இந்திய மருத்துவத்தை நாடி வரும் சீனா

பதிவு செய்த நாள் : 03 செப்டம்பர் 2017

ஹுவா லீ என்பது அவரின் பெயர். 40 வயது சீன பெண்மணியான அவருக்கு தீவிர கல்லீரல் நோய் தாக்கியிருந்தது. அதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்னரே ஹெப்பாடிடிஸ் சி ( Hepatitis C)  எனப்படும் மஞ்சள் காமாலைக்கு காரணமான நோய் கிருமி அவரின் ரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை ஒன்றில் அவருக்கு வழங்கப்பட்ட குருதிக்கொடையோடு கிடைத்த பரிசு அது.

சீனாவில் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை எடுக்க ஹுவா லீ முயன்ற போது மருத்துவமனை மற்றும் மருந்துகளின் கட்டணம் அவரை மலைக்க வைத்தன. விரைவில் சிகிச்சை பெறாவிட்டால் நோய் முற்றி கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

செலவை எவ்வாறு சமாளிப்பது என  நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஹூவா லீ செய்வதறியாது நின்றார்.

அப்போது இந்தியாவில் குறைந்த செலவில் கல்லீரல் நோய்க்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை பற்றி கேள்விப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்யும் மருத்துவ சுற்றுலா ஏஜன்சியை நாடிச் சென்றார் ஹூவா லீ. விசா உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிந்தபின் புதுடில்லிக்கு அழைத்து செல்லப்பட்டார் ஹூவா லீ.  இது அவருடைய முதல் வெளிநாட்டு பயணம்.

புதுடில்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட ஹூவா லீக்கு சிகிச்சைகள் செய்யப்பட்டன. நான்கே வாரங்களில் அவரது நோயின் தீவிரம் குறைந்தது. அவருக்கு ரத்த பரிசோதனையும் செய்தனர். மஞ்சள் காமாலைக்கான நோய் கிருமி அவர் உடலில் இல்லை என தெரியவந்தது.

ஹூவா லீயின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்திய தனியார் மருத்துவமனைகளின் தரம் மற்றும் சேவை குறித்து பாராட்டிப் பேசினார். சீனாவில் இல்லாத பல மருந்துகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் இங்கு கிடைப்பதாகக் கூறினார்.

ஹூவா லீ போல் பல நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சீனர்கள் குறைந்த செலவில் நவீன சிகிச்சைகள் வழங்கும் இந்திய மருத்துவமனைகளை நாடி வருகிறார்கள்.

இதுபோல் இந்தியாவிற்கு சிகிச்சை பெற வரும் சீனர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா வழங்கும் பல தனியார் நிறுவனங்கள் சீனா முழுவதும் முளைத்து வருகின்றன.

உலகின் மருந்துகடை

சீனாவில் சுமார் 1 கோடி மஞ்சள் காமாலை நோயாளிகள் உள்ளனர். உலகில் அதிக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள நாடாக சீனா அறியப்படுகிறது. ஆனால் மஞ்சள் காமாலைக்கான முக்கிய தடுப்பு மருந்தான டிடிஏ (DDA- Direct antiviral agents) இந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் சீனாவுக்குள் நுழைந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு மருந்துகள் சீனாவில் அங்கீகரிக்கப்பட விதிக்கப்படும் கடுமையான கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகள் தான் காரணம். அதனால் தான் முழுமையாக குணப்படுத்தக் கூடிய மஞ்சள் காமாலை நோய்க்கு அங்கு சரியான சிகிச்சை பெறமுடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இதே போல் பல தீவிர நோய்களுக்கு வெளிநாடுகள் தயாரித்த மருந்துகளை சீனா இன்னும் அங்கீகரிக்கவில்லை.
சீனாவின் நிலை இவ்வாறாக இருக்க இந்தியாவின் நிலையோ அதற்கு நேர்மாறானது. இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு சரியான சிகிச்சைகள் கிடைக்கும் சூழ்நிலை முழுமையாக இல்லை.
ஆனால் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களால் சிறந்த சிகிச்சைகள் பெற முடியும். மேலும் இங்கு மருத்துவ சிகிச்சைக்காக ஆகும் செலவு மற்ற நாடுகளை விட மிக குறைவு.

 இந்தியாவில் மிக குறைந்த செலவில் உயர்தரமான சிகிச்சை கிடைப்பதால்தான் பல நாடுகளில் இருந்து மக்கள் ஆண்டுதோறும் சிகிச்சைக்காக இந்தியா வருகிறார்கள். அதனால் தான் இந்தியா ‘வளரும் நாடுகளின் மருந்துகடை’ என அழைக்கப்படுகிறது.

