வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை : டிரம்ப் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 04:08

வாஷிங்டன்,

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அடக்குமுறையை தடுக்க தேவைப்பட்டால் வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.


வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை எதிர்த்து பல நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக வெனிசுலாவில் உணவு, மருந்து போன்ற அடிப்படை தேவைகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தில் தனக்கு ஆதரவாக 545 புதிய உறுப்பினர்களை மதுரோ நியமித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினரக்ளின் உரத்த குரலைக் கட்டுப்படுத்த இந்த நியமனல் உதவும் என மதுரோ கருதுகிறார்.

ஆனால் இந்த நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தெருக்களில் கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மதுரோவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மதுரோ ஒரு சர்வாதிகாரி என கூறிய டிரம்ப் நிர்வாகம் அவர் மீது பல தடைகள் விதித்தது. மாதுரோ அரசு பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் வெனிசுலா அரசியல சட்டத்தை தன் இஷ்டப்படி திருத்தி ஜனநாயகத்தை சீர்குலைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும். அங்கு அரசியல் சட்டத்தைக காப்பாற்றும் என டிரம்ப் தெரிவித்தார்

இந்நிலையில் வெனிசுலா விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவு  அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ஐநா தூதர் நிக்கி ஹாலே, மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர் மெக்மாஸ்டர் ஆகியோரிடம் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ‘‘வெனிசுலாவில் மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். பலர் கொல்லப்பட்டு வருகிறார்கள். வெனிசுலாவில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்க எங்களிடம் பல வழிகள் உள்ளன. தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம். அமெரிக்காவின் படைகள் வெகு தொலைவில் உள்ள நாடுகளிலும் உள்ளன. வெனிசுலா அமெரிக்காவில் இருந்து வெகு தொலைவில் இல்லை’’ என அதிபர் டிரம்ப் எச்சரித்தார். இதற்கு முன் வெனிசுலா அதிபர் மதுரோவின் தொலைபேசி அழைப்பை டிரம்ப் நிராகரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

டிரம்பின் அறிவிப்பை சுத்த பைத்தியக்காரத்தனம் என்றும் உச்சகட்ட பயங்கரவாதம் என்றும் வெனிசுலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாட்ரினோ விமர்சித்துள்ளார். வெனிசுலாவில் நிகழும் பிரச்சனைகளுக்கு அமெரிக்கா தான் காரணம் என மதுரோ அரசு குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலா தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகனின் பேச்சாளர் எரிக் பாஹோன் ‘‘எங்களுக்கு வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும்படி எந்த உத்தரவும் வரவில்லை. ஆனால் தேவைப்பட்டால் களத்தில் இறங்க நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்’’ எனக் கூறினார்.