பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 13–8–17

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017

இந்த வாரம் இரண்டு விஷயங்களை அலசலாம்.  இன்று ஆகஸ்ட் 13. வருகிற 15ம்தேதி இந்தியாவின் சுதந்திர தினம். புதிய குடியரசு தலைவர் இந்த விழாவில் கலந்து கொள்ளப்போகிறார். மற்றபடி வழக்கமான சம்பிரதாய விழாவாகத்தான் இருக்கப்போகிறது.

நாளை அதாவது ஆகஸ்ட் 14ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி.  அந்த கண்ணனை நினைக்காமல் இருக்க முடியவில்லை.   வடக்கே கண்ணனுக்கு இருக்கிற பாப்புலாரிட்டி தெற்கே இருக்கிறதா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

காரணம்– இங்கே 'ராமாயணம்' சொல்லப்பட்ட அளவுக்கு, 'மகாபாரதம்' சொல்லப்படுவதில்லை. பாரதம் படித்தால் வீட்டில் கலகம் வரும் என்பதை ஏதோ மூடத்தனமாக பரப்பி வைத்திருக்கிறோம். மேலும் ராமாயணம் என்பது ராமனையே தொடர்ந்து செல்லும் ஒரு காவியம். அதனால், ராமன் கதை முழுவதும் விரவிக் கிடப்பான்.

ஆனால் கண்ணன் கதை அப்படியில்லை.  மகாபாரதத்தில் முக்கியமான காலகட்டங்களில் வந்து போகும் ஓர் ஆபத்பாந்தவன் மட்டுமே. அதனால் கண்ணனைப் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு அதிகமாக கிடைப்பதில்லை.

ராமாயணமும், மகாபாரதமும் கட்டுக்கதை என்று பகுத்தறிவாளர்கள் வாதிடலாம். அது கட்டுக்கதையாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், லவுகீக வாழ்க்கையின் சகல பகுதிகளையும் உள்ளடக்கி, ஒரு  பெருங்கதை எழுதக்கூடிய சக்தி இன்று எந்த எழுத்தாளருக்காவது உண்டா? இப்போது நாகரிகம் வெகுவாக வளர்ந்து விட்டது. உலகமே ஒரு பூகோள கிராமம் ஆகிவிட்டது. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால், global village ஆகிபோனது. நாடுகளுக்கிடையே யான தூரமும் குறைந்துவிட்டது. அடுத்த நொடியே உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கூட உறவினர்கள், நண்பர்களிடம் போன் மூலமாகவும், வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலமாக உடனே தொடர்பு கொள்ள முடிகிறது. தகவல் பறிமாற்றங்கள், தொடர்புகள் சுலபமாகிவிட்டன.  பல நாட்டுக்கதைகளையும் கையிலிருக்கும் கிண்டில் மூலமாகவே கூட படித்து விட முடியும். கூகிளைத் தட்டினால் பல விஷயங்கள் (நிறைய குப்பைகள் இருந்தாலும் கூட ) கிடைக்கின்றன. நம் மூதாதையர்களை விட  நாம் அறிஞர்கள் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டோம். இந்த மாதிரி சூழலில்  சகலவிதமான குணாதிசயங்களைக்  கொண்ட பல பாத்திரங்களை உருவாக்கி ஒரே கதையாக எழுதுகின்ற சக்தி இன்று யாருக்காவது உண்டா?

நம்முடைய இதிகாசங்கள் கற்பனையாக இருந்துவிட்டுப் போகட்டும்.  அந்த கற்பனைக்கு ஈடு கொடுக்க உலகத்தில் இன்னும் ஓர் எழுத்தாளன் பிறக்கவில்லை. பெருங்கதைகளும்  அவற்றுக்குள் உபகதைகளுமாக எழுதப்பட்ட நமது இதிகாசங்களில் இடம் பெறும் பாத்திர படைப்புகள் தான் எத்தனை அற்புதம்! அவை கூறும் வாழ்க்கை தத்துவங்கள்தான் எத்தனை?

நம்பிக்கை, அவநம்பிக்கை, ஆணவம், மீட்சி, காதல், கற்பு, ராஜதந்திரம், குறுக்கு வழி, நட்பு, அன்பு, பணிவு, பாசம், கடமை இப்படி வாழ்க்கையின் எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையையும் நமது இதிகாசங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மகாபாரதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். பொறுமைக்குத் தருமன்.  துடிதுடிப்புக்கு பீமன்.  ஆண்மைக்கும், வீரத்திற்கும் அர்ஜ்ஜூனன். மூத்தோர் வழியில் முறை முறையாக தொடர நகுலன், சகாதேவன். பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்ட சக்திமிக்க ஆன்மாவாக பாஞ்சாலி.   உள்ளதெல்லாம் கொடுத்து, கொடுப்பதற்கு இனி எதுவுமில்லையே என்று கலங்கும் வள்ளலாகக் கர்ணன்.  நேர்மையான ராஜதந்திரத்திற்கு எடுத்துக் காட்டாக கண்ணன். குறுக்கு வழி  ராஜதந்திரத்திற்கு ஒரே உதாரணமாக சகுனி. தீய குணங்களின்  மொத்த வடிவமாக கவுரவர்கள். தாய்ப்பாசத்திற்கு ஒரு குந்தி. தந்தைக்காக தன் தாம்பத்ய வாழ்க்கையையே தியாகம் செய்து விட்ட பிரம்மசாரி பீஷ்மர்.  நேர்மையான கடமையாளனாக வில்லில் சூரர் விதுரர்.

பாத்திரங்களின் படைப்பிலேயே சம்பவங்கள் கருக்கொண்டுவிட்டன.  இந்தப் பாத்திரங்களின் குணங்களை மட்டுமே சொல்லிவிட்டால்,  கதை என்பது எந்த தற்குறிக்கும் புரியும்.  இந்த கதை வெறும் ஆணவத்தின் அழிவை  தர்மத்தின் வெற்றியை மட்டும் குறிப்பதல்ல. லவுகீக வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் பயன்படக்கூடிய படிப்பினை இருக்கிறது. கதையின் இறுதிக்களமான  குருஷேத்திரத்தில்  கதையின் மொத்த வடிவத்திற்கும் தீர்ப்பு வழங்கப்படுகிறது.  பகவத் கீதை, மகாபாரதக் கதையின் சுருக்கமாகி விடுகிறது.  அரசியல் சமுதாய நீதிக்கு இதுவே கைவிளக்காகி விடுகிறது.  கண்ணனை நீங்கள் கடவுளாக கருத வேண்டாம். கடவுள், அவதாரமெடுப்பார் என்பதையே நம்ப வேண்டாம்.  பரந்தாமன் – வையத்துள் வாழ்வாங்கு  வாழ்ந்து வானுரையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவன் என்றே எண்ணிப் பார்க்க வேண்டும்.  கீதையை தேவநீதியாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும்,  மனிதநீதியாக அது கண்முன்னே விரியும்.  கண்ணன் வெறும் கற்பனைதான் என்றாலும், கற்பனா சிருஷ்டிகளில் எல்லாம் அற்புத சிருஷ்டி, கண்ணனின் சிருஷ்டி.

ஊழ்வினை பற்றி தெரிய வேண்டுமா? பாரதம் படி. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமா? பாரதம் படி. ஒன்றை நினைத்தால் வேறொன்று விளையுமா? பாரதம் படி.  செஞ்சோற்றுக் கடனா? நன்றியறிதலா ? பாரதம் காட்டும்.  பெற்ற மகனை தன் மகன் என்று சொல்ல முடியாத பாசக்கொடுமையா?  குந்தியைப் பார். ரத்தப்பாசத்தால் உள்ளம் துடிக்கிறதா?  சொந்த சகோதரர்களை எதிர்த்து போராட வேண்டி வருகிறதா? அப்போது என்ன  செய்வதென்று தெரியவில்லையா ? கீதையை படி.

 ஏழைக்கும் பணக்காரனுக்கும் நட்பு இருக்க முடியுமா?   கண்ணன் கதைக்கு உபகதையான குசேலன் கதையை படி.  விஞ்ஞானம் வளராத காலத்தில், போர் துறையில் எத்தனை வகையான ராஜதந்திரங்கள் இருந்தன?  அத்தனையையும் ஒட்டுமொத்தமாக அறிந்து கொள்ள, மகாபாரதம் படி. ஒரு பாத்திரத்திற்கு ஒரு குணம் விசேஷம் என்றால், அதைக் கதையின் இறுதிவரையில் கொண்டு செலுத்திய கற்பனை சிறப்பை அளவிட வார்த்தைகள் இல்லை.

