ஒரு பேனாவின் பயணம் – 122 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 28 ஆகஸ்ட் 2017

அது என்ன திருப்பம் நேர்ந்தது?

ஏற்கனவே என்னால் ஒரு வருடம் படிக்காமல் போனது. காரணம், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி. ஆனால், இப்போது திருவான்மியூரில் இந்த கெமிக்கல் கம்பெனியில் சேர்ந்ததும் என் சம்பளம் ரூபாய் 225 ஆக இருந்தது.

அதனால் கல்லூரியில் சேர முடிவு செய்தேன். வேலை இல்லையென்றால் படிக்க முடியாது. அப்படியானால் எப்படி படிப்பது? மாலை நேரக் கல்லூரியில் சேருவது என்று முடிவு செய்தேன்.

அப்போது  திருவான்மியூரை தாண்டி  பழைய மகாபலிபுரம் சாலையில் டி.பி. ஜெயின் காலேஜ் வந்திருந்தது. அந்தக் கல்லூரி துவங்கியபோது அது கோடம்பாக்கம் பாலத்திற்கு வலது பக்கத்தில் இருந்தது.

அந்தக் கல்லூரியில் சேர முடிவெடுத்தேன். அந்தக் கல்லூரியில் சேர இடமும் கிடைத்தது. அப்போது 19 பி கட் சர்வீஸ் என்கிற பேருந்து தி.நகரிலிருந்து மாலை கிளம்பும். அது துரைப்பாக்கம் வரை போகும். அப்போதெல்லாம் அந்த பழைய மகாபலிபுரம் சாலை இப்போது போல கிடையாது. கண்ணுக்கெட்டிய தொலைவில் வயல்வெளிகள். போகிற வழியில் ஒரு 1,000-, 2,000 கி.மீ., தொலைவில் ஏதாவது தொழிற்சாலை தென்படும்.  அங்கே அந்த பழைய மகாபலிபுரம் சாலையில் எஸ்.ஆர். பி. டூல்ஸ் நிறுவனமும், சந்தா பெயிண்ட்ஸ் நிறுவனமும்தான் பிரபலம்.

எங்கள் கல்லூரிக்கு போக திருவாமியூரில் என் அலுவலகம் இருந்த சாலையின் முனையில்  ஜெயந்தி தியேட்டருக்கு எதிரே எங்கள் பஸ் நிற்கும். பின்னர் பஸ் நிற்கும் இடத்திற்கு பக்கத்திலேயே தியாகராயா என்ற ஒரு தியேட்டர் பின்னர் வந்தது.

 நான் வேலை பார்த்த நிறுவனத்தில் மேலாளர், என் தாய் மாமா ஸ்ரீனிவாசன். இவர் கணக்கில் புலி. தாய்மாமன் என்பதால் எந்தச் சலுகையும் கிடைக்காது. அவருக்கு வேலைதான் முக்கியம். மாலையில் கல்லூரிக்கு கிளம்புகிற நேரத்தில் கூட ஏதாவது அவசர வேலை வந்தால், அந்தக் கடிதத்தை டைப் அடித்து கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். அதனால் சில நாட்கள் கல்லூரிக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டது.

அப்போது நாங்கள் மேற்கு மாம்பலம் வடிவேல்புரம் என்ற தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். இப்போது கல்லூரிக்கு போக ஆரம்பித்த போது, புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.

முதலில் எனக்கு அறிமுகமானவர், ஜெய்குமார். இவர் என் வருங்கால மனைவியின் நெருங்கிய உறவினர். ஆனால் அப்போது அவர் எனக்கு உறவினர் ஆகப்போகிறார் என்பது எனக்குத் தெரியாது.

அடுத்து அறிமுகமானவர், வெங்கட்.  ( இவர் இப்போது பல சீரியல்களில் தாடி வைத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார் இவர் மனைவி சுபா வெங்கட் ராதிகாவின் ராடன் டிவியில் நிர்வாக மேலாளர்).

அடுத்து அறிமுகமானவர், சவுந்தர். இவர் சைதாப்பேட்டையில் பஸ் ஏறுவார். அவருடைய வீடு சைதாப்பேட்டை. அவருடைய வேலை பார்த்த மருந்து விநியோக கம்பெனியும் சைதையிலேயே இருந்தது.

