நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு மட்டும் விதிவிலக்கு கோர புது முயற்சி

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 22:43

சென்னை,

நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு மட்டும் விதிவிலக்கு கோரும் அவசர சட்ட நகலுடன் டில்லிக்கு இன்று இரவு அதிகாரிகளுடன் புறப்பட தமிழக சுகாதார அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் முடிவு செய்துள்ளார்.

நாளை காலை உள்துறை அமைச்சகத்திடம் அவசர சட்ட வரைவு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார். தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது,

நீட் தேர்வு விஷயத்தில்   மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை.  நீட் தேர்விலிருந்து விலக்கு பெற, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலமுறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர். நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் - ஓராண்டுக்கு  விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார்.

கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்.

நீட் தேர்வில் நிரந்தர விலக்கு என்பது கிடையாது.

எனவே மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த  உறுதி மொழியைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆலோசனை நடத்தினர்.

அப்பொழுது, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்த ஆலோசனைப்படி தனி அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அவசரச் சட்ட நகலைத் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் இறங்கினார்கள்.

 நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கிடைக்கும் என்ற அறிவிப்பு, மாநில அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அவசரச் சட்ட நகலுடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நாளை மாலைக்குள்  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.