விஸ்வரூபத்தின் குழந்தை அவதாரம்

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2017

கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 14 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பூவுலகில் என்றும் குழந்தையாக இருந்து, குழந்தைகளாக இருக்கும் நம் அனைவருக்கும் அருளாசி வழங்கி வருகிறார். அவரை பற்றிய சிறப்பு கட்டுரையை காண்போம்… 

குருவாயூரைப்பற்றி பலரை யோசிக்க வைத்த பெருமை சீர்காழி கோவிந்தராஜனையே சேரும். "குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா" என்று தன் கணீர் குரலில் பாடிய பாட்டை நினைத்தாலே போதும் பாட்டை மனதாலே கேட்க முடியும். குருவாயூரப்பன் திருக்கோவில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருக்கிறது.


ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் தாய் தேவகி மற்றும் தந்தை வசுதேவருக்கு குருவாயூர் கோவிலில் தற்போது உள்ளவாறே கண்ணன் காட்சியளித்தார். இதனால் இந்த பகுதி தென் இந்தியாவின் துவாரகா என்று அழைக்கப்படுகிறது.

இங்கு குடிகொண்டிருக்கும் பால கிருஷ்ணனை, பக்தர்கள் அன்புடன் கண்ணன், உன்னிக்கண்ணன், (குழந்தை கிருஷ்ணன்), உன்னிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்று பல பெயர்களைக்கொண்டு அழைக்கின்றனர்.

108 திவ்ய திருத்தலங்களில் இந்த கோவில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலங்கள் மொத்தம் 108 ஆகும்.
அவையே 108 திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன. 

இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளத்திலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இந்த 108 திவ்ய திருத்தலங்களை தவிர பல புகழ்வாய்ந்த கோவில்கள் உள்ளன.

அவை பல சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகின்றன. அந்த வகையைச் சேர்ந்த குருவாயூர் திருக்கோவிலும் வைணவர்களால் மிகப் புனிதமான தலமாக கருதப்பட்டுகிறது. எல்லாக் கோவில்களுக்கும் தல வரலாறு நிச்சயம் இருக்கும். பிரபலமான கோவில்களுக்கு விரிவான தலவரலாறு இருக்கும் என்பது உறுதி.

குருவாயூர் கோவில்

பகவான் கிருஷ்ணனின் பரம பக்தர் உத்தவர். மகாவிஷ்ணு, தான் எடுத்த கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் முடிந்து விட்ட காராணத்தினால், வைகுண்டத்திற்கு திரும்ப நினைத்தார். அப்போது உத்தவர், பகவானிடம் தன்னையும் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டினார். அதற்கு கிருஷ்ணர், மீதி உள்ள யதுகுலத்தவரை நீ வழி நடத்திச் செல்ல வேண்டி இருப்பதால், உன் ஆயுட்காலம் முடிந்த பின் வைகுண்டத்திற்கு வரலாம் என்று உத்தவரிடம் கூறினார்.

அர்ச்சுனனுக்கு பகவத்கீதை உபதேசம் செய்தது போல தனக்கும் கிருஷ்ணன் உபதேசம் செய்ய வேண்டும் என்று உரிமையோடு உத்தவர் கேட்டுக்கொண்டார்.

பக்தர் கோரிக்கையை பகவான் தட்ட முடியாதே, ஸ்ரீகிருஷ்ணரும் ஆத்ம உபதேசத்தை (31 அத்தியாயங்கள் கொண்ட 1367 சுலோகங்கள்) உத்தவருக்கு அருளினார். மேலும் உத்தவரிடம் கிருஷ்ண பகவான் தற்போது குருவாயூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  குருவாயூரப்பனின் விக்ரகத்தை அளித்தார்.

இந்த விக்ரகத்தில் உறைந்து வசிக்கப்போவதாகவும், மேலும் தஞ்சம் புகும் பக்தர்களுக்கு நல்லாசி வழங்கப் போவதாகவும் கிருஷ்ணர் பக்தர் உத்தவரிடம் கூறினார்.

தேவர்களின் குருவாகத் திகழ்ந்த பிரஹஸ்பதியிடம் இந்த விக்ரகத்தை ஒரு சிறந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யும்படியும் கிருஷ்ணர் உத்தரவிட்டார்.

