மாநிலங்களவைத் தேர்தல்: யாருக்கு வெற்றி?

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2017

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின் பல முக்கிய தேர்தல்களை பாரதீய ஜனதா கட்சி சந்தித்துள்ளது. மிக முக்கியமான முடிவுகளை அந்தத் தேர்தல்கள் தந்துள்ளன. 


அந்தத் தேர்தல்களுக்கு தராத முக்கியத்துவத்தை குஜராத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலுக்கு பாரதீய ஜனதா தந்துள்ளது. குஜராத் மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன் நடந்த அதிரடிச் சம்பவங்கள் அந்தத் தேர்தலை மிகவும் முக்கியமானதாக மக்கள் முன் நிறுத்தியது. அதனால் இந்தத் தேர்தல் தவிர்க்க இயலாத முக்கியத்துவத்துடன் தானாக முளைத்த ராட்சத விருட்சமாக மாறிவிட்டது.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருக்கும் பொழுதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்திய பிரதமராக உயர்ந்தார். அவர் பிரதமர் பதவிக் காலம் முடிவதற்குள் குஜராத் பாஜ கையைவிட்டு போய்விடக் கூடாது. ஏனெனில் 2019ல் பொதுத் தேர்தலை பா.ஜ. சந்திக்கும்பொழுது அது பெருத்த இழப்பாக அமையும். எதையாவது செய்து அதனைத் தவிர்க்க பாரதீய ஜனதா விரும்புகிறது.

ஆளுங்கட்சியாக இருந்தாலும் நினைத்ததை எல்லாம் சாதிக்க முடிகிறதா?

மோடிக்கு பிறகு குஜராத்தில் முதல் பெண் முதல்வராக ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டார். அவர் மீது சில ஊழல் புகார்கள் எழுந்தன. நிர்வாகத் திறமை இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.  அதனால் முதல்வரை மாற்ற பாஜக தலைமை விரும்பிய பொழுது அது அவ்வளவு சுலபமான விஷயமாக அமையவில்லை. முதல்வர் பதவிக்கு போட்டிகள் முளைத்தன. ஆனாலும் அவற்றை எல்லாம் ஒடுக்கி விஜய் ரூபானி முதல்வராக நியமிக்கப்பட்டார். விஜய் ரூபானி தேர்வு பாஜகவும் முரண்பாடுகளின் மூட்டையாக இருப்பதைதெளிவுப் படுத்தியது


இதற்கிடையில் இடஒதுக்கீடு கோரி படேல்கள் நடத்திய போராட்டத்தினால் ஏற்பட்ட கசப்பை முற்றிலும் மாற்ற குஜராத் அரசால் முடியவில்லை. பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்குவதுதான் ப.டேல்களின் முதல் வேலை என்று போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஹர்திக் படேல் பிரகடனம் செய்துவிட்டார்.
அடுத்தது தலித்துகள் எழுச்சி, குஜராத் மாநில தலித்துகள் மனதில் மறையாத ரண வடுவாக உன நகரச் சம்பவம் உள்ளது. காரில் கட்டி நான்கு தலித் இளைஞர்களை இழுத்துக் கொண்டே சென்ற பசுக் காவலர்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் அந்த நான்கு தலித்துகளைத் தடியால் அடித்து நொறுக்கினார்கள்.

 இந்திய நாடு முழுக்க சமூக இணைய தளங்கள் வழி அந்த தலித் இளைஞர்களின் கதறலைக் கேட்டது. அதன் எதிரொலியாக குஜராத் மாநிலத்தில் தலித்துகளின் முதல் எழுச்சி மாநாடு நடந்தது.  இந்த மாநாட்டுக்காக கிராமங்களில் இருந்து புறப்பட்ட தலித்துகள் இணைய, இணைய அது மாபெரும் பேரணியாக குஜராத்தை குலுங்கச் செய்தது. இந்த எழுச்சி பாஜக அரசுக்கு பெருத்த  தலைவலியாக அமைந்தது.

குஜராத்தின் மொத்த மக்கள் தொகை 6 கோடி. அவர்களில் 15 சதவீதம் பேர் பழங்குடியினர்.

