ஆதார் அட்டை தகவலை அரசு காப்பற்ற முடியுமா

பதிவு செய்த நாள் : 29 ஆகஸ்ட் 2017

ஆதார் அட்டையை பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. ஆதார் எண்ணை தமிழக அரசு வெளிப்படையாக ரேஷன் விநியோகத்துக்குக்கூட  பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. குடிமக்களாகிய நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். ஹேக்கிங் மூலம் ஒட்டுமொத்தமாக எல்லா தகவல்களும் பறிபோகும் பொழுது தனிப்பட்ட தகவல்களும் பறிபோகலாம். எல்லாத் தகவல்களுக்கும் பயன்பாடு அடிப்படையில் ஒரு விலை உண்டு. தேவையின் அடிப்படையில் முயற்சிகளும் விலையும் உயரலாம். இது அனைவருக்கும் பெருங்கவலை.

அரசு மற்றும் அரசு சார்ந்த சேவை நிறுவனங்களிடம் மக்கள் அளிக்கும்  தனிப்பட்ட தகவல்கள் அதாவது தொலைபேசி எண்கள், வங்கி விவரங்கள், முகவரிகள், பிறப்பு தேதி, பாலியல் அடையாளங்கள், உடல்நலம் பதிவு,  சொத்துரிமை மற்றும் வரிகள் குறித்த அனைத்து தகவல்களும் மூன்றாம் நபர்கள் மூலம் அனைத்து தரவுகளில் (reserve source) பதிவு செய்யப்படுகின்றன அது  பாதுகாப்புடன் இருக்குமா என்பது ஒரு மிக பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

கைரேகைகள், ஐரிஸ் ஸ்கேன்,  உடல் மாதிரிகள் மற்றும் மின்னணு வடிவத்தில் அவற்றின் சேமிப்பு உள்ளிட்ட தனிப்பட்ட தரவு சேகரிப்புகள் உள்ளடக்கியதாக ஆதார் உள்ளது. அது போலவே நாட்கிரிட், சி.சி.டி.என்.என்.எஸ், ஆர்.எஸ்.ஒய்.பி, ஆகியவை உள்ளன.

டி.என்.ஏ விவரக்குறிப்பு, என அனைத்து சட்ட ஆணைக் குழு சமீபத்தில் மனித டி.என்.ஏ வரிசை முறைமைத் தகவலை சேகரித்தல் குறித்து ஒரு மசோதா முன்வைத்தது. இந்த மனித டி.என்.ஏ வரிசை முறைமைத் தகவல்களும் கசிந்து வெளியாகும் ஆபத்து உள்ளது என  உச்ச நீதிமன்றம் அச்சம் தெரிவித்துள்ளது.

ஒரு வலுவான, பாதுகாப்பான, ஹேக்கர்ஸ் உள்ளே நுழையமுடியாத தரவு தளத்தை அமைப்பதற்கான திட்டம் அரசிடம் உள்ளதா என உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆதார் தரவு தளம் உலக அளவில் மிக பெரியதாகவும், தனித்துவம் உடையதாகவும் உள்ளது. “இதனை ஊடுருவி யாரும் தகவல்களை திருட முடியாது” என்று இந்திய அரசும் பதில் சொல்லி வருகிறது.

இந்த தொழில் நுட்பத்தினால் மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

உண்மையில் இது சாத்தியமா? இந்தக் கேள்விக்கு விடை அறிய சில தொழில்நுட்பத் தகவல்ளை அறிவது அவசியம்.
இன்றைய அறிவியல் வளர்ச்சியினால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துகொண்டே செல்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பங்கள் குறித்து நாம் அறிந்து வைத்திருக்கும் அதே நேரத்தில் சைபர் குற்றங்கள் (cyber crime) குறித்து அறிந்துகொள்ளுதல் அவசியம்.