இங்கே எங்களுக்குள் ஏற்பட்ட முதல் ஒற்றுமை, நெருக்கம் என்பது நாங்கள் அனைவருமே சினிமா ரசிகர்கள். இப்படித்தான் நாங்கள் நெருங்க ஆரம்பித்தோம்.

மாலை நேர கல்லூரி. எங்களுக்கு படிப்பில் பெரிய ஆர்வமிருந்ததாக சொல்ல முடியாது. காரணம், பின்னாளில்  ஜெய்குமார் என்பவரைத் தவிர மற்றவர்கள் யாரும் படித்ததற்கு ஏற்ற  வேலைக்குப் போகவில்லை.

அப்போது எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர்கள். சங்கரன், பெர்னார்ட் சந்திரா, அருணாசலம். கல்லூரி முதல்வர் பெயர், நாகராஜன். மற்ற ஆசிரியர்களின் பெயர்கள் அதிகமாக நினைவில்லை. காரணம், கல்லூரிக்கு போனதை விட அதை சாக்காக வைத்து மாலை நேரக் காட்சிகளுக்குத்தான் அதிகம் போனோம்.

நான் சினிமாவுக்கு போனால் கூட அரசியல் நிகழ்வுகளை அதாவது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த  போது நடந்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதிலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 ஒரு நாள் காலை அப்பா  யாரையோ சந்திக்க வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.  `ஒரு முக்கியமான நண்பரை சந்திக்கப் போறேன். நீயும் வர்றியா?’ என்று அப்பா கேட்டார். உடனே சரி என்று சொல்லி அவரோடு கிளம்பினேன். சாந்தோமிலிருந்த ரோசரி சர்ச் சாலையிலிருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே ஒரு மனிதர் வெளுப்பாக  வழுக்கைத் தலையுடம் கண்ணாடி போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருக்கு ஒரு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம். அவருடைய பேச்சில் மலையாள நெடி அடித்தது.  அவர்தான் பிரபல மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் வி.பி. சிந்தன்.  1971களில் அப்போது இங்கே கருணாநிதி தலைமையிலான  திமுக ஆட்சி.

அப்போது சிம்சன் நிறுவனத்தில் தொழிலாளர் போராட்டம். கம்யூனிஸ்ட் யூனியன் பிரபலமாக இருந்தது. அதை உடைக்க நினைத்தது திமுக. அப்போது அங்கே காட்டூர் கோபால்தான் திமுகவின் தொழிற்சங்க தலைவர். அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர் பிரதாப் சந்திரன்.  அப்போது நடந்த ஒரு மோதலில் பிரதாப் சந்திரன் கொல்லப்பட்டார்.

பிறகு பஸ் ஏறப்போன வி.பி. சிந்தனை இருபது இடங்களில் கத்தியால் குத்தினார்கள். ஆனால், அவர் எப்படியோ உயிர் பிழைத்தார். அவரைச் சந்திக்கத்தான் இப்போது வந்திருந்தோம். அதுவோ 1978ம் ஆண்டு. அப்போது சிந்தன் பல அரசியல் நிகழ்வுகளை சொல்லிக் கொண்டு வந்தார். அப்போதுதான் அவர் சொன்னார். மோகன் குமாரமங்கலமும், கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினர் பாலதண்டாயுதமும் விமான விபத்தில் இறந்தது இந்திய அரசியலுக்கே பெரும் இழப்பு என்றார்.

 அவரோடு பேசி விட்டு வெளியே வந்தபோதுதான்  எனக்கு மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதபாணி இருவர் குறித்தும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

அதற்காக ஒரு நாள் கன்னிமாரா நூலகம் போனேன். இப்போது மாதிரி இல்லை. அப்போது இருந்த நூலகர்களுக்கு பழையகால செய்திகளின் முக்கியத்துவம் தெரிந்திருந்தது.  அதனால் பழைய செய்தித்தாள்களை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர்.

அப்போதுதான் 1/06/73 தினத்தந்தி நாளிதழில் அவர்களின் விமான விபத்து பற்றி செய்தி வந்திருந்தது.

இந்திரா காந்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம்,  கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி. பாலதண்டாயுதம் விமான விபத்தில் மரணமடைந்தனர்.

31.05.1973ல்  இரவு 7.35 மணிக்கு சென்னையில் இருந்து டில்லிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 58 பயணிகள், 7 சிப்பந்திகள், ஆக 65 பேர் இருந்தார்கள்.