பழங்குடியினர் காட்டைவிட்டு கிராமங்களை விட்டு வெளியே தலைகாட்டாமல் இருந்தபொழுது பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தது. பழங்குடியினர் காட்டுப் பகுதிகளிலேயே தங்கி வாழமுடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வேலை தேடி மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

குஜராத் சிங்கங்கள் இரவில் அருகில் உள்ள ஊர்களுக்குள் நுழைந்து கண்ணில் தென்பட்ட பசு, காளை, எருமை, நாய்களை அடித்துச் சாப்பிட்டு விட்டு திரும்பவும் காட்டுக்குத் திரும்பிவிடுகின்றன.

ஆனால் பழங்குடியினருக்கு அப்படி அஸ்வமேத யாகப் பயணம் கிடைப்பதில்லை. பகலில் எடு பிடி வேலை பார்த்த பின், இரவு தலை சாய்க்க ஊர்  திரும்ப முடிவதில்லை. வேலை தேடிச் செல்லும் பழங்குடி இன மக்களுக்கு விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்சக் கூலிகூடக் கிடைப்பதில்லை. பழங்குடியினப் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் மிகவும் குரூரமானவை. எந்த வயதுப் பெண் என்றாலும் பாலியல் தொந்தரவை எதிர்கொள்ள நேரிடுகிறது. பழங்குடியின மக்களுக்கு பாரதீய ஜனதா கட்சி எதுவும் செய்யவில்லை என்ற எண்ணம் அழுத்தமாக குஜராத் பழங்குடியினர் மனதில் உள்ளது. பழங்குடியினருக்கென தனி அரசியல் கட்சி ஒன்று குஜராத்தில் முன்பு இருந்தது. குஜராத் பரிவர்தன் பார்ட்டி என்பது அதன் பெயர். தங்கள் தனித்துவத்தை யார் உறுதி செய்ய விரும்பினாலும் அது பாரதீய ஜனதாவுக்கு பிடிக்காது. விளைவு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற அக்கட்சி பாரதீய ஜனதாவுடன் இணைந்தது.

முன்பு போலவே பழங்குடியினர் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தெருவில் நிற்கிறார்கள்.  

கடந்த 20 ஆண்டு காலத்தில் ஷெட்யூல்டு பழங்குடியினருக்கு பாஜக உருப்படியாக எந்த திட்டத்தையும் வகுத்து அமல் செய்யவில்லை. உண்மையில் புறக்கணிக்கப்பட்ட வகுப்பாகவே பழங்குடியினர் இருக்கிறார்கள் என குஜராத் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் வசவா உறுதியாக அடித்துச் சொல்கிறார்.

குஜராத் மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு கண்ணுக்கு தெரியாமல் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. 2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அது முனிசிபாலிடிகளுக்கான தேர்தல். குஜராத்தில் உள்ள 27 முனிசிபாலிடிகளில் 15 முனிசிபாலிட்டிகளை  மட்டுமே பிடிக்க பாஜகவால் முடிந்தது.

காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது. குஜராத்தில் மொத்தம் 8,264 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் 2,891 பஞ்சாயத்துகளை மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இந்த முடிவுகளை ஆய்வு செய்த அரசியல் நோக்கர்கள் கிராம புறத்தில் பாஜகவின் செல்வாக்கு படுவேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதே சமயம் நகர்ப் புறங்களில் பழைய பலத்தை பாஜகவால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

1995 வரைக்கும் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அதன்பிறகு பாஜக வெற்றி பெற்றது. அதற்கு பிறகு காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை காங்கிரசுக்கு வந்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளில் 6 இப்பொழுது காங்கிரஸ் வசம். மொத்தமுள்ள 31 மாவட்ட பஞ்சாயத்துகளில் 21 காங்கிரஸ் கையில் உள்ளது. 193 தாலுகா பஞ்சாயத்துக்கள் குஜராத்தில் உண்டு. அவற்றில் 113 தாலுகா பஞ்சாயத்துகள் காங்கிரஸ் கையில் உள்ளன. இது மாற்றத்தின் அறிகுறி என்று காங்கிரஸ் நம்புகிறது. பாஜகவின் பலம் சரியவில்லை. இனிமேல் வீழ்ச்சி இல்லை என்று பாஜக தலைமை உறுதியாக நம்புகிறது.

