கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 89

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2017
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் நூறு சதவீத முயற்சியுடன் ஒரு வாழ்க்கை சரிதம்!

சில வருடங்களுக்கு முன் எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு வந்த போது, ஒரு பத்திரிகையிலிருந்து எனக்குத் தெரிந்த ஒரு நிருபர் பேசினார்.

‘‘நீங்கள் பாகவதரைப் பற்றி சென்னை பல்கலைக் கழகத்தில் ஒரு சொற்பொழிவு செய்தீர்கள். ஆனால் தமிழக அரசு அவருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடவில்லை. இதைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன,’’ என்று நிருபர் கேட்டார்.

எல்லாவற்றுக்கும் அரசை எதிர் பார்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மக்கள் நலனை கவனிப்பதற்குத்தான் ஆட்சி என்பது உண்மைதான் என்றாலும், மக்களைவிட ஆட்சியும் அதிகாரமும் பெரிதில்லை.  அதனால் நான் கூறினேன், ‘‘பாகவதர் ஜீவசக்தி உள்ள ஒரு பாடகர்.  தனித்துவமான குரல் அமைந்தவர். பக்தி ரசமும் இசை வளமும் நிறைந்த நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார். அவரை மக்கள் மறக்க மாட்டார்கள். மக்கள் கூட்டத்திலிருந்து அவரைக் கொண்டாடும் நபர்கள் வருவார்கள். அது போதும். அரசு விழாவென்று கூறி, பாடாவதியான விஷயங்களை கிளிப்பிள்ளை போல் கூறும் அமைச்சர்களின் பேச்சால் பெரிய லாபம் வந்துவிடப் போவதில்லை,’’ என்றேன். என்னுடைய கூற்றை பதிவுசெய்தாலும், ‘அரசு விழாவெங்கே?’ என்ற கோஷம்தான் நிருபர் வெளியிட்ட செய்தியின் சாரமாக இருந்தது! வெள்ளைக்காரன் காலத்தில், ‘சர்காரே சரணம்’ என்று எண்ணும் ‘மாய்ப்பாப் சர்கார்’  மனப்பான்மை இருந்தது. அது இன்னும் தொடர்கிறது!

எம்.ஜி.ஆர். விஷயத்தில் அந்த நிலைமை இல்லை. ஏனென்றால்,  இப்போது இருப்பதே அவர் துவக்கிய கட்சியின் அரசுதான்! அவருடைய வாக்கு வங்கியை அடிப்படையாகக்கொண்ட அரசுதான். அவர் நிறுவிய கட்சியை அவருடைய வாரிசு என்று தன்னுடைய வெற்றிகளால் நிரூபித்த ஜெயலலிதாவின் ஆட்சி நான்கு முறை பொதுத்தேர்தலில் வென்ற ஆட்சிதான். அதனால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டை அரசு மிகப்பெரிய அளவில் கொண்டாடுவது இயற்கை, அதில் ஆச்சரியத்திற்கு இடமில்லை.

 ஆனால், தமிழ்நாட்டின் பொது வாழ்க்கையில் அதிக தாக்கம் ஏற்படுத்திய எம்.ஜி.ஆரைப் போன்ற ஓர் ஆளுமையைக் குறித்துத் தீர்க்கமான பார்வை இருக்க வேண்டாமா? எம்.ஜி.ஆரின் சரித்திரத்தை ஆழமாக அலச வேண்டாமா? இதுபோன்ற  விஷயத்தை, தற்காலிக நோக்கங்கள் கொண்ட அரசியல் சக்திகளால் நிறைவு செய்யமுடியாது. வெளி நபர்கள்தான் அதை செய்ய வேண்டும். பலர் அதை இந்த எம்.ஜி.ஆர்.   நூற்றாண்டில் செய்ய முயன்றிருக்கிறார்கள். இந்த முயற்சிகளில், ஆர்.கண்ணன் எழுதியிருக்கும், ‘எம்.ஜி.ஆர். - அ லைப்’ என்ற ஆங்கில நூலை முக்கியமான பங்களிப்பாகக் கொள்ளலாம். அதற்கு அதன் விஸ்தாரமான 500 பக்க அளவும், எம்.ஜி.ஆருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் பலபட விவரிக்க எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சியும் காரணம் என்று சொல்லலாம்.  இந்த விஷயத்தில், எம்.ஜி.ஆரின் சரிதம்  தொடர்பான பல நூல்கள் கண்ணனுக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றன (துணைநூல் பட்டியல் ஆறு பக்கங்கள் நீள்கிறது). பத்திரிகைச் செய்திகள் உதவியிருக்கின்றன. அவரே நேரடியாக நிகழ்த்திய பேட்டிகள் பயன்பட்டிருக்கின்றன. ஏராளமான இணைய இணைப்புகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். மேற்கோள்களை அவர் அடிக்குறிப்புகள் வாயிலாக காட்டியிருக்கும் பட்டியலே 60 பக்கங்களுக்கு மேல் உள்ளது! இவை எல்லாம் ஆசிரியரின் முயற்சியைக் காட்டுகின்றன.

