மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 66

பதிவு செய்த நாள் : 29 ஆகஸ்ட் 2017

இப்படி நினைத்தவாறு சிவபெருமானின் திருக்கோயிலின் ஒருபுறத்தில் நின்று கொண்டிருந்தார்.

பட்டத்து யானை விரைந்து நடந்து சென்று, உலகத்தார் செய்த தவப்பயனால் மூர்த்தியார் இருந்த இடத்தை அடைந்து அவர்முன் தாழ்ந்து அவரைத் தமது துதிக்கையால் தூக்கியெடுத்துத் தன் பிடரியின்மீது வைத்துக் கொண்டது. அதைக் கண்ட அமைச்சர்கள் அனைவரும் வியப்புற்று, ‘உலகத் துன்பங்கள் கெட ஒரு சிவனடியாரே அரசராகக் கிடைத்தார்!’’  என்று உவகையுற்று மூர்த்தியாரின் திருவடிகளில் வணங்கியெழுந்தார்கள்.

அப்போது ஊர்மக்கள்  அனைவரும் கடலலை போல், ஆரவாரஞ் செய்தனர். பேரிகைகள் அதிர்ந்தன. தாரைகள் ஒலித்தன. சங்குகள் முழங்கின. மூர்த்தி நாயனாரை பட்டத்து யானை சுமந்து கொண்டு சென்று அலங்கரிக்கப்பட்ட முடிசூட்டும் மண்டபத்தில் சேர்த்தது.

மலர்மாலைகளும், மணிமாலைகளும் சூழ்ந்த மண்டபத்தில் யானை மீதிருந்த மூர்த்தி நாயனாரை அமைச்சர்கள் கீழே இறக்கி, நாயனாரையே அரசராகக் கொண்டு சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள். மூர்த்தியார் இருந்த திசையில் ஓமக் குண்டமிட்டு அதில் நெருப்பை வளர்த்தார்கள். மங்கல நூல் சுற்றிய பொற்கலசங்களிலும் சூடங்களிலும் நன்னீர் நிரப்பினார்கள். இவ்வாறு முடிசூட்டு விழாவிற்கு உரிய மங்கலக் கிரியைகள் நிகழ்த்தலானார்கள். அப்போது சிந்தையெல்லாம் சிவமயமான மூர்த்தி நாயனார் அமைச்சர்களை நோக்கி, ‘‘முந்திய சமணம் மறைந்து, சைவம் ஓங்கினால்தான் நான் இந்த அரசாட்சியை ஏற்று நாடாள்வேன்’’ என்றார்.

 அதைக் கேட்ட அமைச்சர்களும் வேதாகமங்களை கற்றறிருந்த பெரியோரும் அவரை வணங்கி, ‘‘எவ்விதமாக கட்டளையிடுகிறீர்களோ அவ்விதமே நாங்கள் செய்கிறோம்’’ என்றார்கள்.

அதன் பிறகு மூர்த்தி நாயனார், ‘‘நான் இந்த அரசாட்சியை ஏற்பேனாகில், எனக்கு விபூதியே அபிஷேகப் பொருளாகவும் சிவனடியார்களின் அடையாளமாகிய ருத்திராட்சமே எனக்கு அரசியல் ஆபரணமாகவும், ஜடைமுடியே கிரீடமாகவும் இருத்தல் வேண்டும்’’ என்றார்.

கல்வியிற் சிறந்த பெரியோரும் அமைச்சர்களும் ‘‘நல்லது வேந்தே! நாட்டைக் காத்தருளும்!’’ என்று அவரது சொற்களுக்கு உடன்பட்டார்கள். மங்கலவோசையும் மறைமுழக்கமும் வாழ்த்தொலிகளும் முழங்க மூர்த்தி நாயனார் அரசராக முடிசூட்டப்பெற்றார்.

பிறகு முடிசூட்டிய மண்டபத்திலிருந்து மூர்த்தி நாயனார் புறப்பட்டு, திருவாலவாய்த் திருக்கோயிலுக்குச் சென்று, சொக்கலிங்கப் பெருமானை வாழ்த்தி வணங்கினார். அதன் பிறகு அவர் பட்டத்து யானை மீதேறி, வீதிகளின் வழியாக மதுரை மாநகரை வலம் வந்தார். பிறகு அவர் அரண்மனையை அடைந்து யானையிலிருந்து கீழே இறங்கிச் சென்று பிரகாசமான ஆட்சி மன்றத்தினுள் புகுந்தார். அங்குள்ள பொன் சிம்மாசனத்தில் ஏறி, வெண்சாமரங்களால் காற்று வீசப்படும் வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்து அரச கொலுவீற்றிருந்தார்.