இணையதள குற்றங்கள் வளர்ந்துகொண்டே வருகிறது என்று சைபர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. சைபர் ஸ்பேசின் (cyberspace) வழி கண்டறியப்பட்ட இணைய குற்றங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகரித்துள்ளன. இணைய மோசடி தவிர, ஊடுருவல் மற்றும் ‘ஸ்பேம்’ (spam) பெரிய சைபர் குற்றமாகக் கருதப்படுகிறது. மக்களிடையே இணையதள பயன்பாடு அதிகமாகிக் கொண்டே இருப்பது இணையதள குற்றங்களைக் குறைப்பதற்குச் சவாலாக இருக்கிறது என்று சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தன. பல்வேறு நிறுவனங்கள் இத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் இன்னும் திணறிவருகின்றன. இதனால் உலகில் 150 நாடுகளில் முக்கிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்க துறைகளின் கணினிகள் முடங்கின. முடக்கப்பட்ட கணினிகளில் உள்ள டேட்டாவை விடுவிக்க 300 டாலர்கள் பிட் காயின்களாக செலுத்தவேண்டும் என்று ஹேக்கர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

உலக அளவில் இப்படி பல்வேறு சைபர் தாக்குதல்களை நாசக்கார கும்பல் நடத்தி வருகிறது. மேலும் இது போன்ற தாக்குதல்கள் நடக்க இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க வளர்ந்த நாடுகளும், சில தனியார் நிறுவனங்களும் அதிக ஈடுபாடு செலுத்தி வருகின்றனர்.

குவாண்டம் தொடர்பு சாதனங்கள்:

இந்தியாவில் கொல்கத்தாவைச் சேர்ந்த எஸ்.ஆர்.இ.ஜ இன்ஃப்ராஸ்டக்சர் நிறுவனம், அதிகரித்து வரும் சைபர் குற்றம் போன்ற பிரச்சனைக்குத் தீர்வு கான ரஷியவிடம் ஆய்வு நடத்தி வருகிறது.

ரஷியவின் குவாண்டம் செண்டரில் சைபர் தாக்குதல், ஹேகிங் என இது போன்ற பல பிரச்சனைகளைத் தடுக்க குவாண்டம் தொடர்பு சாதனங்களை ரஷியா பயன்படுத்தி வருகிறது.

இந்த குவாண்டம் தொடர்பு சாதனங்களை வாங்க எஸ்.ஆர்.இ.ஜ இன்ஃப்ராஸ்டக்சர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனை இந்தியாவின் பயன்பாட்டிற்கும், சைபர் தாக்குதல், ஹேகிங் போன்ற குற்றங்களை அந்த சாதனங்கள் மூலம் தடுக்க முடியும். இந்த குவாண்டம் தொடர்பு சாதனங்கள் குவாண்டம் கம்ப்யுட்டிங் மூலம் வரும் அச்சுறுத்தலை தடுத்து முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாக வைக்கப்படும்.

குவாண்டம் கம்ப்யூட்டிங் சிறு துகள்கள் (small Particles) எந்த நேரத்திலும் ஊடுருவலை உணர்ந்தால் இயல்பான முறையை மாற்றி அமைத்து ஹேக் செய்ய முடியாமல் தடுத்துவிடும். இது தற்போதுள்ள கணினிகளால் கையாள முடியாத அளவுக்கு, இந்த குவாண்டம் கணினி ஏராளமான தகவல்களையும், பல லட்சம் மடங்கு கையாள்வதோடு, பல்லாயிரம் மடங்கு வேகத்திலும் கையாளும் திறன் கொண்டவை.

குவாண்டம் கணினி:

வழக்கமான கணினிகளில் தகவல்கள், பிட் எனப்படும் 1 மற்றும் 0 ஆகியவற்றைக் கொண்டு இயங்குகின்றன. ஆனால் குவாண்டம் கணினி ‘க்யூபிட்’ என்ற அலகின் மூலம் இயங்குகிறது. அதாவது, மின்னணுக்கள் எப்போதும், 1 அல்லது 0 ஆகிய ஏதாவது ஒரு நிலையில் தான் இருக்கும். ஆனால், குவாண்டம் கணினி சில்லுகளில் மின்னணுக்கள் ஒரே நேரத்தில், இரு நிலைகளிலும் இருக்க வல்லவை. இது கணினியின் தகவல் ஆய்வுத் திறனை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதிகரிக்கும்.