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் மாநிலங்களைவைக்கு 3 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது. காங்கிரசின் மொத்த பலம் 52. அதில் 7 பேர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று மூன்று பேராக கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். ஒருத்தர் கட்சியிலிருந்து விலகவில்லை. ஆனால், கட்சியை இனிவரும் தேர்தலில் எல்லாவற்றிலும் தோற்கடிப்பது தான் என் வேலை எனக் கூறினார்.

அவர் காங்கிரஸ் ஆண்டபோது குஜராத் மாநில முதல்வராக இருந்தவர். 2017ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2018ம் ஆண்டு துவக்கத்தில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும்போது என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்தார். அதனை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. அதன் விளைவாக அவர் மகன் மற்றும் அவரது உறவினர்கள் என 7 பேர் கட்சியிலிருந்து விலகி நின்றார்கள்.

இந்த 7 பேர் போக மீதமுள்ள 44 பேரையும் பாஜக கொள்ளையடித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை பெங்களூருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது காங்கிரஸ் தலைமை. அந்த 44 பேருக்கும் தங்க இடம் கொடுத்து சாப்பாடு போட்டார் ஒரு கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்.

பாஜகவுக்கு எதிராக செயல்பட கர்நாடக காங்கிரஸ் அமைச்சருக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்? இதை மோடி அரசு அனுமதிக்குமா? உடனடியாக வருமான வரி அதிகாரிகள் குழு கர்நாடக அமைச்சரின் வீடு, விடுதி, டில்லி விடுதி எல்லா இடங்களிலும் வலைவீசி சோதனை நடத்தினார்கள்.

ஆனாலும் காங்கிரஸ் அசையவில்லை. தேர்தல் நாளன்று 44 பேரும் ஆமதாபாத் திரும்பினார்கள். இதற்கிடையில் காங்கிரசின் கூட்டணி கட்சிகளையும் வாக்களிக்கும்படி காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் உண்டு.

ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒரு உறுப்பினர் உண்டு. இந்த 3 பேரையும் சேர்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு 47 வாக்குகள் கிடைக்க வேண்டும். மொத்தம் 45 வாக்குகள் இருந்தால் வெற்றி பெற முடியும். எனவே வெற்றி உறுதி என்று காங்கிரஸ் நம்பி இருந்தது.

அந்த நம்பிக்கையில் முதலில் மண்ணை அள்ளிப் போட்டவர் கமிஷி படேல் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. 44 பேரில் ஒருவராக கர்நாடகத்துக்கு போய் குஜராத்துக்கு திரும்பி வந்தவர் அவர். அவர் அழுதுக்கொண்டே நான் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டேன் என்று கூறினார்.

பாவம் கமிஷி படேல்!

காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசின் இரண்டு உறுப்பினர்களையும் நம்ப முடியாது என காங்கிரஸ் வேட்பாளரிடம் தேசியவாத காங்கிரஸின் மாநில தலைவர் பிரபுல் படேல் கூறினார்.


அதனால் அந்த இரண்டு வோட்டும் நம்பமுடியாத வாக்குகள். அதேபோல அவை கடைசியில் அகமது படேலுக்கு கிடைக்காமலே போய்விட்டது. இன்னொரு கூட்டணி கட்சி ஐக்கிய ஜனதா தளம். அவரிடம் நேரில் பேசும்போது அவர் நான் காங்கிரசுக்கு தான் வாக்களிப்பேன் என்று கூறினார். ஆனால் வாக்கு பதிவு செய்யும் இடத்தில் பாஜக தலைவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அதையும்மீறி அகமது படேலுக்கு வாக்களித்தார் வசவா.
ஆக 44ல் ஒன்று போக மீதி 43 இன்னொன்று வந்ததால் மொத்தம் 44 வாக்குகள் நிலைபெற்றன. ஒரு வாக்கு இல்லாமல் அகமது படேல் தோற்கப்போகிறோம் என துல்லியமாகக் கணக்கு போட்டார்.

இந்த கணக்கை மாற்றி எழுதிய பெருமை காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு உண்டு. மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதைக் குறிப்பிட்டதும் அந்த வாக்குச்சீட்டை எடுத்துக்கொண்டு போய் அவரவர் ஏஜெண்டுகளிடம் காட்ட வேண்டும்.

