ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பிலிருந்து சரத் யாதவ் நீக்கம்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 23:40

புதுடில்லி:

மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொறுப்பிலிருந்து சரத் யாதவ் நீக்கப்பட்டார்.

சரத் யாதவ்  -  நிதிஷ்குமார்
ஆர்சிபி சிங்


பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டுச் சேர்ந்து பீகார் முதல்வராக நிதிஷ் குமார் இரண்டாவது முறை பொறுப்பேற்றதை சரத் யாதவ் கடுமையாகக் குறை கூறினார். அதற்கு விலையாக இப்பொழுது மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தள தலைவர் பொறுப்பிலிருந்து சரத் யாதவை நீக்குவதாக கூறும் கடிதத்தை ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும் கூட்டாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் தந்தனர்.

நிதிஷ் குமாரின் நெருங்கிய நண்பரும், ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்த ராம் சந்த்ர பிரசாத் சிங்  (ஆர்சிபி சிங்) மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தளத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக சரத் யாதவ் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் ஆகஸ்டு 19ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் மேலும் பல தலைவர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் பீகார் மாநிலத்தில் சரத் யாதவ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் புதிய அரசியல் திட்டத்தை வகுக்க வாய்ப்புள்ளது.