மேலும் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் ஒரு மருந்தின் ஜெனிரிக் வகை மருந்தை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க அரசு உரிமம் வழங்குகிறது. அதனால் குறைந்த செலவில் கடுமையான நோய்களுக்கான மருந்துகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

அதனால் சீனாவில் மாதம் 3,783 டாலர்களுக்கு கிடைக்கும் ரத்த புற்று நோய்க்கான கிளைவக் (Glivec) என்ற மருந்து இந்தியாவில் ‘வீனட்’ என்ற பெயரில் வெறும் 30 டாலர்களுக்கு கிடைக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு சீனா அங்கீகாரம் வழங்காததால் அவை சட்டவிரோதமாக கருதப்படுகின்றன. சீனர்கள் பலர் சில ஏஜென்சிகள் மூலம் கள்ளத்தனமாக இந்த மருந்துகளை வரவழைத்து பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் கடந்த சில வருடங்களாக கள்ள மருந்துகளுக்கு எதிராக சீனாவில் கடுமையான சட்டங்கள் அமலாக்கப்படுவதால் மருந்துகளின் வரவு சீனாவில் குறைந்துள்ளது.

எனவே ஹூவா லீ போன்ற பல நோயாளிகள்  இந்தியாவிற்கு நேரில் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்திய மருத்துவமனைகளின் சிறந்த தரம்

மலிவான மற்றும் நவீன சிகிச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிறந்த சேவைகள் மற்றும் தரம் ஆகியவையும் வெளிநாட்டு நோயாளிகளின் வருகைக்கு முக்கிய காரணம்.

இந்தியாவின் பல மருத்துவமனைகள் உலக பிரசித்தி பெற்றவை. உதாரணமாக பெங்களூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை மருத்துவ சுற்றுலாவுக்கான உலகின் சிறந்த 10 மருத்துவமனைகளில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் கிடைக்கும் நவீன சிகிச்சைகளை பத்தில் ஒரு பங்கு செலவில் இந்தியாவில் பெறமுடியும் என்று 2015ம் ஆண்டு மருத்துவ சுற்றுலாவிற்கான சந்தை அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறும் வெளிநாட்டினரை அதிகரிக்க செய்ய இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களுக்கு விரைவில் விசா கிடைக்க வழி செய்து வருகிறது. அதனால் 2014ம் ஆண்டு 66,254மாக இருந்த நோயாளிகள் எண்ணிக்கை 2016ம் ஆண்டு 1,77,972 ஆக அதிகரித்துள்ளது.

சீன நோயாளிகள் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்ள டிக்கெட், தங்கும் வசதி, மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், சேவை கட்டணம் ஆகிய அனைத்தும் சேர்த்து 3,500 முதல் 7,500 டாலர்கள் செலவாகின்றது. ஏஜென்சிகளை நேரடியாக இந்திய மருத்துவ மனைகளுக்கு வந்தால் செலவு மேலும் குறையும்.

நம்பிக்கையின்மை

இந்தியாவின் மருத்துவ சேவைகளால் பல சீனர்கள் பயனடைந்து வந்தாலும் இந்தியாவின் மருத்துவ தரம் குறித்த நம்பகத்தன்மை இன்னும் அங்கு முழுமையாக ஏற்படவில்லை.

சீனர்கள் இந்தியாவை வறுமையான நாடாக பார்க்கும் போக்கு மற்றும் இந்திய மருத்துவதுறையின் வளர்ச்சி குறித்த அறியாமை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

மேலும் இந்தியாவின் மருத்துவதுறையில் நடக்கும் சில மோசமான சம்பவங்கள் மற்றும் தவறுகள் ஊடகங்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவுகின்றன. அதன் காரணமாக இந்திய மருத்துவமனைகள் குறித்த தவறான பிம்பம் மக்கள் மனதில் பதிவாகிறது.
உதாரணமாக உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் இறந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவின் கிராமபுரத்தில் உள்ள சாதாரண அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் நிலை இதுதான் என்ற தவறான பார்வை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சையின் போது ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அவர்களின் நலன் காக்கும் வகையில் உஅதவக்கூடிய கறார் சட்டங்கள் இந்தியாவில் இல்லை.

இதுபோன்ற காரணங்களால் பல சீனர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அதிக செலவு செய்து அமெரிக்கா செல்கின்றனர். அமெரிக்காவில் கிடைக்கும் மருந்துகளில் 40 சதவீத மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் பல இந்திய மருத்துவர்கள் உள்ளனர். இந்த தகவல்கள் பல சீனர்களுக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் அமெரிக்க சிகிச்சை மேல் உள்ள நம்பிக்கை காரணமாக சீனர்கள் தங்கள் முடிவை மாற்றிகொள்வதில்லை.

இத்தகைய சூழ்நிலையிலும் இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சை பெறும் வெளிநாட்டினர் குறிப்பாக சீனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று ஹரியானாவின் மெதண்டா மெட்சிட்டி மருத்துவமனை தலைவர் நரேஷ் டிரேஹன் கூறுகிறார். இன்றைய அளவைவிட பல மடங்கு உயரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


கட்டுரையாளர்: நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation