கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 88

பதிவு செய்த நாள் : 07 ஆகஸ்ட் 2017
‘ராஜகுமாரி’யில் ‘எம்.ஜி.ஆர். படம்’ என்பதற்கான சில அம்சங்கள்!

பதினோரு ஆண்டுகள் துணை வேடங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., சென்டிரல் ஸ்டூடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் எடுத்த ‘ராஜகுமாரி’யில் கதாநாயக நடிகராக உயர்ந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ல் எம்.ஜி.ஆருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு முந்தைய ஆண்டில், ‘ஸ்ரீமுருகன்’ படத்தில் சிவபெருமானாக நடித்து, தாண்டவ நடனம் ஆடுவதற்கு ஆறு மாதங்கள் கடுமையான நடனப் பயிற்சி செய்திருந்தார் எம்.ஜி.ஆர்.

நடன அசைவுகளையும் முத்திரைகளையும் கற்பதில் எம்.ஜி.ஆர். காட்டிய சிரத்தையைப் பார்த்து, ஜூபிடர் நிறுவனத்தார் அவருக்கு 'ராஜகுமாரி'யில் நாயக வேடம் கொடுத்திருந்தார்கள்.

பாடத்தெரியாதது எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த காலகட்டத்தில், பின்னணிப் பாடல் முறை புதிதாக வந்ததால் அவரை ஹீரோவாக உயர்த்த முடிந்தது. அப்போது நாடகமேடையில் பிரபல நடிகராக  இருந்த எம்.எம். மாரியப்பா, எம்.ஜி.ஆருக்கு பாட்டுக் குரல் கொடுக்க அமர்த்தப்பட்டார். மாரியப்பாவை தமிழ் சினிமாவின் முதல் ஆண் பின்னணிப் பாடகர் என்று குறிப்பிடலாம்.

ஜூபிடர் ஸ்தாபனத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் 'ராஜகுமாரி'யில் நடித்துக்கொண்டிருந்த போது, டி.ஆர். ராமச்சந்திரன் ஜூபிடரின் 'வித்யாபதி'யில் தலைமை வேடத்தில் நடித்துக்கொண்டிருந்தார். பெயருக்கு முன்னால் இருந்த எழுத்துக்களில் வித்தியாசம் இருந்தாலும், இரண்டு ராமச்சந்திரன்களை முக்கிய நடிகர்களாக வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் குழப்பம் ஏற்படுத்த விரும்பவில்லை. எம்.ஜி.ராமச்சந்திரனின் பெயரில் கத்திரி போட்டு, எம்.ஜி.ராமச்சந்தர் ஆக்கிவிட்டார்கள்!

'ராஜகுமாரி' படத்தின் கதாநாயகி நடிகை (கே. மாலதி) அப்போது  எம்.ஜி.ஆரை விட பிரபலமானவராக இருந்ததால்,   எம்.ஜி.ஆரைவிட அவருக்கு அதிக சம்பளம் தரப்பட்டது.  அந்தக் காலத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்லவேண்டிய நிலையில் இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது. அவரால் பேச முடியாமல்போனாலும் பரவாயில்லை, முகம் காட்டி வலம் வந்தாலே போதும் என்ற அளவில் தமிழ் நாட்டு அரசியல் இருந்தது. எவ்வளவு மாற்றம்! எத்தனை மாறுபட்ட கோலங்களை வாழ்க்கை காட்டுகிறது!

அவரைக் கதாநாயகனாகக் கொண்டு ‘ராஜகுமாரி’ படம் உருவாகும் போது, அது நிறைவடைய வேண்டுமே என்ற கவலையும் பயமும் எம்.ஜி.ஆருக்கு இருந்துகொண்டே இருந்தன. ஏனென்றால், ஸ்டூடியோ தயாரிப்புகளின் விஷயத்தில், ‘ஆண்டவன் கொடுத்தான், ஆண்டவனே பறித்துக்கொண்டான்’ என்ற நிலை மிக எளிதாக சம்பவிக்கும் ஒன்றாக இருந்தது.

