மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 63

பதிவு செய்த நாள் : 08 ஆகஸ்ட் 2017

சோழ நாட்டின் உட்பகுதியில் இருப்பது மேன்மழநாடு. அதை மழநாடு என்று அழைப்பார்கள். திருச்சிராப்பள்ளிக்கு வடகிழக்கே, கொள்ளிடத்துக்கு வடபாகமும், வடகிழக்கு பாகமுமாகும்.

இந்த நாடு மேன்மழநாடு, கீழ்மழநாடு என்று இரு பாகமாகும்.   மேன்மழ நாட்டுக்கு லால்குடி தலைநகர். கீழ் மழநாட்டிற்கு திருமழபாடி தலைநகர்.

மழவர் என்றால் உழவர். மழு என்றால் அது ஒரு வகை ஆயுதம்.

 நீர்வளம் மிகுந்த நாடு இது!

அந்நாட்டிலுள்ள வாசனைப் பூஞ்சோலைகள் மீது வானத்து நிலா தவழ்ந்து ஏறும். நெல்லரிகள் படர்ந்த வயல் வரப்புக்கள் மீது வண்டுகள் வந்தமரும்.  குவித்து வைத்திருக்கும் நெற்போர்கள் மீது மேகங்கள் தங்கி இளைப்பாறும். அந்நாட்டு உழத்தியர்கள் கொய்சகம் வைத்து அழகாகப் புடவை கட்டுவார்கள். அவர்களுடைய தைலக் கூந்தலில் சிறைவண்டுகள் சிரித்துத் தூங்கும். வாசனை வீசும் தாமரை மலர்களில் கயல்மீன்கள் தூங்கும். தித்திக்கும் மாமரச் சோலைகளின் நிழலில் கரிய எருமைகள் தூங்கும். வயல்களில் கருப்பஞ்சாறு காய்ச்சுவதனால் எழுகிற  புகையானது மேகத்தைப் போலவும், ஆலைகளைப் பள்ளர்கள் அழுத்திச் சுற்றும்போது எழுகிற ஒலியானது இடிமுழக்கத்தைப் போலவும் கேட்டுக்கொண்டிருக்கும்! ஆற்று வெள்ளத்தின் அலைகளால் ஒதுக்கித் தள்ளப்படும் சங்குகள் வாழை மரங்களின் மீது தாவி விழும்!

 பிறகு கொடிகள் வழியாக கமுகு மரத்தில் தவழ்ந்து ஏறும்! அப்போது பாளைகள்  பூக்களைச் சொரிவது போல், முத்துக்களைச் சொரியும்.  வயல்புறங்களில் திரியும் புத்தினம் கன்றுக்குட்டிகள் கொல்லைப்புறத்து மான்குட்டிகளோடு குதித்தோடும்! முல்லை அரும்புகளில் தங்கியிருக்கும் வண்டுகள், தேன் குடிப்பதற்காக நீலோத்பல மலர்களுக்குத் தாவிப் பாயும்.  மரக்கிளைகளில் தங்கியிருக்கும் நாரைகள், வயல்களிலுள்ள கெண்டை மீன்கள் மீது தாவிப்பாயும்.  சோலைகள் சூரிய வெப்பத்தைத் தாங்கித் தடுத்துக் கொள்ளும். இத்தகைய சிறப்புகளுடன் பூமிக்கு ஓர் ஆபரணம் போல விளங்கும் மேன்மழ நாட்டில் மங்கலத்திலகம் போல், திருமங்கலம் என்னும் மூதூர் ஒன்று உண்டு.

 திருமங்கலத்துப் பெருங்குடிகளில் ஒன்றாகிய ஆயர் (இடையர்) குலத்தில் ஆனாயர் என்ற பெரியார் ஒருவர் வந்து அதன் குலவிளக்குபோல் தோன்றினார். அவர் தூய ஒளி பொருந்திய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டு புரிந்து வந்தார். மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணங்களாலும் சிவபெருமானின் திருவடிகளைத் தவிர,  வேறொன்றையும் அவர் விரும்பமாட்டார். குலத்தொழிலாகிய பசுமந்தைகளைப் பசும் புல்வெளிகளுக்கும் விசாலமான காடுகளுக்கும் ஓட்டிச் சென்று மேய்ப்பர்.

வனங்களில் வசிக்கும் புலி முதலிய கொடிய மிருகங்களாலும், நோய்களாலும் பசுக்களுக்கு எந்தவித துன்பமும் ஏற்படாமல் பாதுகாப்பார். பசுக்கள் விரும்பும் நல்ல புல்லையும், தூய நீரையும் ஊட்டி பசு இனங்கள் அளவில்லாமல் பெருகும்படி தொழில் புரிந்து வருவார். கன்றுகளும், கறவைப் பசுக்களும், பால் மறந்த கிடாரிகளும், சினை மாடுகளும், புதிதாகக் கன்று போட்ட பசுக்களும், காளைகளும், எருமைக் கூட்டங்களும் நிறைந்திருக்கும் பல தொழுவங்கள் திருமங்கலத்தில் இருக்கும்.

