பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 06–8–17

பதிவு செய்த நாள் : 06 ஆகஸ்ட் 2017

மறுபடியும் பாகிஸ்தானில் திடுக்கிடும் திருப்பம்.  அந்த நாடு சுதந்திரமடைந்த இந்த  எழுபது ஆண்டுகளில் திருப்பங்கள் நிறைந்த திகில் கதைகள் இல்லாத நாட்கள் மிகவும் குறைவு. பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது பரபரப்பான கதைகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் தேசம்தான் பாகிஸ்தான்.

இப்போது அந்த நாட்டு பிரதமர், அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது தம்பி அடுத்த பிரதமராகலாம் என்று யூகங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவை விட்டு பிரிந்த அந்த தேசம் ஜனநாயகத்தை இழந்து பல வருடங்களாகிவிட்டன. அங்கே நடப்பது எல்லாமே விசித்திரங்கள்தான். இன்னமும் அந்த தேசத்தில் ஆங்காங்கே கவுரவகொலைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.  அதே சமயம் இஸ்லாமிய தீவிரவாதத்தில் நம்பிக்கையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் கொண்டுள்ள அந்த தேசத்தின் புரியாத புதிர் எப்படி ஒரு பெண் இரண்டு முறை பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது விளக்க முடியாத கேள்விகளில் ஒன்று!

கடந்த பத்து வருடங்களாக அங்கே நடந்தேறிய காட்சிகளை கொஞ்சம் பார்ப்போம்.  சூல்பிகார் அலி பூட்டோ,  பாகிஸ்தான் இன்றைக்கு இருந்ததைப் போல, நிலப்பிரபுத்துவ எண்ணங்களும், நவீனத்துவமும் கலந்த ஒரு தேசமாக இருந்திருக்காது. பூட்டோ என்கிற ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்  கிழக்கு வங்கம் பிரிந்து, வங்காளதேசம் என்கிற ஒரு நாடு உருவானபின் 1971ம் வருடம் பதவிக்கு வந்தார்.

1971ல் தான் அந்த தேசம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு. தனது சரித்திர பகை நாடான இந்தியாவிடம்  தன்னுடைய பாதி எல்லைகளையும், மக்களையும் இழந்த தேசம்தான் இன்றைய பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் இந்த பேரழிவிற்கு பூட்டோதான் காரணம் என்று சில சரித்திர ஆசிரியர்கள் சொன்னாலும், தன்னுடைய கவர்ச்சிகரமான தோற்றம், அபாரமான பேச்சுத்திறனால் மக்களை கவர்ந்து தேசத்தின் காப்பாளனாக அந்த மக்கள் முன் வளர்ந்தார்.

வங்காள தேச பிரிவினை என்பது 1971க்கு முன்பே தோன்றியதுதான்.  இரண்டாம் உலகப்போரில் படுதோல்வியடைந்தது கிரேட் பிரிட்டன். அதனால் தன் சாம்ராஜ்யத்தின் மகுடமாக இருந்த இந்தியாவை இழக்கும் நிலைக்கு வந்தது. இந்து  மக்கள் மகாத்மா

காந்தி, ஜவஹர்லால் நேருவிற்கு பின்னால் அணிவகுத்தார்கள்.

ஆனால் காந்தி, நேரு, காங்கிரஸ் கட்சியினரால் ஒரு பணக்கார வக்கீலான முகம்மது அலி ஜின்னாவின் தலைமையிலான மூஸ்லீம் லீக் கட்சியுடன் ஓர் உடன்படிக்கைக்கு வரமுடியவில்லை.

அதனால் ஒரு புதிய தேசமான பாகிஸ்தான் ஆகஸ்ட் 14, 1947 அன்று உருவானது. இந்தியாவிற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 15 என்று ஜோதிடர்கள் நேரம் குறித்துக் கொடுத்தார்கள்.  பாகிஸ்தான் என்பதற்கு `புனிதர்களின் நாடு’ என்று பொருள் படும். பஞ்சாப், காஷ்மீர், சிந்த பகுதிகளின் முதல் எழுத்துக்களைக்

கொண்டு 'பாகிஸ்தான்' என்று பெயரிட்டார்கள்.

