செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 187– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 06 ஆகஸ்ட் 2017

சிவாஜி என்கிற நடிப்புச் சமுத்திரத்தில் மூழ்கி இத்தனை வாரங்கள், இல்லை மூன்று வருடங்களுக்கு மேல் நான் சில முத்துக்களை எடுக்க முயற்சி செய்தேன்.

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் சிவாஜியின் நடிப்புலக வரலாறு. இது அவரைப் பற்றிய ஆவணப்பதிவு அல்ல!  காரணம், இந்த தொடரைப் படிக்கும் சிவாஜி ரசிகர்கள்  பல கேள்விகள் கேட்கலாம்.

 'பராசக்தி'யில்  1952ம் வருடம் சிவாஜி அறிமுகமானார். அதே வருடம் என்.எஸ். கிருஷ்ணனின் 'பணம்' படத்திலும் நடித்தார்.  அடுத்த வருடம் அதாவது,  1953ம் வருடம் 'திரும்பி பார்' படத்தில் வில்லனாக தோன்றினார். 1954ம் வருடம் 'அந்த நாள்', 'இல்லற ஜோதி', 'எதிர்பாராதது', 'கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி', 'கூண்டுக்கிளி', 'துளிவிஷம்', 'தூக்குத் தூக்கி', ஆகிய படங்களிலும் நடித்தார்.

அதற்கடுத்த வருடம் 1955ல்  கல்கியின் நாவலான 'கள்வனின் காதலி', 'காவேரி', 'கோடீஸ்வரன்', படங்களில் நடித்தார்.

 அதைத் தொடர்ந்து 1956களில் 'தெனாலிராமன்', 'அமரதீபம்' 'நான்பெற்ற செல்வம்', 'நானே ராஜா', ஜெமினியோடு வில்லனாக 'பெண்ணின் பெருமை', 'ராஜா ராணி', போன்ற படங்களில் நடித்தார்.

பிறகு 1957ல்  ஏ.எல்.எஸ். புரொடக்‌ஷன்ஸ்  'அம்பிகாபதி', 'தங்கமலை ரகசியம்'  'புதையல்', 'மக்களைப் பெற்ற மகராசி', நான் பிறந்த 1958ம் வருடம் 'உத்தமபுத்திரன்' 'காத்தவராயன்',  'சபாஷ் மீனா', ராஜாஜியால் பரதனைக் கண்டேன் என்கிற கதாபாத்திரத்தில் 'சம்பூர்ண ராமாயணம்', வசந்த முல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே என்கிற அருமையான பாடலைக்  கொண்ட 'சாரங்கதாரா', பீம்சிங் – எம்.எஸ். விஸ்வநாதன் இணைந்து தயாரித்த 'பதிபக்தி', 'பொம்மைக் கல்யாணம்', 1959ம் வருடம்  'கல்யாணிக்கு கல்யாணம்', காலத்தால் மறக்க முடியாத 'பாகப்பிரிவினை'.  கருங்குயில் குன்றத்து கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  'மரகதம்',  இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரன் என்று ம.பொ.சியால் பதிவு செய்யப்பட்ட 'வீரபாண்டிய கட்ட பொம்மன்',  1960ம் வருடம் ஜெமினியின் 'இரும்புத் திரை', மேகலா பிக்சர்ஸின் 'குறவஞ்சி', கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் அருமையான கதை-– வசனத்தில் வந்த 'தெய்வப்பிறவி',  'எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான்' என்கிற மறக்க முடியாத பாடலைக் கொண்ட 'படிக்காத மேதை', அகிலனின் நாவலை அடிப்படையாகக் கொண்ட 'பாவை விளக்கு', 'விடிவெள்ளி',  தென்னகத்து சுதந்திர வீரர் வ.உ. சிதம்பரனாரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய 'கப்பலோட்டிய தமிழன்', அதே வருடத்தில் தொடர்ந்து செஞ்சுரி அடிக்கும் கிரிக்கெட் வீரனைப்போல தொடர் வெற்றிகளாக அமைந்த  'பாசமலர்', 'பாலும் பழமும்', 'பாவமன்னிப்பு', 'புனர் ஜென்மம்', இளைஞர்களுக்கெல்லாம்  'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா'? என்று காதல் பாடலைச் சொல்லித் தந்த 'நிச்சய தாம்பூலம்', 'படித்தால் மட்டும் போதுமா', 'பந்தபாசம்', மூன்று வேடங்களில் அசத்திய 'பலே பாண்டியா', 'பார்த்தால் பசி தீரும்', வி.கே. ராமசாமி தயாரித்த 'வடிவுக்கு வளைகாப்பு', இப்படி படங்களை சொல்லி ஒவ்வொரு படத்தை பற்றியும்  எழுதலாம்.