குவாண்டம் கணினிகள் பருவநிலை, அணுத்துகள், மருத்துவம், வர்த்தகம், பொருளாதாரம் போன்ற பல துறைகளில் அதிவேகமாக தகவல் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது உள்ள பாதுகாப்பான அமைப்பை உடைத்து குவாண்டம் கணினி மூலம் ஹேக்கர்கள் தகவல்களை ஹேக் செய்ய முடியும். உதாரணமாக பிட் காயின்

பிட்காயின் :

பிட்காயின் அல்லது மெய்நிகர் நாணயம் (bitcoin) என்பது சடோஷி நகமோட்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் நாணயமுறை ஆகும். கணினியில் கண்களால் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு வகைப் பணப் பரிமாற்றம். இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிவர்த்தனைக்கானது.

இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவது மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மோசடிகளைத் தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமே செலவழிக்க முடியும். ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது. அடையாளம் காட்டாதவர் கூட பிட்காயினைப் பயன்படுத்த முடியும்.

பிட் காயின் டிஜிட்டல் மூலமாக செயல்படுகின்றது. புரோகிராமிங் மூலம் அந்த பிட் காயினின் மதிப்பு வெளிப்படும். ஹேக்கர்கள் உள்ளே புகுந்து அதன் புரோகிராமிங் குறியீடை மாற்றி அமைத்து அதன் மதிப்பை இழக்கச் செய்வார்கள். இதனை குவாண்டம் கணினி மூலம் செயல்படுத்த முடியும்.

முன்பு பிட் காயின் பிளாக் செயின் தொழில்நுட்பம் (Block Chain Technology) கொண்டு அமைக்கப்பட்டது.

அதனால் குவாண்டம் கணினி மூலம் டிஜிட்டல் கையொப்பம் மற்றியோ அல்லது புரோகிராமிங்யை மற்றியோ அல்லது வேறு நெட்வொர்க்கை அனுப்பி பிட் காயின் அமைப்பை ஹேக்கர்கள் தாக்க முடியும்.

இது போன்ற தாக்குதலை தடுக்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் குவாண்டம் பிளாக் செயின் தொழில்நுட்பம் கொண்டு அமைக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷியாவில் குவாண்டம் கணினியில் இருந்து வரும் தாக்குதலை தடுக்க குவாண்டம் தொடர்பு சாதனங்கள் மூலம் அல்லது குவாண்டம் கிரிப்டோகிராபி மூலமாக பாதுகாப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.

இந்த “குவாண்டம் பிளாக் செயின்” தரவு தளத்தை ஹேக் செய்ய முடியாத அளவிற்கு பாதுகாப்பாக வைத்திருக்கும். இந்த தகவல் பரிமாற்றம் குவாண்டம் கிரிப்டோகிராபி மூலம் செயல்படுத்தப்படும். இந்த சாதனம் அடுத்த ஆண்டுக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம் பிரத்யேகமான பிளக் உருவாக்கப்படும். அந்த ஒவ்வொரு பிளக்கிலும் குவாண்டம் கீ (Quantum Key) மூலம் டிஜிட்டல் கையொப்பம் செய்யப்பட்டிருக்கும்.

இது முதலில் இருந்த டிஜிட்டல் கையொப்பத்தைவிட அதிக பாதுகாப்பாக செயல்படும் என்று இதனை உருவாக்கிய அலெஸ் பெட்ரோ கூறியுள்ளார்.

இந்த குவாண்டம் கீ விநியோகம் (QKD) நெட்வொர்க்கின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் குவாண்டம் கீ உருவாக்கப்படுகின்றன. இந்த குவாண்டம் கீ, குவாண்டம் இயற்பியல் (the laws of Quantum Physics) விதிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தகவல்களை இடமாற்றம் செய்யும்போது குவாண்டம் கீ பாதுகாப்பாக இருக்கும். 

இந்த  ஆர்.கியூ.சி என்ற தொழில்நுட்பத்தை பெரிய வங்கிகளில் ரஷ்யா பயன்படுத்தி வந்தது. மாஸ்கோவில் உள்ள வங்கி மற்றும் அதன் இணைந்துள்ள கிளைகளிலும் 3 நோடு (3 Node) குவாண்டம் நெட்வொர்க் அமைத்து தகவல் பரிமாற்றங்களை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