1940ம் ஆண்டு மார்ச்  22 – 24 லாகூரில் முஸ்லீம் லீக்கின் முக்கிய பிரதிநிதிகள் கூடி பெரும்பான்மை கொண்ட இந்துக்களுடன் இருந்த தங்களின் உறவுப்பாலத்தை தீயில் பொசுக்கினார்கள். அங்கே அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தைத்தான் பாகிஸ்தான் தீர்மானம், அல்லது லாகூர் தீர்மானம் என்று அழைத்தார்கள்.

இந்தியாவில் முன்பிருந்த பெரும்பாலான மொகலாய பேரரசுகள் பிரிட்டனோடு தனியாக பல ஒப்பந்தங்களை செய்து கொண்டார்கள். அதனால் இந்தியப் பிரிவினை என்பது அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை.  அதனால், பிரிவினை என்பது பெரிய படுகொலைகளை சந்தித்தது.  

சரித்திரம் கண்டிராத அளவுக்கு நடந்த மதக்கலவரங்களினால்   ஒரு கோடி பேருக்கும் மேல் இரு தரப்பிலும் உயிரிழந்தார்கள்.  காந்தியின் உண்ணாவிரதத்தால் கூட அந்த கலவரத்தை தடுக்க முடியவில்லை என்பதுதான் பிரிவினையின் சோக சரித்திரம்.

பிரிவினையின் போது  இந்து டோக்ரா பேரரசிடம் இருந்த  காஷ்மீரத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் வந்தது. அதனால் அதன் பூகோள அமைப்பே தடுமாற்றம் அடைந்தது.  அதனால் அதன் இடது புறம் பஞ்சாப், சிந்த், பலுசிஸ்தானும்,  பிறகு வடமேற்கு மாகாணம் ஆப்கானிஸ்தானைத் தழுவி இருந்தது.  

பூகோளப்படியும், கலாசார ரீதியிலும் மாறுபட்டிருந்த வங்காளம் அதன் வலது புறத்தில் அமைந்திருந்தது.  இதனால் அவர்கள் சரித்திரத்தில் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது.. கொடுத்தார்கள்.

மேற்கு பாகிஸ்தான்வாசி களுக்கும், வங்காளியர்களுக்கும் பொதுவான விஷயங்கள் குறைவாகவே இருந்தன.  மதங்களைத் தவிர, இந்த இரண்டு பிரிவினரும்   அந்த தேசத்தின் தந்தை என்று கருதப்பட்ட கொய்தி – இ- அசாம்,  முகம்மது அலி ஜின்னா, அவரது வங்காளிய தோழர் ஹூசைன் சயத் சுஹராவார்ட்டியும் இறந்த பிறகு இரு பகுதிகளும் தனித்தனி பாதையில் பயணிக்க ஆரம்பித்தன.

பெரும்பான்மையாக  வங்காளிகள் இருந்தார்கள். ஆனால் பஞ்சாபியர்கள், பதான்களையும் கொண்ட   சிறுபான்மையினர்தான் அரசு நிர்வாகத்திலும் ராணுவத்திலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள்.  அதனால்  பெரும்பான்மையினருக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை கொடுக்கவில்லை.  இந்த

இரண்டு பகுதிகளுக்குமான தூரமே 1,500 கி.மீ., இருந்தது. அதனால்  இணையதளமும் செல்போன்களும் இல்லாத அந்த காலத்தில் தொடர்புக்கே ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருந்தது.

இந்திய கடல் எல்லைகளை தவிர்க்க அவர்களின் கடல், விமான போக்குவரத்துகள் கூட  பல தூரம் ஊரைச் சுற்றி போகவேண்டிய நிலை.  இந்த நிலையில் பதிமூன்று வருட ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு பிறகு 1970 பொதுத் தேர்தல் வந்தது. மேற்கு பாகிஸ்தானில்  பூட்டோவின் கட்சி பெரும்பான்மை பெற்றது. ஆனால், கிழக்கே   முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் பெரும்பான்மை பலம் பெற்றது.