 நீதி அம்மைச்சர்களெல்லாம் மூர்த்தியாரின் குறிப்பறிந்து நடந்தார்கள். நாட்டில் கலகம் செய்து கொண்டிருந்த சமணர்களின் கட்டுப்பாடுகள் நீங்கின. திருவெண்ணீறு  அணியும் நல்லொழுக்கம் நாட்டில் பரவியது. சைவ சமயம் நிலைபெற்றுச் செழித்து உலகெங்கும் நிரம்பி உயர்ந்தது. பாவங்கள் மாறி பிறவித் துன்பத்தை நீக்கவல்ல திருநீறு, ருத்திராட்சம், சடைமுடி என்னும் மும்மையினால் மூர்த்தி நாயனார் உலகாண்டார்.

மூர்த்தி நாயனார் புலனடக்கத்தில் உறுதி கொண்டு பெண்ணிடம் ஈடுபடுதலை என்றென்றும் நீத்து பிரம்மசாரியாக விளங்கினார். ஐம்புலப் பகைமையாகிய உட்பகையையும் சமணர், வேற்றரசர் என்ற புறப்பகையையும் அவர் வென்றொழித்தார். உயிர்களுக்கு இடரானவற்றையும் நீக்கி உலகத்தை நெடுங்காலம் காத்த ஆஞ்ஞா சக்கரத்தையும் நல்வழியில் நடத்தினார். வேற்றரசர்கள் பாதம் போற்ற, உலகத் துன்பங்கள் நீங்க, மூர்த்தியார் அரசாண்டார். அவர் பேரரசராக திகழ்ந்த  போதிலும், தம் திருத்தொண்டில் பற்றுதல் இல்லாமல் சிவபெருமானுக்குரிய திருப்பணிகளைச் செய்து கொண்டிருந்து, இறுதியில் இறைவனடி திருவடி நிழலை அடைந்தார்.

முருக நாயனாரோ வேறுவிதமானவர்.

  கூந்தலில் மலர் சூடிய மலைமகளான உமாதேவியார் தம் தளிர்க்கையால் சிவபெருமானின் திருமேனியைத் தழுவியிருப்பாள். அப்பெருமானின் தலை மீது கற்றைச் சடையில் கங்கை தங்கியிருப்பாள். அந்நிலையில், சிவபெருமான் விரும்பும் திருத்தலம், திருப்புகலூராகும்.

  இந்த ஊர் நன்னிடம் புகைவண்டி நிலையத்திற்கு நேர் எதிர்கிழக்கில் நாகை செல்லும் பாதையில் இரண்டாவது மைலில் உள்ள  ஏனாதி நாயனார் திருத்தலமாகும். உயிர்கள் பிறவிக்கஞ்சாமல் புகலடைய தக்க தாதலி புகலூர் என்று பெயரைப் பெற்றது. இந்தவூர்த் திருக்கோயில், நீரால் சூழப்பட்டுள்ளது.

 அந்த ஊர் மணிமுடிச் சோழர்களின் காவிரி வளநாட்டில் அமைந்துள்ளது. அவ்வூரைச் சுற்றிப் பூஞ்சோலைகளும் தடாகங்களும் நிறைந்திருக்கும். அங்கு உடம்பில் வெண்ணிலவைப் போல் அணிந்திருக்கும் திருநீற்றுப்பூச்சின் வெள்ளிய ஒளி, நள்ளிரவின் கனத்த இருளையும் நீக்குவது போல் பிரகாசிக்கும். வாசனை பூக்களில் இனிய தேனை உண்ணும் கருவண்டுகளுங்கூட விபூதியின் பிரகாசத்தினால் தங்கள் கருமை நிறத்தைக் காட்டாமல் வெண்ணிறத்துடன் விளங்கும். பாடும் வண்டுகளால் மரக்கிளைகளில் உள்ள அரும்பு மலர்கள் அசைப்புண்டு வண்ண மதுரத் தேன் பொழியும். அது மட்டுமல்ல, அழகான மெல்லிய நாகணவாய் பறவைகள், இன்மொழிப் பேசும் தங்கள் வாயால் பண்ணமைந்த திருப்பதிகங்களைப் போல் செழுந்தேனைப் பொழியும். அந்த இசையமுதால் தடாகங்களிலுள்ள தாமரை மொட்டு விரிந்து மலர்ந்து, அகம் உருகிக் கண்ணீர் சொரிவது போல் தேன் நீர் சொரியும். சிவபெருமானைத் துதிக்கும் திருப்பதிகங்களைத் தொண்டர்கள் தங்கள் செவிகளால் அருந்தி, அவர்களது முகத்தாமரைகளும் மலர்ந்து, அகம் உருகி ஆனந்தக்கண்ணீர் அரும்பும்!

இத்தகைய பெருமை வாய்ந்த திருப்புகலூரில் மேன்மையான  அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் ஒருவர் தோன்றினார்.