வைர விழாவும் பவள விழாவும்!

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் செயல்பாடுகளும் அ.தி.மு.க.வை சுற்றியேதான் நிகழ்ந்து கொண்டுள்ளன. மற்ற அரசியல் கட்சிகளின் நிலை குறித்தோ, அதன் செயல்பாடுகள் பற்றியோ ஊடகங்கள் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

தின இதழ்கள், வாரம் இருமுறை, வார இதழ்கள், மாத இதழ்கள் எனத் தொடங்கி காட்சி ஊடகங்கள் வரையிலும், கடந்த சில மாதங்களாக அதிமுக.வையே  பாடுபொருளாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

அதிமுகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும், அதன் தொண்டர்களும் டிவி.யில் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ன வருகிறது என்றுதான், கவலையோடும், கலக்கத்தோடும் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுகவினர் அதன் தலைவரான கருணாநிதியின் சட்ட சபைப் பணிக்கான வைரவிழாவை கொண்டாடி மகிழ்ந்த கையோடு, திமுகவின் அதிகார பூர்வ நாளேடான ‘முரசொலி’யின் பவளவிழாவை  கொண்டாட தொடங்கி உள்ளனர்.

திமுக.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையிலும் கட்சியினரிடத்திலும், பொது வெளியிலும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும், ‘தலைவர்’ என்பதற்குரிய அழுத்தமான பதிவை கொண்டு வரமுடியவில்லை. இன்னும் பலருக்கு அவர் இளைஞர் அணித் ‘தளபதி’யாகவே தான் தெரிகிறார். கருணாநிதியின் ஒட்டுமொத்த அதிகாரத்தை யும் கையில் எடுத்துக் கொண்டாலும், திமுகவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஸ்டாலின் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குறைபாடு திமுகவின் முன்னணியினர் பலருக்கே உண்டு. குறிப்பாக, 89 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும், ஆளும் கட்சியான அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்டு ஆளுக்கொரு நிலையில் செயல்படும் நிலையிலும் சரியான ‘ராஜதந்திர’ அரசியலை, கருணாநிதியை போன்ற சமார்த்திய, சாகச அரசியலை ஸ்டாலின் கையில் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

சட்டசபையிலும் சரி, வெளியிலும் சரி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பதைவிட, கூடுதலாக ‘கொளத்தூர்’ தொகுதி பிரச்னைகளில் மட்டுமே தீவிரம் காட்டுகிறார் என திமுக.வினரே வெளிப்படையாகப் பேசிக் கொள்கின்றனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் உட்கட்சிப் பிரச்னை நாளுக்குநாள் வலுவடைந்து வருவதை ‘செயல் தலைவர் கண்டு கொள்வதில்லை என்ற குறையும் உள்ளது. இதுபோன்ற குறைகளை மறைப்பதற்கு உதவும் என்ற வகையில்தான் வைர விழாவும், பவள விழாவும் நடத்தப்படுவதாக கூறுகின்றனர்.

கருணாநிதியின் சட்டசபைப் பணிக்கான வைரவிழாவில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் என தேசியத் தலைவர்களும், பிறமாநிலத் தலைவர்கள் பலரும் வந்து, விழா நாயகனான கருணாநிதியை பாராட்டியதைவிட, ஸ்டாலினைத்தான் அதிக அளவில் பாராட்டி புகழ்ந்து தள்ளினார்கள்.

தனது தந்தை கருணாநிதியை போலவே, மாநில அரசியலிலும், தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெறக்கூடிய தலைவராக ஸ்டாலின் உருவாவார் என தேசிய தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். அதன் மூலம், ஸ்டாலின் ‘இமேஜ்’ உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது ஒருநாள் பத்திரிகை  செய்தியோடு முடிந்து விட்டது. இருந்த நிலையிலிருந்து ஒரு அடி கூட உயர்ந்ததாகத் தெரியவில்லை.அனைத்துக்கட்சி கூட்டங்களிலும், வைர விழாவிலும் பங்கேற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சிக் கட்சிக்கு எதிரான வலுவான அணியை உருவாக்கி களம் காணும் முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை.

அறிக்கைகள், போட்டிகள், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போன்றவை வெறும் அடையாளமாக, சம்பிரதாயமாகத்தான் பார்க்க முடிகிறதே தவிர, அதில் உயிரோட்டம்  இருப்பதாக, ஆட்சிக்கு எதிரான ‘கடுமை’ காட்டப்படுவதாக தெரியவில்லை என்றே பலரும் கருதுகின்றனர். அதனால்தான், தமிழகம் வந்து சென்ற மத்திய அமைச்சர் பூனம் மகாஜன், ‘சூரியன் மறைகிறது’ எனக் கூறி சென்றுள்ளார்.

அந்த தொய்வு நிலையிலிருந்து திமுக.வை உயர்த்திப் பிடிப்பதற்காகவே, ‘முரசொலி’ நாளேட்டின் பவள விழாவை சென்னையில் இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

கருணாநிதியின் மூத்தபிள்ளை என அவராலேயே வர்ணிக்கப்பட்ட முரசொலி பத்திரிகை தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி நடத்தப்பட்ட இந்த விழாவில், முதல்நாள் தமிழகத்தின் முன்னணி பத்திரிகை அதிபர்கள், ஆசிரியர்கள், கமல், வைரமுத்து உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்று கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் முரசொலிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அதிமுக பா.ஜ.க, பா.ம.க. தவிர்த்த மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அக்கட்சிகளின் தலைவர்களும், பிரதி நிதிகளும் பங்கேற்று சிறப்புச் செய்துள்ளனர். இந்த விழாவில் பங்கேற்ற அரசியல் கட்சிகள், நிச்சயம் எதிர்வரும் தேர்தலில் திமுக. அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

மூன்று கூறுகளாக பிளவுபட்டு வலுவிழந்த நிலையில், ஆளுமை மிக்க தலைமையும் இல்லாத சூழலில் தவித்துக்கொண்டிருக்கும் அதிமுகவை எளிதில் வீழ்த்துவதற்கு திமுகவுக்கு வாய்ப்பு நிறையவே உள்ளது. அத்தகைய வாய்ப்பினை வைரவிழா – பவளவிழா கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்தி தருமா? அல்லது மீண்டும் அதிமுக – திமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்குமா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

***