மாஞ்சா வடிவில் துரத்தும் மரணங்கள்

பதிவு செய்த நாள் : 06 ஆகஸ்ட் 2017

மார்ச் மாதம் 7ம் தேதி மாலை நேரம். மதுரவாயில் பைபாஸ் ரோட்டில் கொளத்தூரை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான சிவபிரகாசம் (40) தன் தந்தை சந்திரசேகரனுடன் (73) பைக்கில் பயணித்து கொண்டிருந்தார். திடீரென்று காற்றில் பறந்து வந்த கயிறு ஒன்று அவரது கழுத்தில் மாட்டி அறுத்தது. வலி தாங்காமல் அதை எடுக்க முயற்சித்தபோது வண்டி நிலை தடுமாறி அருகில் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவபிரகாசம் உயிரிழந்தார். அவரது கழுத்திலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

சிவபிரகாசம் உயிரை பறித்த அந்த கயிறு நம் நாட்டில் பல பேருக்கு எமனின் பாசக்கயிறாக மாறியுள்ளது.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்தாடி பறக்கவிடப் பயன்படுத்தும் மாஞ்சா கயிறுதான்  மரணம் தரும் பாசகயிறாக இப்பொழுது பிறப்பெடுத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் காத்தாடி பறக்கவிட இந்த மாஞ்சா நூல்கள் இப்பொழ்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாஞ்சா கயிற்றால் வானத்தில் அழகாக கலர் கலராக பறக்கும் காத்தாடிகளின் பின்னணியில் இத்தனை மரணங்கள் ஏற்படுவது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

இந்த மாஞ்சா கயிற்றால் ஏன் இத்தனை மரணங்கள்? காரணம் இந்த மாஞ்சா கயிறு மத்த கயிறுகள் போன்றது இல்லை. அதை தயாரிக்கும் விதம்தான் அதை மரண கயிறாக மாற்றுகிறது.


மாஞ்சா தயாரிக்கும் முறை

பொடியாக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள், தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் வஜ்ரம் போன்ற பிசின்கள், மைதா மாவு, இரும்பு பவுடர், அலுமினியம் ஆக்ஸைட் ஆகியவற்றை பயன்படுத்தி மாஞ்சா தயாரிக்கப்படுகிறது. கொதிக்க வைத்த நீரில் அனைத்து பொருட்களும் சேர்க்கப்பட்டு கூழாக ஆக்கி அதை நைலான் கயிற்றில் தடவுகிறார்கள். பின் இறுதியாக கயிற்றின் மீது கலர் சேர்க்கப்படுகிறது.


காற்றில் பறக்கும் போது ஏற்படும் உராய்வை தாங்ககூடிய வலிமை இருக்க வேண்டும் என மாஞ்சா நூல் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. காற்றாடி போட்டியில் போட்டியாளர்களின் காற்றாடி நூலை அறுத்து காற்றாடியை வீழ்த்த கயிற்றாலே கயிற்றை அறுக்க கண்டுபிடித்ததுதான் மாஞ்சா கயிறு. கற்றாடியை வீழ்த்த உருவாக்கப்பட்ட மாஞ்சா கயிறு மனிதர்களின் கழுத்தை அறுத்து வீழ்த்துவதுதான் பெருத்த சோகம்.

மாஞ்சா கயிற்றால் ஏற்படும் மரணங்கள்

கண்ணாடி துகள்களை கொண்டு தயாரிக்கப்படும் மாஞ்சா கயிறுகள் எளிதாக நம் தசையை அறுத்து விடும். அதனால் தான் மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் கழுத்திலோ அல்லது பிற பாகங்களிலோ மாட்டிக்கொள்ளும் போது பலத்த காயங்களும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. மின் கம்பிகளில் இந்தக் கயிறு மாட்டிக் கொள்ளும் பொழுது  மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயமும் உள்ளது.

இத்தகைய மாஞ்சா கயிற்றால் நம் நாட்டில் மட்டுமன்றி பிற நாடுகளிலும் பலர் மாஞ்சா கயிற்றில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் மாஞ்சா தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக குழந்தைகள் நச்சு ரசாயனங்களை சுவாசிப்பதால் மூச்சு கோளாறால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதன் காரணமாக மாஞ்சா பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கோரி நம் நாட்டில் பல கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

மாஞ்சாவிற்கு தடை 

நம் நாட்டின் நகர காவலர் சட்டம் 71ன் கீழ் காவல் துறையினர் காத்தாடி விடுவதையும் மாஞ்சா கயிறு பயன்படுத்துவதையும் தடை செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.. கடந்த  2015ம் ஆண்டு சென்னையில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மாஞ்சா கயிறு மாட்டி இறந்த போது காத்தாடி பறக்கவிட சென்னை காவல் துறை தடை விதித்தது.


அதேபோல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று இரு குழந்தைகள் மாஞ்சா கயிற்றால் உயிரிழந்தனர். அதனால் டில்லி காவல்துறை மாஞ்சா நூல்கள் பயன்படுத்த தடை விதித்தது.

இந்நிலையில் மாஞ்சாவால் ஏற்படும் உயிரிழப்புகளை கண்டித்து விலங்குகள் நல அமைப்பான பெட்டா (PETA) கடந்த ஆண்டு தேசிய பசுமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் அனைத்து மாநில அரசுகளும் மாஞ்சாவை தயாரிக்கவோ, விற்கவோ, சேமிக்கவோ, வாங்கவோ தடை விதிக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை தள்ளுபடி செய்யுமாறு குஜராத்தை சேர்ந்த சில வணிகர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையில் தேசிய பசுமை ஆணையம் விதித்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்தியாவை போல் பாகிஸ்தான், சிலி ஆகிய நாடுகளும் மாஞ்சாவை தடை செய்துள்ளன.

தடையை மீறி மாஞ்சா 

மாஞ்சாவிற்கு சட்டபூர்வமாக தடை விதிக்கப்பட்டும் மாஞ்சா இந்தியாவில் ஒழிந்தபாடில்லை. சட்டவிரோதமாக அதன் விற்பனை பல இடங்களில் நடக்கிறது. லஞ்சம் வாங்கும் சில காவல்துறை அதிகாரிகளும் இதற்கு துணை போகிறார்கள். இத்தகைய ஊழல் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே சென்னையில் சிவபிரகாசம் உயிரிழக்க முக்கிய காரணம். இதை தடுக்காவிட்டால் சிவபிரகாசம் போல் இன்னும் பல பேர் பாதிக்கப்படுவார்கள்.


இந்த உண்மையை அரசுக்கும் காவல்துறைக்கும் உணர்த்துவதற்காக பல சேவை அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த போராட்டத்தில் பொதுமக்களை ஈர்க்க வேண்டும் என அந்த சேவை அமைப்புகள் நினைக்கின்றன. அந்த வகையில் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மாஞ்சா கயிற்றால் ஏற்படும் கோர விளைவுகளை  காட்ட ரத்தம் வடிய மாஞ்சா கயிற்றால் மரணம் ஏற்படும் என்பதை உருக்கமாக உணர்த்தும் வகையில் அபய தானம்  என்ற சேவை அமைப்பை சேர்ந்த பெண் ஒருவர் உரிய மேக்கப்புடன் காட்சி பொருளாக நின்றார்.

இது போல் மாஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பதவியில் இருப்பவர்கள் இதற்கு செவி சாய்ப்பார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


கட்டுரையாளர்: - நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation