பாட்டிமார் சொன்ன கதைகள் – 129– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 01 செப்டம்பர் 2017

கண்ணன் செய்த சூட்சுமம்!

கண்டிப்பான குரலில் கண்ணன் சொன்னான், ``இறங்கு'' என்றார் கிருஷ்ணர். அர்ஜூனன் இறங்கிய பின்பு கிருஷ்ணர் கீழே குதித்தார். மறுகணம் ரதம் குபீரென்று தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

மலைத்துபோன பாண்டவர்களிடம் கிருஷ்ணர் ''துரோனர், கர்ணன் ஆகியொரின் அஸ்திரங்களின் வீரியத்தால் இந்த தேரினுள் எப்போதோ தீ புகுந்து விட்டது. நான் இந்த தேரில் அமர்ந்திருந்ததால், இந்த தேர் இதுவரை எரியவில்லை. யுத்தம் முடிந்து என் பணி பூர்த்தியாகி விட்டது என்ற நிறைவு என் மனத்தில் ஏற்பட்டு விட்டதால் நான் இறங்கியதும் அந்த தேரில் தீ பரவியது. அதனால்தான் அர்ஜூனனை முதலில் இறங்கும்படி கூறினேன்.'' இவ்வாறு கூறிய கிருஷ்ணரை போற்றித் துதித்தான் தர்மபுத்திரன்.

 அப்போதுதான் அசுவத்தாமனின் மனதில் கொடும் சீற்றப்புயல் உருவாகிக் கொண்டிருப்பதை கிருஷ்ணரின் ஆழ்மனம் உணர்ந்தது.  ஏதோ பெரும் தீங்கு விளையப் போவதை உணர்ந்த அவர் பாண்டவர்களை அன்றிரவு கூடாரத்தில் தங்க வேண்டாம் என்று  கூறி வெகுதுாரம் அழைத்துச் சென்று ஓசுவதி நதிக்கரையில் தங்க வைத்தார். அதன் மூலம் அசுவத்தாமாவின் நள்ளிரவுத் தாக்குதலில் பாண்டவர்கள் தப்பினர்.

பின்னர் திருதிராஷ்ட்ரன் அரண்மனையில் கிருஷ்ணர்  திருதராஷ்ரனுக்கு சமாதானம் கூறினார். துரியோதனனின் பேராசையே யுத்தத்தை திணித்தது என்றும், பாண்டவர்கள் கடைசிவரை சமாதானத்தை நாடியதையும் விளக்கினார். சமாதானமடைந்த திருதிராஷ்ட்ரன் பாண்டவர்களை கட்டித் தழுவி ஆசி கூறினான்.

பீமன் ஆசி பெறச் சென்ற போது சைகையால் தடுத்த கிருஷ்ணர் அங்கிருந்த இரும்பு பிரதிமையை திருதராஷ்ட்ரன் அருகே வைத்தான். பொம்மையை பீமன் என்றெண்ணி தழவ முற்பட்ட குருடனான திருதிராஷ்ட்ரன் மனதில் ஒரு கணம் `இவனல்லவா என் நுாறு பிள்ளைகளைக் கொன்றவன்’ என்ற எண்ணம் தோன்றவும் தன்னையறியாது  ஒரெ இறுக்காக அவனை இறுக்கினான். மறுகணம் பிரதிமை துாள்துாளாக உடைந்து சிதறியது.

(எதிரிகளை மோதி அழிக்காமல், அரவணைத்தே ஒழித்துக் கட்டுவதற்கு `திருதிராஷ்ட்ரர் ஆலிங்கனம்’ என்ற பெயர் இதனாலேயே ஏற்பட்டது.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் கிருஷ்ணரின் சூட்சமத்திற்கு அப்பாற்பட்ட அந்தராத்மாவால் பாண்டவர்கள் காக்கப்பட்டனர்.

கற்பில் சிறந்த மகா சிவபக்தையான காந்தாரி மகாபாரதத்தில் வியாசர்  உயர்வாக கூறியுள்ளார். திருதிராஷ்ட்ரனுடன் அவளுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டதுமே ஒரு கறுப்புத் துணியை எடுத்து தன் கண்களை கட்டிக் கொண்டவள் அவன். தன் கணவன் பிறவிக்குருடன் என்பதால் அவனால் காணமுடியாத உலகத்தை தானும் காண விரும்பாமல் கண்களை மூடிக் கொண்டாள்.

 தனது கணவன் எப்படி இருப்பான் என்பதையோ, தன் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்பதையோ அவள் கண்டதேயில்லை.  சதா சர்வ காலமும் சிவனின் திருவடிகளில் மனம் ஒன்றி மகத்தான சிவபக்தையாக  விளங்கியவள்.  (அவள் பிறந்த தேசம் என்பதாலேயே அந்த நாட்டுக்கு 'காந்தார நாடு' என்றே பெயர் சூட்டினர். இபோது அந்த பகுதி ஆப்கானிஸ்தான் என்று பெயர் பெற்று விளங்குகிறது. எனினும் அந்த நகரம் மட்டும் இப்போது காந்தார் என்றும் காண்டகார் என்றும் அழைக்கப்படுகிறது.)

 மாபெரும் குருஷேத்திரப் போரில்  தனது பிள்ளைகள் ஒவ்வொருவராக பீமனால் கொல்லப்பட்டதால் ஆற்ற முடியாத துயர் அடைந்தாள் காந்தாரி. கடைசியில்  98 மகன்களும் கொல்லப்பட்டு இரண்டே இரண்டு பேர்தான் மிஞ்சினார்கள். 17ம் நாள் போரில் துச்சாதனன்  கோரமாக பீமனால் கொல்லப்பட்டான். அவன் கைகளில் ஒன்றை பிய்த்து எறிந்து வீசிய பீமன் தனது கைகளாலேயே அவனது மார்பைக் கிழித்து ரத்தத்தை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டு நாட்டியமாடினான்.

 கடைசியாக துரியோதனன் மட்டும் மிச்சமிருந்த நிலையில் அவனை வரவழைத்த காந்தாரி அவனிடம் கூறினாள், ''மகனே பிறந்தது முதல் நீ எப்படி இருப்பாய் என்று நான் பார்த்ததேயில்லை. போய் நதியில் நீராடிவிட்டு பிறந்த மேனியாக என் முன்னே வந்து நில்'' என்றாள்.

 உடனே நதியில் நீராடிவிட்டு ஆடையின்றி அந்த இரவில் துரியோதனன் சென்றபோது அங்கு வந்த கிருஷ்ணர், துரியோதனனை அழைத்தார். தனது நிர்வாண நிலையால் கூச்சமடைந்த துரியோதனன் சட்டென்று அங்கிருந்த ஒரு வாழை மரத்தில் இலையை பறித்து வாழையிலையை துண்டுபோல் இடுப்பில் சுற்றிக்கொண்டான்.

''இந்த இரவில் எங்கே செல்கிறாய்?'' என்று கேட்ட கிருஷ்ணரிடம், ''என் தாய் அழைத்தார்'' என்று கூறிவிட்டு நிற்காமல் விரைந்தான்.

காந்தாரியின் எதிரே நின்ற அவன் ''உங்கள் கட்டளைப்படி வந்து விட்டேன்'' என்று கூறவும், எத்தனையோ ஆண்டுகள் தனது கண்களை கட்டியிருந்த காந்தாரி மனதுள் சிவனை தியானித்தபடி கண்கட்டை அவிழுத்து தலைமுதல் கால்வரை அவனைப் பார்த்தாள்.

துரியோதனன் இடுப்பி சுற்றி இருந்த வாழையிலையை கண்டு திகைத்த அவள், ''மகனே! நான் சொன்னது என்ன? நீ செய்தது என்ன?'' என்று கேட்டாள்.

`முழுவதும் ஆடையின்றி இருக்க கூச்சமாயிருந்தது.'' என்ற துரியோதனன், ''வேண்டுமானால் இதை எடுத்து விடுகிறேன்'' என்றான்.

''மகனே! நான் முனிவரோ, மந்திரவாதியோ அல்ல. என் இத்தனை ஆண்டு கால சிவபக்தியின் பலனையும் ஒன்று திரட்டி சில விநாடி உன் மீது பார்வையைச் செலுத்தினேன். உன் உடலில் என் பார்வைபட்ட இடம் வஜ்ரம் போலாகிவிடும். படாத பகுதிகள் சாதாரணமாக இருக்கும். உன் உடலில் உனது தொடை தவிர எல்லாம் வைரம் பாய்ந்து விட்டது'' என்றாள் காந்தாரி.