ஒரு பேனாவின் பயணம் – 119 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 07 ஆகஸ்ட் 2017

ஒரே இடத்தில் ஆயிரம் தற்கொலைகள்!

1931ம் வருடம் அவர் நடித்த`சிட்டி லைட்ஸ்’  என்ற படம் மிகப் புகழ் பெற்றது.

மவுனப் படம் யுகம் முடிவடைந்து, பேசும் படங்கள் வரத்தொடங்கியிருந்த காலகட்டத்தில் 1936ம் ஆண்டு  `மாடர்ன் டைம்ஸ்’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். அப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சார்லி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

1940ம் ஆண்டு சாப்ளின் தயாரித்த `தி கிரேட் டிக்டேட்டர்’ சர்வாதிகாரி ஹிட்லரைக் கேலி செய்து எடுக்கப்பட்ட  படம்.  ஹிட்லர் வேடத்தில், சாப்ளின் பிரமாதமாக நடித்தார். உலகம் முழுவதும்  இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

ஹிட்லரும் இந்த படத்தைப் பார்த்தார். சில கட்டங்களில் அவர் கோபம் அடைந்தார் என்றாலும், சார்லியின் நடிப்புத் திறமையைப் பாராட்டினார்.

1952ல் அவர் `லைம் லைட்’ என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார்.

சாப்ளின் தன்னுடைய படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக, மிகவும் சிரமம் எடுத்துக் கொள்வார். செலவைப் பற்றிக் கவலைப்படமாட்டார். `தி கிட்’ படத்தில் ஒரு காட்சிக்காக 50 ஆயிரம் அடி படம் எடுத்தார். அதில் 75 அடிதான் படத்தில் இடம்பெற்றது.

எல்லோரையும் சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது.

முதல் மனைவி மாக்மர்ரே, இரு குழந்தைகளைப் பெற்ற பிறகு சார்லியை விவாகரத்து செய்ததுடன்,  10 லட்சம் டாலர் ஜீவனாம்சமும் பெற்றார். அடுத்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்தன.

நான்காவதாக ஒனா ஓ நீல் என்ற 18 வயதுப் பெண்ணை மணந்தார். இந்த பெண்ணுக்கு 8 குழந்தைகள்  பிறந்தன. இந்த மனைவிதான் சார்லி சாப்ளினின் இறுதி காலம் வரை அவருடன் வாழ்ந்தவர்.

சார்லி சாப்ளின் வெறும் நடிகர் அல்ல, மனிதகுலத்திற்கு வழிகாட்டிய மேதை. அதனால்தான் `திரை உலகின் ஒரே மேதை சார்லி சாப்ளின்’  என்று பெர்னார்ட்ஷா பாராட்டினார்.

இங்கிலாந்து அரசாங்கம் சார்லி சாப்ளினுக்கு `சர்’ பட்டம் கொடுத்து கவுவித்தது.  1928, 1972 ஆகிய ஆண்டுகளில் `ஆஸ்கார்’ விசேஷப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

1977ம் டிசம்பர் 25ம்தேதி  சாப்ளின் மறைந்துவிட்டாலும், அவர் நடித்த படங்கள் மூலம் இன்றும் அவர் பல திரைப்பட ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 சாப்ளின் மறைந்த போது அதற்கு ஆனந்த விகடன் ஒரு தலையங்கம் எழுதியது.

அந்த தலையங்கத்தின் தலைப்பு: 'மாமேதைகள் மறைவதில்லை.'

அறிவுலக மேதைகளும், தத்துவ ஞானிகளும், தவசீலர்களும், கருணை வள்ளல்களும் தமக்கென வாழாது, மனித சமுதாயத்திற்காக வாழ்பவர்கள். அவர்களது வாழ்வு, வையகத்தை வளமாக்குகிறது. கலங்கரை விளக்கமாக இருந்து மனிதகுலத்திற்கு வழிகாட்டு கிறது. பெர்னார்ட்ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஐன்ஸ்டீன், சர்ச்சில், டேவிட் லோ, வால்ட் டிஸ்னி,  எத்தனை பெரிய பேரறிவாளர்கள்!

