எல்லையில் அமைதியே வேண்டும்: விஜேந்தர் உருக்கம்

பதிவு செய்த நாள் : 07 ஆகஸ்ட் 2017 07:52


மும்பை:

இரண்டாவது முறை ஆசிய பசிபிக் பட்டத்தை வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், தனக்கு பதக்கம் வேண்டாம், இந்தியா, சீனா இடையே அமைதி நிலவினால் போதும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விஜேந்தர்சிங், சீனாவின் ஜூல்பிகர் மைமைடியாலியுடன் மும்பையில் நேற்றிரவு(ஆக.,5) பலப்பரீட்சை நடத்தினார். இதில், சீன வீரரை வீழ்த்தி ஆசிய பசிபிக் பட்டத்தை விஜேந்தர் சிங் தக்க வைத்துக் கொண்டார். அத்துடன் ஜூல்பிகரிடம் இருந்த ஒரியன்டல் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்தையும் தட்டிப்பறித்து தன்னுடன் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், இரண்டாவது முறை ஆசிய பசிபிக் பட்டத்தை வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், ஒரியன்டல் சூப்பர் மிடில்வெயிட் பட்டம் தனக்கு வேண்டாம், இந்தியா, சீனா இடையே அமைதி நிலவினால் போதும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் விஜேந்தர் அளித்த பேட்டி:எனக்கு இந்த பதக்கம் வேண்டாம். ஏனெனில் இந்தியா,சீனா எல்லையில் பதற்றம் நிலவுவதை நான் விரும்பவில்லை. இந்திய சீன எல்லையில் நிலவும் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. பதக்கத்தை திரும்பி செலுத்துவதன் மூலம் இந்தியா சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்க வேண்டும் என்ற செய்தியை தெரிவிக்க விரும்பினேன். இவ்வாறு விஜேந்தர் கூறினார்.