மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 19:17

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை - குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் உடைந்ததால் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ம்  தேதி ஓ.என்.ஜி.சி. எண்ணெய்  குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து மக்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.  ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில்  இன்று காலை 5 மணியளவில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்ததால் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உள்ளனர். மாதிரி மங்கலம் வழியாக செல்லும் ஓ.என்.ஜி.சி.குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாதிரிமங்கலம் வழியாக செல்லும் குழாயில் 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்து உள்ளனர்.

4வது முறையாக உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாயை மாற்றியமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை, பொது மக்கள் வசிக்கும் இடத்தில் எரிவாயுவால் பெரிதும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒஎன்ஜிசி குழாயில் எண்ணெய் கசிவைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வைகோ மாதிரிமங்கலத்திற்கு பயணம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று கும்பகோணம் சென்றிருந்தார்.  தமிழகத்திற்குள் நுழையும் ஓஎன்ஜிசி எந்திரங்களை உடைக்கப்போவதாகக் கூறி இன்று நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிட சென்றுள்ளார்.