இவர்களைப் போன்ற மனித ரத்தினங்கள், எந்த ஒரு நாட்டுக்கும், எந்த ஒரு மொழிக்கும் சொந்தமானவர்கள் அல்ல. இவர்கள் மனிதகுலத்தின் பொது சொத்துக்கள்.

சமகாலத்தில் வாழ்ந்து நம் கண் எதிரிலேயே ஒருவர் பின் ஒருவராக மறைந்த இவர்களுடைய வரிசையில் தற்போது  நகைச்சுவை வேதாந்தி சார்லி சாப்ளினும் சேர்ந்திருக்கிறார். இயேசு கிறிஸ்து  பிறந்த திருநாளில் இவரது ஆவி பிரிந்த செய்தியை கேட்டபோது, மிக நெருங்கிய உறவினர்  ஒருவரை பறிகொடுத்த  துயரம் நம் நெஞ்சை அடைத்தது' என்று எழுதியது ஆனந்த விகடன்.

1977ம் ஆண்டு நான் வேலை யில்லாமல் திரிந்து கொண்டிருந்த காலத்தில் நான் படித்த பல புத்தகங்கள், பத்திரிகைகள் வாயிலாக நான் இந்த உண்மைகளை தெரிந்து கொண்டேன்.

படிக்கிற பழக்கம் எனக்குள் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்தது. ஆனால் பல்கலைக்கழக படிப்பில் கோட்டை விட்டதன் விளைவாக ஒரு தாழ்வுணர்ச்சியும் மனதில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

 இந்த நிலையில் 1977ம் ஆண்டை கடந்து 1978ம் ஆண்டு வந்த போது, வீட்டில் எல்லோரும் என் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது  நான் நாட்டு நடப்புகளிலும், செய்திகளிலும் மூழ்கி கொண்டிருந்தேன்.

 இந்த ஆண்டுதான்  தமிழ் சினிமாவில் `பா’ வரிசை படங்கள் மூலமாக மிகவும் புகழ்பெற்று, அவரால் சிவாஜிக்கு பெருமையா, அல்லது சிவாஜியால் இவருக்கு புகழ் உயர்ந்ததா என்கிற அளவிற்கு இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களை தந்தார்கள்.

`பாசமலர்’ படம் ஒரு காலகட்டத்தில் எத்தனை முறை மறுபடியும் அரங்குகளில் காட்டப்பட்டாலும்,  பெண்கள் கண்ணீரோடுதான் திரையரங்கு களை விட்டு  போவார்கள்.

 அந்த பீம்சிங் மறைந்தார்.  பீம்சிங் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் இருந்தபோது திடீரென்று கிளம்பி ஆந்திரா சென்று, ஒரு தெலுங்குப் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு திரும்பி வந்து மருத்துவமனையில் படுத்துக் கொண்டார்.

அவர் காரில் செல்லும்போது எப்போதும் கையில் விபூதியோ,  குங்குமமோ, பழமோ ஏதாவது ஒரு பிரசாதம் வைத்திருப்பார். வழியில் யாராவது நண்பர்களைப் பார்த்துவிட்டால், வண்டியை நிறுத்தி அந்த பிரசாதத்தை கொடுத்துவிட்டு, நலம் விசாரித்த பின்புதான் செல்வார்.

பீம்சிங்கிற்கு அனந்தராம தீட்சிதரின் உபன்யாசம் என்றால்  உயிர். ரேடியோவிலோ, டேப் ரிகார்டரிலோ, அவரது குரலை கேட்டுவிட்டால் போதும்,  அங்கேயே அப்படியே உட்கார்ந்து கேட்க ஆரம்பித்துவிடுவார்.

