குமரியிலிருந்து நதிகளுக்கான ஈஷா பேரணி

பதிவு செய்த நாள் : 19 ஆகஸ்ட் 2017

ஈஷா அறக்கட்டளை சார்பில் சத்குரு தலைமையில் கன்னியாகுமரியிலிருந்து நதிகளுக்கான அகில இந்திய பேரணி வரும் செப்டம்பர் 4ம் தேதி துவங்குகிறது. பேரணி பற்றி சத்குரு கூறியதாவது

கோவை ஈஷா மையத்திலிருந்து சத்குருவும் மற்ற தலைவர்களும் செப்டம்பர் 3ம் தேதி கன்னியாகுமரிக்கு புறப்பட உள்ளனர். பேரணி செப்டம்பர் 4ம் தேதி கன்னியாகுமரியில் துவங்குகிறது.

கன்னியாகுமரியிலிருந்து பேரணி கேரளம் செல்கிறது. திருவனந்தபுரத்தில் பேரணி தலைவர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்துப் பேசுகிறார். பேரணி சென்னைக்கு வரும் வழியில் புதுவை முதல்வர் வி. நாராயணசாமி பேரணியை வரவேற்றுப் பேசுகிறார்.
சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சத்குருவையும் பேரணியில் செல்லும் முக்கிய தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.
ஏற்கனவே, பேரணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 மத்திய அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பேரணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு எல்லோரும் பேரணியில் பங்குகொள்ள வேண்டும் என அழைப்பும் விடுத்திருக்கிறார்கள்.

16 மாநிலங்களின் வழியாக 7,000 கிலோ மீட்டர் பேரணியின் பயணம் அமையவுள்ளது. கன்னியாகுமரியிலிருந்து பேரணி நிறைவடையும் டில்லிவரை காரை சத்குருவே ஓட்டுவது என்று தீர்மானித்திருக்கிறார்.

பேரணி செல்லும் பாதையில் 23 நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பேரணி செல்லும் மாநிலங்களின் முதல்வர்கள் அல்லது ஆளுநர்கள் பேரணியை வரவேற்று பேச இருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் மைசூரில் பேரணியினர் ஒரு நாள் தங்குகின்றனர். அங்கு காவிரிக்கு புத்துயிர் தந்து அதனை முன்பு போல உயிரோட்டமுள்ள நதியாக மாற்றுவதற்காக தமிழகம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களின் விவசாயிகளும் இணைந்து செயல்படுவதற்கான மேடையாக காவேரி விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

காவிரியில் நீரோட்டம் இருந்தால்தானே அதனை காவிரி பல மாநில விவசாயிகளும் பகிர்ந்துகொள்ள முடியும். தண்ணீர் இல்லா வெறுமையை பகிர்ந்துகொள்வதால் என்ன லாபம்? எனவே, முதலில் காவேரிக்கு புத்துயிர் தந்து, உயிரோட்டம் உள்ளதாக மாற்ற வேண்டியது அவசியம். அதற்கு பேரணி உதவும் என்று நம்புகிறேன் என்றார் சத்குரு.

மத்தியப் பிரதேச முதல்வர் பேரணிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு நர்மதை நதிக்கு புத்துயிர் அளிக்க, செயல்திட்டம் கோரியிருக்கிறார்.
மகாராஷ்டிரா அரசோடு ஏற்கனவே நதிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான செயல்பாடு குறித்து ஈஷா அறக்கட்டளை ஒப்பந்தம் செய்திருக்கிறது.
அகில இந்திய பேரணி டில்லியில் நிறைவடைகிறது. அக்டோபர் மாதம் 2ம் தேதி டில்லியில் பேரணியில் பங்கு கொண்ட தலைவர்கள் கூடுவார்கள்.

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினமாகும். நதிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான சிறப்புச் செயல் திட்ட வரைவை மத்திய அரசிடம் நதிகளுக்கான அகில இந்திய பேரணியின் சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சத்குரு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வரைவுச் செயல் திட்டம் பற்றிக் கேட்ட பொழுது, நதிகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் அதில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும்.

ஆறுகளைப் பற்றி ஆய்வு செய்யும் பொழுது 2 வகையான ஆறுகள் இருப்பதை நாம் அறியலாம். ஒன்று பனி படர்ந்த மலைகளின் மீது படிந்துள்ள பனி உருகி, தண்ணீராக ஓடி வரும் பல சிற்றோடைகள் இணைந்து கிளை நதியாகிறது. கிளை நதிகள் இணைந்து ஆறாகிறது.