 சரி, கண்ணனிடம் வருவோம். கண்ணன் ஒரு மாபெரும் கலைஞன்! அவன் புல்லாங்குழல் எடுத்தால் அண்ட சராசரங்களே கட்டுண்டு கிடக்குமே!  அவனைப் போல ஒரு சிறந்த காதலனை பார்க்க முடியாது.  அவன் ஒரு சிறந்த அரசியல்வாதி!  அதிபுத்திசாலியான ஒரு மனோதத்துவ நிபுணன்.  ஒரு சிறந்த தொழில்மேதை!  ஒரு தீர்க்கதரிசி!  மிகச்சிறந்த ஆன்மிக குரு. சிறையில் பிறந்த ஒரு பாமரக் குழந்தை மேதையாக துவாரகைக்கே  மன்னனான வெற்றிக் கதை, கண்ணனின் கதை.  கண்ணனின்  குணாதிசய மேன்மையை அவனுடைய உருவகம் சரித்திர இதிகாச பக்கங்களில் கொட்டிக் கிடக்கிறது.  கண்ணன், வாழ்ந்த ஓர்  உண்மை பாத்திரம் என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்லலாம். முதலில், அவன் ஒரு கதையின் கதாபாத்திரம் என்று வைத்துக்கொண்டால், கதைகளுக்கு பெரும்பாலும் ஓர் எழுத்தாளர் மட்டுமே இருக்க முடியும். அந்த எழுத்தாளர் ஒரு கதாபாத்திரத்தின் குணாம்சங்களை விவரித்துக் கொண்டே  போவார்.  ஆனால் கண்ணனைப் பற்றி ஒரே ஒரு புத்தகமோ,  ஓலைச்சுவடு மட்டுமா இருக்கிறது?

கண்ணனைப் பற்றி அதிகமாக பேசப்படுவது, எல்லோருக்கும் அறிமுகமானது மகாபாரதம்தான். ஆனால்  மகாபாரதம் ஹஸ்தினாபுரத்தை சுற்றியே வருகிறது.  அதனால் மகாபாரதம் பாண்டவர்கள், கவுரவர்களைச் சுற்றியே வருகிறது.

கண்ணன் ஹஸ்தினாபுரம் வந்து பாண்டவ, கவுரவர்களை தொடர்பு கொள்ளும் போதுதான் கண்ணனின் கதாபாத்திரம் தென்படுகிறது.

மகாபாரதம் என்கிற முழு இதிகாசத்தில் கண்ணனின் குழந்தைப்பருவம் மட்டும் தான் விவரிக்கப்படுகிறது. அவனுடைய வாழ்க்கையின் கடைசி 36 வருடங்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அதே சமயம், கண்ணனின் மனோநிலையை விளக்கும் ஒரே இதிகாசம், மகாபாரதம்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

காரணம், மகாபாரதத்தின் இறுதியில் கண்ணனுக்கும், அர்ஜூனனுக்கும் நடந்த விவாதமே 'பகவத் கீதை'யானது. கீதையின் மூலமாகத்தான் கண்ணன் தன் மனநிலையையும், தன் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறான்.  அதில் கண்ணன் தான் யார் என்பதை 64 வரிகளில் சொல்லி விடுகிறான். அதில் முக்கியமானது இவைதான். இதை கண்ணதாசன் அருமையாக தனது 'பகவத் கீதை'யில் சொல்லியிருப்பார்.

 கண்ணன் யார்?

 அவனே சொல்கிறான்.

 வேதங்களில் நானேதான் சாமவேதம்

விண்ணுலவும் தேவர்களில் இந்திரன் நான்

 ஆதிக்கப் புலன்களிலே உள்ளம் நானே

 சாதிக்கும் சூத்திரரில் சங்கரன் நான்

 தன்னியக்க அரக்கரிலே குபேரன் நான்

 நால்திக்கும் பயன்படுத்தும்  நெருப்பும் நானே!

 நன்குயர்ந்த மலைகளிலே இமயம் நானே

 தேவர்களில் குருபிரகஸ்பதியும் நானே

 சேனாதி பதிகளிலே கந்தன்நானே

 தாவிவரும் நீர்நிலையில் கடலும்நானே

 தவமுனிவர் பரம்பரையில் பிருகு நானே

 நாவில்வரும் சொற்களிலே ஓமும்நானே

 நல்வேள்வி வகைகளிலே ஐயமும்நானே

 ஏவலுக்கும் அசையாத தன்மைதன்னில்

 இமயத்தின் இறுதிநிலை நானேயானேன்

 சீர்வரும் மரங்களிலே அரசும் நானே

 தேவமுனி நாரதனும் நானேயானேன்

 சேர்ந்துவரும் கந்தர்விசித்ர ரதன்நானே

சித்தர்களில்  கபிலமுனி எனது பேரே

 ஆர்புரவி அமிர்தத்து உச்சை சிரவம்

 யானைகளின் ஐராவதம் என்பேரே

பேருடைய மனிதர்களைத் தொகுத்துப் பார்த்தால் பேரரசன் நானே அறிந்து கொள்!

* * *