சுதந்திர தின விழா: மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு மேற்கு வங்க அரசு தடை

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2017 02:24

புதுடில்லி:

சுதந்திர தினவிழாவையொட்டி மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கைப்படி சுதந்திரதின கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டியதில்லை என்று மேற்குவங்க பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கூட நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் மணீஸ் கார்க் சுதந்திரத் தின விழாவை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று சுற்றறிக்கையினை எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி இருந்தார்.
பள்ளிக்கூடங்கள் தேசபக்தி உணர்வை ஊக்குவிக்க வேண்டும். பிரதமரின் புதிய இந்தியா பற்றிய லட்சியத்தை அடைய உதவும் வகையில் மக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை ஒரு எழுச்சியாக உருவாக்க உதவும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

ஆனால், மத்திய அரசின் சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டாம் என்று மேற்கு வங்க அரசு பள்ளிக்கூடங்களுக்கு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க சுற்றறிக்கை துரதிருஷ்டவசமானது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவாடேகர் கூறினார்.

சுதந்திர தின விழாவை அரசியல் அஜெண்டாவாக மேற்கு வங்க அரசு மாற்றியுள்ளது. இது குறித்து மேற்கு வங்க அரசிடம் நான் பேசுவேன் என்று ஜவாடேகர் தெரிவித்தார்.