ஆயர்குலத்தைப் பேணி மாடுகளையெல்லாம் மேய்ப்பதோடு ஆண்டவனிடம் அன்பை பெருகும்படி புல்லாங்குழல் வாசிப்பதிலும் ஆனாயர் சிறந்து விளங்கினார்.

 இசை நூல்கள் கூறியுள்ளபடி  அமைக்கப்பட்ட தமது வேய்ங்குழலில் எம்பெருமானின் ஐந்தெழுத்தையும் உள்ளுறையாக வைத்து ஏழிசையில் சுருதி பெற வாசித்து, உள்ளமெல்லாம் உருகி பெருகும்படி எங்கும் இசையமுதைப் பரப்பிச் செல்வார். அவருடைய புல்லாங்குழல் இசையில் சகல சராசரங்களும் வசமிழந்து உருகி நிற்கும்.

ஒரு நாள் ஆனாயர் தமது தலையில் குடுமியை உயர அள்ளி முடித்து, அக்கொண்டை யிலே மலர்மாலையைச் சூடிக் கொண்டார். பச்சை இலைகளையு டைய கொடிய வடத்தில் நறுவினப் பூவைப் புனைந்து செங்காந்தள் பூசைக் காதுகளில் அணிந்து, அழகான நெற்றியிலும் வலிவான உடம்பிலும் ஒளிவீசும்படி திருநீற்றை நிறையப் பூசிக்கொண்டார். வெண்ணீறு விளங்கும் மார்பிலே மலர்மாலை தரித்து, இடையிலே மரவுரியும் அதன் மேல் பூம்பட்டும் கட்டி, பாதங்களில் செருப்பணிந்து, கையிலே வென்கோலும் வேய்ங்குழலும் எடுத்துக் கொண்டு இடையர்களும் பசுக்கூட்டங்களும் புடைசூழக் காடு நோக்கி ஆனாயர் புறப்பட்டுச் சென்றார்.

 அப்பொழுது கார் காலமாகையால், ஆனாயர் செல்லும் வழியில் ஒரு கொன்றை மரத்தையும், அம்மரத்தில் பூங்கொத்துக்கள் பூத்து வாசனை மாலைபோல் குலுங்கிக் கொண்டிருப்பதையும் கண்டார். அந்தக் கொன்றை மரமானது சடையில் கொன்றைமாலை அணிந்த சிவபெருமானைப் போல காட்சியளித்தது.  இயற்கையை இறைவனாகவும், எல்லாவற்றையும் சிவமாகவும் பார்க்கும் ஆத்ம பரிபக்குவ நிலையை ஆனாயர் அடைந்தவரானதால்தான் கொன்றை மரமும் அவருக்கு சிவபெருமான் போல் தோற்றமளித்தது. அதைப் பார்த்த ஆனாயரின் மனது அன்பு கரைபுரண்டு ஓடியது.  சிந்தையெல்லாம் சிவனிடம் ஒன்றியது. அந்த ஆனந்தப்பெருக்கில் கேட்போர் எலும்பெல்லாம் உருகும் வண்ணம் சிவபெருமானது திருவைந்  தெழுத்தினையும் உள்ளுறையாக வைத்துப் புல்லாங்குழலை எடுத்து ஆனாயர் இசைமாரி பொழியலானார்.

 முதலாவதாக, குறிஞ்சிப் பண்ணை வாசித்தார். பிறகு முல்லைப்பண்ணை வாசித்தார். பிறகு கோடிப் பாலை பண்ணிற்கு உரிய உச்ச இசை, மத்திம இசை என்னும் இரண்டு ஸ்தானங்களிலும் நமச்சிவாயமெனும் ஐந்தெழுத்தை வைத்து இசைத்தார். ஆயத்தம், எடுப்பு, உக்கிரம் சஞ்சாரம், இடாயம் என்று ஐவகைத் துறைகளில் முறையாக புல்லாங்குழல் ஊதினார். மத்தரம், மத்திமம், தாரம் என்னும் மூவகை சுருதிகளில் முறைப்படி அளவு குறையாமலும் இசை நூல்களில் கூறிய இல்லண முறை வழுவாமலும் அளவுபடுத்தி விரல்களை அசைத்து இயக்கி, குழல் வாயும் தன் வாயும் இணைந்தொழுக இசை வடித்தார்.  பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் என்னும் வண்ண இசைகளை யெல்லாம்  கொண்டு வந்தார்.