பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் உள்ளிட்ட இருவர் பலி

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 20:03

ஜம்மு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஸைனாபோரா அருகே அவ்னீரா கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.  இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிப்பாய் இளையராஜா மற்றும் மஹாராஷ்டிரத்தை சேர்ந்த கவாய் சுமித் வாமன் ஆகிய இருவீரர்கள் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர்  எதிர் தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என டிஜிபி வைத் கூறியுள்ளார்.
 கவாய் சுமித் வாமன்              இளையராஜா

நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்

வீரமரணம் அடைந்த பி. இளையராஜா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்டானி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பெரியசாமி, மீனாட்சி தம்பதியரின் மகனான இளையராஜாவுக்கு செல்வி என்ற மனைவி உள்ளார்.