படம் வளரும்போது ஸ்டூடியோ முதலாளிகள் அவர்களுடைய எடுபிடிகளுடன் படத்தைப் போட்டுப்பார்ப்பார்கள். பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது  எடுபிடிகள் சரியாக 'வத்தி' வைத்தாலோ, படம் போகிற திசையையும் மாற்றி நாயக நடிகனையும் கூட மாற்றிவிடுவார்கள்!எம்.ஜி.ஆருக்கு இந்த விஷயத்தில் ஏற்கனவே கசப்பான அனுபவம் இருந்தது. அவர் 1944ல்  ஹீரோவாக நடித்த ‘சாயா’ (நிழல்) என்ற படம், பெயருக்கு ஏற்ப இடையில் முடங்கிப்போய் அவரை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. (ஏவி.எம். ஸ்டூடியோவில் ‘பராசக்தி’ எடுக்கப்பட்ட போது, தன்னுடைய தலை தப்புமா என்ற அச்சம் சிவாஜிக்கு அடிக்கடி வந்தது.  ஸ்டூடியோ வளாகத்திலேயே அவர் பலமுறை கண்ணீர் வடித்தார்.  (ஸ்டூடியோவில் செழுமையாக வளர்ந்த மரங்கள் தன்னுடைய கண்ணீரில் வளர்ந்தவைதான் என்று பின்னாளில் கூறினார்).

‘ராஜகுமாரி’ படக்கதை, மானைத்தேடி வந்த முருகன் வள்ளியைக் கண்டான் என்ற போக்கை ‘உல்டா’ பண்ணியது. ஒரு நாட்டு அரசனின் ஒரே வாரிசான ராஜகுமாரி (மல்லிகா),  வேட்டையாட காட்டுக்குப்போகிறாள். மானை நோக்கி அவள் செலுத்திய அம்பு, சுகுமார் (எம்.ஜி.ஆர்) என்ற வாலிபனின் கையைத் தாக்குகிறது. ராஜகுமாரிக்கும் அடிப்பட்ட சாமானியனுக்கு மிடையே காதல் அரும்பி, மலர்ந்து, பூத்துக்குலுங்குகிறது.

பொதுவாக, காதல் என்றாலே அதற்கு எதிர்ப்பு இருந்தால்தானே சுவாரஸ்யம்!  தலையாட்டிப்பொம்மையான அரசனை கைக்குள் போட்டுக்கொண்டிருக்கும் அரண்மனை ஓநாய் ஆலகாலன்தான் அவர்களின் காதலுக்கு முதல் எதிரி  (டி.எஸ். பாலையா). ஆனால் பெயரில் தோன்றுவதுபோல் அவன் ஒன்றும் மிகப்பயங்கரமானவன் அல்ல. தொடைநடுங்கி. சுயநலக்காரன். இளவரசி காதலிக்கும் சாமானியனின் தாயிடம் சென்று, அவளை பயமுறுத்திவிட்டு வருகிறான்!

ஆனால், இளவரசியின் காதலுக்கு ஆலகாலனை விட பெரிய ஆபத்துக்காத்திருக்கிறது. அவன்தான், உண்மையிலேயே படுமோசமான மந்திரவாதி (எம்.ஆர். சாமிநாதன்). அவனுக்கு சாப்பாட்டுப்பிரியனான ஒரு பெரிய காமெடி பீஸ்,  அசிஸ்டன்ட்டாக இருந்தாலும் (புளிமூட்டை ராமசாமி), சாமிநாதன் ஒரு பார்வை பார்த்தால் போதும், நல்ல உள்ளங்கள் எல்லாம் நடுங்கும்.  நடிப்பு அந்த மாதிரி. இத்தகைய மந்திரவாதிக்கு அருள் சூசை ஆரோக்கிய (ஏ.எஸ்.ஏ) சாமியும் அவருடைய வசன உதவியாளர் மு. கருணாநிதியும் கச்சிதமாக ‘குருஜி’ என்ற பெயரை சூட்டியிருந்தார்கள்!