எம்.ஜி.ஆரைப் பற்றிய  நூலை எழுதுவதற்கு முன், தி.மு.க.வின் நிறுவனரும் அதன் தனிப்பெரும் தலைவருமான சி.என். அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றை கண்ணன் வெற்றிகரமாக எழுதியிருக்கிறார். ஐ.நா. சபையின் அலுவலகங்களில் பல ஆண்டுகளாக  அனுபவம் பெற்றிருக்கும் கண்ணன்,  தமிழ் நாட்டின் அரசியல் சூழல்களை பற்றி, சென்னையில் உள்ள அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் பதிவு செய்த குறிப்புகளை எல்லாம் திறம்பட எடுத்தாண்டிருக்கிறார்.

தன்னை திராவிட இயக்கத்தின் குழந்தை என்று கூறிக் கொள்பவர் கண்ணன். ‘திராவிட சிசு’ என்று ஆதிசங்கரரின் 'சவுந்தரியலஹரி'யில் வரும் தொடர் நினைவுக்கு வருகிறது. அது ஞானசம்பந்தரை சுட்டுவதாகக் கொள்வார்கள்.  ஆர். கண்ணன் என்ற திராவிட சிசுவோ, ஈ.வே.ரா வழியில் வந்தவர். ஆனால் புத்தக நெடுகிலும் அவரைப் ‘பெரியார்’ என்று குறிப்பிடாமல் ஈ.வே.ரா.  என்றுதான் எழுதுகிறார். நேர்மாறாக, புத்தகத்தில் மு. கருணாநிதியை பெயரிட்டு குறிப்பிடுவதை அவர் அறவே தவிர்க்கிறார், ஒரே ஒரு இடத்தைத் தவிர. அந்த ஓர் இடம், மு.க.வே தன்னை கருணாநிதி என்று அழைத்துக்கொள்ளும் இடம்! அவசர நிலை பிரகடனம் செய்திருந்த இந்திரா காந்தி, செப்டம்பர் 1976ல், தமிழ் நாட்டின் வறட்சி மாவட்டங்களை பார்க்க சுற்றுப்பயணம் செய்தபோது, கருணாநிதி மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அப்போது, ‘ஒரு கருணாநிதி போனால் நூறு கருணாநிதிகள் வருவார்கள்’ என்று கலைஞர் கூறினாராம் (பக்கம் 218, எம்.ஜி.ஆர். - அ லைப்). கருணாநிதிக்குத் தன்னை கருணாநிதி என்றும், 100 கருணாநிதிகள் என்றும் குறிப்பிட்டுக்கொள்ளும் அதிகாரம் இருக்கலாம், திராவிட குழந்தையான எனக்கு அந்த அதிகாரம் ஏது என்பது புத்தக ஆசிரியரின் எண்ணம் போலும்!

எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலம், அவருடைய பெற்றோர், பிறப்பு என்பவற்றை குறித்தெல்லாம் இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை. 'ஆனந்த ஜோதி' திரைப்படத்தில் குட்டி கமல்ஹாசனிடம் எம்.ஜி.ஆர், ‘‘எங்கப்பா எவ்வளவோ சம்பாதிச்சார். அதெல்லாம் எப்படியோ போயிடுச்சு’’, என்பார்.   அந்த வசனம் எம்.ஜி.ஆர்., தன்னுடைய  வாழ்க்கையைப் பற்றி வெளிப்படுத்திய தகவல். அதன் பின்னணியில் உள்ள விஷயங்கள் என்ன? கொச்சி சமஸ்தானத்தில் நீதித்துறை அதிகாரியாக இருந்த எம்.ஜி.ஆரின் தந்தை கோபால மேனன், ஒரு வில்லங்கமான வழக்கில் சிக்கி, அல்லது சிக்கவைக்கப்பட்டு, சமூக பகிஷ்கரிப்புக்கு ஆளானார். அதன் பிறகு பாலக்காடு அருகே சத்யபாமாவை மணந்து கண்டியில் தஞ்சம் அடைந்தார் என்றுதான் தெரிகிறது. இணையத்தில் கூட இதுபோன்ற செய்திகளுக்கான இணைப்புகள் உள்ளன. ஆனால், அதையெல்லாம் ஆசிரியர் கண்ணன் ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்தவில்லை. குளித்துக்கொண்டிருந்த ஒரு நம்பூதிரி, ஆடையில்லாமல் ஒரு நாயர் பெண்முன் தோன்றி  அவளுடன் ‘சம்ஸாரித்தார்’  என்றும், அதைக் கண்டு பொறுக்காத எம்.ஜி.ஆரின் தந்தை, நம்பூதிரியை பிட்டத்தில் பிரம்பால் விளாசினார் என்றும் கூறப்படும் ஒரு கட்டுக்கதையை ஆசிரியர் முன்வைக்கிறார். இந்தக் கதையை, ‘அபாகிருபல்’  என்று குறிப்பிடுகிறார்.  அந்த ஆங்கிலச்சொல்லுக்கு ‘புனையப்பட்ட’, ‘கட்டுக்கதையான’, ‘பொய்யான’ கூற்று என்று பலவித அர்த்தங்கள் உண்டு. இந்த அஸ்திவாரம் இல்லாத புனைவை ஆசிரியர்  ஏன் முன்வைக்கிறார்? தான் எழுதும் சரிதத்தினுடைய நாயகனின் தந்தையைக் குற்றமற்றவர், குற்றங்களைக் கண்டால் எதிர்ப்பவர் என்று காட்ட உதவுகிறது என்பதாலா? ‘நான் ஆணையிட்டால்’ என்று சாட்டையும் கையுமாக ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் எம்.ஜி.ஆர். பாடியதற்கு  அவர் தந்தையிடமே ஒரு முன்னோட்டம் காட்டவா? எப்படி இருந்தாலும் புனையப்பட்ட விருத்தாந்தத்தால் வீங்கப்போவது நம்பூதிரியின் பிட்டம்தானே! ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, திராவிடக்கொள்கைப்படி நடக்கவேண்டிய ஒன்றுதானே அது!நாடக உலகில் எம்.ஜி.ஆரின் ஆரம்பகால நிகழ்ச்சிகளைக் கூற, புத்தக ஆசிரியர் மிகுதியாக நம்புவது, 1970ன் தமிழ் புத்தாண்டிலிருந்து ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்?’ தொடரை. அந்தத் தொடருக்கு ஆனந்த விகடன் தந்த முன்னோட்டம், அது எழுதப்பெறுவதற்கான காரணத்தை கூறியது. --‘‘கலைத்துறையில் உன்னதமான இடத்தை அடைந்தவர்கள் பலர் உண்டு. அரசியல் துறையில் பிரசித்திப்பெற்று, மக்களிடம் மகத்தான  செல்வாக்கை சம்பாதித்துக்கொண்டவர்களும் உண்டு. ஆனால் இந்த இரண்டு துறைகளிலும் ஒருங்கே மகோன்னத இடம்பெற்றவர்கள் மிகவும் குறைவு.விரல்விட்டு எண்ணக்கூடிய அத்தகைய அபூர்வ மனிதர்களிடையே, தமக்கென சிறப்பான இடம்பெற்று நிற்பவர், மக்கள் திலகம்....... ’’

‘ஆட்சியில் எனக்கு இடம் கொடு’ என்று எம்.ஜி.ஆர். அறைகூவல் விடுவதுபோல் மேற்படி வரிகள் ஒலிக்கின்றன. இது அந்தத் தொடர் அப்போது ஆரம்பிக்கப்பட்டதற்கான சூழல். இந்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ எம்.ஜி.ஆரின் நூற்றாண்டில் அவருடைய வாழ்க்கைச்சுவடுகளை பின்னோக்கிப் பார்ப்பதற்கான ஆவணமாக உதவுகிறது என்பது நல்லதுதான்!    ஆனால்,  தொடரில் எம்.ஜி.ஆர். சில விஷயங்களை நேரடியாக சொல்லவில்லை. அவர் தன்னுடைய பிம்பத்தை மிகவும் ஜாக்கிரதையாக காத்துக்கொண்டவர் என்று ஆசிரியர் கண்ணனே ஆங்காங்கே பிறருடைய கூற்றுகள் வாயிலாக கூறுகிறார். அப்படி இருக்கும் போது 'நான் ஏன் பிறந்தே'னில் அவர் முன்வைக்கும் விஷயங்களை ஈயடிச்சான் காப்பியாக எடுத்துக் கொள்ளாமல், திசைக்காட்டிகளாக எடுத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். இதற்கு ஓர் உதாரணம், 1944ல் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த ‘சாயா’ படம் நின்றுபோன விஷயம். தான் நிராகரிக்கப்பட்டதை வெளியில் அப்படியே கூறமுடியாமல் பாடுபட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். இடியாப்பம் பிழிவதுபோல் விஷயங்களை அவர் குழப்புவதிலிருந்து அவருடைய சங்கடம் புரிகிறது.

