குழந்தைகளுக்கு தேவையான உணவுக்கல்வி

பதிவு செய்த நாள் : 22 ஆகஸ்ட் 2017

குழந்தைகளின் ஆரோக்கியமே அவர்களின் எதிர்கால நலனுக்கு அடிப்படையாக அமைகிறது. அந்த ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரமாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியம். அதிலும் ஒரு வயது முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிகவும் அவசியம்.

ஏனென்றால் குழந்தைகள் ஓடி ஆடி விளையாட ஆரம்பிக்கும் வயது இது. இந்த வயதில் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதால் ஊட்டச்சத்துகளின் தேவை அதிகமாகும்.ஐந்து வயதுக்குள் குழந்தைகளின் பற்கள் நன்கு வளர்ந்துவிடும். அதனால் குழந்தைகள் பெரும்பாலும் பெரியவர்கள் சாப்பிடுவதை போல் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இந்த வயதில் அவர்களின் பசி மட்டுமல்லாமல் விதவிதமான உணவு வகைகள் மீதான ஆர்வமும் அதிகமாகும்.
எனவே தாய்மார்கள் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வகை வகையான சுவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது அவசியம்.

ஒன்று முதல் ஐந்து வயது வரையான குழந்தைகளின் சராசரி எடை 12 முதல் 16 கிலோவாக இருக்க வேண்டும். அதற்கு குறைவாகவோ, மிக அதிகமாகவோ இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் குழந்தைகளின் உடல்நலன் பாதிக்கப்படும்.

நம் நாட்டில் வறுமை மற்றும் அறியாமை காரணமாக கோடிக்கணக்கான குழந்தைகள் சரியான உணவின்றி பாதிக்கப்படுகிறார்கள். ஏழைகள் மட்டுமின்றி படித்த நடுத்தர மற்றும் உயர்வகுப்பில் பிறந்த குழந்தைகளும் பெற்றோரின் அறியாமைக் காரணமாக ஊட்டசத்து குறைபாடால் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் பணக்கார வீடுகளைச் சேர்ந்த குழந்தைகள் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகள், அளவுக்கு அதிகமான நொறுக்குத் தீனி சாப்பிடுவதால் மிகவும் குண்டாகி விடுவதையும் காணலாம். இதற்கு பெற்றோர்களே முழுப்பொறுப்பு.

உலகளவில் நம் நாட்டில் தான் ஐந்து வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு அதிகம் உள்ளது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதை நிவர்த்தி செய்ய அரசாங்கம் பலவித திட்டங்களை கொண்டு வந்தாலும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. எனவே பெற்றோர்கள் குழந்தைகள் நலனை காக்க தேவையான வழிமுறைகளை தெரிந்து பின்பற்றுவது அவசியம்.

பெற்றோர்கள் சந்திக்கக்கூடிய சவால்கள்:

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டுத்தனம் அதிகம். முதன் முதலாக தங்கள் எண்ணங்களை மற்றவரிடம் வெளிப்படுத்த ஆரம்பிப்பார்கள். தங்களுக்கு பிடிக்காத விஷயங்களை ஏற்க மாட்டார்கள். அடம்பிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும். முக்கியமாக உணவு விஷயத்தில் இவை பிரதிபலிக்கும்.

பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்ற வேறுபாட்டை வகுத்துவிடுவார்கள். புதிய உணவை சாப்பிடுவதில் சிக்கல்கள் ஏற்படும். தங்களுக்கு தேவைப்படும் உணவின் அளவை தாங்களாகவே தீர்மானிப்பார்கள்.

மேற்கண்ட அம்சங்கள் காரணமாக குழந்தைகளுக்கு உணவு அளிப்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஒரு புதிய உணவை குழந்தைக்கு பழக்க குறைந்தப்பட்சம் 8 முதல் 10 தடவையாவது அதை கொடுத்து பார்க்க வேண்டும். எனவே பெற்றோர்களுக்கு அதிக பொறுமை தேவைப்படும்.

பெரும்பாலும் குழந்தைகளின் உணவுபழக்கம் பெற்றோர்களின் உணவு பழக்கத்தை சார்ந்தே இருக்கும். மேலும் தொலைக்காட்சி, நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவும் குழந்தைகளின் உணவு பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும்.