ஒரு தீபபூதத்தின் சக்தியுடன், மாளிகை, பணிப்பெண்கள் என்று சகலத்தையும் சிருஷ்டித்துக்கொள்ளும் ஆற்றல்கொண்ட மந்திரவாதியை, தீபபூதம் கொண்டு வந்த பெண்களின் அழகு மயக்கவில்லை. படத்தின் ராஜகுமாரியைக் கண்டதும் கசிந்துருகி அவளை அலேக்காக 'அபேஸ்' செய்துகொண்டு மறைந்துவிடுகிறான்!

தொலைந்துபோன இளவரசியைத் தேடி மீட்டுவர, தாயிடம் விடைபெற்றுக்கொண்டு காதலன்  புறப்படுகிறான். காதலித்தால் மட்டும் போதுமா? காதலியை மீட்பதில் வரும் பல தடைகளைத் தாண்டிவரவேண்டாமா? வேறொரு தீவில், ஒரு போட்டியில் ஈடுபட்டு வெல்கிறான் நாயகன். அவன் மேல் மோகம் கொண்ட தீவின் விஷ ராணிக்கு கடுக்காய் கொடுத்துவிட்டு முன்னேறுகிறான்.

மந்திரவாதியின் ரகசிய இடத்தை அடைந்து அங்கும் ஜெயிக்கிறான். உச்சக்கட்டமே முடிந்துவிட்டது என்று நாம் நினைக்கும் போது, கடைசியில் சுவை சேர்க்க இன்னொரு திருப்பம் வருகிறது!

இப்படி படிப்படியாக கவனத்தை ஈர்க்கும் திருப்பங்கள் கொண்ட ‘ராஜகுமாரி’, வெற்றி அடைந்தது. எம்.ஜி.ஆரின் முதல் கதாநாயகப் படம் லேட்டாக வந்தாலும், தயாரிப்பாளர்களையும் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும் விதமாக அமைந்தது.

ஆனால் அதற்கு முன், படம் முடிவடைந்ததும் அதை விநியோகஸ்தர்கள் சீண்ட முன்வரவில்லை! டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த ‘வித்யாபதி’யும் எம்.ஜி.ராமச்சந்தர் நடித்த ‘ராஜகுமாரி’யும் ஒரே சமயத்தில் விற்பனைக்கு வந்தன. கோவை சென்டிரல் ஸ்டூடியோவிற்கு வந்து விநியோகஸ்தர்கள் இரண்டு படங்களையும் பார்த்தார்கள். அவர்கள் ‘வித்யாபதி’ படத்தைத்தான் அதிகத்தொகை கொடுத்து வாங்கினார்கள். எம்.ஜி.ஆர். நடித்த 'ராஜகுமாரி'யை ஏற்காமல், 'வித்யாபதி'க்கே ஒப்பந்தம் போட்டார்கள். ‘‘ராஜகுமாரி ஜனரஞ்சகமான படம், அதை உங்களுக்கு குறைந்த விலைக்கே தருகிறேன்,’’ என்று ஜூபிடர் அதிபர் சோமு சொன்னதை வெறும் வியாபார தந்திரம் என்று அவர்கள் நினைத்தார்கள் (மேற்படி தகவல்களைப் பின்னாளில் தெரிவித்தவர், ஜூபிடர் நிறுவனத்தின் இன்னொரு பாகஸ்தரான எஸ்.கே. மொய்தீனின் மகன், எஸ்.கே. ஹபிபுல்லா). இரண்டு படங்களும் வெளிவந்தபின், 'வித்யாபதி' படுதோல்வி அடைந்தது. 'ராஜகுமாரி' நல்ல வரவேற்பு பெற்றது.

