சுதந்திர தினம் : ஒரு லட்சம் போலீஸ் உஷார்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:38


சென்னை:

சுதந்திர தின பாதுகாப்பு உஷார் பணிகளில், தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

 ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக மத்திய உளவுப் பிரிவுகள் அறிக்கை அளிக்கும் வேளைகளில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இந்த வகையில், வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர தின விழா வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது, தவிர்க்க முடியாத காரணத்துக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படும் என, காவல்துறையின் எல்லா பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  

சென்னை தலைமைச் செயலக நுழைவு வாயிலில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  

சென்னை விமானநிலையத்தில், ஐந்தடுக்கு சிறப்பு பாதுகாப்பு அமலாக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) ஆயிரத்து 200 பேர் மற்றும் விரைவு அதிரடிப்படை குழுக்கள் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் வெளிப்புற பகுதிகளில் தமிழக போலீஸ் மற்றும் உளவுத்துறை சிறப்பு பாதுகாப்பு தொடங்கப்பட்டுள்ளது. 20ம் தேதி வரை, விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  

சென்னை மெரினா கடற்கரை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், தி.நகர் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிகப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு, பாதுகாப்பு அமலாகியுள்ளது. சென்னை சுற்றுவட்டார சாலைகளில் கூடுதல் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

இதுபோல் திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களின் முக்கியப் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.