்கவில்லை.  பாகிஸ்தான் ஜனநாயக நாடாக  இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதே

அதற்குக் காரணம்.  இப்போதுள்ள நிலைமையை ஆராய்ந்து பார்த்தேன். பாகிஸ்தானுக்கு எந்த முறை சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.  பாகிஸ்தானுக்கு ராணுவ ஆட்சிதான்  என்ற முடிவுக்கு வந்தேன்.  அதன் விளைவாக ஆட்சியைக் கைப்பற்றினேன்’  என்று அயூப் கான் தெரிவித்தார்.

அயூப் கான் சர்வாதிகாரியாக இருந்த போதும், நிலையான ஆட்சியைத் தந்தார்.  அயூப்கான் அமைத்த மந்திரிசபையில் பூட்டோ இடம்பெற்றார்.  வெளி விவகார மந்திரியாக இருந்த அவர் ஐ.நா. சபை கூட்டங்களில் அடிக்கடி பங்கு கொண்டு, இந்தியாவை தாக்கிப் பேசுவது வழக்கம். இதனால் பாகிஸ்தானில் பூட்டோவின் செல்வாக்கு உயர்ந்தது.

1965ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, இந்திய பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தபோது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. அதில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. ஐ.நா. சபையின் தலையீட்டால் செப்டம்பர் 22ம்தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.

ஜின்னாவுக்குப் பிறகு, பாகிஸ்தானில் பலம் மிக்க தலைவராக திகழ்ந்த அயூப்கான் செல்வாக்கு போருக்குப் பின் சரிந்தது.  அவரது ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

அயூப்கானுக்கு வலது கை போல் செயல்பட்டு வந்த பூட்டோவும் அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

(தொடரும்)