சோ தனது 'முகமது பின் துக்ளக்' நாடகத்தில் `சமஸ்கிருதம்’ செத்துப் போன ஒரு மொழி' என்று ஒரு வசனத்தை எழுதிவிட்டார்.  'இன்றைக்கு உலக மொழிகளிலேயே  அழகிய, அதிக ஜீவன் உள்ள மொழி சமஸ்கிருதம்தான். அதை நீங்கள் இப்படி எழுதலாம்?’ என்று சோவிடம் சண்டைக்குப் போய்விட்டார் பீம்சிங்.

 பில்லா – ரங்கா இவர்கள் செய்த கொலைகள் இந்த ஆண்டு இந்தியாவையே உலுக்கின.

 ஜஸ்பீர்சிங் என்பதுதான் பில்லாவின் உண்மையான பெயர். பூனையைப் போல் வெகு சாமார்த்தியமாக செயல்படுவதாலும், எவ்வளவுதான் கட்டுக்காவல் இருந்தாலும் தப்பிவிடும் திறமை இருந்ததாலும் `பில்லா' (பூனை) என்ற காரணப் பெயர் ஏற்பட்டு, அதுவே அவனுக்கு நிலைத்துவிட்டது.

 டில்லியில் கடற்படை கேப்டனின் பெண்ணும், பிள்ளையும் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதைப்  பற்றி, கைது செய்யப்பட்டதும், பில்லா போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தான்.

 `அந்த கேப்டனின் பெண் கீதாவும், பிள்ளை சஞ்சய்யும் எங்கள் காரில் ஏறிக்கொண்டதும், கதவின் கைப்பிடிகளை அகற்றி அவர்கள் கதவை திறக்க முடியாதபடி செய்துவிட்டோம். பொறியில் அகப்பட்ட எலிகள் போல வசமாக சிக்கிக் கொண்டார்கள்.

நான் காரை ஓட்டினேன். என் பக்கத்தில், என் கூட்டாளி ரங்கா. பின் சீட்டில் எனக்குப் பின்னால் கீதாவும், ரங்காவுக்கு பின்னால் சஞ்சய்யும் அமர்ந்திருந்தார்கள். கார் பாதை மாறி போனபோது, அவர்களுக்கு சந்தேகம் வந்தது. காரை நிறுத்தும்படி கீதா சொன்னாள். நான் மறுத்தேன். என் தலைமுடியைப் பிடித்து பலமாக இழுத்தாள்.

அப்போதுதான் ரங்கா கத்தியை எடுத்துக் கீதாவைக் குத்தினான். ரங்காவின் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கி, என் நெற்றியில் குத்தினாள் கீதா.  அதன் பிறகே ரங்கா தன் பெரிய பட்டாக்கத்தியால் கீதாவைக் கொன்றான். சஞ்சய்க்கும் படுகாயம் விளைவித்தான். எங்கள் கார் பறந்தது.

 இத்தனையும் நடக்கும்போது, காரில் செல்பவர்களும் சைக்கிளில் செல்பவர்களும் நிறைய பேர் எங்களைப் பார்த்தார்கள். ஆனால், எல்லோருமே எங்களைப் பின்தொடர்வதற்கு பதிலாக, முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டார்கள்.

 காரிலேயே கீதாவும் சஞ்சய்யும் இறந்து போய்விட்டார்கள். அவர்களை கொலை செய்யவேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. கடத்திப்போய் ஒளித்து வைத்து விட்டுப் பணம் பறிக்கலாம் என்று எண்ணியிருந்தோம்.  கீதா என்னைக் குத்தவே, எங்களுக்கு ஆத்திரம் மூண்டது. முதலில் ரங்கா அவர்களைக் குத்த, பின்பு நானும், அவர்களைக் குத்தி கொலை செய்தேன்.'