மற்றொரு வகை: மலை, சமவெளிப் பகுதிகளில் மழைக்காலத்தில் விழும் மழைநீர் மண்ணில் சுவர்ந்து உள் வாங்கப்படுகிறது. இந்நிலையில் மரங்கள், செடி, கொடிகளின் வேர்கள் வலைப் பின்னலாக அமைந்து அந்நீரை வனப்பகுதி நிலத்தில் தக்கவைத்துக் கொள்கின்றன. துளித்துளியாக அந்த நீர் வெளியாகி, ஓடையாகி, சிறிய கிளை நதியாகி, நதியாகப் பிறப்பெடுக்கிறது.

இந்த 2 வகைகளில் 2வது வகையைச் சேர்ந்த நதிகளே தென் இந்தியாவில் உள்ளன. இவைகளே இப்பொழுது பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. பூமியின் மேல் அடர்ந்து பரவி நிற்கும் மரங்களின் இலைகள் உதிர்ந்து நிலத்தில் விழுந்து மக்கும் பொழுது ஆர்கானிக் உரமாக நிலத்திற்கு மீண்டும் சாரம் ஏற்றுகிறது. இந்த இலைகள் மக்கும் பொழுது நுண்ணுயிர்களும் நிலத்தில் சேருகின்றன. விளைச்சல் மூலம் நிலம் இழக்கும் நுண்ணிய சத்துகளை நிலம் மீண்டும் பெற்றுக் கொள்கிறது.

விவசாயிகள் நிலத்திற்கு இயற்கை உரமாக தங்கள் வளர்க்கும் காளை மாடுகள், பசு மாடுகள், ஆடுகள் ஆகியவற்றின் சாணத்தையும் கோழி, வாத்துகளின் எச்சத்தையும் போடுகிறார்கள். இவற்றைத் தவிர பசுந்தாள் உரமும் போடுவதுண்டு. இதன்மூலம் நிலத்துக்கு இழந்த உயிர்ச்சத்துகளும் நுண்ணுயிரிகளும் மீண்டும் திரும்பக் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இப்பொழுது நிலத்தை உழ டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடைகள் விவசாயிகளிடம் இல்லாத நிலையில் நிலத்துக்கு உரமாக கால்நடை சாணம் கிடைக்க வாய்ப்பில்லை. பசுந்தழை உரத்தையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அருகி வருகிறது.

விளைச்சல் நிலத்தில் 2 சதவீத ஆர்கானிக் சத்துகள் இருக்க வேண்டும் என்று வேளாண் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் நமது நிலங்களில் ஆர்கானிக் சத்துகளின் அளவு 0.05 சதவீதமாக குறைந்துவிட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் செயற்கை உரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் விளைச்சல் வேளாண் நிலம் பாலைவனமாக மாறிவிடுகிறது.

இந்தியாவின் மீது விமானத்தில் பறக்கும் பொழுது இந்த உணர்வுதான் ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நதிகளின் அளவு சராசரியாக 6 முதல் 8 சதவீதம் குறைந்து வருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஓடிய காவிரியில் 40 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது. கிளை நதிகள் மூலமாக தண்ணீர் வருவது சில ஆண்டுகளாக குறைந்து விட்ட காரணத்தால் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. காவிரிப்படுகையில் கடல் நீர் நிலத்துக்கடியில் ஊடுருவி வருவதால் 25 சதவீத விவசாயப் பரப்பும் குறைந்துள்ளது.

விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை என்பதை விட குடிநீருக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீரைப் பயன்படுத்தாத மனிதர்களே இல்லை என்று கூறலாம் என்று நதிகளுக்கான பேரணியை எல்லோரும் ஆதரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பேரணி, போராட்டப் பேரணி அல்ல, கிளர்ச்சிப் பேரணியும் அல்ல. மாறாக நதிகளைக் காப்பதற்காக நமது விவசாயத்தைக் காப்பதற்கான விழிப்புணர்வுப் பேரணியாகும் என சத்குரு தெரிவித்தார்.

நதிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான திட்டம் பற்றிக் கேட்ட பொழுது,

மழை காரணமாக மரங்கள் பூமியில் வளர்ந்து நிலைபெற்று உள்ளன என்று மக்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல. மரங்கள் காரணமாகத்தான் நதியில் நீர் ஓடுகிறது. நதிக்கு இரு புறமும் காடு இல்லையென்றால் நாளடைவில் நதியே இல்லாமல் போய்விடும். இந்த பிரச்சனை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றார் சத்குரு. அவர் மேலும் கூறியதாவது:

வியட்நாம் நிபுணர்கள் இங்கு வந்து ஈஷா மையத்தில் விரிவாக ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு கொண்டனர். நதிகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான சாதனைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் வாட்டர் மேன் என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங்கின் சாதனைகள்,
 மகாராஷ்டிர மாநிலத்தில் ராலேகான் சித்தி கிராமத்தில்

 அன்னா ஹசாரே நிகழ்த்தியுள்ள சாதனைகள் ஆகியவை முன்னுதாரணங்களாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளன. ரூர்கியில் உள்ள நீரியல் நிறுவனத்தின் சோதனைகளும் ஆழமாகப் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.

