கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 90

பதிவு செய்த நாள் : 21 ஆகஸ்ட் 2017
அக்கால சினிமாவில் தேசிய உணர்ச்சி, இக்காலம் அந்த உணர்ச்சியில் தளர்ச்சி!

இந்த ஆகஸ்ட் 15, இந்தியாவின் எழுபதாவது சுதந்திர தினம். ஆங்கிலேயனின் பிடியிலிருந்து விடுதலை பெற பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போராடினார்கள். ஜாலியன்வாலாபாக் போன்ற படுகொலைகளில் பலர் உயிர்த்துறந்தார்கள். போராடிப்பெற்ற சுதந்திரம் நம்முடைய சுதந்திரம்.

ஆகஸ்ட் 1947க்கு முன் அடிமை இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்களுக்குத்தான் அப்போது நிலவிய சூழ்நிலை தெரியும் என்பார் ஜெயகாந்தன். ஆனால் அப்போதும் சுதந்திரத்தை வேண்டாம் என்றும், வெள்ளைக்காரன் ஆட்சியே சுபிட்சம் என்றும் கொக்கரித்தவர்களும் இருந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்பட்டு, அவனிடமிருந்து துட்டை வாங்கித்தின்ற சிலருக்கு சுதந்திரம் தித்திக்குமா என்ன? இன்றும் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்று, நாட்டில் பலவித போராட்டங்களில் ஈடுபடுபவர்களும் உண்டு. இந்தியா என்ற தேசத்தின் மீதே நம்பிக்கையில்லாமல் அதை உடைக்க நினைப்பவர்கள் அவர்கள்.

இது போன்றவர்களின் சூழ்ச்சிகளை தகர்க்க எல்லா மக்களையும் ஊழலின்றி அரசின்  திட்டங்கள் சென்றடைய எப்படி முக்கியமோ, அதுபோல் நம்முடைய கடந்தகாலம் பற்றிய பிரக்ஞையும் முக்கியம். இருபதாம் நூற்றாண்டில் தேசிய போராட்டங்கள் தொடங்கிய காலம்தொட்டு, தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு தந்தவாறே இருந்திருக்கிறார்கள். பத்திரிகைத்துறை, மேடைநாடகம், கிராமபோன், பேசும் படம் என்று  பல ஊடகங்களின் வாயிலாக இந்தியாவின் சுதந்திர தாகத்தை தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 'சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்று முழக்கம் செய்து, 'வந்தே மாதரம்’ பாடியிருக்கிறார்கள்!

 பத்திரிகையாளராகத்தான் பாரதி இருந்தார். பத்தி பத்தியாக எழுதி சுதந்திர உணர்ச்சிப் பற்றிக்கொள்ள வகைசெய்தார். எவ்வளவு அச்சுறுத்தினாலும் சரி, 'சுதந்திர தேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேனே' என்று அவர் இருந்ததால், வெள்ளையனின் சிறை வாசத்திலிருந்து தப்ப பிரெஞ்சு இந்தியாவாக இருந்த  புதுவையில் தஞ்சம் புக நேர்ந்தது. அங்கே அவர் பத்து வருடங்கள் அகதியாக வருமானம் இன்றி இருந்தபோது, அவரிடமிருந்து கவிமழை கொட்டியது. அது தேசத்தையும் தட்டி எழுப்பியது, தமிழ் மொழிக்குப் புத்துயிரும் கொடுத்தது. தேசத்திற்காக தன்னையே ஆகுதியாகத் தந்து பாரதி தவம் செய்ததால், பாரதியைத் தமிழ்த்தாய் தவமிருந்து பெற்ற பிள்ளை என்றார்கள். ‘சிந்தை அணுவிலும் ரத்தத்திலும் இந்த தேசத்தில் பாசம் வைத்தான், அட தீயொரு பக்கமும் தேனொரு பக்கமும் தீட்டிக் கொடுத்துவிட்டான்,’ என்று கண்ணதாசன் வியந்து போற்றிய பாரதியின் நாட்டில், இன்று நாத்தழும்பேறி நாட்டை இகழ்பவர்களும் இருக்கிறார்கள்!