 ஏழு மணி சுமாருக்கு, கீதா – சஞ்சய் சடலங்களை ஒரு புதருக்குள் தூக்கி எறிந்துவிட்டு, காரை ஒரு பெட்ரோல் பங்குக்குக் கொண்டு போய், கறை ஏதும் இல்லாதபடி கழுவினார்கள்.  பின்னர் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்கள். பில்லா, தன் பெயர் வினோத்குமார் என்று சொல்லிக்கொண்டான். ரங்கா, ஹர்பஜன் சிங் ஆனான்.

கொலை நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு   ரயில் ஏறி,  30ம்தேதியன்று மும்பை போய் சேர்ந்தான் பில்லா. ஸ்டேஷனில் ஏகப்பட்ட போலீசார். அவர்களில் ஒருவர் பில்லாவை அடையாளம் கண்டு கொண்டு `ஏய்! பில்லா, எங்கே போகிறாய்?  வா இங்கே’ என்று அதட்டினார். அவரிடம் பாய்ந்து சென்ற பில்லா, அவரது கையில் இரண்டு புத்தம்புது நூறு ரூபாய் நோட்டுக்களை வைத்து அழுத்தி,  `நான் பில்லா இல்லை’ என்றான். போலீஸ்காரர் புரிந்துகொண்டார்.  விஷயம் அதோடு முடிந்தது. இது பில்லாவே சொன்னது.

பில்லாவும், ரங்காவும் பின்னர் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் பெயரால் 'பில்லா' என்ற பெயரில் ரஜினி நடித்து, பாலாஜி தயாரித்த படமும், 'ரங்கா' என்ற பெயரில் ரஜினி நடித்து தேவர் பிலிம்ஸ் தயாரித்த படமும் வெளியாகின.

ஒரு புறம் இந்த கொலைகள் இந்தியாவை குலுக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் உலகின் முதல் சோதனைக் குழாய் பிறந்தது.

பிரிட்டனில் லாங்காஷயர் மருத்துவமனையில்  32 வயதான தாய் ஒருத்திக்கு  25.7.1978 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதுதான் முதல் `டெஸ்ட் டியூப் பேபி.’

 உண்மையில் பார்க்கப் போனால்,  `டெஸ்ட் டியூப்  பேபி’ என்ற பெயரே தவறானது. ஏனென்றால், இந்த குழந்தையும் எல்லோரையும் போல பத்து மாத காலம் தாயின் வயிற்றில் வளர்ந்துதான் பிறந்தது. பின் என்னதான் விசேஷம்?

அதாவது ஆண் ( தந்தை), பெண் (தாய்)  இனப்பெருக்க அணுக்கள் இரண்டும் தாயின் உடலில் அல்லாமல்  வெளியே ஒரு சோதனைச் சாலையில் ஒரு சோதனைக்குழாயில் சேர்த்து செயற்கையான முறையில் இணைக்கப்பட்டன. இப்படி உண்டாக்கப்பட்ட கரு நான்கு நாட்கள் வெளியே வைத்தே வளர்க்கப்பட்டு, பின்பு தாயின் கர்ப்பப்பையின் உட்புறம் செலுத்தப்பட்டது. அது முழு குழந்தையாக வளர்ந்து இப்போது பிரசவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஸ்டெப்டோ, எட்வர்ட்ஸ் ஆகிய இரு டாக்டர்களும் சோதனை  செய்து இந்த பிரசவத்தை செய்திருக்கிறார்கள்.

 குழந்தை பெற இயலாதவர்களில் பெரும்பாலோருக்கும் கர்ப்பப்பைக் குழாயில் ஏற்பட்ட அடைப்புதான் மலட்டுத்தன்மையின் காரணமாக இருக்கும்.  அப்படிப்பட்டவர்கள் அனைவருக்கும் இந்த செயற்கை முறை ஒரு வரப்பிரசாதம்.

