எகிப்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 44 பேர் பலி, 180 பேர் காயம்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 18:51

கெய்ரோ

எகிப்து நாட்டில் அலெக்ஸாண்டிரியா நகரத்தின் அருகில் நேற்று இரவு நேருக்கு நேராக 2 ரயில்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கி 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 180 பேர் காயமடைந்தனர்.


”உயிரிழப்புகள் எண்ணிக்கை உயரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மோதிக்கொண்ட ரயில்களின் பாகங்களை முழுவதும் எடுக்கப்பட்டதும், இறுதியாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறிவிக்கப்படும்” என எகிப்திய அமைச்சரவை தெரிவித்தது.

நேற்று இரவு எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அலெக்ஸாண்டிரியா நகருக்கு ஒரு பயணிகள் ரயில் புறப்பட்டது. கேனல் சிட்டி ஆஃப் போர்ட்-இல் இருந்து புறப்பட்ட மற்றொரு ரயில் கிழக்கு அலெக்ஸாண்டிரியா கோர்ஷிட் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அங்கு வந்த ரயில், நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது என எகிப்தியன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தை பாதுகாப்புப் படை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு, ரயில்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிர்தப்பிய இமான் ஹாம்டி கூறுகையில், ”நான் அலெக்ஸாண்டிராவிற்கு ரயில் மூலம் வந்துகொண்டிருந்தேன். நான் வந்த ரயில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை என் வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன் ” என்று கூறினார்.

இதில் தப்பிய சிறுவன் கரீம் அப்தெல் வாஹிப் கூறுகையில், “என்னுடன் பயணித்த என் தாய் மற்றும் சகோதரனை காணவில்லை” என்று கதறினான்.

கெய்ரோ அலெக்ஸாண்டிரா ரயில் ஓட்டுநர் காவல்துறையினரிடம் சரணடைந்தார். பின்பு எல்ராமல் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.

இந்த விபத்து குறித்து உடனடி விசாரணை நடத்தி, எப்படி நடந்திருக்கும் என்பதை கண்டறிய எகிப்து பொது வழக்கறிஞர் நபில் சாடிக் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த பகுதிக்கு 75 ஆம்புலன்ஸுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களை அலெக்ஸாண்டிரியாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுவருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

எகிப்திய அதிபர் அப்தெல் ஃபட்டா எல்சிசி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார். 

ரயில் விபத்துகள் எகிப்தில் மிகவும் சாதாரணமாக நடக்கும் ஒன்று. சென்ற 2002 ஆம் ஆண்டு நடந்த ரயில் விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர். 2012 ஆம் ஆண்டு ரயில்வே கிராஸீங்கில் பள்ளி பேருந்துடன் ரயில் மோதியதில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் 2013 ஆம் ஆண்டு நடந்த ரயில் விபத்தில் 19 பேரி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.