கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 91

பதிவு செய்த நாள் : 28 ஆகஸ்ட் 2017‘ராஜகுமாரி’யின் நாயகன் ஆன பின்பும், ராஜாவாக வலம்வர தடுமாறிய எம்.ஜி.ஆர்.!

பன்னிரண்டு வருடங்கள் துணை வேடங்களில் நடித்த பின்பு, ‘ராஜகுமாரி’ படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். அந்தப் படத்தில் தான் வாங்கிய ஊதியத்தைப் பற்றி 1970ல் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டார். ‘‘சரி, நீ அந்தப் படத்தில் என்ன சம்பாதித்துவிட்டாய் என்று கேட்பீர்கள். ஜூபிடர் பிக்சர்ஸார் நான் அந்தப் படத்தில் நடிக்க மொத்தத் தொகையாக ரூபாய் 2500 பேசியிருந்தார்கள். மாதம் 200 ரூபாய் பெற்றுக்கொண்டு படம் முடிந்த பிறகு மீதம் இருந்தால், மீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தம்.

படம் முடிய எத்தனை மாதங்கள் ஆயின தெரியுமா? ஏறக்குறைய 18 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ரூபாய் 200 வீதம் வாங்கி வந்ததில் ஒரு வருடத்திலேயே மொத்தத் தொகையும் தீர்ந்துவிட்டது.  படத்தை முடிக்கும் காலம் வரை நான் என் சொந்த செலவில் இருந்துகொண்டு நடித்து முடிக்க வேண்டியதாயிற்று.’’

இதுகூட பெரிய விஷயம் இல்லை. ஒரு காட்சியில்  வீறாப்புடன் கழுத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு நடித்ததில், எம்.ஜி.ஆர். பரலோகத்திற்கே போயிருப்பார்! உயிருக்கு ஆபத்தான அந்த நிலையிலிருந்து தப்பினோம் என்பதைவிட, படத்திலிருந்த நம்மை தூக்கிவிடுவார்களோ என்ற கவலைதான் எம்.ஜி.ஆருக்கு அப்போதும் அதிகமாக இருந்தது!

கதாநாயகனாக இப்படி ‘தம்’ பிடிக்கவேண்டியதாயிற்று.  இவ்வளவு கஷ்டப்பட்டும் படம் தோல்வி அடைந்தால், எல்லாம் வீணாகப்போகும். ஆனால் எத்தனையோ ஆண்டுகளாக எம்.ஜி.ஆருக்கு இல்லாத அதிர்ஷ்டம், ‘ராஜகுமாரி’யில் தலைதூக்கியது. படத்தின் வெற்றி அவருடைய கதாநாயகக் கனவுகளுக்குப் புத்துயிர் கொடுத்தது.  

‘ராஜகுமாரி’ திரைப்படம் 1947ன் கோடை காலத்தில் வந்தது. அதன் பிறகு செப்டம்பரில் வந்த ‘பைத்தியக்கார’னில் எம்.ஜி.ஆருக்கு பிரதான வேடம் இல்லையென்றாலும், டி.ஏ.மதுரத்துடன் ஜோடி சேர்க்கப்பட்டு டூயட் பாடினார்! தலைப்பில் வரும் ‘பைத்தியக்காரன்’ வேடத்தில் எஸ்.வி. சகஸ்ரநாமம் நடித்தார். தங்கையின் வாழ்வு பறிபோகும் நிலைகண்டு பைத்தியமாகும் வேடம். படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும் சகஸ்ரநாமம்தான். என்.எஸ். கிருஷ்ணன் சிறையில் இருக்கும் போது அவருடைய வழக்கை நடத்த பணம் தேவைப்பட்டதால் தொடங்கப்பட்ட படம், என்.எஸ்.கேவும் படத்தில் நடிக்கும் வகையில் முடிந்தது!

படத்தில் என்.எஸ்.கே. அறிமுகம் ஆகும் காட்சியில்,  கையில் மதுரம் வைத்திருக்கும் பால் சொம்பில் அவருக்குத் தெரியாமல் குழாய் போட்டு பாலை எல்லாம் குடித்துவிடுவார் கிருஷ்ணன்.

திரும்பிப் பார்க்கும் மதுரம், ‘‘அட நீயா! நீ எங்கேயோ இருகேன்னுல்ல நினைச்சேன்’’, என்பார்.

‘‘எங்கேயோதான் இருந்தேன். உன்னோட கிருபையால வந்துட்டேன்’’ என்று என்.எஸ்.கே. பதில் கொடுப்பார். சிறையிலிருந்து மீண்டு வருவதற்கு மதுரம் செய்த உதவியை இப்படி பட டயலாக்கில் குறிப்பிடுகிறார் என்.எஸ். கிருஷ்ணன்!