'ராஜகுமாரி' ஜனரஞ்சகமான படம் என்று தயாரிப்பாளர் சோமு சொன்னது முற்றிலும் உண்மை. ஒரு மிருதுவான காதல் ஜோடியின் இணைவு பல தடைகளை மீறி சாத்தியமாவதை திரைக்கதை தொய்வில்லாமல் எடுத்துச் சென்றது. ஒவ்வொரு கட்டத்திலும் மனதைக் கவரும் கதாபாத்திரங்கள் வந்தன. ஆரம்ப கட்டத்தில் நல்லான் என்ற பாத்திரத்தில் வந்த எம்.ஈ. மாதவன், அசாத்தியமான ஆற்றல் கொண்ட சிரிப்பு நடிகர். அவருக்கு ஜோடி, சிறந்த நடிகையான சி.கே. சரஸ்வதி.  அடுத்த கட்டத்தில் கதாநாயகன் ஒரு தீவில் தனியே இருக்கும் போது பகு, பகுனி என்ற அண்ணன்- தங்கை இணை அவனுக்கு அற்புதமான நண்பர்களாக அமைகிறார்கள். இந்தப் பாத்திரங்களில் தேர்ந்த நடிகர்களான எம்.என். நம்பியாரும் எம்.எஸ்.எஸ். பாக்கியமும் சுவாரஸ்யத்தை கூட்டினார்கள். நாயகன் மீது மோகம் கொண்டு, அவனை அடைய நினைக்கும் விஷ ராணி பாத்திரத்தில், கவர்ச்சி நடிகை தவமணி தேவி நன்றாக நடித்தார். சிறந்த நடிகரான எஸ்.வி. சுப்பையாதான், பிள்ளையார் சுழி முதல் சுபம் வரை 'ஆமாம்' சாமியாகவே வரும் ஒற்றை பரிமாண கதாபாத்திரத்தில் வீணடிக்கப்பட்டார்.

பின்னாளில் எம்.ஜி.ஆர். படங்களின் சில அடிப்படை சூத்திரங்கள், அவர் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே தென்படுகின்றன. முதல் அம்சம், தாய் மீது அவர் காட்டும் பாசம். ராஜகுமாரியின் கதாநாயகன் வீட்டில், அவனுடைய தாய் மட்டும்தான் இருக்கிறாள். அவன் மீது அவள் ஏகமாக பாசம் வைத்திருக்கிறாள். ‘‘தாயும் பிள்ளையும் பசுவும் கன்றும் போல. தாய் சொன்னதைத் தட்டவே மாட்டார்,’’ என்று நாயகன் அறிமுகப்படுத்தப்படுகிறான்.  பின்னாளில் வரப்போகிற எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பே, முதல் படத்தின் பாத்திரப் படைப்பில் வந்து நிற்கிறது.

மெதுவாக நகர்கிற காதல் கட்டங்களில், எம்.ஜி.ஆரின் நடிப்பில் பெண்மை கலந்திருந்தாலும், சவாலை சந்திக்கப்புறப்படும் போது வீரம் முன்னிற்கிறது. அதிலும் தாயின் ஆசிதான் முன்னிறுத்தப்படுகிறது. ‘‘உங்கள் ஆசி இருக்கு, நான் கற்ற வித்தை இருக்கு, கையிலே வாள் இருக்கு’’ என்று அன்னையிடம் விடைபெறுகிறார். ‘‘உன் காதலிக்காக ஆபத்தை சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் உனக்காக வீட்டிலே ஒரு தாய் காத்துக்கிட்டிருக்கா என்பதை மறந்துடாதே,’’ என்று கூறி வீர மகனை வழியனுப்புகிறாள் தாய்! ஒரு கட்டத்தில் மனம் உடைந்து தூக்குக்கயிற்றை நினைக்கும் போது, அன்னையின் இந்த சொற்கள் மனச்செவியில் ஒலிக்கின்றன.

