பாட்டிமார் சொன்ன கதைகள் – 126– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2017

அர்ஜுனன்  தோற்றான்!

பாலைவன மிருகங்களுக்கு வியர்வையே சுரக்காத தடித்ததோல் அமைந்திருக்கு. பனிப்பிரதேச விலங்குகளுக்கு வெப்பத்தை வெளியே விடாத மென் மயிர் அடர்ந்த தோல் இருக்கும்.

 `` கடவுள் நீ கேட்டதை கொடுப்பது இல்லை. உனக்கு தேவையானதைக் கொடுக்கிறார் ‘ என்கின்றன வேதங்கள்.

 கிருஷ்ணர் என்று சொன்னாலே பெரும் அசுரர்களுக்கே கலக்கம் ஏற்படும். எவராலும் எதிர்கொள்ள முடியாத சக்கராயுதம்தான் அவரது சிறப்பு அம்சம்.  இதன காரணமாகவே சக்ரதாரி, சக்ரபாணி என்ற பட்டப் பெயர்கள் அவருக்கு ஏற்பட்டன.

பாரத யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப் பின்னர் யாதவ குலம் அழிவதற்கு சில தினங்கள் முன்பு கிருஷ்ணரின் சக்ராயுதம் திடிரென மறைந்துவிட்டது.  அது கானாமற் போய்விட்டது என்று  ஏன் கூறப்படவில்லையென்றால் கிருஷ்ணரைத் தவிர, வேறு எவராலும் அதனை தூக்க முடியாது.  மகாபலம் பொருந்திய அசுவத்தாமனே அதனை நகர்த்த இயலாது தடுமாறினான். எனவே அதை வேறு எவரும் எடுக்க வாய்ப்பில்லை..

இயற்கையில் காரணமின்றி எதுவும் படைக்கப்படுவதில்லை. என்று ஆன்மீகம் மட்டுமின்றி அறிவியலும்  கூறுகிறது. உடலில் சிக்கலான அமைப்பில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு பயன்பாடு உண்டு. அந்த நோக்கம் முடிந்ததும் அது இற்று விழுந்துவிடும்.

 பெண்ணுக்கு மார்பகங்கள் படைக்கப்பட்டதே பிறக்கும் குழந்தைக்கு பாலூட்டவே. ஒரு பெண் குழந்தை பிறந்ததுமே,  அவள் மார்பில் பாலை சுரக்கும் செல்கள், அனைத்தும் சரிவர உள்ளதா என ஒரு முறை பாலை சுரந்து வெளியேற்றும்.  குழந்தை பிறந்த முதல் சில தினங்களில் சுயம்பால்  போல வெளீர் மஞ்சள் நிறத்தில் அது வெளியேற்றப்படும்.

 பின்னர் அந்த அணுக்கள் தூங்கப் போய்விடும்.  13 ஆண்டுகள் கழித்து அவள் பருவமடையும்போது அவை உறக்கம் நீங்கி விழித்தெழும்.

 விதை முளைக்க ஆரம்பித்ததும், அதன் உள்ளே இருக்கும் பருக்களில் உள்ள சத்தை எடுத்துக்கொண்டு வளரும் செடி வளர்ந்ததும், பருப்புக்கள் இற்று விடும்.

அதுபோல் பூமியின் பாரம் தீர்ப்பது என்ற இலக்கை எட்டிய பின்பு சக்கரப்படைக்கு வேலை இல்லை. எனவே அது புறப்பட்ட இடமான  பாற் கடலுக்கே சென்றுவிட்டது. அங்கு கிருஷ்ணரை எதிர் நோக்கி காத்திருந்தது ஸ்ரீமத் பாகவதம்.

 வேறொரு சம்பவமும் உள்ளது.

 கிருஷ்ணரின் மறைவு குறித்து அறிந்த அர்ஜுனனும், பாண்டவர்களும் தீராத சோகத்தில் மூழ்கிய பின்னர் கிருஷ்ணரின் விருப்பப்படி துவாரகை சென்றான் அர்ஜூனன் அங்கு இருந்த பெண்கள் பெரும் குரலில் அழுதனர். முதியவரான வசுதேவர் அர்ஜுனனை கட்டிப்பிடித்து அழுதார்.

 பின்பு வசுதேவர், ` காந்தாரியின் சாபம் ஈடேற கிருஷ்ணனே விரும்பியிருக்கிறான் என்னிடம் அவன்,  நீ வருவாய் என்றும் பெண்களை உன்னோடு அனுப்பும்படியும்  சொன்னான். துவாரகை கடலில் முழ்கப் போகிறது ‘ என்றும் கூறினான். என்றார் அர்ஜூனனிடம்.