நிஜவாழ்க்கையில் என்.எஸ். கிருஷ்ணன் சிறை செல்லும்படி நேர்ந்தது. ‘பைத்தியக்காரன்’ படத்திலோ, எம்.ஜி.ஆருக்கு சிறைவாசம் ஏற்படுகிறது.அவர் மீது திருட்டுப் பழியை ஒரு கல்யாண தரகர் சுமத்துகிறார்.  எம்.ஜி.ஆருக்கு தண்டனை கிடைக்கிறது. சமூகத்தின் மீது எம்.ஜி.ஆர். ஆத்திரம் கொள்கிறார்.  விதிப்பா, விதி என்கிறார்கள் உடனிருக்கும் கைதிகள். விதியாம் விதி என்று திராவிடப்பாணியிலே கனைக்கிறார் எம்.ஜி.ஆர்.! அந்தமட்டில் அவருடைய பிற்கால அவதாரங்களுக்கு முன்னோடியாக அமைந்த   பாத்திரம்தான். கைக்கும் வாய்க்குமாக எடுக்கப்பட்ட ‘பைத்தியக்காரன்’ படம், எம்.ஜி.ஆரின் நிதிநிலையை மேம்படுத்தியிருக்க வாய்ப்பில்லை.  


‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு 2,500 ரூபாய் கொடுத்த ஜூபிடர் நிறுவனத்தார், ‘அபிமன்யு’ படத்தின் முடிவில் வரும் அர்ஜுனன் வேடத்தில் நடிக்க அவருக்கு 5000 கொடுத்தார்கள்! ஆனால் முந்தைய படமான ‘ராஜகுமாரி’யில் இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருப்பதால், அது கழித்துக்கொள்ளப்படும் என்றது ‘அபிமன்யு’ படத்திற்காக தயாரிப்பாளர்களுடன் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்ட ஒப்பந்தம்!

எம்.ஜி.ஆருக்கு கையில் வந்த பணத்தை விட செலவுகள் அதிகமாக இருந்ததால், ஜூபிடர் ஸ்தாபனத்திலிருந்து கணிசமான முன்தொகையை பெற்று வந்திருந்தார்!

எம்.ஜி.ஆரின் துணைவேடப் படலத்தை நினைவு படுத்துவதைப்போல், 1948ல் ‘அபிமன்யு’ வந்தது. அதைத் தொடர்ந்து தியாகராஜ பாகவதர் தயாரித்து நடித்த, ‘ராஜமுக்தி’.

தேடி வந்த தயாரிப்பாளர்களை எல்லாம் உதறித்தள்ளி, தமிழ் நாட்டில் படம் எடுக்கவே விரும்பாத பாகவதர், பூனாவுக்குச் சென்று படம் தயாரித்தார். ‘ராஜமுக்தி’யில், வைஜெயந்தி நாட்டு மன்னன் ராஜேந்திர வர்மன் என்ற தலைமைப் பாத்திரத்தில் பாகவதர் நடித்தார். ராஜேந்திர வர்மனின் வம்ச விரோதியான மகேந்திர வர்மன் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆருடன் ‘மோகினி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘நாம்’ முதலிய படங்களில் பின்னர் நடித்து அவருடைய வீட்டுக்காரியான வி.என்.ஜானகி, ‘ராஜமுக்தி’யில் பாகவதர் மனைவி மிருணாலினி, வசனகர்த்தாவாக சிறுகதை மேதை புதுமைப்பித்தனின் இணைவு, பின்னணிப்பாடகியாக எம்.எல்.வசந்தகுமாரியின் நுழைவு என்ற சில பிரத்யேக சிறப்புகளைக்  கொண்டிருந்தது, அக்டோபர் 1948ல் வந்த ‘ராஜமுக்தி’. அது பாகவதருக்குத் தோல்விப் படமாக அமைந்தது. ‘ராஜகுமாரி’யில் நாயகனாக நடித்த பின்பும், துணைப் பாத்திரங்களில் நடிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் ‘ராஜமுக்தி’ வேடத்தை எம்.ஜி.ஆர். ஏற்றார். அதில் வி.என். ஜானகி நடிக்கிறார் என்பதும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.  எம்.ஜி.ஆர். துணை வேடத்தில் நடித்த ‘ரத்னகுமார்’ சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப் பட்டிருந்தாலும், தயாரிப்பாளர்களின் மெத்தனத்தால்  மெதுவாக 1949ல் வெளிவந்தது