உலகிலே முதல் முறையாக செயற்கை முறையில் சோதனைக் குழாய் சிசுவை பெற்றுள்ள லெஸ்லி பிரவுன் – கில்பர்ட் ஜான் பிரிட்டிஷ் தம்பதிக்கு சுமார் 48 லட்ச ரூபாய் தொகை கொடுத்திருக்கிறது ஒரு செய்தி நிறுவனம்.  இவர்களுக்கு பிறந்துள்ள பெண் குழந்தையைப் பற்றிய செய்திகளையும் படங்களையும் வெளியிடுவதற்கான உரிமை பெறுவதற்காக கொடுக்கப்பட்ட பணம் தான் இது.

 இந்த ஆண்டில் ஒரு கோர சம்பவம் தென் அமெரிக்காவில் நடந்தது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் மூடநம்பிக்கை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கொடுமை நடந்தது.

 இந்த வருடத்திற்கு  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1976ம் ஆண்டு, ஜோன்ஸ் என்ற மதத்தலைவர், சுமார்  ஆயிரம் தீவிர பக்தர்களுடன் தென் அமெரிக்காவில் `கயானா’ என்ற  நாட்டின் ஒரு கிராமத்தில் குடியேறினார்.

 தன்னை எல்லோரும் கடவுளாக ஏற்றுக் கொள்ளவேண்டும், `உலகில் ஒரு சோஷலிச சொர்க்கத்தை  உருவாக்க வேண்டும்’ என்பது அவரது கனவு. அவருடைய இயக்கத்தில் சேர்ந்து, ஜோன்சின் காந்தப் பார்வைக்கு அடிமையானார்கள் பலர்.

 இப்படித்தான் ஜோன்சின் `மக்கள் ஆலயம்’ என்ற இயக்கம், குறிப்பிடத்தக்கதொரு சக்தியாக வளர்ந்தது. மக்கள் ஆலயத்தில் சேரும் அத்தனை பெண்களும், ஆண்களும்  `கடவுள்’ ஜோன்சுடன் உடலுறவு கொள்ள வேண்டும்.  மறுநாள், மைக் முன் நின்று அந்த அற்புதமான அனுபவத்தைப் பிறருக்கு விளக்க வேண்டும். `நம்பிக்கை’ இழக்கும் பக்தர்களை சவுக்கால் அடிப்பது, எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பது போன்ற கொடுமைகளும் நடைபெற்றன.

இந்த இயக்கத்திலிருந்து வெளியே வர முயன்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து ஜோன்ஸ் டவுன் பற்றிய மர்மத்தை அறிய அமெரிக்க செனட்டர் லியோ ரயான், ஒரு நிருபர் குழுவுடன், பலத்த எதிர்ப்புகளை மீறி கயானாவுக்கு பயணமானார்.

ரயான் குழுவினரை சிறப்பான முறையில் வரவேற்று விருந்தளித்த ஜோன்ஸ், தன் கிராமத்தில் நடக்கும் சில ரகசியங்கள், வந்திருக்கும் நிருபர்களின் கழுகுக்கண்களில் பட்டுவிட்டன என்பதை அறிந்து, ரயானையும், அவருடைய குழுவையும் சுட்டுக் கொன்றுவிட்டார். நான்கு நிருபர்கள் மட்டும் தப்பித்து ஓடிவிட்டார்கள்.

இந்த செய்தி, ஜோன்சை பீதியடையச் செய்தது. உடனே நடு மைதானத்தில் அத்தனை பக்தர்களும் கூட்டப்பட்டனர். அங்கே போடப்பட்டிருந்த சிம்மாசனம் ஒன்றில் அமர்ந்தவாறு ஒலிப்பெருக்கியில், `பக்தர்களே! நாம் எல்லோரும் இறக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. என் மீது உங்களுக்கு உண்மையிலேயே  ஆசையும், பக்தியும் இருந்தால்,  எல்லோரும் இறக்க வேண்டும். வெளியிலிருந்து படைகள் வேறு நம்மை அழிக்க வந்து கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.

(தொடரும்)