மணிரத்னம் எடுத்த ‘இருவர்’ படத்தின் தலைப்பைப்போல், தலைவர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்று இருவரின் இழுப்புக்கு கட்சி ஆளானது. இருவருக்கும் நடந்த அரசியல் சடுகுடுவில் நம்ப முடியாத திருப்பங்களும் உண்டு, திருப்ப முடியாத அவநம்பிக்கைகளும் உண்டு. எதிர்கட்சித் தலைவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின்பு, கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு கொடுத்த இடைவிடாத குத்தலும் குடைச்சல்களும் உண்டு...எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிய போது கண்ணீரும் கம்பலையுமாக கருணாநிதி காட்சி அளித்த உணர்ச்சிகரமான கட்டமும் உண்டு...அது நெடுநாள் நட்பின் வெளிப்பாடா, அரசியல் சாணக்கியத்தின் அபாரமான நடிப்பா, இரண்டும் சேர்ந்த அரசியல் துடிப்பா....யார் அறிவார் பராபரமே! அரசியல் சதுரங்க விளையாட்டின் பல கட்டங்களை  ஆசிரியர் கண்ணன் கச்சிதமாகவும் விறுவிறுப்பாகவும் விவரிக்கிறார். இந்த இருவரின் பிரத்யேக ஆளுமைகளைப் புறந்தள்ளி, அரசியல் சதிராட்டமாகப் பார்க்கும் போது கூட, பொலிடிக்கல் த்ரில்லருக்கான பல அம்சங்கள் இதில் உள்ளன!

பல வைக்கோல்போற்களைப்போல் உள்ள தகவல் குவிப்புகளைக் கெட்டியான தாம்பாகக் கட்டித்திரித்து, வாழ்க்கை வரலாறு என்ற காளையைத் திறம்பட அடக்கிப்பிணைத்து, இழுத்துவந்திருக்கிறார் ஆர். கண்ணன். இந்த பிரயத்தனத்தில் விருப்புவெறுப்புகள் காரணமாக நடுநிலை தவறுவதும், சில சறுக்கல்கள் நிகழ்வதும் சகஜம்தான். எம்.ஜி.ஆர்., புதிய கட்சி தொடங்கிய பிறகு, தி.மு.க. ஆட்சி புதிய கட்சி மீது கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகள் குறித்து ஒரே  அடிக்குறிப்பில் கொடுத்திருப்பது, அத்தகைய சார்ப்பை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறு கடைசி கட்ட முயற்சி. எம்.ஜி.ஆர்., கட்சியை விட்டு வெளிவந்த பின், 'உலகம் சுற்றும் வாலிபன்' எடுக்கும் போது அன்றைய அரசு பல இடைஞ்சல்களை செய்துகொண்டே இருந்தது.

'திரும்பிப்பா'ரில் வரும் ‘கலப்படம்’ பாடலில் என்.எஸ். கிருஷ்ணன் நடித்தார், அவருக்கு ‘கலப்படம் கிருஷ்ணன்’ என்று பெயர் வந்தது என்கிறார் ஆசிரியர் கண்ணன். 'திரும்பிப்பா'ரில் இந்த காட்சியில் நடித்தவர், எம்.என்.கிருஷ்ணன் என்ற நடிகர், என்.எஸ். கிருஷ்ணன் அல்ல.

 அதே போல், ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ என்ற பல்லவி எம்.ஜி.ஆரைக் குறித்து எழுதப்பட்டதாக ஆசிரியர் பொருள்படுத்திக்கொள்கிறார். ஆண்டவனைப் பற்றித்தான் பாடல் முன்வைக்கிறது. பல்லவி தொடங்கும் முன் ஒரு கோயிலும் காட்டப்படுகிறது.

எம்.ஜி.ஆரை சந்திக்கும் முன்பே வாலி எழுதிய பாடல் இது. ‘பாதை தெரியுது பார்’ படத்திற்காக பாடலை வாலி தந்த போது, இசையமைப்பாளரான எம்.பி. சீனிவாசனால் நிராகரிக்கப்பட்டது. கம்யூனிஸ்டுகள் எடுக்கும் படத்தின் டைட்டில் பாடலில், 'ஆண்டவனுக்கு என்ன வேலை' என்று சீனிவாசன் அதை புறக்கணித்தார்.

ஆண்டவனைத்தான் பாடலின் பல்லவி குறிப்பிடுகிறது என்பதற்கு பாடலின் சரணத்திலேயே சான்று உள்ளது. ‘‘உனக்காக ஒன்று எனக்காக ஒன்று, ஒருபோதும் தெய்வம்  கொடுத்ததில்லை’’  என்ற வரி அதைத்தான் குறிப்பிடுகிறது. இன்னொரு சரணம், ‘பலர் வாட வாட, சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை’ என்று முடிகிறது.  பாடலுக்கு எம்.ஜி.ஆர்.  நடித்த விதத்திலிருந்தும், தன்னுடைய  வள்ளல்தன்மையைக் பாடல் குறிப்பதாக அவர் எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

(தொட­ரும்)