பின்னாளில் வந்த எம்.ஜி.ஆர்., படங்களில், பெண்கள் எம்.ஜி.ஆர். மீது காதல் கொள்வதும், அவர்களுக்கு கட்டுப்பாட்டை போதித்து எம்.ஜி.ஆர். அனுப்புவதையும் பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். 'ராஜகுமாரி'யில் அது தொடங்கி வைக்கப்படுகிறது. நாயகன் மீது ராணி விஷா மோகம் கொள்ளும் போது, ‘நான் மானத்திற்காக பல தியாகங்கள் ஏற்ற வீர மரபை சேர்ந்தவன்’ என்று கூறி அவளை நிராகரிக்கிறான் நாயகன்.  அவள் நாயகனைத் தொடர்ந்து வந்து அவனை கொல்ல முயற்சி செய்கிறாள். அவளைத்தடுத்து, ‘‘யாரும் இல்லா வனாந்தரத்தில் தனியாக செத்து மடியாதே’ என்று எச்சரித்து விலகிப்போகச் சொல்கிறான் நாயகன். ஆனால், அவள் அதையும் கேட்காமல், அவனை முதுகில் குத்திக் கொலை செய்யப்பார்க்கும் போது, நாயகனின் நண்பன் அவளைத் தீர்த்துக்கட்டுகிறான். தன்னை கொலை செய்ய வந்தவள் மண்ணில் கிடப்பதை பார்த்து, ‘‘என்ன காரியம் செய்துவிட்டாய்?’’ என்று நண்பனிடம் ஆதங்கப்படுகிறான் நாயகன்.  பகைவருக்கும் நல்லது நினைக்கும் இத்தகைய நல்லெண்ணத்தை, அகிம்சை போக்கை, எம்.ஜி.ஆர். பல படங்களில் பின்னாளில் கடைப்பிடித்தார்.

புதிய ஊருக்கு வந்திருக்கும் நாயகனைப் பார்த்து, ‘அயலூரா, நம்மை சுரண்டத்தான் வந்திருப்பான்’, என்கிறான் பகு (நம்பியார்). ‘‘அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. ரொம்ப நல்லவர் மாதிரி தெரிகிறது’’ என்கிறாள் பகுவின் தங்கை பகுனி! எம்.ஜி.ஆர்.பால் பெண்களுக்கு கரிசனம் இருப்பதாகக் காட்டும் போக்கை, 'ராஜகுமாரி' படத்தின் பகுனிதான் முதன்முதலில் தொடங்கிவைத்தாள்!

 ‘எம்.ஜி.ஆர்.,’ படம் என்று இலக்கணத்திற்குப் புறம்பான சில  அம்சங்கள் 'ராஜகுமாரி'யில் இல்லாமல் இல்லை. குறிப்பாக மந்திரதந்திர காட்சிகள், பறக்கும் கம்பளம்... இத்யாதி. அவற்றை எல்லாம் பின்னாளில் பகுத்தறிவு கோஷம் போட்டு எம்.ஜி.ஆர். பயம்காட்டி விரட்டிவிடுவார். ஓர் இடத்தில், ‘நான் இந்தியன்’ என்று 'ராஜகுமாரி'யின் நாயகன் பறைசாற்றுகிறான். கட்சி நடிகராக எம்.ஜி.ஆர்., புகழ் பெற்றபோது அந்த தேசிய பிரகடனம் இல்லை. ஆனால் ஓர் அரசியல் திருப்பத்தில், தான் புதிதாகத் தோற்றுவித்த கட்சியின் பெயரில், அகில இந்தியாவை

எம்.ஜி.ஆர்.,  இணைத்துக்கொண்டார். அதற்கும் 'ராஜகுமாரி' ஒரு முன்னோடிதான்!

(தொட­ரும்)