கடந்த மாதம் இந்தியாவின் எஸ்.ஆர்.இ.ஜ. இன்ஃப்ராஸ்டச்சர் நிறுவனம் ரஷ்யாவின் விநிஷிகோணம் வங்கியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் 20 கோடி டாலர் முதலீடு செய்துள்ளனர். இதையடுத்து இந்தியா மற்றும் ரஷ்யா இந்த தொழில்நுட்பத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவர்.
இதுபோன்ற ஹேக்கிங்கை தடுக்க டேட்டா தகவல்களை எல்லாம் பாதுகாப்பாக வைக்க சீனாவும் பெரிய அளவிலான முயற்சியில் ஈடுப்பட்டுவருகிறது.
சீனா ஹேக் செய்ய முடியாத உலகின் முதல் குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

சீனாவின் இந்த செயற்கைகோள்தான் உலகின் முதல் ஹேக் ப்ரூப் வசதி கொண்ட செயற்கைகோள் ஆகும். விண்வெளி மற்றும் தரையின் இடையே நிகழும் தொடர்புகளை ஹேக் செய்ய இயலாது. இதனை ஒட்டுக் கேட்டல் மற்றும் இடைமறித்தல் போன்றவைகளை நிகழ்த்த முடியாதவாறு இதில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மிசியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் 600-கிலோவிற்கும் அதிகமான எடை கொண்டது. இது 90 நிமிடத்திற்கு ஒருமுறை பூமியை சுற்றி வரும். ஹேக் -ப்ரூப் கொண்ட இந்த செயற்கைகோள் குவாண்டம் தொடர்பு மற்றும் குவாண்டம் இயற்பியல் சார்ந்த போட்டான் துகள்களை எளிதில் உடைக்கவோ, பிரிக்கவோ முடியாது என்பதால் செயற்கைக் கோள் தகவல் தொடர்புக்கு இதனை பயன்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. அதன்படி, சீனாவின் விண்வெளி அமைப்பு உலகின் முதல் குவாண்டம் தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோளை உருவாக்கியது.

தற்போது இந்த முதல் குவாண்டம் செயற்கைகோள் பூமிக்கு தடைப்படாத சிக்னலை அனுப்பத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் ஹேக் செய்யமுடியாத உலகளாவிய குவாண்டம் நெட்வொர்க்கை உருவாக்க முதல் அடி வைக்கப்பட்டுள்ளது என சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செயற்கைகோள் வட சீனாவின் சிங்லாங்கில் உள்ள விண்வெளி தகவல் மையத்திற்கு குவாண்டம் சிக்னல்களை அனுப்பியுள்ளது. அவை எதிர்பார்த்ததை விட துல்லியமாக பெறப்பட்டன என விண்வெளி குவாண்டம் சோதனைகள் மையத்தின் தலைமை விஞ்ஞானி பான் ஜியான்வெய் கூறினார்.

இந்த செயற்கைகோள் சீனாவின் மீது பறக்கும்போது கிடைக்கும் 10 நிமிட இடைவெளியில் 300 கிலோபிட் அளவிற்கு பாதுகாப்பான குறியீடுகளை சோதனை முறையில் இப்பொழுது அனுப்பி வருகிறது. இந்தச் சிக்கனல்களை, ஒளி துகள்கள் மூலம் தகவல்களை என்க்ரிப்ட் செய்து அனுப்படும். இந்த தகவல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்ய நினைத்தால்அது என்க்ரிப்ட் முறையை மாற்றி அமைத்து ஹேக் செய்ய முடியாமல் தடுத்துவிடும்.

இதன் மூலம் பல ரகசிய தகவல்களைப் பாதுகாப்பான தொலைபேசி இணைப்பின் மூலம் அனுப்பக்கூடிய நெட்வொர்கை உருவாக்க முடியும் என தெரிவித்தார். இந்த குவாண்டம் நெட்வொர்க் தகவலை ஹேக்கர்கள் ஹேக் செய்யவே முடியாது என சீனா தெரிவித்துள்ளது

தற்போது கிடைத்துள்ள இந்த முன்னேற்றத்தினால் வருங்காலத்தில் உலகளவில் குவாண்டம் நெட்வொர்க்கை உருவாக்க முடியும். அதன்மூலம் ஹேக் செய்யமுடியாத பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


கட்டுரையாளர்: முத்துலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
pp 30-08-2017 01:40 AM
arumaiyana artical

Reply Cancel


Your comment will be posted after the moderation