பாரதி வாழ்ந்த காலகட்டத்திலேயே கிராமபோன் ரிக்கார்டுகள் வெளிவரத்தொடங்கிவிட்டன. பாரதியின் தேசிய கவிதைகளும் பாடல்களும் நூல்வடிவில் வந்திருந்தாலும் இந்த புதிய ஊடகத்தில் பாரதிக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிராமபோன் இசைப் பாடல்களை எழுதுவதில் மன்னன் என்ற பெயர் பெற்ற மதுரபாஸ்கரதாஸ் என்ற வெள்ளைச்சாமிக்கு வந்தது. அவர் எழுதிய ஏராளமான தேசிய பாடல்கள் கிராமபோன் ரிக்கார்டுகளில் வெளிவந்தன.  'காந்தியோ பரம ஏழை சன்யாசி (பாடியவர் கே.பி.சுந்தராம்பாள்),  'ராஜ விஸ்வாஸ லாலா லஜபதி' (கே.எஸ்.தேவுடு அய்யர்), 'இந்து தேச வங்க தேசபந்துவை இழந்தனம்' (தேவுடு அய்யர்), 'ராட்டினமே காந்தி கைபாணம்'(அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்), 'தாழ்த்தப்பட்ட சோதரரை தாங்குவார் உண்டோ'(எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்) என்று தேசிய இயக்கத்தின் செய்திகளும் சம்பவங்களும் பாஸ்கரதாஸின் பாடல்களில் முழங்கின. இசை உலகின் பெரும் மேதைகளும் நல்ல குரல்வளம்கொண்ட சிறந்த பாடகர்களும் மதுரபாஸ்கரதாஸின் தேசிய பாடல்களையும், பக்தி மற்றும்  நாடக மேடைப்பாடல்களையும் அமோகமாக பாடியதால், மக்கள் மத்தியில் பாஸ்கரதாஸ் பெரும் புகழ்பெற்றார். தேசிய உணர்ச்சித் திலகமாக அவர் திகழ்ந்தார்.

முதல் தமிழ் 'பேசும் பட'மாகக் கொள்ளப்படும் 'காளிதாஸ்' படத்தில், 'இந்தியர்கள் நம்மவர்கள், ஏனோ வீண் சண்டை' என்று இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு பாடலை எழுதினார் பாஸ்கரதாஸ். அரியக்குடி ஏற்கனவே ரிக்கார்டில் பாடிய,  'ராட்டினமே காந்தி கைபாணம்' என்ற பாடலும் படத்தில் ஒலித்தது. இந்த வகையில் முதல் பேசும் படமே தேசிய அறைகூவலுடன் வெளிவந்தது.

முதல் தமிழ் ஹிட் படமான 'வள்ளித் திருமண'த்தில், வள்ளியாக வந்த டி.பி.ராஜலட்சுமி தினைபுனத்தில் கொக்குகளை விரட்டியபோது பாடினார் --- 'ஆலோலம் ஆலோலம் ஆலோலம், வெட்கம் கெட்ட வெள்ளைக் கொக்குகளா, விரட்டி அடித்தாலும் வாரீகளா'. கொக்குகளை விரட்டும் போக்கில், படம்பார்ப்பவர்களுக்குப் புரியும் விதத்தில் ஆங்கிலேயனை ஏசிக்கொண்டிருந்தார்!மேடைநாடகங்கள், சுதந்திரப்போராட்டத்தைத் தூக்கிப் பிடித்ததைப்போல், ஆரம்பகால தமிழ் சினிமாவும் தேசிய உணர்ச்சியைத் தூண்டிக்கொண்டே வந்தது. எம்.எஸ். சுப்புலட்சுமியை அறிமுகப்படுத்திய 'சேவாசதனம்' படத்தில் (1938), பல பெண்கள் சர்காவில்  நூல் நூற்கும் காட்சிகள் இடம்பெற்றன.

இரட்டை ஆட்சி முறையின்கீழ் சென்னை மாகாணத்தில் ராஜாஜியின் தலைமையில் அரசு அமைந்தபோது, தணிக்கை கெடுபிடிகள் தளர்ந்தன. தமிழ்ப் படங்களில் சுதந்திர உணர்ச்சி இன்னும் வீறுகொண்டது. கல்கி கிருஷ்ணமூர்த்தி,  சினிமாவுக்காகவே எழுதிய 'தியாக பூமி' திரைக்கதை, தேசிய போராட்டத்தை நேரடியாகச் சுட்டி, 'தேச சேவை செய்ய வாரீர்' என்று மக்களை அழைத்தது. இதன் பிறகு, இந்தியர்களின் அனுமதி பெறாமல் உலக யுத்தத்தில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து ராஜாஜி தலைமையிலான அரசு விலகியது. பிரிட்டிஷ் ஆட்சி உடனே 'தியாக பூமி'யைத் தடை செய்தது. 'நமது ஜன்ம பூமி,   நமது ஜன்ம பூமி' என்று பாடிய 'ஜன்ம பூமி' திரைப்படமும் தடை செய்யப்பட்டது.

