ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 23–8–17

பதிவு செய்த நாள் : 23 ஆகஸ்ட் 2017

இப்படியொரு சினிமா இசையை கேட்டதில்லை!

(சென்ற வார தொடர்ச்சி...)

முதன்­மு­றை­யாக ஸ்டீரியோ முறை­யில் ரிக்­கார்­டிங் செய்­யப்­பட்ட பாடல் ''என்­னு­யிர் நீதானே…'' என்ற பாடல். தமிழ் திரை­யு­ல­கில் உலக தரத்­திற்கு ஒப்­பான இசை­யைக் கேட்­பது இதுவே முதல் முறை.

எல்லா ரிக்­கார்­டிங் ஸ்டூடி­யோ­வி­லும் இது பற்­றியே பேச்­சாக இருந்­தது. அப்­போது ஒரு மலை­யாள படத்­திற்கு இசை­ய­மைக்க சென்னை வந்­தி­ருந்த பிர­பல இந்தி இசை­ய­மைப்­பா­ளர் சலீல் சவுத்ரி காதிற்­கும் இந்த செய்தி போனது. யார் இந்த சலீல் சவுத்ரி? திலீப்­கு­மார் – வைஜ­யந்­தி­மாலா நடித்த 'மது­மதி' உட்­பட ஏரா­ள­மான இந்தி திரைப்­ப­டங்­க­ளுக்கு இசை­ய­மைத்­த­வர். தென்­னாட்­டில் இருந்து முதன்­மு­த­லாக ஜனா­தி­ப­தி­யின் தங்­கப்­ப­தக்­கம் பரிசு பெற்ற “செம்­மீன்” என்ற மலை­யாள படத்­திற்கு இசை­ய­மைத்­த­வர். சமீ­பத்­தில் துபா­யில் நடை­பெற்ற இளை­ய­ரா­ஜா­வின் “ராஜா ராஜா­தான்” என்ற நிகழ்ச்­சி­யில் இளை­ய­ராஜா ஒரு சில தலை­சி­றந்த இசை­ய­மைப்­பா­ளர்­க­ளின் பெயர்­களை சொன்­னார். அந்த வரி­சை­யில் இளை­ய­ராஜா சொன்ன ஒரு இசை­ய­மைப்­பா­ளர், சலீல் சவுத்ரி.

இளை­ய­ரா­ஜா­வின் இந்த படத்­தின் பாடல் பதி­வு­களை நேரில் பார்க்க ஆசைப்­பட்டு அவர் தன் மகள் மற்­றும் உத­வி­யா­ளர் நேபு ஆகி­யோ­ரு­டன் பாடல் பதிவு நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்த பரணி ஸ்டூடி­யோ­விற்கு வந்­தார். அன்­றைக்கு “டார்­லிங் டார்­லிங் டார்­லிங்… ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ...” பாடல் பதிவு நடை­பெற்று கொண்­டி­ருக்­கி­றது. பாடலை இளை­ய­ராஜா சொல்­லித்­தர பி. சுசீலா ஒத்­திகை பார்த்த பின் பாடல் பதிவு நடை­பெற்று முடி­யும் நேரம் சலீல் சவுத்ரி அங்கு வந்­தார். எனக்­காக இந்த பாடலை போட்டு காட்ட முடி­யுமா என்று கேட்க, அவ­ருக்­காக போட்­டுக் காட்­டி­னார்­கள். பாடலை கேட்ட அவ­ரது முகம் பிர­கா­சத்­தில் பர­வ­ச­ம­டைந்­தது. “இது போன்ற ஒரு சினிமா இசையை நான் கேட்­ட­தில்லை” என்று அவர் உணர்ச்­சி­வ­சப்­பட்டு சொன்­னது இளை­ய­ரா­ஜா­விற்கு மேலும் தெம்­பூட்­டி­யது போலி­ருந்­தது.

அன்று ஒரே நாளில் அனைத்­துப் பாடல்­க­ளை­யும் பதிவு செய்­த­னர். எல்லா பாடல் பதி­வு­க­ளும் முடி­வ­தற்­குள் பதிவு செய்த பாடல்­க­ளைக் கேட்­கும் உற்­சா­கத்­தில் சவுண்டு இன்­ஜி­னி­யர் வால்­யூமை ஏற்ற, ஒரு ஸ்பீக்­கர் காலி­யா­னது. இருந்­தா­லும் ஜேசு­தாஸ் எதை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் உட­ன­டி­யாக வேறு ஒன்றை புதி­தாக வர­வ­ழைத்­தார்.