இதே காலகட்டத்தில் கோவை சென்டிரல் ஸ்டூடியோ வளாகத்தில் ஜூபிடர் பிக்சர்ஸ் எடுத்துக்கொண்டிருந்த ‘மோகினி’ நிறைவடைந்துவிட்டது. மோகினியாக வி.என். ஜானகி நடித்தார். அவருக்கு எம்.ஜி.ஆர். ஜோடி. ‘இன்னும் வரக்காண்கிலன் ஏனோ, என்னருமை மோகினி மானாள்’ என்று பாடிக்கொண்டு எம்.ஜி.ஆர். வருகிறார். படத்தில் எம்.ஜி.ஆர்., ஜானகி ஜோடியைப் போல் டி.எஸ்.பாலையா, மாதுரிதேவி என்று இன்னொரு ஜோடி. ‘மோகினி’ படத்தில் வரும் ஒரு பறக்கும் குதிரை, பாலையாவை ஏற்றிக்கொண்டு வேறு தேசத்தை அடைந்து மாதுரிதேவி சன்னிதியில் லயிக்கும் போது கதையும் எம்.ஜி.ஆரைவிட்டு கணிசமாக நகர்ந்துவிடுகிறது. ஸ்டூடியோ அதிபர்கள் அமைக்கிற கதைப்படிதான் திரைப்படங்கள் நகரும். எம்.ஜி.ஆர் பின்னாளில் தன் மீதே  போகஸ் இருக்கும்படி பார்த்துக்கொண்ட சங்கதி எல்லாம் ஸ்டூடியோ முதலாளிகள் இருக்கும் வரை அவ்வளவு எளிதாக செல்லுபடி ஆகாது! எப்படியும், எம்.ஜி.ஆரையும் பாலையாவையும் இரண்டு கதாநாயகர்களாகக்கொண்ட ‘மோகினி’ வெற்றியடைந்தது.

அடுத்தாக வந்த ‘மருதநாட்டு இளவரசி’யின் தயாரிப்பாளர், மாநில மன்னர் மன்னன் ஜி.கோவிந்தன் என்று அறிவிக்கப்பட்டாலும், படத்தை முடிக்க அவரிடம் பணமில்லை! ஆனால் கதாநாயகன் (எம்.ஜி.ஆர்.), வில்லன் (எம்.ஜி.சக்ரபாணி), வசனகர்த்தா (மு.கருணாநிதி), இயக்குநர் (ஏ. காசிலிங்கம்) ஆகியோர் படத்தை எப்பாடுபட்டேனும் நிறைவுக்கு கொண்டு வர உழைத்தார்கள். மைசூர் ஸ்டூடியோவில் படம் உருவானது. எம்.ஜி.ஆர் அடிக்கடி சாமுண்டேஸ்வரி அன்னையைத் தரிசனம் செய்தார். ஒகனேக்கல் நீர் வீழ்ச்சியில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் சேர்ந்து நீராடும் பாடல் காட்சிகள் பாங்காகப் படமாகின. தன்னுடைய கூட்டாளிகளுடன் தன் மனப்போக்கிற்கு ஏற்ப ஒரு படத்தை எடுக்க எம்.ஜி.ஆர்.  செய்த முதல் முயற்சி, ‘மருதநாட்டு இளவரசி’. முயற்சிக்கு ஓரளவு பலன் கிட்டியது.

மாடர்ன் தியேட்டர்ஸின் வாயில் எம்.ஜி.ஆருக்குத் திறந்தது. ‘மந்திரி குமாரி’யில் அவருக்கு நாயகன் வேடம் என்றாலும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. அடுத்த படம் ‘சர்வாதிகாரி’. மோசமான மந்திரி மகாவர்மன் (நம்பியார்), படத்தலைப்பின் சர்வாதிகாரி. எம்.ஜி.ஆருக்கு, தளபதி உக்ரசேனர் (நாகையா) என்பவரின் மெய்க்காப்பாளன் வேடம். அஞ்சலிதேவியைப் பார்த்தவுடனே காதல் கொள்வது, அவள் அழகைப் பற்றிய அலங்காரச் சொற்களை அள்ளிக் குவிப்பது, காதல் மையலில் கடமையை மறந்துவிடுவது, தளபதியின் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை வரும்போதும் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கத் தவறுவது போன்ற குற்றங்கள் உள்ள வேடத்தை எம்.ஜி.ஆர். சித்தரித்தார். பின்னாளில் இதுபோன்ற தவறான பாத்திரப்படைப்புகளைத் தவிர்ப்பார். ஆனால் ‘சர்வாதிகாரி’யில், டி.ஆர். சுந்தரத்தின் தலைமையில் திரைக்கதை அமைத்த கோ.த. சண்முக சுந்தரமும், வசனகர்த்தா ஆசைத்தம்பியும் சொல்வதை செய்ய வேண்டிய நிலையில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