ஆனால் அது  ஒரு சராசரி ஆவணப் பதிவாகிவிடும். அதனால் எனக்கு நினைவு தெரிந்த 1965ம் வருடம் துவங்கி, அதற்கு முந்தையகால படங்களையும், எனக்கு திரையால் நடிப்பின் மூலமாகவும், அருமையான தமிழ் வசனங்களாலும், பல கருத்துள்ள பாடல்களாலும்  பாடம் புகட்டி, இன்றும் என்னுடைய சில செயல்களில், உச்சரிப்புகளில் நீக்கமற நிறைந்திருக்கும் நடிகர் திலகத்தை பற்றி கடந்த 3 ½ வருடங்களாக இந்த பதிவுகளை செய்திருக்கிறேன்.   கவிஞர் வாலியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்,

ஆதவன்  ஒளிச்சிறப்பை – சிறு

அகல் புகழ்வது போல்

பல நூதனை கலைவனப்பை – விழி

நோயுளான் நுவல்வது போல்

குல மாதரர் பிள்ளைப் பேற்றை

ஒரு மலடி மொழிவது போல்

ஒரு மேதையாம் சிவாஜி

மேன்மை – ஒரு

பேதையான்

பேசப்போமோ?

சுதந்திரப் போர் வீரர்

சின்னையா மன்றாயர்

அரிவையர்க்கோர் அணியாம்

 அன்னை ராஜாமணி அம்மையார்

 இருவரும்

 இருந்த நோன்பின் பயனாய்

 மண்மிசை தோன்றினான் – ஒரு மாபெரும் நடிகன்

முன்னும் இல்லை

பின்னும் இல்லை – அந்த  உயரிய நடிகனை

உவமிக்க ஒருவன்

அவனை

அவனிக்கு அளித்ததால்

 விழுப்புரம்- புகழ்

 விழாப்புரம் ஆனது

வெண்திரை வரலாற்றில்

அந்த அழகிய ஊர்

தமிழர்க்கு – ஒரு

 திருத்தலம் ஆனது

தண்ணீர் மேகம்

 தாழப்பறக்கும்

கொடைக்கானல்

 குறிஞ்சி போல்

பன்னிரு ஆண்டுக்கொருமுறை

பூப்பவனல்ல அவன்

திருக்குடந்தை

 திருக்குளத்தில்

நன்னீராடி

நாட்டோர் நற்கதி பெற

ஆறிரு ஆண்டுக்கொரு முறை- அலரும் மகாமகம் அல்ல அவன் ஒரு நூறு ஆண்டுக்கு

 ஒரு முறை

வாராது வரும்

மாமணியாய்; தெய்வம் –

தாராது தரும்

தனிக் கொடையாய்

நம்மிடை வந்து

நாளும் உலவிய நாமகள் மகன் அவனிலும் மேலாய்

அருளர் தமிழுக்குத்

தன் உச்சரிப்பில்

தகத்தகாயமாய் – ஒரு

தகவு சேர்க்க?

அவனிலும் மேலாய்

ஆருளர் வல்லினம் மெல்லினம்

வாய்த்த மொழியை

நறவத்தில் தோய்த்து

நம் செவிகளில் வார்க்க?

சிவாஜி போல் – ஒரு

சிம்மக்குரல்

வாய்த்தார் – இவ்

வைய மிசை உண்டோ ?

கசடதபற  கூட – அவன்

கர்ச்சிக்கையில்

அடடா !

அவ்வோசை

 பனங்கற்கண்டோ ? வெல்லப்

பாகுதரும் கரும்புத்துண்டோ

 என எவர் கிறங்காதார்?

வாய் வழி – அவன்

 வழங்கு வசனங்களைக்

கேட்டுக் கேட்டு

பித்தராய் – உன்

மத்தராய் எவர் பிறங்காதார்?

பள்ளியில் – அதிகம்

 பயிலாது போனான்

பின்னாளில்  - அந்த

பெருமகன்

கால்முளைத்த – ஒரு

 கல்லூரி ஆனான்.

எத்தனையோ பேரை

உயிர் கொடுத்து

உலவச் செய்தவன்

கல்லறையிலிருந்து – எழுப்பிக்

காட்டிய பெருமகன்

எவராலும்

 எழுப்ப முடியாதபடி

 உறங்கிப் போனதால்

உலகு அழுதது ; தன்னை

 ஒழுங்காய் உச்சரிக்க

ஒருவரும் இலையே  என

 ஓண்டமிழ் அழுதது

ஆயினும் அவன் நாமும்,

நாடும் அழுவதற்காக பிறந்தவனல்ல தொழுவதற்காக பிறந்தவன்' என்றார் வாலி.

 எழுத்தாளர் சுஜாதா இப்படி சொல்லியிருந்தார். `எனக்கு பிடித்த படம் அவருடைய `அன்னையின் ஆணை.’ அதுபோல `அந்த நாள்’ ஒரு பாட்டில்லாத த்ரில்லர்.  சிவாஜியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது  அவருக்குள் இருக்கும் மனிதரை கண்டுபிடிக்க எனக்கு அவகாசம் போதவில்லை.  சிவாஜியை  மார்லன் பிராண்டோ, ரெக்ஸ் ஹாரிசன், அல்பசினோ, ராபர்ட் டி நீரோ போன்ற நடிகர்களுக்கு ஈடாகச் சொல்லலாம். அவருடைய இறுதி ஊர்வலத்தில் அழுதவர்கள் கண்ணீரில் உண்மை இருந்தது’ என்றார்.

(முற்றும்)