டில்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 21:44

புதுடில்லி,

தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டில்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டில்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்காததால், டில்லியிலேயே காத்திருந்தார். பின்பு, அவர் அங்கிருந்து மகாராஷ்டிராவில் உள்ள கோவில்களை தரிசணம் செய்வதற்காக ஷீரடி சென்றார். ஓபிஎஸ்ஸுடன் எம்.பி. மைத்ரேயனும் சென்றுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிரதமர், ஓ.பி.எஸ்ஸை சந்திக்க மறுத்தது ஏன் என்று தெரியவில்லை.
ஓபிஎஸ் இன்று காலை ஷீரடி சாய்பாபா கோயில், சனீஸ்வரன் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் ஓபிஎஸ்ஸை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார். அதனால் அவர் மஹாராஷ்டிராவிலிருந்து இன்று மாலை மீண்டும் டில்லிக்குச் செல்கிறார்.  

அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்புக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் பிரதமருடனான இந்த சந்திப்பைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகள் இணைப்பை பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.