தி.மு.க.காரரான ஆசைத்தம்பியைப் பொறுத்தவரை, வேதாந்தம், சமயம், சடங்கு ஆகியவற்றைத் தாக்கும் வசனங்களை எம்.ஜி.ஆருக்காக ஆங்காங்கே அவர்  தாளிக்காமல் இல்லை. ஒரு  கட்டத்தில் மாளிகைக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியை எம்.ஜி.ஆர். விலாவரியாக வசனிக்கிறார்! ஆனால் காட்சிக்கு காட்சி மெய்க்காப்பாளராக எம்.ஜி.ஆர். அணியும் உடைகள், மாளிகையின் சீலைகளுக்கு ஒத்தவையாக இருந்தன...ஏழைகளின் கந்தலுக்கும் அவரது உடைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! சுதந்திரத்திற்குப் பிறகு வந்த ஆண்டுகளில், மக்கள் சந்தித்த தட்டுப்பாடுகளையும் சவால்களையும் அரசியல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தியது ‘சர்வாதிகாரி’. தணிக்கையாளர்கள் ஆட்சேபித்ததால், இந்தக் கதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்ததாக சித்தரிக்கப்பட்ட கற்பனை கதை என்ற மாய்மால அறிவிப்புடன் வெளிவந்தது!

ஜூபிடர் நிறுவனத்திற்காக கேமரா மேதை கே.ராம்நாத் இயக்கிய ‘வெற்றிப்படம்’, ‘மர்மயோகி’ (1951). ஆவி வரும் காட்சிகள் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம். எலும்புக்கூட்டிற்கு லேசான மஸ்லின் துணி போர்த்தி, அதை தக்கபடி லைட் செய்து, பயங்கர திகிலை ஏற்படுத்தினார் ராம்நாத். இந்தத் திகில் காட்சிக்காக, ‘ஏ’ சான்றிதழ் பெற்ற ‘மர்மயோகி’, தமிழ் சினிமாவின் முதல் ‘ஏ’ படம் என்ற சிறப்பை பெற்றது!

‘மர்மயோகி’யில், மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வீரன் கரிகாலனாக வந்த எம்.ஜி.ஆர்., கனல் கக்கும் வசனங்களை கண்ணில் கோபாக்கினியுடன் உதிர்த்தார். கொலையுண்ட மன்னராகவும், மர்மயோகியாகவும் பழம்பெரும் நடிகர் செருகளத்தூர் சாமா சிறப்பாக நடித்தார்.

‘அந்தமான் கைதி’, ‘என் தங்கை’, ‘நாம்’, முதலிய படங்களில் நிராசைகளையும் தோல்விகளையும் சுமந்த பாத்திரங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். லியோடால்ஸ்டாயின் பிரபல ‘அன்னா காரெனினா’ நாவல், ‘பணக்காரி’ (1953) என்ற பெயரில் தமிழில் எடுக்கப்பட்டது. இதில் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்த எம்.ஜி.ஆருக்கு ஏறக்குறைய வில்லன் வேடம். கடைசியில் இறந்துபோகிற கதை அமைப்பு.

 கே.வி. மகாதேவன்,  இசையமைத்த முதல் எம்.ஜி.ஆர். படமான ‘மந்திரிகுமாரி’யில், எம்.ஜி.ஆரின் வாள்வீச்சுக்கும் வீரத்திற்கும் குறைவில்லை. ஆனால் வெற்றிக்கும் அது இடம் கொடுக்கவில்லை. கிறுஸ்தவ கதையான ஞானசவுந்தரியின் கதைக்கருவை மாற்றங்களுடன் கதை பண்ணிய ‘ஜெனோவா’வில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆர். படம் என்றால், அவருடைய கதாபாத்திரம், வசனங்கள், காட்சிகள் இப்படித்தான் அமையவேண்டும் என்று பின்னாளில் ஒரு வரையறை வந்தது. ஆரம்ப காலத்தில் அவர் கதாநாயகனாக நடித்த சில படங்களில் அவருடைய வருங்கால பிம்பத்திற்கான கூறுகள் இருந்தாலும், அவற்றுக்குப் புறம்பான பல விஷயங்களும் இருக்கின்றன. தன்னுடைய பாத்திரங்களின் தன்மைக்கான  முத்திரையை, எம்.ஜி.ஆர். 1954ல் ஒருவாறு நிர்ணயம் செய்துவிடுவார்.  

(தொட­ரும்)