 அடுத்த நாள் வசுதேவர் உயிரைவிட்டார். வசுதேவர், கிருஷ்ணர், பலராமர் உடல்கள்  எரியூட்டப்பட்டு இறுதிச் சடங்குகல் நடைபெற்றன.  பின்னர் ஏழாம் நாள் அனைத்துப் பெண்களையும்  அழைத்துக் கொண்டி இந்திரப் பிரஸ்தம் கிளம்பினான். அவன்  புறப்பட்ட சிறிது நேரத்தில் கடல் பொங்கியது.

துவாரகை கடலில் மூழ்குவதைப் பார்த்தபடியே விரைவாக அனைவரும் சென்றனர்.  பஞ்சந்தம் என்ற பகுதிக்கு ( இன்றைய பஞ்சாப்)  அவர்கள் வந்தபோது ஒரு கள்வர் கூட்டம் அவர்களை  தாக்கியது. அர்ஜுனன் காண்டிபத்தை எடுத்தபோது அவனால்  அதில் நாண் ஏற்றக்கூட முடியவில்லை.   அதே சமயம் கள்வர்கள், அவனது காண்டிபத்தை பறித்து வீசிவிட்ட்டு அவனையும் அடித்து   நொறுக்கிவிட்டு பொருட்களை கவர்ந்து சென்றனர். கொல்லப்பட்ட  பெண்கள் போக எஞ்சியவர்களுடன் அர்ஜுனன் இந்திரப் பிரஸ்தம்  திரும்பினான்.

 கிருஷ்ணரின் மனைவி ருக்குமணி நெருப்பு மூட்டி சிதையில்  புகுந்தாள். சத்தியபாமா தவம் செய்ய காடு சென்றாள்.  பாண்டவரள், அபிமன்யுவின் பேரன் பரீட்சித்துக்கு முடி சூட்டினர் இந்திரபிரஸ்தத்துக்கு கிருஷ்ணரின் பேரன்  அதிருத்தனின் மகன் வஜ்ரன் அரசனாக்கப்பட்டான்.

முன்னதாக இந்திரபிரஸ்தம் திரும்பிய அர்ஜுனன் வியாசரின்  ஆசிரமத்திற்குச் சென்று வேதனையுடன் நடந்தவற்றைக் கூறினான் .

பீஷ்மர், துரோணர், கர்ணன்,கிருபர், அசுவத்தாமா என  மாபெரும் வீரர்களையெல்லா புறங்கண்ட என்னை ஒரு சாதாரண கள்வர் கூட்டம் தாக்கி வீழ்த்திவிட்டு என் கண் எதிரே  எல்லாவற்றையும் கவர்ந்து சென்றது. போரில் நெருப்பு மழை  பொழிந்த என் காண்டீபத்தை என்னால் தூக்கவே முடியவில்லை. இது தோல்வி என்று கூட சொல்ல முடியாது. அவமானப்பட்டு திரும்பியுள்ளேன்.

இவ்வாறு மனம் நொந்து புலம்பிய அர்ஜுனனிடம் வியாசர் கூறினார், `நடந்ததை நினைத்து வருத்தப்படாதே. விருஷ்ணிகளும், அந்தகர்களும், போஜர்களும் சாபத்தால் மடிந்தனர். தவ காரிய நிறைவேற மனித உடலெடுத்து வந்தவர்கள் கிருஷ்ணரும், பலராமரும், காரியம் முடிந்ததும் திரும்பிச் சென்றனர்.   நீங்களும்  இக்காரியத்தின் பயன்படானவர்கள்தான். உனது அஸ்திரங்கள் பயனற்று போன தன் காரணம் அவற்றின் பயன் தீர்ந்துவிட்டது. பலம், செல்வம், புகழ் எடுத்த செயலை முடிக்கும் திறன், திட்டமிடும் புத்தி எல்லாம் காலத்தை ஒட்டி தோன்றுபவை. காலத்தினாலேயே  முடிவடைபவை.  ஒருவன் மகா மனிதனாக  திகழ்வதும், சாரமற்றவனாகப் போவதும் காலத்தினால் தான். உனது போர்த்திறன் அஸ்திர வித்தை எல்லாமே அளிக்கப்பட்ட நோக்கம் முடிந்து விட்டதால் பயனற்று விட்டன. நீங்களும் நற்கதி பெற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

 அவர் இவ்வாறு சொன்ன பிறகு...

– தொடரும்