கட்சிக் கொறடா விதித்த ஆணையை மீறி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்காமல் தடுப்பதற்கு கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான முயற்சிதான் அந்த நிபந்தனை.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் பற்றிய தகவல் சபாநாயகருக்கு தெரிவித்து, அவர் அந்த பதவி விலகல் கடிதத்தை ஏற்று ஒப்பமிட்டால்தான், அவர்கள் ராஜினாமா செய்தது சட்டபூர்வமாக நடைமுறைக்கு வரும். தேர்தல் முடியும் வரை சபாநாயகருக்குத் தெரிவிக்க வேண்டாம் என காங்கிரஸ் நினைத்ததில் ஆச்சரியம் இல்லை.

இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வாக்களித்ததும் காங்கிரஸ் ஏஜெண்டிடம் காண்பித்து இருந்தால் ஒரு பிரச்னையும் இல்லாமல் தேர்தல் முடிந்திருக்கும் அந்த அவசர குடுக்கைகள் பாஜக தலைவர் அமித்ஷாவிடம் வாக்குச்சீட்டைக் காண்பித்தார்கள்.

வாக்குப்பதிவு நிலையத்தில் 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருந்த காமிரா இ்ந்த முறைகேடான செயலையும் பதிவு செய்தது. அங்கிருந்த காங்கிரஸ் ஏஜெண்டு அதனை ஆட்சேபித்தார். அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் வாக்குப்பதிவு அதிகாரி மவுனம் காத்தார்.

வாக்கு எண்ணிக்கை துவங்கும்போது, நான் தாக்கல் செய்த ஆட்சேபணை கடிதத்துக்கு பதில் கூறாமல் வாக்குகளை எண்ணக்கூடாது என வலியுறுத்தினார்.

பிரச்னை இந்திய தேர்தல் கமிஷனின் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு போய் சேர்ந்தது. தொலைபேசியில் இந்த தகவல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் கிடைத்தது.


பாஜக மத்திய அமைச்சர்கள் குழு ஒன்றை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியது. காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய அமைச்சர்கள் குழு ஒன்றை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியது. இரண்டு அணிகளும் தேர்தல் கமிஷனிடம் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

தேர்தல் கமிஷனுக்கு புரியும் படியாக ப. சிதம்பரம் வழக்கு விவரங்களை தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வந்தது. எம்.எல்.ஏ.க்கள் வாக்குச் சீட்டை தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம்தான் காண்பிக்க வேண்டும். அமித் ஷா பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர். அவரிடம் வாக்குச் சீட்டை காட்டியது தவறு. வாக்குச்சீட்டை காட்டிய இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வாக்கை ரத்துச் செய்ய வேண்டும்.

ஹரியாணாவில் இப்படித்தான் தவறுதலாக காங்கிரஸ் கட்சி தலைவரிடம் காண்பித்தேன். 2016ல் நடந்தது இது. எனது வாக்கு செல்லாது என்று அன்றைய தேர்தல் அதிகாரி தீர்ப்பு வழங்கினார் என்று காங்கிரஸ் பேச்சாளர் சூரஜ் வாலா சாட்சியம் அளித்தார்.

வாக்குப்பதிவு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட விடியோவை தேர்தல் அதிகாரி போட்டு பார்த்தார்கள். அமித் ஷாவிடம் ஓட்டுச் சீட்டுகளைக் காட்டும் காட்சி பதிவாகி இருந்தது. அதனால் தேர்தல் கமிஷன் இரண்டு வாக்குகளும் செல்லாது என அறிவித்தது. அதனால் தோல்வியைச் சந்திக்க இருந்த அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

உண்மையில் மாநிலங்களவை தேர்தலில் மோடி வெற்றி பெற்றதாகவோ சோனியா வெற்றி பெற்றதாகவோ கூற முடியாது. அது தேர்தல் கமிஷனின் .வெற்றி.

தேர்தல் கமிஷனின் வெற்றி தந்த பலத்தில் 2017ம் ஆண்டு இறுதியில் நடக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என அகமது படேல் உறுதியாகக் கூறுகிறார்.

இன்னும் நான்கு மாதங்கள்தான் உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.


கட்டுரையாளர்: க. சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Padmanaban 27-12-2017 11:14 PM
Biased reports.

Reply Cancel


Your comment will be posted after the moderation