  இரவு 9.52 மணிக்கு அந்த விமானம் டில்லி சென்று இறங்கவேண்டும். அதற்கு  30 நிமிடங்களுக்கு முன்பாக விமான நிலையத்துடன் விமானத்துக்கு இருந்த  ரேடியோ தொடர்பு திடிரென்று அறுந்து போனது.  சிறிது நேரத்தில்  விமானம்  தெற்கு டெல்லியில்  `வசந்த விகார்’ என்னும் இடத்தில் விழுந்து நொறுங்கியது.  விமானம் தூள்தூளாக நொறுங்கியது.

விபத்துக்குள்ளான அந்த விமானத்தில்  மத்திய மந்திரி மோகன் குமாரமங்கலம், கோவையைச் சேர்ந்த வ. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  பார்லிமென்ட்  உறுப்பினரும் பயணம் செய்தனர்.

மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதம்  உட்பட 48 பேர்  உடல் கருகி உயிர் இழந்தார்கள்.

17 பேர் மட்டுமே காயத்துடன் தப்பினார்கள்.  உயிர் தப்பியவர்களில் அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த  பால கோவிந்த் வர்மா. தமிழ்நாட்டை சேர்ந்த இ. காங்கிரஸ் எம்.பி விஜயலட்சுமி ஆகியோர் முக்கியமானவர்கள்.

மற்ற உடல்கள் அடையாளம் தெரியாதபடி கருகி இருந்தது.

மோகன் குமாரமங்கலத்தின் பேனா  மற்றும் காது கேட்கும் கருவி ஆகியவற்றைக் கொண்டு  அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.  அதே போல் பஞ்சாப் முன்னாள் முதல்வர் குருநாம் சிங்கின் உடல்,  கையில் அணிந்திருந்த மோதிரத்தை வைத்து  முடிவு செய்யப்பட்டது.

மற்ற உடல்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே ஒரு தம்பதி கைகோர்த்தபடி இறந்து கிடந்தார்கள். அவர்களது கடிகாரம் 10.03 என்று நேரம் காட்டியது.

மோகன் குமாரமங்கலம்  குடும்பம் பல சிறப்புக்களை பெற்றது. முன்னாள் மத்திய மந்திரி சுப்புராயனின் மகன். இப்போதும் சென்னை நுங்கம்பாக்கத்தில் தாஜ் ஹோட்டலுக்கு பக்கத்தில் அவருடைய பெயரில் தெருவே இருக்கிறது.

குமாரமங்கலம் ஒரு பிரபல வழக்கறிஞர்.  ராணுவத் தளபதியாக இருந்த பி.பி. குமாரமங்கலம் ராணுவத்தில் பல சிறப்புக்களை பெற்றவர். முதலில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த குமாரமங்கலம் பின்னர் காங்கிரசுக்கு வந்தவர். இவரது சகோதரி பார்வதி கிருஷ்ணன். கம்யூனிஸ்ட் கட்சியில் பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தவர். இவரது மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் பின்னர் மத்திய அமைச்சராக ஆனார்.  குமாரமங்கலத்தின் மகள் லலிதா குமாரமங்கலம் இப்போது பா.ஜ.க வில் இருக்கிறார்.

அதே போல் 28.06. 1974 அன்று தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை புறக்கணித்து,  இலங்கைக்கு கச்சத்தீவை இந்திய அரசு தானம் கொடுத்தது.

தமிழகத்திற்கும்  இலங்கைக்கும் இடையில் இருப்பது கச்சத்தீவு.  ராமேஸ்வரத்தில் இருந்து 12 கி.மீ. தூரத்திலும்,  இலங்கையிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

முன்பு இந்த தீவு ராமநாதபுரம் ராஜாவின்  ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம்  என்று இலங்கை  உரிமை கொண்டாடியது.

இலங்கை பிரதமர் பண்டாரநாயகா இந்தியாவுக்கு வந்திருந்தார்.  பிரதமர் இந்திராவுடன் இது பற்றி பேச்சு நடத்தினார்.  கச்சத்தீவு பிரச்யினையில்  உடன்பாடு காண்பது என்று அப்போது முடிவானது.

பிறகு கச்சத்தீவை கொடுக்க இந்திரா அரசு முடிவெடுத்து கொடுத்தது.

கச்சத்தீவு  280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது.