நதிகளுக்கு புத்துயிர் தந்து அவைகளில் தண்ணீரை மீண்டும் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. இதற்கென பல திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒரு அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

நதிகளின் இரு கரைகளிலும் ஒரு கிலோ மீட்டர் அகலத்துக்கு மரங்களை வளர்க்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரையாகும்.

சிறிய நதிகளைப் பொருத்த மட்டில் ஒரு கிலோ மீட்டர் அகலத்திற்கு மரங்களை வளர்க்கவேண்டிய தேவை இல்லை. அரை கிலோ மீட்டர் அகலமுள்ள பகுதியில் மரங்களை வளர்த்தல் போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மரங்களை இருகரைகளிலும் வளர்க்க நிலத்துக்கு எங்கே போவது என்பது அடுத்த கேள்வி. பெரிய நதிகளின் கரையோரத்தில் உள்ள நிலத்தில் 26 சதவீதம் அரசுக்கு சொந்தமான நிலமாகும். அதேபோல சிறிய நதிகளின் கரைகளில் இந்த அரசு நிலங்களை மரங்களை வளர்க்க மிகவும் குறுகிய காலத்தில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது தவிர இந்தியாவின் தனித்துவத்தை உலகுக்கு உணர்த்தும் ஏலக்காய், மிளகு, மஞ்சள் போன்றவகைகளையும் பிற பழவகை மரங்களையும் பயிரிடலாம்.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் நெல்லிக்காய்க்கு தேவை உள்ளது. இந்தியாவில் போதுமான நெல்லிக்காய் விளையவில்லை. ஆப்பிரிக்காவில் இப்பொழுது நெல்லி பயிரிடத் துவங்கி உள்ளனர்.

உலகில் பழவகைகளை விளைவிப்பதில் 2வது பெரிய நாடாக இருந்த போதிலும் 4 சதவீதம் கூட மக்களின் உணவுக்காக பயன்படுத்தப்படுவதில்லை.

இவ்வாறு விளைவிக்கப்படும்  பழவகைகள் மருத்துவப் பொருள்கள், மூலிகைகள் அவைகளைப் பாதுகாக்க குளிர் பதனக் கூடங்களை குறிப்பிட்ட இடைவெளிகளில் தேவைக்கேற்ப அமைத்தல், சிறிய, பெரிய தொழிற்கூடங்களை அமைத்தல் ஆகியவை வேலைவாய்ப்புகளைப் பெருக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
நதிக்கரையோரம் அமைக்கப்படுவதற்கான தொழிற்கூடங்கள் தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து இந்திய தொழில்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுடன் நடைபெற்று வருகின்றன.

இந்த விரிவான வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு, தொழில், சந்தை வசதிகள் இவைகள் குறித்து ஆழமான பரிசீலனைக்குப் பின் வகுக்கப்படும் அணுகுமுறைக் கொள்கையை மேம்படுத்தி அமல்படுத்தும் திறனும், வாய்ப்பும் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது.

இந்திய நாகரிகங்கள் ஏன் உலக நாகரிகங்கள் எல்லாமே நதி சார்ந்த நாகரிகங்கள்தான். இந்திய நதிகளுக்கு புத்துயிர் தருவதன் மூலம், 125 கோடியைத் தாண்டி வளர்ந்து வரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு வளமான எதிர்காலத்தை அளிக்க முடியும்.

ஜனநாயக தேர்தல் முறையை பின்பற்றும் இந்தியாவில் மக்களின் ஆதரவு நதிகளுக்கும், புத்துயிர் தரும் திட்டங்களுக்கும் உண்டு என்பதை அரசு உணர வேண்டும், நம்பவேண்டும். மக்களின் மனநிலை நதிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு ஆதரவாக உள்ளது என்றால் அரசு துணிந்து செயலில் இறங்க வாய்ப்புள்ளது. அதற்கு இந்தப் பேரணி உதவும். இயல்பான வாழ்க்கைக்கு நதிகளைச் சார்ந்துள்ள மக்களும் இந்த உண்மைகளை உணர்ந்து கொள்வது நமது நதிகளுக்கு சிறந்த பாதுகாப்பாக அமையும் என்று சத்குரு கூறினார்.


கட்டுரையாளர்: க. சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation