விதிமுறை பின்பற்றப்படவில்லை வேட்டி, சேலை டெண்டர் ரத்து: ஐகோர்ட் அதிரடி

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:11


சென்னை:

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பான டெண்டரை, ‘விதிமுறை பின்பற்றப்படவில்லை’ என்று குறிப்பிட்டு, ஐகோர்ட் ரத்து செய்தது.  

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வேளையில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான நுால் கொள்முதல் செய்ய ரூ.450 கோடி மதிப்பிலான டெண்டரை, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இணை இயக்குனர் கடந்த ஜூன் 22ம் தேதி வெளியிட்டார். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்கள் ஆலைகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்றவில்லை என்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சான்றிதழ் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஜூலை 7ம் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டடிருந்தது.

இதை எதிர்த்து, ஸ்ரீவெங்கட்ராம் நூற்பாலை சார்பிலும், முருகானந்தம் என்பவர் சார்பிலும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி துரைசாமி விசாரித்தார்.

மனுதாரர்கள் தரப்பில், ‘பிற மாநில நிறுவனங்களை டெண்டரில் பங்கேற்க விடாமல் செய்யவும், வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டரை ஒதுக்கும் வகையில், இந்த நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், டெண்டர் விதிமுறைகள்படி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படவில்லை. ரூ.50 கோடிக்கு மேல் மதிப்புள்ள டெண்டரை இந்தியன் டிரேட் ஜர்னலினல் வெளியிட வேண்டும் என்ற விதிமுறையையும் பின்பற்றவில்லை’ என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், ‘கடந்த ஆண்டுகளில், நுால் கொள்முதல் நடத்துவதில் தாமதம் வந்தது. அதனால்தான் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 15 நாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டது’ என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி துரைசாமி, ‘‘விதிமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்டுள்ளதால், இந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வெளிப்படையான டெண்டர் சட்டத்தின்கீழ், விதிமுறைகளுக்கு உட்பட்டு, புதிய டெண்டர் கோர தமிழக அரசுக்கு அனுமதியளிக்கப்படுகிறது’’ என்று தீர்ப்பளித்தார்.