துவாரகையில் கிருஷ்ணரின் அவதார காலத்தின் இறுதியில் பிரளய கால வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கிருஷ்ணன் தந்த விக்கிரமும் சிக்கியது.ஆனால் அந்த விக்கிரகம் மிதந்தது. வெள்ளத்தில் மிதந்து சென்ற கொண்டிருந்த விக்ரகத்தை குருபகவான் அவருடைய முதன்மை சீடரான வாயுவின் உதவியுடன் மீட்டெடுத்தார். குருபகவான் மற்றும் வாயுதேவனும் அந்த சிலையை பிரதிஷ்டை செய்ய ஒரு சிறந்த இடத்தை தேடி அலைந்தார்கள். இறுதியில் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் அவர்கள் பரசுராமரை சந்தித்தனர்.

குருபகவான் மற்றும் வாயுதேவனை பரசுராமர் ஒரு பசுமைவாய்ந்த இடத்திற்கு அழைத்து சென்றார். அந்த இடத்தில் மூவருக்கும் சிவபெருமான் தனது மனைவி பார்வதியுடன் காட்சியளித்தார். விக்ரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கு அதுவே உகந்த இடமாகும் என்பதையும் பரசுராமர் தெரிவித்தார். குருவும், வாயுதேவனும் ஒன்றுசேர்ந்து அந்த விக்ரகத்தை நிறுவியதால் அவ்விடத்துக்கு குருவாயூர் என்ற பெயர் சிவபெருமானால் வழங்கப்பட்டது. அதன்பின் சிவபெருமான் மற்றும் பார்வதி இருவரும் எதிர்க்கரையில் உள்ள மம்மியூரில் எழுந்தருளினர்.

குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எதிர்க்கரையில் உள்ள மம்மியூர் சிவபெருமானையும் தரிசித்தால் மட்டுமே அவர்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய வரலாறுகள் கேரளம், தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பல கோவில்கள் விஷயத்தில் கூறப்படுகின்றன.

காசிக்கு போய் விஸ்வநாதரை தரிசித்து கங்கையில் நீராடி வந்தபிறகு, நேரே ராமேஸ்வரம் சென்று ராமநாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய மரபு எழுந்ததற்கான காரணத்தை யோசிக்கும்போது இந்திய மக்கள் மத்தியில் மத இணக்கத்தை வலியுறுத்தவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது எனத் தோன்றுகிறது. சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று கச்சை கட்டிக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்த காலம் ஒன்று இங்கே இருந்தது. வைஷ்ணவர்களுக்குள்ளே வடகலை தென்கலை வாதப் பிரதிவாதங்களும் நடந்தன.

இத்தகைய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், இரண்டு கோவில்களையும் புண்ணியப் பயன்களின் மூலம் இணைத்தால்தான் அமைதியை ஏற்படுத்தமுடியும் என்று நினைத்திருக்கக்கூடும். எல்லா மதங்களையும் இணக்கத்தோடு அணுகும்போக்கு உருவாகி வளர இந்த கருத்துதான் காரணமாக இருக்க வேண்டும் என தோன்றுகிறது.

உலக பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் கட்டிடக்கலைக்கும் ஒரு சிறந்த சான்றாக விளங்கி வருகிறது. கட்டிடக்கலையில் நிபுணத்துவம் உடையவராக கருதப்படும் இந்திரன் சபையில் இருந்த விஸ்வகர்மா இந்த கோவிலை கட்டியுள்ளார் என்பது தல வரலாறு.

அவர் இந்த கோவிலை கட்டியது விஷு நாள் அன்று. அந்நாள் இளவேனிற் சம இரவு நாளாகும். அந்நாளின் முதல் சூரிய ஒளி நேராக இறைவனின் பாதங்களை அடையும் விதத்தில் கோவில் அமைக்கப் பெற்று இருந்தது. இந்த விக்ரஹம் கும்ப மாதத்தில் (பிப்ரவரி - மார்ச்) பிரதிஷ்டை செய்யப்பட்டது.

குருவாயூரப்பன் 

குருவாயூர் கோவிலில் காணப்படும் குருவாயூரப்பனின் சிலை மிகவும் தனிச் சிறப்பு கொண்டதாக விளங்குகிறது. மிக அரிதான பதளாஞ்சனா கல்லில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இறைவன் ஸ்ரீ குருவாயூரப்பனின் வடிவம் அனைவரின் மனம் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கைகளுடன் காணப்படும் குருவாயூரப்பன், பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரத்தை மற்றொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்ற கதையையும், தாமரை மலரை நான்காவது கரத்திலும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் நல்லாசி புரிந்து வருகிறார். கழுத்தில் புனிதமான துளசி மாலை துளங்க காட்சியளிக்கிறார்.

