தமிழக முதல்வரின் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தி

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 18:52

சென்னை

­ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு (14.8.2017) தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


காக்கும் கடவுள் எனப் போற்றப்படும் பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை  மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதகுல வாழ்க்கை நெறிமுறைகளை மேம்படுத்திட பகவத்கீதை என்ற ஒப்பற்ற ஞானநூலினை உலகிற்கு அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களை அழகிய வண்ணக் கோலங்களாலும் மாவிலை தோரணங்களாலும் அலங்கரித்து, கிருஷ்ணரே குழந்தையாக தங்கள் இல்லத்திற்கு வருவதாக எண்ணி, இல்லங்களின் வழிநெடுக குழந்தைகளின் பிஞ்சு பாதச் சுவடுகளை மாவினால் பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பால், பழங்கள், இனிப்பு பலகாரங்களை படைத்து, இறைவனை வழிபட்டு, உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

"எங்கெல்லாம் அதர்மம் நிலவுகிறதோ அங்கெல்லாம் தோன்றி தர்மத்தை நிலை நாட்டுவேன்" என்று அருளிய ஸ்ரீகிருஷ்ணர்  அவதரித்த இத்திருநாளில், உலகெங்கும் அறம் தழைத்து, அன்பும், அமைதியும், இனிமையும் பெருக வேண்டுமென்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது  உளமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.   இவ்வாறு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.