நாற்பதுகளில், சுதந்திரம் வெகு தூரமில்லை என்று தெரிய வேண்டியவர்களுக்குத் தெரிந்துவிட்டது. ஜனவரி 1947ல் ஏவி.எம்மின் 'நாம் இருவர்' படம் வந்தது. சுதந்திர உணர்ச்சிக்கு மறுபெயரான பாரதியின் பாடல்கள் படத்தில் முழங்கின. கமலா நடனமாடிய 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்ற பாடல் படத்திற்கு ஒரு காந்த சக்தியைக் கொடுத்தது. சுதந்திரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த மக்கள், 'ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்ற பாடலை கமலாவின் நாட்டியத்தோடு கண்டபோது ஆனந்தத்தில் ஆழ்ந்தார்கள். 'நாம் இருவ'ருக்குப் பெரிய வெற்றி கிடைத்தது. சரியான நேரத்தில் பாரதியின் பாடல்களை உபயோகப்படுத்தும் உரிமையை ஏவி.எம். வாங்கி கச்சிதமான முறையில் பயன்படுத்தியதால், பெரும்பயனை அனுபவித்தார். மற்றவர்களும் பாரதிப்பாடல்களைப் உபயோகப்படுத்தி பயனடைய முயன்றபோது, அது காப்புரிமை பிரச்னையாகி சட்டவழக்காக உருவெடுத்தது. இதனால், இந்தியா சுதந்திரம் அடைந்தும் பாரதிக்கு சுதந்திரம் இல்லையா என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. தனி நபர்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும்  சில வருடங்கள் கடந்துதான் பாரதிப் பாடல்களுக்கு முழு விடுதலை கிடைத்தது! சுதந்திரம் முதல்படி...அதுவொன்றும் 'ஜீ பூம் பா’ என்றோ, 'திறந்திடு ஸீஸேம்’ என்றோ சொன்ன மாத்திரத்தில் பாலும் தேனும் ஓடி பொன்னும் பொருளும் பொழிந்துவிடக்கூடிய மேஜிக் அல்ல! சுதந்திர இந்தியா சந்தித்த சவால்களையும் தட்டுப்பாடுகளையும் அரசியல் கண்டனங்களுக்கு அவலாகப் பயன்படுத்திய பிரசாரப்படங்கள் வரத்தொடங்கி வெற்றியும் அடைந்தன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், இந்த மாதிரியான படங்களில் தலையாயதான 'பராசக்தி'யில் பிரதம வேடத்தில் நடித்த சிவாஜிதான், தேசிய உணர்ச்சி ததும்பும் சில படங்களில் மறக்கமுடியாத பாத்திரங்களில் நடித்தார்! 'தேசியமும் தெய்வ பக்தியும் நிரம்பிய குடும்பத்தில் பிறந்தவன் நான்' என்று சிவாஜி அதற்கு விளக்கம் அளித்தார். 'ஸிடிஸன் கேன்' என்ற உயர்தர ஆங்கிலப்படத்தின் நாயகன், 'ரோஸ்பட்' (ரோஜா மொட்டு) என்ற கடைசி வார்த்தையைப் பகிர்ந்துவிட்டு இறப்பான். அதன் பொருள் என்ன என்பதுதான் படத்தின் கதை. அது நாயகனின் சந்தோஷமான சிறுபிராயத்துடன் தொடர்பு உள்ளது என்பது கடைசியில் வெளிவரும். ஒவ்வொருவரின் சிறு பிராய அபிலாஷை மிக முக்கியமானது. சிவாஜியைப் பொறுத்துவரையிலும் அப்படித்தான். அவருடைய உள்ளத்தில் இருந்த 'கட்டபொம்மன்' தெருக்கூத்தின் நாயகன் முதலில் அவருடைய நடிப்பில் நாடக மேடையிலும் பிறகு வண்ணத் திரையிலும் விஸ்வரூபம் எடுத்தான். கும்பினிக்காரனின் கும்பி நடுங்கும் வண்ணம் சுதந்திர கர்ஜனை செய்த கட்டபொம்மனுக்கு மறக்கமுடியாத வடிவம் கொடுத்தார் சிவாஜி . இன்று வரை அந்த வீர முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு சிறு பாளையக்காரனை, ராஜராஜ சோழன் ரேஞ்சுக்கு காட்டிவிட்டார்கள் என்ற குறை சிலருக்கு இருக்கத்தான் செய்தது என்பது வேறு விஷயம்.