பெற்றோர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவை குழந்தைகளும் விரும்புவர். எனவே பெற்றோர்கள் சரியான உணவுகளை வீட்டில் பயன்படுத்த வேண்டும். உணவு வகைகளைச் சாப்பிடுவதற்கான சுகாதாரமான நடை முறைகள் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். உணவு அளவு விஷயத்திலும் பெற்றோர் ஆரோக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.  

உணவு வகைகள்:

மிருதுவான, நன்கு சமைக்கப்பட்ட சராசரி உணவுகளை வழங்கலாம். நன்கு கடித்து சாப்பிடும் பருவம் என்பதால் காய்கறி, பழங்களை துண்டுகளாக சாப்பிட கொடுக்கவும். இட்லி, தோசை, பொங்கல் போன்ற சிற்றுண்டி வகைகள், சாம்பார், தயிர், ரசம் சாதம், அதனுடன் காய்கறி கூட்டுகள், நன்கு வேகவைத்த முட்டை, மீன், சிக்கன், மட்டன் போன்றவற்றை வழங்கலாம்.

வாழைப்பழம், மாம்பழம், ஆப்பிள், பேரிக்காய், திராட்சை,போன்ற அனைத்து வகை பழங்களையும் கொடுக்கலாம். முதலில் கொட்டைகளை நீக்கி சாப்பிட கொடுக்க வேண்டும். அடுத்தடுத்த முறைகளில் குழந்தைகளே கொட்டைகளை ஒதுக்கிவிடக் கற்றுக் கொடுக்கலாம். பால், தயிர் போன்றவற்றை கட்டாயம் உணவோடு சேர்த்து வழங்கவேண்டும்.

உணவை கொடுப்பதற்கான குறிப்புகள்

குழந்தைகள் தானாக உணவை சாப்பிட பெற்றோர் பழக்க வேண்டும். தரை, உடைகள் மீது சிந்தினாலும் கொட்டினாலும் பெற்றோர் திட்டாமல் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிடும் முறையை பெற்றோர் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.எந்த ஒரு உணவையும் வற்புறுத்தி குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. உணவை வற்புறுத்தி கொடுத்தால் சாப்பாடு மேல் வெறுப்பு உண்டாகலாம்.

ஐந்து வயதுக்குள் குழந்தைகளுக்கு முறையான கல்வி துவங்கிவிடுகிறது. மொழிக்கல்வியோடு உணவுக கல்வியையும் கற்றுத்தர ஆரம்பிக்க வேண்டும்.உணவு தயாரிப்பு

சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க வேண்டும். உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்களை நன்கு கழுவி சுத்தம்செய்த பின்பே பயன்படுத்த வேண்டும்.

தட்டில் வைக்கும் உணவு குறைவான அளவில் இருக்க வேண்டும். காய்கறி, பழங்கள் ஆகியவை சின்னச் சின்ன துண்டாக்கி தரவேண்டும். நீங்கள் உணவின் அளவை கூட்டினாலும் குறைத்தாலும் குழந்தைகள் தங்கள் பசிக்கு ஏற்ற அளவுதான் உணவை சாப்பிடுவர். பெரும்பாலும் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது.

காய்கறிகள், பழங்கள், பயிறு, பருப்பு, தானியங்கள் என அனைத்து வகை உணவுகளையும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவேண்டும். இல்லையென்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

பொதுவாக இந்த வயதில் உணவின் தோற்றம், வாசனை, ருசி ஆகியவற்றின் அடிப்படையில்தான் குழந்தைகள் உணவை விரும்புவர். எனவே குழந்தைகளை கவரும் விதமாக உணவை சமைக்க பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும். இதில் பெற்றோர்கள் சோர்வடையாமல் முடிந்தவரை தங்கள் கற்பனைத் திறனை காட்டவேண்டும். உணவை  விளையாட்டுதனமாக அலங்கரித்து பறிமாறும்போது குழந்தைகள் உற்சாகமாக சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுடன் பெரியவர்களும் சேர்ந்து ஒன்றாக உட்கார்ந்துஉணவை சாப்பிட்டால் அது குழந்தைகளை சாப்பிட ஊக்குவிக்கும்.

உணவின் இடைவெளியில் கொடுக்கும் சிற்றுண்டிகளை அதிக அளவில் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால் உணவு நேரத்தில் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்.

குழந்தைகள் பெரும்பாலும் அதிக காரம், கசப்பு மற்றும் புளிப்புச் சுவையை அதிகம் விரும்ப மாட்டார்கள். இனிப்பான, சிறிது உப்புச் சுவைகொண்ட உணவுகளை அதிகம் விரும்புவர். எனினும் இது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும்.

குழந்தைகள் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்கப் பெற்றோர் பழக்க வேண்டும். அதிக வெப்பம் உள்ள நம் நாட்டில் போதிய தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பலவகையான பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் பழங்களின் கொட்டைகளை நீக்கி நன்கு பிழிந்து, வடிகட்டிய ஜூஸ்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புகள் கிடைக்கும்.


காய்கறி, பழங்கள் மற்றும் தானியங்களின் மேல் உள்ள தோல்கள் மற்றும் உமியை நன்கு நீக்கிய பிறகே தர வேண்டும், ஏனென்றால் இவை குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகாது. அவைகளினால் வயிற்றுக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

துரித உணவு வேண்டாம் 

நம் நாட்டில் இன்று கொழுப்பு நிறைந்த பாக்கெட் உணவுகள் மற்றும் ஜங் புட் எனப்படும் துரித உணவுகள் மீது ஏற்பட்டுள்ள மோகம் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. கடைகளில் பாக்கெட்டில் விற்கும், சிப்ஸ், ஜூஸ், மிட்டாய்கள் மற்றும் பீட்சா, பர்கர் போன்றவற்றை இன்று குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர்.

ஆனால் பெற்றோர்கள் இத்தகைய உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. கொழுப்பு அதிகம் உள்ள இத்தகைய பண்டங்களை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும், ஆரோக்கியம் கெடும்.

நம் நாட்டில் அதிகமான உடல் எடையால் குழந்தைகளுக்கும் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பலரும் அறிவதில்லை. இந்தியாவில் சுமார் 2 கோடி குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த பட்டியலில் சீனாவிற்கு அடுத்ததாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.இது போல் உடல் எடை அதிகமுள்ள குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு, புற்றுநோய், இதய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பல பெற்றோர்கள், குழந்தை கொழு கொழு என்றிருந்தால் தான் அரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. குழந்தைகள் வயதுக்கேற்ற எடையுடன் துறுதுறுவென இருப்பதே நல்ல ஆரோக்கியத்திற்கான அடையாளம்.

எனவே கொழுப்பு நிறைந்த பாக்கெட் உணவுகள் மற்றும் துரித உணவுகளை குழந்தைகள் சாப்பிட பெற்றோர் ஊக்குவிக்க கூடாது. குழந்தைகள் அடம்பிடித்தாலும் அவை உடல் ஆரோக்கியதிற்கு நல்லதல்ல என்று பெற்றோர்கள் பொறுமையாகவும் சிறிது கண்டிப்புடனும் கூறி அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும்.

அதே சமயம் உடல் எடை அதிகரிக்கும் என்று மிகவும் குறைவான உணவையும் அளிக்ககூடாது. பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை பயப்படாமல் கொடுக்கவேண்டும். முன்பு கூறியது போல் இந்த வயதில் குழந்தைகள் தங்கள் பசிக்கு ஏற்ற அளவில் தாங்களாகவே உணவின் அளவை நிர்ணயிப்பார்கள்.

மேலும் சாப்பிடும் போது டிவி, மொபைல் போன் போன்றவற்றை வேடிக்கை காட்ட பயன்படுத்த வேண்டாம்.

இந்த பருவத்தில் புதிய வகை உணவுகளை குழந்தைகள் சாப்பிடுவதால் சில சமயம் வயிற்றுக் கோளாறு,ஒவ்வாமை, போன்றவை ஏற்படுவது சகஜம். தாய்மார்கள் பயப்படாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் வேண்டிய மாற்றங்கள் செய்துவிட்டால் பிரச்சனை தீரும்.


கட்டுரையாளர்: சி.நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
R k mala 05-09-2017 03:41 AM
வணக்கம் 57,வயதான போதும் இளம் தாய் போல் ஆர்வத்துடன் படித்தேன் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை

Reply Cancel


Your comment will be posted after the moderation