இந்த படத்­தின் அனைத்­துப் பாடல்­க­ளும் மிக சிறப்­பாக வந்­தது. இந்­தப் பாடல்­களை பற்றி சொல்­லவே தேவை­யில்லை. பாடல்­கள் எந்த அள­விற்கு வெற்­றி­க­ர­மாக அமைந்­ததோ அதே அளவு படத்­தின் பின்­னணி இசை­யும் இந்த படத்­திற்கு ஒரு பல­மாக இருந்­தது. படத்­தில் ஒரு ரீலில் தொடர்ந்து 10 நிமி­டங்­கள் வச­னம் எது­வும் வராது. சைலன்ட் மூவி போல இருக்­கும். அதா­வது நாய­க­னும் நாய­கி­யும் சிங்­கப்­பூ­ரில் உள்ள சுற்­றுலா இடங்­க­ளை­யெல்­லாம் சுற்றி பார்ப்­ப­து­போன்ற காட்­சி­கள், டால்­பின் ஷோ, கிளி­கள் விளை­யாட்டு என பற்­பல காட்­சி­கள் இந்த ரீலில் வரும். மிகச் சிறப்­பாக பின்­னணி இசையை செய்­தி­ருப்­பார் இளை­ய­ராஜா. சரி­யான தாள­க­தி­யில் மியூ­சிக் கன்­டக்ட் செய்­யா­விட்­டால் கிளி விளை­யாட்­டிற்கு வர­வேண்­டிய இசை வேறு இடத்­திற்­குப் போய்­வி­டும். இப்­போது போல அந்­தக் கால­கட்­டத்­தில் எந்த வச­தி­யும் இல்­லா­மல் ஒவ்­வொரு ஷாட்­டிற்­கும், ஒவ்­வொரு மியூ­சிக் வர­வைப்­ப­தென்­பது மிகக் கடி­ன­மான ஒன்று.

சொன்­னால் நம்­ப­மு­டி­யாத ஒரு விஷ­யம். இந்த பின்­னணி இசை­ய­மைக்க இளை­ய­ராஜா எடுத்­துக் கொண்ட நேரம் வெறும் அரை மணி நேரம் மட்­டுமே.

இன்­றைக்கு எவ்­வ­ளவோ வச­தி­கள் இருந்­தா­லும் இது­போல அரை மணி நேரத்­தில் இசை­ய­மைப்­பது என்­பது சாதா­ர­ண­மான ஒன்று அல்ல. அது­வும் அந்த தரத்­தில் இசை­ய­மைக்க குறைந்­தது மூன்று நாட்­க­ளா­வது ஆகும் என்று ஒரு பேட்­டி­யில் இளை­ய­ரா­ஜா­வின் இசைக்­கு­ழு­வில் இருந்த சுதா­கர் சொன்­ன­தைக் கேட்­கும்­போது பிர­மிப்­பாக இருந்­தது.

மறைந்த முன்­னணி இளம் பாட­லா­சி­ரி­யர் நா. முத்­துக்­கு­மார் ஒரு பேட்­டி­யில் இந்த படம் பற்றி குறிப்­பி­டும் போது '''ப்ரியா' படப்­பா­டல்­க­ளில் ஏதா­வது புது வாத்­தி­யக் கரு­வி­களோ அல்­லது புது இசையோ இருக்­கி­றதா என இன்­னும் கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்'' என்­றார். மற்ற இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்கு பாட்­டெ­ழு­து­வ­தற்­கும் இளை­ய­ரா­ஜா­வின் இசை­யில் பாட்­டெ­ழு­து­வ­தற்­கும் என்ன வித்­தி­யா­சத்தை உணர்­கி­றீர்­கள் என்ற கேள்­விக்கு நா. முத்­துக்­கு­மார் சொன்­னது, “வீட்­டில் குளி­ய­ல­றை­யில் குளிப்­ப­தற்­கும் அரு­வி­யில் குளிப்­ப­தற்­கும் உள்ள வித்­தி­யா­சம். வார்த்­தை­க­ளால் சொல்­ல­மு­டி­யாது.”

'ப்ரியா' படம் வெளி­வந்த இந்த கால­கட்­டம்­தான் தமிழ் சினிமா உல­கம் முழு­மை­யாக இளை­ய­ரா­ஜா­வின் கைக­ளுக்கு வரத்­தொ­டங்­கிய கால­கட்­டம்.

– தொடரும்