அங்கு ஒரு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது.  ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது இந்தியா- இலங்கையில் இருந்து கிறிஸ்தவர்கள் படகில் செல்வார்கள்.

இரு தேசங்களைச் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவிற்கு சென்று மீன் பிடிப்பது உண்டு.  அங்கு சற்று ஓய்வெடுத்து மீன் வலைகளை காயவைப்பதும் உண்டு.

கச்சத்தீவில் குடிதண்ணீர் இல்லை என்பதால் மக்கள் அங்கே நிரந்தரமாக தங்குவதில்லை.

கச்சத்தீவு தானம் கொடுக்கப்பட்ட போது ராமநாதபுரம் ராஜா ராம சேதுபதி  நிருபர்களிடம் கூறும்போது, `மத்திய சர்க்காரின் இந்த முடிவு துக்ககரமானது. கண்ணீர் விட்டு அழுவதைத் தவிர வேறு வழி இல்லை’ என்றார்.

முன்னதாக கச்சத்தீவு பற்றி உங்கள் கருத்து என்ன  என்று அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இந்திரா காந்தி கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்த கருணாநிதி –

‘கச்சத்தீவு பிரச்னை குறித்து வெளிநாட்டு இலாகா செயலாளர்  கேவல்சிங் என்னுடன்,  பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து   எனது அதிகாரிகள் கச்சத்தீவைப் பற்றிய ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினார்கள்.

கச்சத்தீவு இலங்கை அரசுக்கு சொந்தமான தீவாக எப்போதும் இருந்ததில்லை.  இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கண்டி அரசருக்கும்  1766ம் வருடம் ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரைப் பகுதியை இங்கிலாந்துக்கு மாற்றம் செய்ய ஏற்பட்ட ஒப்பந்தம்,  17.3.1762ல் ஜான் சுருடர்  என்பவர் எழுதிய நினைவுக்குறிப்புக்கள்  டச்சு, போர்ச்சுகீசிய நாட்டு வரைபடங்கள் ஆகிய எல்லாமே கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்பதை காட்டவில்லை.

1954ம் ஆண்டு இலங்கையின் வரைபடத்தில் கூட கச்சத்தீவு அவர்களுக்கு சொந்தம் என்று காட்டப்படவில்லை.

நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டுக் கடற்கரை பகுதியில் முத்து குளித்தல், சங்கு எடுத்தல் ஆகிய உரிமை ராமநாதபுரம் ராஜா உட்பட, தென் இந்திய மன்னர்களுக்கே  இருந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

கச்சத்தீவுக்கு போகும் பாதையிலும்,  கச்சத்தீவின் மேற்குப் பகுதியிலும்  சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது.  இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அங்கு சங்கு எடுத்ததற்காக, எந்த காலத்திலும் கப்பம் கட்டியதில்லை.

இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்து கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான்  என்பதை எந்த அகில  உலக கோர்ட்டிலும்  

காட்டி நீருபிக்க முடியும்’

என்று சென்னை சட்டக் கல்லூரியின் ஆராய்ச்சி பிரிவும் கருத்து தெரிவித்திருக்கிறது.

அதனால் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதல்ல’ என்று கருணாநிதி அன்று கடிதம் எழுதினார்.

கச்சத்தீவை இலங்கைக்கு

இந்தியா தானம் செய்தது பற்றி விவாதிக்க சென்னையின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் கருணாநிதி.

இந்த கூட்டத்தில் பொன்னப்ப நாடார் (ப. காங்கிரஸ்) ஏ.ஆர்.மாரிமுத்து (இ. காங்கிரஸ்)  அரங்கநாயகம் (அதிமுக)  ம.பொ.சி. (தமிழரசு கட்சி)  இது தவிர இன்னும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பேசினார்கள். அவர்கள் காரசாரமாக தங்கள் விவாதத்தில் எடுத்து வைத்தார்கள். இது ஒரு புறமிருக்க –

இதே போல்  கன்னிமாரா  நூலகத்தில் நான் பழைய விஷயங்களை

புரட்டிக் கொண்டிருந்தபோதுதான்  1976ம் வருடம்,  மும்பையிலிருந்து புறப்பட்ட இன்னொரு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அதில் நடிகை ராணி சந்திரா, காங்கிரஸ் தலைவர் பொன்னப்ப நாடார் ஆகியோர் இறந்தார்கள்.    

(தொடரும்)