ஓல்டு இஸ் கோல்டு: ‘சபாஷ் மீனா’வை ஒப்பிட்டு பேசப்பட்ட படம்!

பதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2017
சுந்தர். சி இயக்கத்தில் கார்த்திக்- – ரம்பா ஜோடி நடித்து வெளிவந்த முழுநீள நகைச்சுவைப் படமான ‘உள்ளத்தை அள்ளித்தா’ 1996ம் ஆண்டு வெளிவந்த வெற்றிப் படங்களில் முக்கியமான ஒன்று.

 கவுண்டமணி, மணிவண்ணன், ஜெய்கணேஷ், செந்தில், பாண்டு, ரம்பா, ஜோதிமீனா..உள்ளிட்டவர்களும் நடித்திருந்தார்கள்.

படத்தொகுப்பு – பி.எஸ்.வாசு, ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார், பாடல்கள் – பழநிபாரதி, இசை – சிற்பி, வசனம் – கே.செல்வபாரதி, தயாரிப்பு – என்.பிரபாவதி, என்.ஜோதிலட்சுமி, என்.விஷ்ணுராம், என்.ரகுராம். கதை, திரைக்கதை, இயக்கம் – சுந்தர். சி கதைச்சுருக்கம்:

கார்த்திக்கின் தந்தை ஜெய்கணேஷ் கண்டிப்புடன் மகனை வளர்ப்பதில் கறார் பேர்வழி. தனது திருமணத்துக்கு அப்பா தேர்வு செய்த பெண் பிடிக்காததால், அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஊட்டிக்கு வருகிறார் கார்த்திக்.

வாழ்க்கை நடத்துவதற்கு சின்னச்சின்ன தவறுகளை செய்யும் கவுண்டமணியுடன் கார்த்திக்கிற்கு நட்பு ஏற்படுகிறது. பெரும் பணக்காரரான மணிவண்ணன் வீட்டில் டிரைவராக வேலைக்குச் சேர்கிறார் கார்த்திக்.

மணிவண்ணனின் மகளான ரம்பாவை கார்த்திக்கும் கவுண்டமணியும் சேர்ந்து கடத்த திட்டமிடுகின்றனர். கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஜெய்கணேஷ் பார்த்த பெண்தான் ரம்பா. ஜெய்கணேஷும் மணிவண்ணனும் நீண்ட காலமாகவே நெருங்கிய நண்பர்கள்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஜெய்கணேஷின் மகன் கவுண்டமணி என்று மணிவண்ணனை நம்பவைத்து விடுகிறார் கார்த்திக். கவுண்டமணியை தன் நண்பர் ஜெய்கணேஷின் மகன் என்று நினைத்து அவரை மிகவும் நன்றாக கவனித்துக் கொள்கிறார் மணிவண்ணன். ஆனால், உண்மையில் இந்த உபசரிப்புகளை அனுபவிக்க வேண்டிய கார்த்திக்கோ டிரைவர் வேலையிலேயே தன் பணியைத் தொடர்கிறார்.மணிவண்ணனைப் போலவே அச்சு அசலான தோற்றத்தில் இருக்கும் அவரது சகோதரரால் (மணிவண்ணன் இரட்டை வேடம்) சில குழப்பங்கள் ஏற்படுகின்றன.

இறுதியில், கார்த்திக்குதான் ஜெய்கணேஷின் மகன் என்ற உண்மையை மணிவண்ணன் தெரிந்து கொண்டாரா? இணைந்தார்களா என்பதை நகைச்சுவையுடன் விளக்குகிறது திரைப்படம்.

சில சுவாரஸ்யங்கள்:

* மிகச் சில படங்கள் மட்டுமே அதில் நடித்த நடிக–-நடிகையருக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் பெரும் புகழைத்தேடித் தந்து திருப்புமுனையாக அமையும். அவ்வாறு அமைந்த ஒரு படம் தான் ‘உள்ளத்தை அள்ளித்தா’. இந்தப் படத்தின் நாயகி ரம்பா முன்னணி நடிகையானார். இரட்டை வேடங்களில் நடித்த மணிவண்ணன் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகப் பிரகாசிக்க ஆரம்பித்தார். பாடலாசிரியர் பழநிபாரதி, இசையமைப்பாளர் சிற்பி ஆகியோர் இந்தப் படத்துக்குப் பிறகு பிசியாகிவிட்டார்கள். ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு முழுநீள நகைச்சுவை படங்கள் அதிக அளவில் தயாராக ஆரம்பித்தன.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் கதையும் காட்சியமைப்புகளும் சிவாஜி கணேசன் நடித்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘சபாஷ் மீனா’ படத்தை ஒத்திருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

சல்மான்கான், ஆமிர்கான் நடித்து 1994ம் ஆண்டு வெளியான ‘அந்தாஸ் அப்னா அப்னா’ இந்திப் படத்திலிருந்து பல காட்சிகள் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்துக்காக இரவல் பெறப்பட்டதாகவும் பேசப்பட்டது.

பாடல்கள் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் துணை நின்றன. குறிப்பாக ‘அழகிய லைலா’, ‘ஐ லவ் யூ… லவ் யூ’ பாடல்கள் மிகப் பெரிய ‘ஹிட்’ வரிசையில் இடம்பெற்றன.

--– எஸ். கணேஷ்