விக்ரகத்தின் சிறப்பம்சம்

மூல விக்கிரகம் குறித்து வேறு சில கதைகள் கூறப்படுகின்றன. மகாவிஷ்ணு வைகுண்டத்தில் குருவாயூரப்பன் விக்கிரகத்தை படைத்தார்.. அந்த விக்கிரகத்தை அவர் சிவனிடமும் பிரம்மாவிடமும் அளித்தார் என்றும் ஐதீகங்கள் கூறப்படுகின்றன.

அரசரான சுதபர் அவர் மனைவியுடன் ஒரு குழந்தையை வேண்டி பிரம்மாவிடம் வழிபட்டு வந்தனர். அவர்களுடைய பக்தியை மெச்சி, பிரம்ம தேவர் அவர்களுக்கு இந்த விக்ரஹத்தை அளித்து அதை வழிபடச் சொன்னதாகவும் கூறப்படுவதுண்டு. அவர்களுடைய பக்தியை மெச்சி, மகா விஷ்ணு அவர்கள் முன் தோன்றி அந்த விக்ரஹத்துடன் அவரே அவர்களுடைய மகனாக மீண்டும் மூன்று தனிப்பட்ட நிகழ்வுகளின் மூலம் வெவ்வேறு உருவங்களில் அவர்களுடைய மூன்று பிறப்புகளில் அவர்களுக்கு பிறப்பதாக வரம் அளித்தார்.


இப்படியாக அவர்களுக்கு மூன்று மறுபிறப்புகளில் அதே விக்ரஹத்தை வழிபடும் ஓர் நல்ல வாய்ப்பும் கிடைத்தது.

1. கிருத யுகத்தில், பிரஜாபதி சுதபர் மற்றும் அவருடைய மனைவி பிரசணியின் மகன் பிரசனிகர்பராக மகாவிஷ்ணு பிறந்தார். மேலும் அவர் உலகத்திற்கு பிரம்மச்சர்ய விரதத்தைக் கடைப்பிடிக்கும் முறைகளை கற்றுத் தந்தார். (திருமணம் புரியாமல் கடும் தவம் மேற்கொள்வது).

2. திரேதா யுகத்தில் அவர்களுடைய அடுத்த பிறவியில் சுதபரும் அவருடைய மனைவியும், காஷ்யபர் மற்றும் அதிதியாகப் பிறந்தார்கள். இந்த தம்பதியினருக்குக் குழந்தையாக வாமனர் அவதரித்தார். இவரும் மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமாகும்.

3. துவாபர யுகத்தில் மூன்றாவது பிறப்பில் அவர்கள் வசுதேவர் மற்றும் தேவகியாகப் பிறந்தார்கள். அவர்களுடைய எட்டாவது மகனாக மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். இறைவனான கிருஷ்ணரே இந்த விக்ரஹத்தை துவாரகையில் பிரதிஷ்டை செய்து, அதை வழிபட்டார் என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவலாகும்.

இந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் நான்காவது கோயில் எனும் பெருமையை இந்த குருவாயூரப்பன் கோயில் பெற்றுள்ளது.

கிருஷ்ண லீலைகள் எனப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் இளம்பருவ கதைகள், இந்த கோவிலின் சுவர்களில் சுவர் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. கிருஷ்ணாட்டக்களி எனும் நடனக்கலை வடிவம் இந்த கோவிலில் தோன்றியது குறிப்பிடத்தக்கது. பலவித கர்நாடக இசைக்கச்சேரிகள், பாரம்பரிய கேரள நடனக்கலை நிகழ்ச்சிகள் இந்த கோவிலில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு நாளன்றும் ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் வரையறுக்கப்பட்ட பூஜை முறைகளையும், தாந்தரீக வடிவில் சென்னாஸ் நாராயணன் நம்பூதிரியால் (பிறப்பு 1427) எழுதி தரப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

குருவாயூர் கோவிலில் சென்னாஸ் நம்பூதிரிமார்களின் பரம்பரையே கோவிலின் தாந்திரீகர்களாக பணி புரிந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கோவிலில் நடைப்பெறும் பூஜை முறைகளை மிகவும் கண்டிப்புடனும், விட்டுக் கொடுக்காமலும் நிறைவேற்றப்படுகின்றன. இதை கவனித்துக் கொள்வதற்காகவே இக்கோவிலின் தந்திரி எந்நேரமும் கோவிலில் காணப்படுவார்.

கோவிலின் மேல்சாந்தி (முதன்மை பூசாரி) தினந்தோறும் அதிகாலை 2:30 மணிக்கே கோவிலில் உள்ள குருவாயூரப்பன் கர்ப்பகிரகத்தில் நுழைந்து விடுவார். உச்சி கால பூஜை 12:30 மணியளவில் முடிவடையும். இந்த பூஜை முடியும்வரை தண்ணீர் கூட  அருந்தாமல் விரதம் இருப்பார். வேதகாலத்து பாரம்பரியங்களை இன்றும் தொடர்ந்து கச்சிதமாகவும் நேர்மையாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதே இந்தக் கோவிலின் மிகவும் சிறந்த அம்சமாகும்.

கேசவனுக்கு ஒரு திருநாள்

கஜராஜன் குருவாயூர் கேசவன் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் யானையாகும். நீலாம்பூர் நாட்டு ராஜவம்ச குடும்பத்தினர் இந்த யானையை 1922 ஆம் ஆண்டு குருவாயூர் கோவிலுக்கு நன்கொடையாக அளித்தனர்.


1976 டிசம்பர் 2ஆம் தேதி நவமி அன்று கேசவன் யானை உடல் நடுக்கம் கண்டது. பின்னர் எதுவும் உண்ணாமல் அடம்பிடித்தது. கால்நடை மருத்துவர்கள் விரைந்து வந்து மருந்து கொடுத்தனர். பின்னர் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். பின்னரும் கேசவன் எதுவும் உண்ண மறுத்தது. மறுநாள் தசமி அன்றும் உண்ணாமல் நின்றுகொண்டே இருந்தது. தசமி இரவு குருவாயூரப்பன் கோவிலில் மேள சப்தம் கேட்டதும் தண்ணீரைத்தன் துதிக்கையில் ஏந்தி குளித்தது.

மறுநாள் ஏகாதசி. அன்றைய தினத்தில் பக்தர்கள் ஏகாதசி விரதத்தன்று எப்படி விரதமிருந்து உண்ணாமல் இருப்பார்களோ, அதேபோல் அன்று முழுவதும் கேசவன் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்தது. அன்றைய தினம் மாலை நேரத்தில் கோவிலின் நடையை நோக்கி தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு இறைவனிடம் தனது வணக்கத்தை தெரிவித்தவாறு கீழே விழுந்து உயிர் துறந்தது.

இதன் நினைவாக குருவாயூர் கேசவனின் நினைவு நாள் ஆண்டுதோறும் குருவாயூர் ஏகாதசி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. குருவாயூர் தேவஸ்தானம் குருவாயூர் கேசவனின் சேவைகளை மெச்சி, "கஜராஜன்" (யானைகளின் ராஜா) என்ற பட்டத்தை கேசவனுக்கு  வழங்கியது.

குருவாயூரப்பனுக்காக நடத்தப்படும் வேள்விகளிலும், உற்சவங்களிலும், நித்ய பூஜைகளிலும் கலந்து கொண்டு, சேவைகள் புரிந்தமைக்காக, குருவாயூர் கேசவனின் சிலை வடிவமைக்கப்பட்டு கோவில் வளாகத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சிலைக்கு யானைகளே அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தும். குருவாயூர் கேசவனின் நீண்ட அழகான கொம்புகள் மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய படம் ஒன்று,  பிரதான கோவிலின் கதவுக்கு மேல் அலங்கரிப்பதை நாம் இன்றும் காணலாம்.

குருவாயூர் கோவில் அமைவிடம்

குருவாயூருக்கு இந்தியாவின் எந்தப்பகுதியில் இருந்தும் ரயில் பேருந்து மூலம் செல்லலாம் சென்னையில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம், மதுரை, திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் குருவாயூர் ரயில் நிலையம் அடையலாம்

எக்ஸ்பிரஸ் ரயில் தவிர பல பயணிகள் ரயிலும் குருவாயூருக்கு செல்கின்றன.

அருகிலுள்ள கோவில்கள்

மம்மியூர் சிவன் கோவில்

பார்த்தசாரதி திருக்கோவில்

சாமுண்டேஸ்வரி திருக்கோவில்.


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Dakshinamurthy V 15-08-2017 11:44 PM
Article having lot of good information

Reply Cancel


Your comment will be posted after the moderation