முஜிபுர் ரஹ்மானை கிழக்கு பூட்டோ என்றும், பூட்டோவை மேற்கு முஜிபுர் ரஹ்மான் என்றும் சொல்லலாம்.  பூட்டோவைப் போலவே நல்ல பேச்சாற்றல் கொண்டு முஜிபுர் ரஹ்மான் வங்காள மக்களிடம் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தார்.  38.5 சதவீத வாக்குகளைப் பெற்று 160 இடங்களை பெற்றது அவாமி லீக். ஆனால் பூட்டோவின் கட்சி 19.5 சதவீத வாக்குகளைப் பெற்று  81 இடங்களையே பிடித்தது. ஆனாலும் ஆட்சியை முஜிபுரிடம் ஒப்படைக்க தயாராக இல்லை. அதனால் வன்முறை வெடித்தது. ராணுவமும் முஜிபுரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் கிழக்கு பாகிஸ்தானிய ராணுவம் புகுந்தது. அதனால் அங்கிருந்த மக்கள் அகதிகளாக இந்தியாவிற்குள் வந்தார்கள். விளைவு இந்தியா– பாகிஸ்தான் போர் நடந்தது.  வங்காள தேசம் என்கிற ஒரு தனி நாடு பிறந்தது.

அதே ராணுவம் சில வருடங்களில் பாகிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியது. பலன் பூட்டோ ராணுவ அதிபர் ஜியா வுல் ஹக்கினால் தூக்கிலிடப்பட்டார்.  அதே ஜியா வுல் ஹக், மர்மமான முறையில் விமான விபத்தில் இறந்தார்.  பெனாசிர் பிரதமரானார். ஆனால் 2008ல் அவர் தலிபான்களினால் கொல்லப்பட்டார். அவரது கணவர் சில நாட்கள் அதிபராக இருந்தார்.

அதற்குப் பிறகு முஷாரப் ராணுவ தளபதியாக இருந்து நாட்டை கைப்பற்றினார். அப்போது தலைமறைவாக இருந்தவர்தான் இப்போதிருந்த நவாஸ் ஷெரிப். பல கோடி ரூபாய் பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும், லண்டனில் பல அடுக்கு மாடி கட்டடங்களை வைத்திருப்பதாகவும் பனாமி லீக் ஆதாரங்களோடு வெளியிட்டது. கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சி வழக்கு தொடர்ந்தது. விளைவு? இப்போது அவர் பதவி இழப்பு.

பாகிஸ்தான் எப்போதுமே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத நாடு. சிறுபான்மையாக இருக்கும் ராணுவ ஆட்சியில் அமர்ந்து கொண்டு நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.  என்பதுதான் நிகழ்கால உண்மை.   ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இருந்தாலும், அவர் ராணுவத்தின் கைபொம்மைதான்.  இன்றைக்கு உலகம் நவீனம் அடைந்த பிறகும் பாகிஸ்தானில் பல இடங்களில் நான்கு மணி நேரத்திற்கு மேல் மின்சாரமே இருக்காது.

நாடு இப்போது தீவிரவாதிகளின் பிடிக்கும் சிக்கி விட்டது. அதனால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஐ.எஸ்.ஐ. என்கிற உளவு அமைப்பு என்பது தீவிரவாதிகளை உருவாக்கும் நிறுவனமாகவே மாறிவிட்டது. இப்போது சீனாவும் அங்கே தொழில்ரீதியாக ஊடுருவ ஆரம்பித்துவிட்டது.  9/11க்கு பிறகு  அமெரிக்காவுடன் பாகிஸ்தானுக்கு இருந்த உறவிலும் இப்போது விரிசல் காணத் தொடங்கிவிட்டது.  ஆப்கானிஸ்தானிலும் இன்னும் பிரச்னை ஓயவில்லை.

ஒரு நாட்டிற்குள் இன்னொரு  நாட்டு ராணுவம் நுழைந்து அங்கே ஒரு தீவிரவாதியைக் கொன்ற சரித்திரத்தை முதலில் பாகிஸ்தான் கண்டது.  பாகிஸ்தான் அரசின் ஆதரவோடுதான் ஒசாமா பின் லேடனுக்கு அங்கே புகலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டது அமெரிக்கா. அதனால் அந்த நாட்டின், ராணுவத்தை நம்பாமல் அதுவே உள்ளே நுழைந்தது. ஒரு செல்போன் தகவல் பரிமாற்றம், பின் லேடனை காட்டிக் கொடுத்தது.  அதனை கொண்டு அமெரிக்கா ராணுவம் அவனை கொன்றது. தற்போது, தீவரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள மிக குழப்பமான தேசம்தான் இன்றைய பாகிஸ்தான்.

* * *