'கட்டபொம்ம'னைப் போல் இயக்குநர் பந்துலுவுடன் சிவாஜி ஒத்துழைத்து முடித்த படம், 'கப்பலோட்டிய தமிழன்’. காந்திக்கு முந்திய அத்தியாயத்தில் இயங்கிய திலகரின் சீடரான வ.உ.சிதம்பரத்தை நம் கண்முன் கொண்டுவந்தார் சிவாஜி. அவருடைய ரசிகர்களுக்குப் பிடித்த மிகை நடிப்புப் பாணியை மேற்கொள்ளாமல், மிக இயல்பாக நடித்தார். அவருடன் சுப்ரமணிய சிவாவாக டி.கே. சண்முகமும், பாரதியாக எஸ்.வி. சுப்பையாவும், ஒரே காட்சியானாலும் உயர்ந்த காட்சியில் திலகராக பந்துலுவும் மிகச்சிறப்பாக நடித்தார்கள். மகோன்னதமான தேசத்தலைவர்களை நம் கண்முன் காட்டிய படமான 'கப்பலோட்டிய தமிழன்’, முதல் வெளியீட்டில் தோல்வி அடைந்து தயாரிப்பாளர் பந்துலுவை பரிதவிக்க வைத்தது. ஆனால் இன்றோ 'கப்பலோட்டிய தமிழன்’ ஒரு மிகச்சிறந்த படமாக உலா வருகிறது. தேசபக்தி என்றால் என்ன என்று இன்றைய தலைமுறைக்கு காட்டுகிறது.

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பினார் பிரதமர் நேரு...தோளில் கைபோட்ட சீனன் முதுகில் ஆழமாகக் குத்தினான். பதறிப்போன இந்தியர்களின் எழுச்சியை திரையில் காட்டினார் கவிஞர் கண்ணதாசன். அவர் எடுத்த 'ரத்தத்திலகம்’ (1963), சினிமா என்கிற முறையில் சுமார் வகைதான். ஆனால் பாடல் ஒவ்வொன்றும் இதயத்தில் ரீங்காரம் செய்தது. 'பனிபடர்ந்த மலையின் மேலே’ என்ற பாடலில் இந்தியத்தாயின் நிலையை சிவாஜி புலப்படுத்தியது ஒரு மறக்க முடியாத காட்சியாக அமைந்தது. 'தாயே உனக்காக’ என்ற படத்தில். காஷ்மீர் எல்லையைக் காக்கும் இந்திய ராணுவ வீரனை சித்தரித்தார் கவிஞர். 'கருநீல மலைமேலே தாயிருந்தாள் காஷ்மீரப்பனிமலையில் மகன் இருந்தான்’  என்ற பாடலை இன்று வரை பலரால் மறக்கமுடியவில்லை.

வருடங்கள் கடந்து செல்லச் செல்ல, தமிழ் சினிமாவில் தேசிய உணர்ச்சியின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது என்றுதான் சொல்லவேண்டும். 'ரோஜா’வின் நாயகன் 'ஜெய்ஹிந்த்’ என்று ஒரு காட்சியில் அறைகூவலாம். 'இந்தியன்’ படத்தின் நாயகன் நேதாஜி படையின் எச்சமாக இருக்கலாம். 'துப்பாக்கி’ ஹீரோ இந்திய ராணுவ கேப்டனாக இருக்கலாம். ஏன், சில மாதங்களுக்கு முன் வந்த 'காற்றுவெளியிடை’யின் கதாநாயகன் கார்கில் யுத்தத்தில் பங்குகொண்ட வீரனாக இருக்கலாம். ஆனால், 'இது என் தேசம். இதற்காக நான் வாழ கடமைப்பட்டிருக்கிறேன், இதன் நலனை நான் காப்பேன்’ என்ற தேசபக்தியின் மூலாதாரமான எண்ணம் இவற்றில் வெளிவரவில்லை.

(தொட­ரும்)